வள்ளிமலையில் தெள்ளிக் கொழிக்கும் வண்ணங்கள் - ஆய்வுரை

 

வள்ளி மலையில் தெள்ளிக் கொழிக்கும்

வண்ணங்கள்


பதிகள் பலவாயிரங்கள் மலைகள் வெகுகோடி நின்ற பதமடியர் காண வந்த கதிர்காமா'' என்ற அருணகிரியார் வாக்கிற்கிணங்க ஆறுமுகப் பெருமான் இப்பூவுலகில் ஆன்மாக்களை கடைத்தேற்ற பதியெங்கிலும், பலக் குன்றிலும் குடி கொண்டு அருள் பாலிக்கிறான். அவற்றுள் இரண்டு தலங்களில் மட்டும் இச்சாசக்தியாகிய வள்ளிப்பிராட்டியை முதன்மை யாக வைத்துப் பேசப்படுகிறது. அவை :- (1) தொண்டை நாட்டில் வடஅற்காடு மாவட்டத்திலுள்ள வேலூருக்கு அருகிலுள்ள " வள்ளிமலை" (2) திருநெல்வேலிக்கு தெற்கே 19 மைலிலுள்ள நாங்குநேரிக்குத் தென்கிழக்கில் 9 மைல் தூரத்திலுள்ள " வள்ளியூர்'' ஆகும். இதில் ''வள்ளிமலை" மட்டும் மலையை சேர்த்து சிறப்பாய் சொல்லப் படுகிறது. மற்ற மலைகளை அவ்வாறு கூறவில்லை. அடுத்து ''வள்ளியூர் " ஊரைப் பற்றி பேசப்படுகிறது.

 

எது எங்ஙனம் இருப்பினும் திருமுருகப் பெருமான் வள்ளியை வலிய தேடி வந்து வள்ளி மலையில் திருவடி பதித்து, திருவிளையாடல் புரிந்து, ஆட்கொண்டு, களவு மணம் புரிந்து, வள்ளிமணாளனாக அருள் பாலிக்கும் விதம் எல்லோரையும் வியப்பிலும் பக்திப்பரவசத்திலும் மூழ்கச் செய்து பிரமிக்க வைப்பது ஒன்றாகும். இவ்வள்ளி மலையைப் பற்றியும், வள்ளியம்மையைப் பற்றியும் அடியேன் ஆரணி அடியார்க் கடியவனாகிய சிறியேன் இயன்றவரை எடுத்துரைக்க முற்படுவதில் குறைகள் எது காணினும் அதை அடியார் பெருமக்களும் திருமுருக பக்தர்களும், தொண்டர்களும் பொறுத்து மன்னித்து ஆசி கூறும்படி பிரார்த்தித்துக் கொண்டு மேற்படி வள்ளி மலையில் கொழிக்கும் வண்ணங்களைப் பற்றி கூறுகிறேன். வள்ளியம்மையின் பிறப்பு:

ஆதி காலத்தில் திருமாலின் விழிகளிலிருந்து ஆனந்தக் கண்ணீர் சொரிய அதிலிருந்து இரண்டு பெண்கள் தோன்றினர். அவர்களே ''அமுதவல்லி" "சுந்தரவல்லி" ஆவர். அவர்கள் இருவரும் 'ஆறுமுகனையே' மணக்க வேண்டுமென்று தவமியற்றுகின்றனர், திருமுருகப்பெருமானும், அவர்கள் முன் தோன்றி அமுத வல்லியை தேவலோகத்தில் 'தேவராஜனுக்கு ' மகளாக பிறந்து வளர்ந்து வரும்படியும், சுந்தர வல்லியை வேடனாகிய 'நம்பிராஜனுக்கு' மகளாக

பிறந்து வளர்ந்து வரும்படியும் பின்னர் உரிய காலத்தில் அவர்களை மணப்பதாகவும் அருள் பாலித்தார். அவ்வறே அமரேந்திரன் மகளாக அமுதவல்லி "தேவசேனை" என்ற பெயர்க் கொண்டு வளர்ந்து வருங்கால், சுந்தரவல்லியும், பூவுலகில் தொண்டை நாட்டில், வள்ளி மலைச்சாரலில், சூக்கும தேகத்துடன் முருகனையே' எண்ணி நோன்பு இருந்தனள்.

 

இதை கந்த புராணம்:

"பொள்ளெனத் தன்புறவுடல் பொன்றலும்

உள்ளினுற்ற வுருவத்துடன் எழீஇ

வள்ளி வெற்பின் மரம்பயில் சூழல் போய்த்

தெள்ளிதில் தவஞ் செய்திருந்தாளரோ' (கந்- பு - 6-24-10321)

 

என்று கூறுகிறது. இது இவ்வாறிருக்க 'பொன்னை நீவா நதிகரைக்கு'' மேற்கே, இயற்கை எழில் கொஞ்சுஞ் சாரலில் திருமால் சிவ முனிவராகத் தவமியற்றுகிறார் அது சமயம் 'திருமகள்' அழகிய புள்ளிகள் கொண்ட பொன் மானாக அவர் முன் உலாவ , அதை முனிவரும் காமத்துடன் நோக்கினார்.

 

இதை குமரகுருபரர் தமது கந்தர் கலிவெண்பாவில் :

 

''காம முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்

வாம மடமானின் வயிற்றுதித்துப் - பூமருவு

கான குறவர் களிகூரப் பூங்குயில் போல்

ஏனற் புனங் காத்தினிதிருந்து '' - என்று மிக அழகாகப் பாடுகிறார்.

 

அச்சமயமறிந்து 'சுந்தரவல்லியும்', திருமுருகன் அருளியபடி, மானின் கருவினுள் புகுந்தனள். பார்வையிலேயே கருவுற்ற மானும் வனமெங்கும் சுற்றி வள்ளி கொடிகள் படர்ந்துள்ள அகழ்ந்த குழியில் ஒரு பெண் குழந்தையை பிரசவித்தது. தன் இனமல்லாத அக்குழவியைக் கண்ட மானும், அவ்விடம் விட்டு அகன்றது. அக்குழவியே 'வள்ளியம்மை' என்று கச்சியப்பர் தமது கந்தபுராணத்தில் மிக அழகாக கூறுகிறார்.

 

''நற்றவன் காட்சி தன்னால் நவ்விபால் கருப்பம் சேரத்

தெற்றென அறிதல் தேற்றிச் செங்கண்மால் உதவும் பாவை

மற்றதன் இடத்தில் புக்காள் வரை பகவெறிந்த வைவேற்

கொற்றவன் முன்னஞ் சொற்ற குறிவழிப் படரும் நீராள்''

(கந், பு-6-24-10102)

 

பின்னர் சீர்கள் மிக தன்னகத்தேயுடைய சீரூரை தலைநகராகக் கொண்டு, ஆட்சி புரிந்து வந்த, வேடர் இனத் தலைவனாகிய நம்பிராஜன்,

ஒருநாள் வேட்டையாட தன் மைந்தர்களுடனும், வேடர்களுடனும் கானகம் புகுந்தான். ஆங்கே வள்ளிக்கிழங்கு குழியில் ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டு, சொல்லொணா மகிழ்ச்சி பொங்க எடுத்து ''வள்ளி'' என்று நாமமிட்டு வளர்த்து வந்தான்.

 

வள்ளியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து உரிய காலத்தில் பருவம் அடைந்தனள். வேடர்குல வழக்கப்படி வள்ளியை தினைபுனம் காத்திட பாங்கியருடன் அனுப்பிவைத்தனர். வள்ளியும் கல்பரண் மீது ஏறி பறவைகளை மிக அழகாக ஆலோலம் பாடி விரட்டினாள் இதை கந்த புராணத்தில், கச்சியப்பர்,

''பூவைகாள் செங்கண் புறவங்காள் ஆலோலம்

தூவி மாமஞ்ஞைகாள் சொற்கிளிகாள் ஆலோலம்

கூவல் சேர்வுற்ற குயிலினங்காள் ஆலோலம்

சேவல்காள் ஆலோலம் என்றாள் திருந்திழையாள்"   என்கிறார்

(கந்-பு - 6-24 - 10132)

 

அவ்வாலோல கானம் கேட்டு பறவைகளும், விலங்குகளும் மயங்கி இருந்தன இவ்வித அதிசயம் நிகழ்ந்ததை நாரதர், தன் ஞான திருட்டியில் உணர்ந்து, ஆங்கே வந்து, வள்ளியைக் கண்டு, முன்னர் சுந்தர வல்லியாய் இருந்த திருமாலின் மகள் தான் இப்போது பூலோகத்தில் மான் வயிற்றில் பிறந்துள்ளனள் என்பதை தெரிந்து, ஒரு நாளில் மூன்று நீல மலர்கள் மலர்கின்ற தீர்த்தமாகிய சுனையையுடைய 'தணிகைமலையை ' அடைந்து, அழகனாகிய முருகனை கண்டு பின்வருமாறு கூறுகிறார்:

''கார்த்தினைப் புனம் காவற் கன்னியைப்

பார்த்து மற்றிவை பகர்ந்து போற்றிப் போய்

மூர்த்த மொன்றினில் மூன்று பூமலர்

தீர்த்திகைச் சுனைச் சிகரம் நண்ணினான்"    (கந்,பு - 624 - 10137)

 

முருகன்வரவு :-

வள்ளி மலையில் மான் வயிற்றில் பிறந்த வேடர்குல கன்னி , பருவ மெய்தி கல்பரண்மீது தினைபுனம் காக்கும் அழகு இலக்குமிக்கும் இல்லை தங்களது திருத் தோள்களைத் தழுவ முன்னரே தவஞ் செய்த திருமாலின் மகள் ஆவாள். அவ்வம்மையாருக்கு அருளுக என்று வேண்டிக் கொண்டார். வேலனும் அக்குறமகள் மேல் ஆசைக் கொண்டு, சோதிக்க வேண்டி வேடவடிவங் கொண்டு எழுந்தருளினான் என்பதை கந்தபுராணத்தில்

''காலிற் கட்டிய கழலன் கச்சினன்

மாலைத் தோளினன் வரிவில் வாளியன்

நீலக் குஞ்சியன் நெடியன் வேட்டுவக்

கோலத்தைக் கொடு குமரன் தோன்றினான்'' (கந் -பு - 6-24-10144)

 

இவ்வாறு முருகன் 'திருத்தணிகை மலையை' விட்டு 'வள்ளிமலையை' அடைந்து வள்ளிமானை கண்டு, தன் உள்ளக் கருத்தினை பல விதமான ஆசை வார்த்தைகளால் வெளிப்படுத்த, அவ்வமயம் அங்கே வேடர்கள் புடைசூழ நம்பிராஜன் வள்ளியைக் காண வந்தான். வேலை தாங்கிய வேடனாகிய முருகன் அது கண்டு ஓர் "வேங்கை மரமாய் " உருவெடுத்து, வேதங்கள் அம்மரத்தின் வேராகவும், உயர்ந்த சைவாகமங்கள் எல்லாம் மேற் பகுதியாகவும், கலைகள் எல்லாம் கொம்புகளாகவும் நின்று அருளினான் என்பதை கந்த புராணத்தில்

 

"ஆங்கது காலை தன்னின் அடிமுதல் மறைகளாக

ஓங்கிய நடுவண் எல்லாம் உயர்சிவ நூலதாகப்

பாங்கமர் கவடு முற்றும் பல்கலையாகத் தானோர்.

வேங்கையின் உருவமாகி வேல் படை வீரன் நின்றான்"

என்பதை காணலாம்.                        (கந் - பு - 6 - 24 - 10153)

இதை அருணகிரி நாதரும்

 

"தேந்தினை வித்தினருற்றிட வெற்றிலை

வேங்கை மரத்தெழிலைக் கொடு நிற்பவ

தேன் சொலியைப் புணரப்புனமுற்றுறை"    என்று,

 

'     கூந்தலவிழ்த்து' என்ற திருத்தணி' திருப்புகழிலும்,

 

''கருவரியுறு பொருகணை விழி குறமகள்

கணினெதிர் தருவென முனமானாய் " என்று,

 

'திருமொழியுரை' என்ற 'விருத்தாசலம்' திருப்புகழிலும், மிக ரம்யமாகப் பாடுகிறார்.

 

பின்னர் நம்பிராஜனும், வேடுவர்களும் சென்ற பிறகு, முருக பெருமான் வேங்கை மரத்தின் உருவினின்றும் நீங்கி, மறுபடியும், வள்ளியிடம் ஆசை வார்த்தைகளால் பேசலானான், அங்கே மறுபடியும் நம்பிராஜனும் வேடுவர்களும் வரவே, வள்ளி அச்சமுற்று முருகனாகிய வேடனைப் பார்த்து ஓடும் என்றனள். முருகனும் சைவ நெறி கைவந்த தவத்தவர் போன்று வயோதிகக் கோலங் கொண்டு வேடர்களுக்கு எதிராகச் சென்றான். இதை கந்த புராணம் இவ்வாறாக கூறுகிறது :

 




























 






"ஓடுமினி என்றவள் உரைத்த மொழி கேளா
நீடு மகிழ் வெய்தியவண் நின்ற குமரேசன்
நாடு புகழ் சைவநெறி நற்றவ விருத்த
வேடமது கொண்டு வரும் வேடரெதிர் சென்றான்"

(கந்-பு -6 -24 - 10172)



பிறகு நம்பிராஜனுக்கு அன்புடன் திருநீற்றை அளித்து, உனக்கு வெற்றியும், ஆற்றலும் செல்வமும் மிகுவதாக என்று வாழ்த்துக் கூறினான். நம்பியும் தவசீலரான வயோதிகரை வணங்கி விரும்பியதை கூறுங்கள் என்றான். முருகனும் தன்னுடைய மூப்பும், மனமயக்கமும் நீங்க இம்மலையில் தங்குவதற்கு வந்தேன் என்று கூற, வேடர் தலைவன் நன்று என்று கூறி இங்கே என் மகளான வள்ளிக்கு துணையாய் இருங்கள் என்று தேனுந்தினை மாவுங், கிழங்கும் அளித்துச் சென்றான். விநாயக பெருமான் வருகை:

விருத்தனாகிய முருகனும் வள்ளியின் கைகளால் அவற்றை உண்டு நீரும் பருகிய பின் மறுபடியும் வள்ளியிடம் தன் எண்ணத்தைக் கூறவே வள்ளியும் தவசீலரான உம்தகுதிக்கு இது அழகன்று என்று மறுக்கவே, தனக்கு ஒப்பிலா மூலப்பொருளான "விநாயகப் பெருமானை" முருகன் தியானித்து இம் மங்கைக்கு வழி காட்டியருளுக என்று வேண்டினான். ஆனை முகனும் குமரனின் வேண்டுகோளுக்கு இணங்கி வாரணமாய் கடல் போல் முழங்கிக் கொண்டு வந்தார். வள்ளி நாயகி அச்சமுற்று, தவவேடங் கொண்ட, பொய் வேடத்தவனாகிய முருகனை நெருங்கி, 'இவ் வேழத்தினின்று என்னை காத்தருள்க' என்று பின்புறம் சென்று தழுவிக் கொண்டனள்.

இதை கச்சியப்பர் கந்தபுராணத்தில் :

''அந்தப் பொழுதில் அறுமா முகற்கிரங்கி

முந்திப் படர்கின்ற மொய்குழலாள் முன்னாகத்

தந்திக் கடவுள் தனிவாரணப் பொருப்பு

வந்துற்றது அம்மா மறிகடலே போல் முழங்கி"

(கந்-பு- 6 - 24 - 10189)

 

 

அவ்வேளையில் வள்ளி அச்சமொடு மீண்டுதவப்

பொய் வேடம் கொண்டு நின்ற புங்கவன் தன்பாலணுகி

இவ் வேழங் காத்தருள்க எந்தை நீர் சொற்படி

செய்வேன் என வொருபால் சேர்ந்து தழீஇக் கொண்டனளே''

                                                                                                (கந்-பு - 6 - 24 - 10190)

 என்று அழகாகக் கூறுகிறார்.

 

இதை அருணகிரி நாதர்

  ''அத்துயரது கொடு சுப்பிரமணிபடும்

அப்புனம் அதனிடை இபமாகி அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை

அக்கணம் மணமருள் பெருமாளே''

என்று 'கைத்தல நிறைகனி' திருப்புகழிலும்,

 

"வேளை தனக்கு உசிதமாக, வேழம் அழைத்த பெருமாளே'' என்று 'நாளுமிகுத்த கசிவாகி' திருப்புகழிலும்,

 

"வேலை அன்புகூர வந்த ஏக தந்த யானை கண்டு

வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே"

 

என்று 'தோல் எலும்பு சீநரம்பு' என்ற 'உத்தரமேரூர்' திருப்புகழிலும்,

 

''குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று

குருவி யோட்டித் திரிந்த தவமானைக் குணமது ஆக்கிச் சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்தமர்ந்த பெருமளே"

 

என்று அறிவிலாபித்தர்' என்ற காஞ்சிபுரம் திருப்புகழிலும்,

 

"காங்கிசைமிக்க மறக் கொடி வெற்றியில்

வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய

கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி யிளையோனே"

என்று 'கூந்தலவிழ்த்த' என்ற திருத்தணி' திருப்புகழிலும்,

 

"பெரிய தும்பிக்கைக் கற்பக முற்றங்

கரதலம் பற்றப் பெற்ற வொருத்தன்" என்று 'கனக்ரவுஞ்சத்திற்' என்ற காஞ்சிபுரம் திருப்புகழிலும்,

 

"தினை வணங்கிளி காத்த சவுந்தரி

அருகு சென்று அடி போற்றி மணஞ் செய்து

செகம் அறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே"

என்று 'முனையழிந்தது' என்ற பொது ' திருப்புகழிலும்,

 

''குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னங் குறிச்சியிற் சென்று கல்யாண முயன்றவனே'' என்று (கந் - அலங்- 24 ஆம்) செய்யுளிலும்,

 

''தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன்" என்று (கந் - அலங் - 94 ஆம்)

செய்யுளிலும் மிக அழகாக பாடுகிறார்.

 

இதையே அடியேன் திருத்தணி கேசன் திருவருளால் இயற்றிய "தணிகை வேல் முருகன் அருள் மாலை"

என்ற நூலிலும், மற்றும் ''வள்ளி மணாளன் அட்சர மாலை" என்ற இந்த நூலிலும்,

 

''வள்ளிக்கு வேடை கொண்டு வேங்கை மரமாய் நின்ற இனிய பிரான் ஆகிய தணிகை வேல் முருகா!" (த.வே. மு. அரு.மா - 21)

 

"எயினர் குலக் கொழுந்தை குணம் அது ஆக்கி விருப்பமுடன் மணமே புரிந்த மலர் மார்பா!"  (த.வே.மு.அரு.மா - 62)

 

 ''வள்ளி மலையில் வேடனாய் வேங்கை மரமாய் குறவர்கள் தலைவனாய் வடிவு எடுத்த தணிகை வேல் முருகா!''

(த.வே.மு.அ.மா - 77)

''வஞ்சி குறமாது தனை மணக்க குறவர் கூட்டத்தில் குறவனாய் கோலங்கொண்ட தணிகை வேல் முருகா!" (த.வே. மு.அரு.மா - 85)

 

"வேடர் குலக் குறமகளை விரும்பிய தணிகை வேல் முருகா!''

(த.வே. மு.அரு. மா - 91)

 

''துள்ளி திரியும் மானாகதினைபுனத்தில் அங்குமிங்குங் கவண் வீசி ஆயல் ஓட்டி விளையாடிய வள்ளிக்கு வேடைக் கொண்ட வடிவு அழகா"                 (த.வே.மு.அரு.மா - 35)

''வடிவு அது காட்டி வள்ளியை வயப்படுத்தி மணந்த வள்ளி மணாளனே''   (வ.ம. அட் - மா - 39)

 

"வேடர் செழுந்தினையைக் காத்த வேடிச்சியை மணந்த வள்ளி

மணாளனே!''   (வ.ம. அட் - மா - 112 )

என்று வருவதை காணலாம்.

 

அப்போது ஆறுமுகப் பெருமான் விநாயகரை துதித்து, எம்பெருமானே மீண்டும் தங்கள் இடத்துக்கே எழுந்தருளக என வேண்டிக் கொண்டார், யானைமுகக் கடவுளும் அவர்களை ஆசீர்வதித்து மறைந்தருளினார்.

 

ஆறுமுக தரிசனம் :-

பிறகு ஒரு மணம் பொருந்திய சோலையில் கன்னியான வள்ளி நாயகியை இரண்டறக் கலந்து, நிறைந்த கருணை புரிந்து தம் ''ஆறுமுக தரிசனத்தை" காட்டியருளினான். இதை கந்த புராணம் இவ்வாறாக கூறுகிறது :

 

''முந் நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டும்

கொன்னார்வை வேலுங் குலிசமு மேனைப் படையும்

பொன்னார் மணி மயிலுமாகப் புனக்குறவர் தம்

மின்னாள் கண் காண வெளி நின்றனன் விறலோன்"

(கந்-பு - 6 - 24 - 10194)

 

பன்னிரண்டு திருத் தோள்களும் நிகரற்ற ஆறுமுகங்களும், பெருமை யையுடைய கூரான வேலும், வச்சிராயுதமும், மற்ற படைகளும், பொன் ஒளி சூழ்ந்த பலவாறான மரகத மணிகளை கொண்ட பச்சை மயில் வாகனமும் கொண்டு, குறமகளான வள்ளிக்கு காட்சி தந்ததை அக்குறமகள் நடுங்கி கைகளை குவித்து, தெவிட்டாத அன்பு கொண்டு இப்பெருங் கோலத்தை முன்னரே எனக்குக் காட்டி, என்னைச் சேராமல் இத்தனை காலமும் வீணே கழித்தீர் என்று வருந்த, முருகப் பெருமானும், "முற்பிறப்பில் திருமாலின் மகளாக நீ செய்த தவத்தின் பயனாய், இப்பிறப்பில் உன்னை யாட் கொண்டோம்'' என்று அருள் செய்து நீ தினைபுனம் காவல் செய்வாயாக யாம் அங்கு மறுபடியும் வருவோம் என்று மறைந்தார்.

பின்னர் வள்ளியும் தினைபுனம் காவல் செய்ய, தன்னுடைய தோழி ஆங்குற்று வள்ளியின் குணங்களில் மாற்றம் இருப்பதை கண்ணுற்று, மாற்றத்திற்கு காரணம் வினவ, அவ்வமயம் ஆங்கே முருகப் பெருமான் மறுபடியும் வேடரூபங் கொண்டு, அவர்களை நெருங்கி இங்கு ''புண்பட்டயானை வந்ததுண்டா''? சொல்வீர் என்று வினவினார். அப்போது தோழியானவள் இருவரின் கண்களை பார்த்து குறிப்பால் உணர்ந்து, இங்கே வேடர்கள் வரும் நேரம், நீர் 'குருகத்தி மரநிழலில்' மறைந்து இரும், யாம் வள்ளிநாயகியை உம்மிடம் சேர்ப்போம் என்று சொல்லி 'வள்ளியை' அழைத்துச் சென்றனள். பிறகு அன்று நடுயாமத்தில் எல்லோருடைய உறக்கத்தையும் சோதித்து, வள்ளி நாயகியை அழைத்துக் கொண்டு போய் முருகனிடம் சேர்த்தனள்.

இதை கந்த புராணத்தில்:

"தாய் துயில் அறிந்து தங்கள் தமர் துயில் அறிந்து துஞ்சா

நாய் துயில் அறிந்து மற்றந்நகர் துயில் அறிந்து வெய்ய

பேய் துயில் கொள்ளும் யாமப் பெரும் பொழுததனில் பாங்கி

வாய் தலிற் கதவை நீக்கி வள்ளியைக் கொடு சென்றுய்த்தாள்''

(கந்-பு -6 - 24 - 10242)

 

என்று காணலாம்.

இதை அருணகிரி நாதரும் :"கன்னமிடப் பின்னிரவிற்றுன்னு புரைக் கன் முழையிற்

கன்னிலையிற் புகா வேர்த்து நின்ற" என்று 'அன்னமிசைத்' என்ற திருகண்ணபுரம் திருப்புகழிலும், கூறுகிறார்.

 

முருகன் களவு கொண்டு ஏகுதல் :-

திரு முருகப் பெருமானும் அத்தோழிக்கு திருவருள் புரிந்து பின் வள்ளி நாயகியுடன் ஒரு பசுமரச் சோலையினுள் புகுந்தனன். அதன் பின்னர் வள்ளியைக் காணாது வேடர்களும் நம்பிராஜனும், ஒன்றாகத் திரண்டு முழக்கமிட்டு தேடலாயினர்.

     முருகனும், வள்ளியும் தங்கி இருந்த சோலைக்குள் புகுந்து, அவர்களை பார்த்து, நம் மகளை கவர்ந்து வந்த கள்வன் இவன் என்று அம்புகளை சரமாரியாக எய்தனர். அவையனைத்தும் திருமுருகன் மீது மலர்களாய் விழுந்தன. அவ்வளவில் வள்ளிப்பிராட்டி துடிதுடித்து முருகன் பொறுமையாக இருப்பதைப் பார்த்து வேலாயுதத்தை ஏவும்படி வேண்டிக் கொண்டனள், அதற்குள் திருமுருகப் பெருமானது கொடியிலுள்ள ஒப்பற்ற பெருமையையுடைய 'சேவலானது' எழுந்து நிமிர்ந்து ஆரவாரம் செய்தது. உடனே நம்பிராஜனும், அவன் மைந்தரும், வேடர்களும், நிலை தடுமாறி பூமியில் விழுந்து மாண்டனர்.

இதை கச்சியப்பர் :

 

"என்றிவை குமரி செப்ப எம்பிரான் அருளால் பாங்கர்

நின்றதோர் கொடி மாண்சேவல் நிமிர்ந்தெழுந் தார்ப்புக் கொள்ளக் குன்றவர் முதல்வன் தானும் குமரரும் தமரும் யாரும்

பொன்றினராகி மாண்டு பொள்ளெனப் புவியில் வீழ்ந்தார்"

                                         (கந்-பு -6-24 - 10262)

என்று அழகாக கூறுகிறார்

பிறகு அச்சோலையினின்று நீங்கிச் செல்ல, வள்ளி நாயகியும் எவ்வித வருத்தமுமின்றி முருகனை பின் தொடர்ந்து சென்றார். ஆங்கே எதிரே நாரத முனிவர் வந்துற்றார்.

இது காறும் நடந்தைவைகள் எல்லாம் அறிந்து முருகனிடம், '' வள்ளியை தவத்தால் பெற்று வளர்த்த தந்தையையும், மற்றும் உறவினர்களையும், வேடர்களையும் அழித்து, வள்ளியை மட்டும் அழைத்து செல்வது அருட் கடலான தங்களுக்கு தகுதியோ?'' என்று வினவ முருகனும், இப்பூவுலகினில் மாந்தர்கள் நன்மையடையும் வகையினை கருத்தில் கொண்டு , வள்ளியின் மூலமாகவே, அவள்தந்தையையும், தமையன்மார்களையும், உற்றார்களையும், மற்றும் வேடர்களையும் எழுப்பினார்.

அவர்கள் எல்லோரும் உயிர் பெற்று எழுந்து வணங்க, முருகப் பெருமான், அவர்களுக்கு "ஆறுமுகம், பன்னிரண்டு கரங்களும், வேலுமுடனே" தரிசனங் கொடுத்து அனைவரையும் ஆட்கொண்டார்.

வள்ளிக்கல்யாணம் :-

பின்னர் நம்பிராஜனும், வேடர்களும் எங்கள் மகளான வள்ளி நாயகியை நல்ல அக்னி சான்றாகத் திருமணம் முடித்து உம் ஊருக்கு அழைத்து செல்லும் என்று வேண்ட அதற்கு முருகப்பெருமான் இசையவே நம்பிராஜன் அதற்குண்டான திருமண ஏற்பாடுகளை விரைவாகச் செய்து மகிழ்ந்து கன்னியான வள்ளியை திருமுருகனின் கைகளில் வைத்து "எம் தவத்தால் இப்போது தங்கட்குத் தந்தேன் ஏற்று கொள்க"

என்று வேண்டி நீர்கொண்டு "தாரை வார்த்து கன்னிகாதானத்தை" செய்தான்.

 


 

 


 

 








இதை கந்தபுராணத்தில் :

''அந்த நல் வேளை தன்னில் அன்புடைக் குறவர் கோமான்

கந்த வேள் பாணி தன்னில் கன்னிகை கரத்தை நல்கி

நந்தவமாகி வந்த நங்கையை நயப்பால் இன்று

தந்தனன் கொள்க வென்று தண்புனல் தாரை உய்த்தான்"

                                                                        (கந்-பு - 6-24 - 10277)

 என்பதை காணலாம்.

அவ்வமயம் நாரத முனிவர் ஓமாக்கினியை வளர்த்து, திருமணச் சடங்கை பிழையற மறைவிதியின் படி செய்தார். ஆங்கே "திருமாலும், நான்முகனும், இந்திரனுடன் தேவர்களும், மஹாதேவரான சிவ பெருமானும், உமையம்மையும் " வானில் இருந்து செவ்வேளான முருகப் பெருமான், குறவர் பெண்ணை திருமணம் செய்யும் காட்சியை கண்டு களித்து, ''பூமழையை" பொழிந்து ஆனந்த மிகுதியால், ஆரவாரம் செய்தனர்.

          நம்பிராஜனும் வேடர்களும், தம் மருமகனும், மகளும் ''இன்று போலவே என்றும் ஒருமை எய்தி இனிதே வாழ்வார்களாக" என்று மங்கல வாழ்த்துப்பாடி வாழ்த்தினர். திருமுருகப்பெருமான் அனைவருக்கும் தன் கருணையை வாரி வழங்கி யாம் இவ்விடத்தினின்று அகன்று ''திருத்தணிகை" மலையில் இனிதே வீற்றிருப்போம் என்று திருவாய் மலர்ந்தருளளினார். நம்பிராஜன் முதலானவர்கள் ''நன்று" என்று கூறி மகிழ்வெய்தினர்.

இதை கந்தபுராணம் இவ்வாறாக கூறுகிறது :

''அனைய காலையில் அறுமுகன் எழுந்து நின்றாங்கே

குனியும் வில்லுடைக் குறவர்தம் குரிசிலை நோக்கி

வனிதை தன்னுடன் சென்றியாஞ் செருத்தணி வரையில்

இனிது வைகுதும் என்றலும் நன்றென இசைந்தான்"

                                                                        (கந்-பு - 6 - 24 - 10288)

 

இப்படியெல்லாம் ஏன் முருகன் திருவிளையாடல் புரிந்தான் என்று வியக்க தோன்றும், அது என்னவென்றால், முருகனை மனப்பூர்வமாக, பக்தியுடன் அவன் அடிசேர நினைந்து வழிப்பட்டால், அவர்களை ஆட்கொள்ள முருகன் தானே நேரில் வருவான் என்பது புலப்படுகிறது. இதை அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் :

 

''தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும் இடுங்கோள் இருந்தபடி இருங்கோள் எழுபாரும் உய்யக்

கொடுங் கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்க வைவேல்

விடுங்கோன் அருள் வந்து தானே யுமக்கு வெளிப் படுமே''

                                                                                                            (கந். அலங் -16)

 

எனப் பாடுகிறார்.

 

''மாசிலடியார்கள் வாழ்கின்ற வூர் சென்று

தேடி விளையாடியே யங்ஙனே நின்று

வாழும் மயில் வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாளே''

 

என்று 'மூளும் வினைசேர'

என்ற திருச்செந்தூர்' திருப்புகழிலும் பாடுகிறார்.

யாரொருவர் தன்னையிழந்து யான், எனது, என்பன அற்று, இறைவனாகிய தலைவனை நாடுகின்றனரோ, அவரை தானே நாடி சென்று அருள் புரிவான் என்பது வள்ளியம்மை ஒழுகின நெறியாகும். அதுவே இறைவனை வசப்படுத்த கூடிய நெறியாகும். இதை வள்ளி பிராட்டி அன்று வள்ளி மலையில் அனுட்டித்து முருகனை மணந்தாள்.

இதை அருணகிரிநாதர் தம் திருப்புகழில் "ள்ளி சன்மார்கம்" என்று கூறுகிறார்:

''வள்ளி சன்மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்குளேற்றும் இளையோனே" என்று கள்ளக்குவாற்பை

 

என்ற 'வள்ளிமலை' திருப்புகழில் பாடுகிறார். மேலும் அருணகிரி நாதர் மட்டும் அல்லாது பல அடியார் பெருமக்களும், ஆச்சார்யர்களும், வள்ளியம்மையை சிறப்பாகவும், அழகாகவும், பெருமையாகவும் பாடுகிறார்கள் :

"வள்ளிமுலைதோய்குமரசதாதை" வான்தோயும்

வெள்ளிமலை போல் விடை யொன்றுடையான் மேவுமூர்

தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறை வண்டும்

புள்ளும்மலி பூம்பொய்கை சூழ்ந்த புத்தூரே

 

(திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் தேவாரம் "திருஅரிசிற்கரைபுத்தூர்' 2 ஆம் திருமுறை - 6 - வது திருப்பாடல்)

 

கள்ளி முது காட்டிலாடி கண்டாய்

காலணையுங் காலாற் கடந்தான் கண்டாய்

புள்ளியுழை மானின் தோலான் கண்டாய்

புலியுரி சேராடைப் புணிதன் கண்டாய்

வெள்ளி மிளிர் பிறைமுடி மேற் சூடி கண்டாய்

வெண்ணீற்றான் கண்டாய் நஞ்செந்தின் உய

"வள்ளிமணாளற்குத்தாதை கண்டாய்

மறைக் காட்டுறையும் மணாளன் தானே

 

 (திருநாவுக்கரசு சுவாமிகள் திருத்தாண்டகம் - 'திருமறைகாடு' -

6 ஆம் திருமுறை - 4 - வது திருப்பாடல்.)

 

மறவனை அன்று பன்றிப்பின் சென்ற மாயனை நால்வர்க்காலின்               

கீழ் உரைத்த

அறவனை அமரர்கரியான அமரர் சேனைக்கு நாயகனான

"குறவர்மங்கைதன்கேள்வினைப் பெற்ற கோனை நான் செய்த

குற்றங்கள் பொறுக்கும்

நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்தென்

                                                நினைக்கேனே

(திருசுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் - 'திருநள்ளாறு' –

7 - ஆம்திருமுறை 7 - வது திருப்பாடல்)

 

மேற்கூறிய இந்த மூன்று தேவாரங்களிலும், சைவ சமயாச்சார்யர் களான மூவரும் 'வள்ளியம்மையை முருகப்பெருமானுக்கு முதலாக வைத்து' மிக அழகாக சிறப்பித்து பாடுகிறார்கள். இதில் திருநாவுக்கரசு சுவாமிகள் மட்டும் 'திருச்செந்தூர் முருகனை' குறிப்பிட்டு சிறப்பாய் பாடுகிறார். மற்ற இருவரும். முருகனை பொதுவாக பாடுகிறார்கள்.

 

குமரகுருபர சுவாமிகள் தம் 'திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா '

(46 - ஆம் அடியில்)

"போகமுறும் வள்ளிக்கும், புத்தேளிர் பூங்கொடிக்கும் மோக மளிக்கும் முகமதியும்"

என்று மிக அழகாக பாடுகிறார்''

 

 'பாலன் தேவராய சுவாமிகள்' அருளிய தமது திருப்பரங்குன்றம்' சஷ்டி கவசத்தில் (2-வது வரியில்) ''மருப்பிலாப் பொருளே வள்ளிமனோகரா'' என்றும்,

திருச்செந்தூர்' சஷ்டி கவசத்தில் (229 - வரியில்) ''குறமகள் மனமகிழ் கோவே போற்றி" என்றும்,

 

'திருவேரகம் " சஷ்டி கவசத்தில் (10-வது வரியில்)

''வள்ளி மணாளனே" என்றும் ,

'பழமுதிர்சோலை சஷ்டி கவசத்தில் (21 - வது வரியில்) "குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய் " என்றும் சிறப்பித்து பாடுகிறார்.

'இராமலிங்க சுவாமிகள்' தமது திருவருட்பாவில்' 'கந்தர் சரண பத்துவில்' (5-ஆம் பாடலில்) "கோல குறமான் கணவா சரணம் " என்றும்,

'தெய்வமணி மாலையில்' (8- வது பாடலில்) ''ஒரு மாமான்றன் மகளும்" என்றும், சண்முகர் காலை பாட்டில்' "வள்ளி மணாளரே வாரும்'' என்றும் சிறப்பித்து பாடுகிறார்.

 

'திருசெங்கல்வராயப்பிள்ளையின்' 'திருத்தணிகேசர் திருப்பள்ளி எழுச்சியில்' (1-வது பாடலில்) 'மேதகு வள்ளி மணாளனே" என்று பெருமையாக பாடுகிறார்.

 

'திருவையாறு மீயன்னா சேவுகஞ் செட்டியார்' அருளிய ''முருகன் நவரத்ன மாலை" என்ற நூலில், (2- வது செய்யுளில்), " கோலக் குறமான் குலவும் அமலா" என்று குறமானாகிய வள்ளியை முதலாக வைத்து பாடுகிறார்.

 

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவராகிய 'திருமுருக கிருபானந்த வாரியார்' அவர்கள் வள்ளிமலையைப் பற்றி சொல்நயத்தோடு பொருள் நயஞ் சேரமிக ஆழகாக பாடுகிறார்:

 

''வள்ளிமலை சென்று வணங்குவார் மாநிலத்தில்

வெள்ளிமலை போல மிகவோங்கி - உள்ளியன

எல்லாம் பெறுவர் இனியராய் இன்புறுவர்

பல்லாண்டு வாழ்வர் பரிந்து.''

 

அடுத்து அருணகிரி நாத சுவாமிகளை' எடுத்துக் கொண்டால், பலவாறாக தம் பாக்களில் திருமுருகப்பெருமானையும், வள்ளிநாயகியையும் சிறப்பித்து பாடுகிறார்:- தமது

 

கந்தர் அனுபூதியில்

''பணியாவென வள்ளி பதம் பணியும்

தணியாவதி மோக தயாபரனே" (கந் - அனூ - 6)

 

 

பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்

வேளைச் சுரபூபதிமேருவையே'' (கந் - அனூ - 22)

 

''வடி விக்ரம் வேள் மகிபா குறமின்

கொடியைப் புணருங் குண பூதரனே" (கந் - அனூ - 23)

 

"மதி வாணுதல் வள்ளியை யல்லது பின்

துதியா விரதா சுரபூபதியே' (கந் - அனூ - 35)

 

"வேதா முதல் விண்ண வர் சூடும் மலர்ப்

பாதா குறமின் பதசேகரனே'' (கந் - அனூ - 36)

 

"கோவே குறமின் கொடி தோள் புணரும்

தேவே சிவசங்கர தேசிகனே" (கந் - அனூ - 39)

 

"இளகுங் குறமின்னிரு தோள் முலையும்

புளகம் பரவப் புணர் வேலவனே" (கந் - அனூ - 60)

 

"மதி கொண்ட நுதற் குறமங்கை குயந்

துதி கொண்டு மணந்தருள் தூயவனே'' (கந் அனூ 62)

 

''வண்டார் குழல் வள்ளி மணந்தருளும் தண்டாயுத வேள் சரணந் துதியே" (கந்-அனூ - 74)

 

"கண்டே குற மங்கை தனைக் களவில்

கொண்டே கடிதேகிய கொற்றவனே" (கந்-அனூ-90)

 

"கரி பெற்றிடு மின்கணவா குறமின்

பரியப் பெரிதும் பணியுத்தமனே" (கந்-அனூ-94)

 

 

 

கந்தர் அலங்காரத்தில்:-

 

"பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை

கொங்கை விரும்பும் குமரனை" (கந் - அலங் -6)

 

"தேனென்று பாகென்று வமிக்கொணா மொழித் தெய்வ

வள்ளிக்கோன்'' (கந்- அலங்-9)

 

"கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக்

                                    கொவ்வைச் செவ்வாய்

வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல்" (கந் - அலங் - 10)

 

"மொய்தாரணிகுழல் வள்ளியை வேட்டவன்" (கந் அலங் 22)

 

"குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னங் குறிச்சியிற் சென்று

கல்யாண முயன்றவனே" (கந் அலங்-24)

 

''நீலச் சிகண்டியிலேறும் பிரான் எந்த நேரத்திலுங் கோலக் குறத்தியுடன் வருவான்" (கந் அலங்-26)

 

கடத்திற் குறத்தி பிரானருளாற் கலங்காத சித்தத்

திடத்திற் புணையென யான் கடந்தேன்" (கந் அலங்-29)

 

''குறச்சிறுமான் பணங்காட்டு அல்குற்குருகுங் குமரன்" (கந் அலங் 42)

 

"வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற் பாடி கசிந்து" (கந் அலங் - 53)

 

"பொருபிடியுங் களிறும் விளையாடும் புனச்சிறுமான் தருபிடி காவல சண்முகவா" (கந் அலங்- 57)

 

"நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீல வள்ளி முற்றாத் தனத்திற்கினிய பிரான்" (கந் அலங்-58)

 

''சயில சரசவல்லி இறுகத் தழுவுங் கடகாசல பன்னிருபுயனே"

(கந் - அலங் - 67)

 

"விளங்கு வள்ளி காந்தனை கந்த கடம்பனைக் கார் மயில்

வாகனனை" (கந் - அலங் - 72)

 

''காட்டிற் குறத்திபிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்

வீட்டிற் புகுத மிக எளிதே" (கந் - அலங் - 85)

 

"செம்மான் மகளைக் களவு கொண்டு வருமா குலவனை

(கந் - அலங் - 91)

 

 

"தெள்ளிய வேனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்

வள்ளியை வேட்டவன்றாள் வேட்டிலை" (கந் - அலங் - 94)

''கடற்செந்தின் மேவிய சேவகனே வள்ளிக்கு வாய்த்தவனே மயிலேறிய மாணிக்கமே"   (கந் - அலங் - 106)

 

கந்தர் அந்தாதியில்

 

"குறச்சத்திக்கு அத்திக் கோடு பறித்துக் கொடு ஆதிசிறை பிறப்பே"

                                                (கந் - அந். - 11 )

இதன் பொருள்:-  குறமகளான இச்சா சக்திக்கு யானையின் கொம்பை பறித்துக் கானகத்தில் விளையாடக் கொடுத்த முதன்மையானவனே இப்பிறப்பை யொழித்து விடு என்பது ஆகும்.

 

''வேடிச்சிமுக பங்க செந்திலகத்து அலர் துண்டம் என்னா நின்ற சேய"           (கந் - அந் - 14)

இதன் பொருள் :- வேடிச்சியாகிய வள்ளிநாயகியின் முகம் தாமரை, மூக்கு எள்ளின் பூ, என்று வியக்கும் குமரனே! என்பது ஆகும்.

 

"மணம் புணருங் குழலாளைாத் தினைப் புனத்தே தெய்வ மணம் புணர் கந்தன் என்னீர் உங்கள் தீது அறவே"   (கந் - அந் - 30)

 

இதன் பொருள் :- வாசனை மிகுந்த கூந்தலையுடைய வள்ளிநாயகியை தினைப்புனத்திலே காந்தருவ மணமாகப் புணர்ந்த கந்தனே! என்று துதியுங்கள் உங்களுடைய வினை ஒழியும் என்பது ஆகும்.

 

"வனப்பு மலர் வேங்கையானவன் செஞ்சிலை யோர்

சீர் கை வன புனிதத் தவ வேடன் தினை வளைக்குஞ்

சீர்க்கு ஐவனப் புனமது உருக் காட்டிய சேய்'' (கந். அந் - 37)

இதன் பொருள் :- அழகான மலர்களையுடைய வேங்கை மரமாய் நின்றவனும், அழகிய வில்லையுடைய வேடர்கள் சந்தேகப்பட்ட

தன்மையை கோபித்து, வனத்தில் பரிசுத்தமான தவவேடங் கொண்டு, தினை புனங் காக்கும் வள்ளிக்கு மலைநெல் விளைகின்ற புனத்தின் கண் தன் நிச ரூபத்தை காட்டிய குமரனே! என்பது ஆகும்.

செய்ய செந்தாமரையில்லாத மாதுடன் செந்தினை சூழ் அசெந்தாமரைமான் ஆர் சிலம்பிற் கலந்துறையுஞ்” (கந். அந் - 43)

இதன் பொருள்:- தினை விளை நிலத்தையுடைய வேடர்களுக்குத் தெரியாது. புனங்காத்திருந்த வள்ளியை அச்செந்தினைக் கொல்லையில் காட்டு ஆடும் தாவுகின்ற, கடம்பும், மானும் நிறைந்த மலையில் காந்தருவ மணம் புரிந்து உறைபவனே! என்பது ஆகும்.

வள்ளிமலையின் வேறுபெயர்கள்:-

வள்ளிமலைக்கு வேறு பல திருப்பெயர்கள் இருந்ததாக, திருப்புகழிலும்,

கந்தர் அந்தாதியிலும், கந்தர் அலங்காரத்திலும், கந்த புராணத்திலும் காணலாம்.

அவை:- அரிவைவிலங்கல், அந்தண்வரை, ஆரணியமலை, ஐவனவெற்பு, கல்வரை, குலாத்திகிரி, குரங்குலாவுங் குன்று, குறிச்சி, மகாசலம், மையுலவு சோலை, வள்ளிபுனம், வள்ளிபுரம், வள்ளிபடர்கானம், வள்ளிக்கல், மயில்கோகிலமகிழ்நாடு ஆகியவை திருப்புகழிலும், குறிச்சி, பிறங்கல்,நீள்கிரி, வள்ளிவெற்பு, வள்ளிமால்வரை, வள்ளியங்கிரி, வள்ளியஞ்சிலம்பு என்று கந்தபுராணத்திலும், ஐவனப்புனம் என்று கந்தர் அந்தாதியிலும், குறிச்சி, கல்வரை என்று கந்தர்அலங்காரத்திலும் காணலாம்.

 

அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை

வயல்கள் பொருந்திய சந்த வண் கரை

"எயரிவைவிலங்கலில்" வந்து கந்தருள் பெருமாளே

(வரைவில் பொய் - 8- ஆம் அடி - வள்ளிமலை திருப்புகழ்)

 

மந்தி குதி கொள் "அந்தண்வரையில்

மங்கை மருவு மணவாளா

    (மைந்தரினிய 5 ஆம் அடி வள்ளிமலை திருப்புகழ்)

 

மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்

மாந்திய "ஆரணியமலை " மீதிற்

    (சாங்கரி பாடியிட 6 ஆம் அடி வள்ளிமலை திருப்புகழ்)

"குரங்குலாவுங்குன்றுறை குறமகள் மணவாளா

     (இருந்த வீடுங் 6- ஆம் அடி வள்ளிமலை திருப்புகழ்)

 

வேத வித்தக வேதா விநோத கி

ராத லட்சுமி கிரீடா "மகாசல'

வீர விக்ரம பாராவதாவை கண்டசூர

     (போத நிர்குண - 7 - ஆம் அடி - வள்ளிமலை திருப்புகழ்)

 

வள்ளிக் குழாமடர்ந்த "வள்ளிக்கல் " மீது சென்று

வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே

(கையொத்து - 8 - ஆம் அடி - வள்ளிமலை திருப்புகழ்)

 

வகுளமு முகுளித வாழைகளுமலிபுன வள்ளிக்

"குலாத்திகிரி' வாழும்

(ககனமு மநிலமு - 7 - ஆம் அடி - வள்ளிமலை திருப்புகழ்)

 

வைய முழுதாளும் ஐய குமரேச

"வள்ளிபடர்கானம்" புடைசூழும்

      (பை அரவு போலும் – 5 – ஆம் அடி - வெள்ளிக்கர திருப்புகழ் )

 

மரகத வடிவு மடலிடை யெழுதி

"வள்ளிபுனத்தில் நின்ற மயில்வீரா

      (சிகரிகளிடிய - 6 - ஆம் அடி - வெள்ளிக்கர திருப்புகழ் )

 

அகிலடி பறிய எறி திரையருவி

"ஐவனவெற்பில் " வஞ்சி கணவா

(சிகரிகளிடிய - 3 - ஆம் அடி - வெள்ளிக்கர திருப்புகழ் )

 

மருவலர் "வள்ளிபுர" முள வள்ளி

மலைமற வள்ளி மணவாளா

(பொருவன கள்ள - 5 - ஆம் அடி - வெள்ளிகர திருப்புகழ் )

 

"மையுலவுசோலை செய்ய குளிர் சாரல்

வள்ளிமலை வாழுங் கொடி கோவே

(இல்லையென நாணி - 6 -ஆம் அடி - வெள்ளி கர திருப்புகழ் )

 

 

செய்ய துய்ய புள்ளி நவ்வி

செல்வி "கல்வரை யிலேனல்

(தொய்யில் செய்யில் - 5-ஆம் அடி - வெள்ளி கர திருப்புகழ் )

 

குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னங் "குறிச்சி" யிற் சென்று கல்யாண முயன்றவனே

(கின்னங் குறித்து - கந் - அலங் - 24 )

 

 ஆய தோர் "குறிச்சி" தன்னில் அமர் தரும் கிராதர்க்கெல்லாம்

(கந். பு. 6 - 24 - 10096)

 

கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் "கல்வரைக்"

கொவ்வைச் செவ்வாய்

(கந். அலங் - 10)

 

 "வள்ளி வெற்பின்" மரம் பயில் சூழல் போய்

(கந். பு.-6- 24 - 10321)

 

நிமிருகின்றது "நீள்கிரி "அன்னதே

(கந், பு.-6-24-10084)

 

விண்ணுயர் "பிறங்கல் " மீது விரிகின்ற சுனைகள் மிக்குத்

(கந்.பு. - 6 - 24 - 10089)

வளவி தாகிய "வள்ளிமால்வரை" தனில் வந்து

(கந்.பு.-6-24- 10135)

தள்ள எம்பிரான் தணிமை வெற்பொரீஇ

"வள்ளியங்கிரி" வயின் வந்தெய்தினான்.

(கந். பு.- 6 - 24 - 10145 )

 

மண்டலம் புகழும் தொல்சீர் "வள்ளியஞ்சிலம்பின் மேல் போலப்

(கந். பு. - 6 - 24 - 10146)

மகிழ் மாலதி நாவல் பலா கமு

குடனாட நிலா "மயில் கோகில

மகிழ்நாடுறை' மால் வளிநாயகி மணவாளா

(முகிலாமெனும் - 7 ஆம் அடி - வளவாபுரி திருப்புகழ் )

 

வள்ளியை இருளில் அழைத்துச் சென்று முருகன் மணந்தான் என்று அருணகிரி நாதர் தம் திருப்புகழில் மிக அழகாக கூறுகிறார்:

 

''அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பிலங்க

அல்லிக் கொள் மார்பலங்கல் புனைவோனே''

(முல்லைக்குமாரன் - 5 - ஆம் அடி வள்ளிமலை திருப்புகழ் )

 

வள்ளியும் முருகனும் தேனுந்தினையும் உண்டனர் என்பதை கீழ்வரும் வரிகளால் உணரலாம்:

''தருபுன வள்ளிமலை மறவள்ளி

தருதினை மெள்ள நுகர்வோனே"

.     (குவலயமல்கு - 6-ஆம் அடி - வெள்ளிகர திருப்புகழ் )

 

''பசி நோய் என்னத் தேனொடு கனியும் மாவும் செங்கையிற்

      கொடுப்பக் கொண்டு"

                              (கந்.பு . - 6 - 24 - 10)

"தெள்ளித் தினை மாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக் கொடி"

(கந்தர் கலி வெண்பா )

 

வள்ளியை புள்ளிமானாகிய லக்குமி, ஈன்றனள் என்பதை மிக ரம்யமாக 'அருணகிரிநாதர்' திருப்புகழில் பாடுகிறார்:

 

 

''வள்ளல் புள்ளி நவ்வி

நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே"

(கள்ளமுள்ள - 5-ஆம் அடி) வெள்ளிகர திருப்புகழ் )

 

"செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல்வரையிலேனல்"

(தொய்யில் - 5 - ஆம் அடி) வெள்ளிகர திருப்புகழ் )

 

அமைவிடம்:-

இத்தகைய பல சிறப்புக்களை ஒருங்கே பெற்ற இத்திருத்தலம், தொண்டைநாட்டில், வேலூர் மாவட்டத்தில், காட்பாடி வட்டத்தில், திருவலத்திலிருந்து காட்பாடி இரயில் நிலையங்களுக்கு வடக்கே (19 கி.மீ.) தூரத்திலும், வேலூரிலிருந்து (25 கி.மீ) தூரத்திலும்,  இராணிபேட்டையிலிருந்து பொன்னை வழித்தடத்தில் (22 கி.மீ) தூரத்திலும், அரக்கோணத்திலிருந்து (45கி.மீ) தொலைவிலும், ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து (30 கி.மீ) தொலைவிலும் அமைந்துள்ளது. திருவலம் > பொன்னை சாலையில் 'கோட்டநத்தம்' கிராமத்தில் இறங்கி மேற்கே சிறிது தூரம் நடந்தால் கோயிலை அடையலாம். காட்பாடியில் இருந்து நேராக வள்ளி மலையை அடையலாம்.

     இக்குடவரை கோயில் (கி.பி 856-917 க்கு) இடைப்பட்ட காலத்தில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது எனச்சொல்லப்படுகிறது. இடையில் திருப்பணி செய்யும் போது, (8 கால்) மண்டபத்தின் கீழ் சித்தர்கள் தவமிருந்தார்கள் என்று தெரிந்து புதுப்பிக்கப் படாமல் உள்ளது. இத்திருக்கோயிலில் சித்ராபௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிகிருத்திகைதெப்பல் திருவிழா, கந்தர்சஷ்டி லட்சார்ச்சனை, தைபூசம், மாசி மகம், பிரம்மோற்சவத் தேர்த்திருவிழா, பங்குனி மாத கடைசியில் படிவிழா, ஆகிய திருவிழாக்கள் சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெறுகிறது. இவை தவிர மாத, வார ஏறுபடிகளும் சிறப்பாக நடை பெறுகிறது.

     ஒவ்வொரு வருடமும் பிரம்மோற்ச்சவத் தேர்த்திருவிழா, மாசி மகத்திற்கு முன் பஞ்சமிதிதியில் கொடியேற்றத்துடன் துவங்கி 6 நாள் வாகன உற்சவம் புறப்பாடு நடைபெறும். (7 ஆம் நாள் முதல் 10 - ஆம் நாள்) முடிய நான்கு நாட்கள் தேர் மலையை (8 கி.மீ) தூரம் சுற்றி வருதல் வேறெங்கும் காண படாத சிறப்பானது ஒன்றாகும். பக்தர்கள் நான்கு நாட்களும் தேருடனே வலம் வந்து, விரதமிருந்து வழிப்படுவார்கள். (11 - ஆம் நாள்) காலையில் வேடுவர்கள் தேனும் தினை மாவும் படையல்

செய்து, வேடர்பரி உற்சவம் நடத்தி, ஸ்ரீ வள்ளியம்மைக்கு திருக்கல்யாணம் செய்விப்பார்கள். இவை அனைத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

 

வள்ளிமலையில் பார்க்க வேண்டிய இடங்கள்:-

 

வள்ளிமலையில் வள்ளியம்மை ஆயலோட்டிய மண்டபங்கள், சூரியன் காணா சுனை, கணேசகிரி, மான் கருவுற்ற ஓடை, வள்ளி மஞ்சள் அரைத்து குளித்த இடம், வள்ளி முருகன் திருவடிகள், வள்ளிக்கோயில், எட்டுக் கால் மண்டபம், சமணர்குகை, திருப்புகழ்சாமி ஆசிரமம், ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் சமாதி பீடம், பொங்கியம்மன் சன்னதி, ஆறுமுகசுவாமி திருக்கோயில், சரவணபொய்கை, மலைமேல் உள்ள குகைக்கோயில் ஆகியவைகள் ஆகும்.

 

கிரிவலம் வருதல் :- பிரதி பௌர்ணமி நாட்களில் பல ஊர்களி லிருந்தும், பக்தர்கள் தனியாகவும் பஜனை குழுவினருடனும், ஆயிரக் கணக்கில் வந்து முருகப் பெருமானின் திருப்புகழை பாடிய வண்ணம் சுமார் (8கி.மீ.) தூரம் கிரிவலம் வருவது வியக்க தக்கதாகும்.

 

வள்ளி மலையின் அடிவாரத்திலும், மலைமேலும், திருமுருகப் பெருமான் கோயில் கொண்டுள்ளான். கீழே சரவணப்பொய்கையை கடந்து சென்றால், ஆறுமுகப்பெருமான் இரு தேவியருடன் மயிலோடு கிழக்கு நோக்கி, அருள் பாலிக்கிறான், அங்கிருந்து ஒரே பாறையில் உண்டான சுமார் (445) படிகளை கடந்து சென்றால், திறந்த வெளியில் கொடிமரம் காணலாம்.

அங்கிருந்து குடவரை மண்டபம் அடைந்தால், பாறையில் தினைபுனம் காக்கும் கோலத்தில் வள்ளியையும், அருணகிரிநாதர், வீரபத்திரர், நவவீரர்கள், காசிவிசுவநாதர் - விசாலாட்சி ஆகியோரைக்காணலாம். அங்கிருந்து இருபடிகளைக் கடந்தால் 'ஸ்ரீசுப்பிரமண்ய பெருமான், வள்ளி தெய்வயானை இரு பக்கமும், சூழ , ஒரு முகமும், இரு கரமுங் கொண்டு தென் திசையில் நின்ற கோலத்தில் வெகு ரம்யமாக காட்சி தருகிறான்'.

     இச்சன்னிதியில் மயில் தன் அலகில் நாகத்தை கவ்வியபடி அமைந்துள்ள, லாவகம் வேறு எங்கும் இல்லாத ஓர் அபூர்வ காட்சியாகும் இது மிக மிகச் சிறப்பு வாய்ந்தது ஒன்றாகும்.

சன்னதிக்கு எதிரே ஒரு சதுர துவாரம் காணப்படுகிறது. அதற்குப் பின்புறம் ஒரு குகை இருந்ததாகவும், முருகன் வள்ளியை அங்கே களவாடிச்சென்று காந்தர்வ மணம் புரிந்து கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. இதை அருணகிரி நாதர் மிக அழகாக பாடுகிறார்:

 

"செம்மான் மகளை திருடும் திருடன்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

சும்மா இரு சொல் அற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே"

(கந். அனூ - 12 )

 

 

 

"பண்டே தொடர் பற்றொடு சுற்றம் எனும்

வெண் தேரை மகிழ்ந்து விழித்திடவோ

கண்டே குற மங்கை தனைக் களவில்

கொண்டே கடிதேகிய கொற்றவனே"

(கந் - அனூ - 90)

 

''கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவு கொண்டு

வருமா குலவனைச் சேவற் கைக்கோளனை வான முய்யப்

பொரு மாவினைச் செற்ற போர் வேலனைக் கன்னிப் பூகமுடன் தருமாமருவு செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே''

                           (கந். அலங் - 91)

 

அங்கிருந்து கீழே வரும் வழியில், இடது புறம் ஜைன, புத்த மதத்தவரின் பாழிகள் காணப்படுகின்றன, சில கல்வெட்டுகளும் காணப் படுகின்றன. அக்காலத்தில் ஜைனரும் புத்த துறவிகளும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரமம் அமைந்த இடத்தில், சூரிய ஒளி படாத ஜலம் என்ற ஒரு சுனை இருக்கிறது. இங்கு தான் வள்ளியும், முருகனும் தேனும், தினைமாவும் உண்டதாகவும் கூறப்படுகிறது. அங்கே எதிரேயுள்ள பாறையில் வள்ளி மஞ்சள் அரைத்து குளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

     அங்கிருந்து பார்த்தால் குன்று ஒன்று தென்படுகிறது. அதற்கு கணேசகிரி என்று பெயர். அங்கே வள்ளி முருகன் காலடி சுவடுகள் காணப்படுவதாக இருக்கின்றன. இங்குதான் யானை வடிவில் விநாயகப் பெருமான் வள்ளியை பயமுறுத்தியதாகவும் வள்ளியும் பயந்து ஓடி கிழ வடிவு கொண்ட முருகனை கட்டி தழுவிக் கொண்டதாகவும், பின்னர் ''வந்தது முருகன் என்று உணர்ந்த வள்ளியை, மணந்ததாகவும் ஐதீகம்.

 

பூசா விதிகள்:- இத்திருக்கோயிலில் நான்கு கால பூசை நடைபெறுகிறது. காலைச்சந்தி , உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய காலங்களில் பூசை நடைபெறுகிறது. இதில் காலைச்சந்தி மற்றும் சாயரட்சை பூசை திருக் கோயில் மூலமாகவும், உச்சி காலம் மற்றும் அர்த்தசாமம் பூசை உபயதாரர்கள் மூலமாகவும் நடைபெறுகிறது. ஸ்ரீ சண்முகர் சன்னதி மற்றும் ஸ்ரீ வள்ளியம்மை சன்னதிகளில் மட்டும் காலைச்சந்தி நடைபெறுகிறது.

 

 

மலைக் கோயில்

காலை (7.30 மணி முதல் பகல் 12.30 மணி) வரையிலும்

மாலை (2.00 மணி முதல் இரவு 7.00 மணி) வரையிலும்

 

கீழ்க் கோயில்

காலை (7.00 மணி முதல் பகல் 12.30 மணி) வரையிலும்

மாலை (2.00 மணி முதல் இரவு 7.30 மணி) வரையிலும்

 

வழிபாட்டு நேரங்களாகும். விசேட நாட்களில் வழிபாட்டு நேரம் மாறுபடும். இத்தகைய பல சிறப்புக்களையும், பெருமைகளையும் பெற்ற வள்ளிமலையை முருகப் பெருமான் பக்தர்களும், தொண்டர்களும், அடியார்களும், தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று தரிசித்து, அந்த 'வள்ளி மணாளனை' தொழுது திருவருளைப் பெற்று உய்ந்திடவும், அடியேன் அவ்வள்ளிக்கு வாய்த்தவனை, அட்டாங்கமாக தெண்டன் இட்டு பணிந்து வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

 

வள்ளிமணாளன் அட்சரமாலை உற்பவித்த அற்புதம்:-

அருள்மிகு "திருத்தணிகை முருகப்பெருமான்" திருவருளாலும் எமது குருநாதராகிய வள்ளிமலை ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் ஆசீர்வாதத் தாலும், கிடைக்கப்பெற்ற "தணிகைவேல்முருகன் அருள்மாலையைப்" போலவே, இந்த "வள்ளிமணாளன் அட்சரமாலையும் " திருவள்ளிமணாளன் திருவருளாலும் எமது குருநாதராகிய வள்ளிமலை ஸ்ரீதண்டபாணி சுவாமிகள் ஆசீர்வாதத்தாலும், (3-09-2007) திங்கள்கிழமை, கிருத்திகை அன்று ஆரம்பமாகி, அதை தொடர்ந்து, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், ஏகாதசி, சங்கடஹர சதுர்த்தி, போன்ற முக்கியமான நாட்களில், அடியேன் சிந்தையில் தோன்றியது. இச்செய்யுட்கள் அனைத்தும் திருமுருகப்பெருமானின் அடியார் பெருமக்கள் வேண்டுகோளிற்கு இணங்க புத்தகமாக அச்சாகி ''திருவள்ளிமணாளன்', திருப்பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது. "தணிகைவேல்முருகன் அருள்மாலை" என்ற நூலில் மேலும் விவரங்களை பார்க்கவும்)

வேலும் மயிலும் துணை

இங்ஙனம்

திரு முருக பெருமானின் அடிமை

ஆரணி அடியார்க்கடியவன் (எ)

சா. குப்புசாமி

 

 

 

 

 

 

 

 

 

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai