அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi
அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi
[ PDF]
புற்றுக் கோயில் உறையும் அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி.
விநாயகர் காப்பு.
பூரண கும்பமதில் பொலிவுற்றிடும் பவானியை
நாரணன் சோதரியை நளினமிகு நங்கையை, ஆதி
ஆரண முதல்வன் ஆரணங்கை அங்காளியைப் பாட
வாரண முகத்தனே! வரம் சித்தி ஞானம் அருளுக!
மானே ! மரகதமே ! மாசிலாயென் மாணிக்கமே ! மலர்
தேனே சொரிந்தேன் திகைப்புற்று நின் திருப்பாதங்களில்
யானே பெறுவது யாவும் இனிதே யமைய வருளுக!
வானே புகழ் அங்காளியே வரந்தருங் கற்பகமே! (1)
கற்றைவார் சடையனார் கனியே! கண்மணியே! கதியே!
நற்தவத்தோர் போற்றும் நங்கையே நாடும் பொருளுஞ்
சுற்றமும் நீயே என்றிருந்தேன் சொல்லொணா இடர் வரும்
அற்றைக்கு வந்து அருளுக அங்காளியே என்னுளே ! (2)
என்னுளே வாழ் ஈசன் இடபாகத்தவளே ! இமகிரி
மன்னன் பெற்ற மாதுளம் பூவிதழ் முகத்தவளே !
அன்னமே! அங்காளியே ! அலங்கார வல்லியே!.
உன்னையே தொழுதேன் உய்வித்து அருளாய் பொற்பதமே ! (3)
பதமே நாடி தினம் பாங்குடனே சொன்னேன் குறைகளை
இதமாக ஓர் சொல் பகராயோ? எளியேன் முன் இரங்காயோ?
உதய சூரியன் ஒளி பிழம்பாய் ஓங்காரரூபமாய்
அதரமே திறவாய் அங்காளியே ஆதி அற்புதமாய் ! (4)
அற்புத வல்லியே! ஆனந்தரூபியே! அரிய
புற்றுக் கோயிலுறையும் பூங்குழலியே! அங்காளியே!
உற்ற தெய்வமே! உமையே! என் உச்சித் திலகமே!
சற்றாகிலும் மனது வைத்து பாராய் இச்சிறியேனை ! (5)
சிறியேன் ஊழ்வினை பயனால் சகத்திலுதித்து
அறியா பருவம் முதலே யுனை யண்டி, வாழ்ந்த யென்
பொறிகள் ஐந்தையும் அடக்கி யாள்வாய் புற்றுக் கோயில்
உறையும் பூங் கொடியே! அங்காள ஈச்சுவரியே ! (6)
ஈச்சுவரியே எனையாளுந் தயாபரியே! பேசும்
பேச்சிலுறையும் பொற்சித்திரமே ! போற்றும் சூலம்.
ஓச்சுபவளே ! அழகொளிரும் அங்காளியே ! ஓடும்
மூச்சுள்ள வரை உனை மறவாதிருக்க அருள்வாயே ! (7)
அருளும் வாக்கும் ஒருசேர அடியேன் பெறவும்
பொருளொடு பொன்னும் மணியால் புண்ணியஞ் செயவும்
பருவத நாயகியே ! பசுங்கிளியே! பங்கையமே !
இருள் நீக்கிடும் அங்காளியே என் முன்னே வருவாய் ! (8)
வருவாய் வாச மலரே ! வண்டிசைக்குங் குழலாலே!
கருநீல கண்ணொளிருங் காமாட்சியாய் அன்று
தருமங் காத்த தாமரை நுதலழகே ! தொழுவார்க்கு
அருளும் அங்காளியே ! அடியேன் துயரற காவாய் நீயே! (9)
நீயே என்னுயிரு முடலுமாய் நீங்காதிருக்க
நாயேன் படுந்துயர் கூறினேன் நின் செவியில் கேளாதோ?
காயே! கனியே! கனக முகத்தாளே .அங்காளியே!
சேயேனை காக்க யுன் சித்த மிரங்காதோ சொல்வாய் ! (10)
சொல்லிய மறை நான்கிலு முறையுஞ் சொர்ணமே !
அல்லி விழியாளே ! அம்பிகையே ! அங்காளியே !
நெல்லிக் கனி நிறத்தாளே ! நித்தமுனை தொழுதேன்
மல்லிபூ மணத்தோடு மனமிரங்கி வாரும் அம்மா ! (11)
அம்மா ஆதி நாயகியே ! அங்காளீச்சுவரியே !
சிம்ம வாகினியே ! சிங்கார வல்லியே ! சிவையே !
பொம்மலாட்டக்காரியே! புற்றுக் கோயில் பூமகளே !
கம்மலொளிருங் கனகாங்கியே ! காரும் அடியேனை ! (12)
அடிமுடி தேடிய இருவர்க்கறிய வொண்ணாத
நெடியத் தீபிழம்பின் பக்கமுறையும் நீலியே!
கொடிய அசுரரைக் கொன்ற அங்காளீச்சுவரியே !
படி வாழ பார்த்திடம்மா ! பார்வதியே பரிவோடு ! (13)
பரிமேலேறும் பாலகனை பெற்ற தாயே ! தர்பரையே !
கரிய மால் கண்ணனது தங்கையே! கௌமாரியே !
சிரித்த முகத்தவளே ! செண்பக வல்லியே!.
திரி சூலியே! அங்காளியே! வருகவே துணையாக ! (14)
துணையான தெய்வமே ! தோகை மயில் வடிவே ! தீக்கு
இணையான இளங்கதிரே ! இமவான் பெற்ற கொழுந்தே !
கணைக்கு நிகரான கயல்விழியாளே ! கனியமுதே !
அணையும் பத்தனை காந்து வரம் ஈவாய் அங்காளியே ! (15)
அங்கமெலாம் பொன் ஒளிர ஆடிவரும் அங்காளியே !
செங்கையில் தழலேந்தி செந்நிறப் பட்டுடுத்தி
பங்கய முகத்தினிலே பார் புகழும் பொட்டிட்டு
சங்கடந் தீர வருவாய் சிற்றடியிட்டு இங்கே ! (16)
இங்கிதமாய் எழுந்தருளும் இளங்கிளி மொழியாளே !
சிங்க மேறுஞ் சாமுண்டியே ! சிற்சபையில் சிவகாமியே !
பொங்கரவஞ் சூடியவளே ! புற்றுக் கோயில் அங்காளியே !
எங்கிருந்தாலும் வருக ! இருள் நீக்குங் காளியாக ! (17)
காளிகாம்பிகையே ! கார்மேகக் குழலாளே ! காடுபுகு
கூளிகளோடாடுங் கொற்றவையே ! கொவ்வைக்கனி இதழாளே
தூளியிலாடுந் துர்காம்பிகையே ! தொண்டருளம் வாழும்
வாளின் விழியாளே ! வாராய் அங்காளியே ! வரந் தரவே ! (18)
தரணி வாழ் உயிர்க்கெலாம் தாயான தாட்சாயணியே !
அரன் மகிழ எண்நான்கு அறம் வளர்த்த நாயகியே !
இரவு பகல் துதிப்போர்க்கு எல்லாமு மளிப்பவளே !
வரமளிக்க என்முன் வாராய் அங்காளியே இது சமயம் ! (19)
சமய புரத்தாளே! சாம்பவியே சங்கரியே !
இமகிரி வாசன் இதய நாயகியே ! இள மங்கையே !
கமலாம்பிகையே ! காந்திமதியே ! கன்னியாக்
குமரியே ! குறை:நீராய் அங்காளியே கொடியவையோடு ! (20)
கொடியிடையாளே ! கோமளமே! கோடேந்தும் முலையாளே!
அடியார்க்கருளும் அபிராமியே! என்வினை யாவையும்
பொடியாக்குவாய் புற்றுக் கோயிலுறை அங்காளியே!
முடியாண்ட அரசர்க்கு மோகனமாய் வந்த திருவே ! (21)
திருவுடைய நாயகியே! திருவேற்காட்டு மாரியே!
மருவார் குழலியே! மரகத வல்லியே! கையிலே
கரும்பணையாளே! காவியங் கண்ணியே! கௌரியே!
அருந்தவச் செல்வியே! அங்காளியே! அருளுவாய் ! (22)
அருளாம்பிகை தாயே! அயிரா வணியே! அந்தரியே!
கருகாத்த நாயகியே! கருணாம்பிகையே! கோகிலமே!
புருவச் சிலையாளே! புற்றுக் கோயிலுறை அங்காளியே!
தருவாய் எனக்குன் தரிசனமும் தனமும் வடிவுமே! (23)
வடிவுடை நாயகியே! வல்லபையே! விசாலாட்சியே!
துடியிடையாளே! துரந்தரியே! தேன் மொழி பாவையே!
மிடி தீர்க்கும் மீனலோசனியே! அங்காளியே யுன்.
அடிமை எனக்கு அருளை தர நிற்பாய் முன்வந்து! (24)
வந்த பிணி தீருமம்மா! வாச மலர் அங்காளியே!
அந்தரந்தனிலே அதியற்புத முழுமதியை
குந்தகம் நீங்கிட கொண்டு வந்து வானிலே பின்
பந்தமிலா பட்டருக்கு புரிந்தாய் அபயமே! (25)
அபயாம்பிகையே! அஞ்சனாட்சியே! அங்காளியே!
இபமுகனை ஈன்றவளே! ஈராறு கரத்தனுக்கு
சுபம் தருஞ் சுடர்வேலை தந்த சத்தியே! எனக்கு
கபடு வராத மனமுங் கண்மமிலா வாழ்வுந் தருவாய்! (26)
தரும சம்வர்த்தினியே! திருக்குழல் நன் மாதுவே!
முருகு வளர் கோதையே, மலையான் மடந்தையே! ஆன
அரு மருந்தம்மையே! அதிகாரியே! அங்காளியே!
பொருந்தும் புற்றுக் கோயிலுறை பூவே! தருவாய் ஞானமே! (27)
ஞான பூங்கோதையே நல்ல நாயகியே நறுந் தேனே !
எனக் கொம்பூதும் ஈசனோடாடும் ஏலவார் குழலியே !!
தேனமுத மொழியாளே! தேவர் புகழ் அங்காளியே !
ஆன இவ்வாக்கைக்கு அருள்புரிவாய் வையகத்தே! (28)
வையகந் தனிலே வாழுமுயிர்க்கு ஆதாரமாய்
பையரவுகுடை பிடிக்க வரும் பைரவி தேவியே!
தையல் நாயகியே! திரிபுர சுந்தரியே தொடரும்
மையலகற்ற வாரும் மாதங்கியே! அங்காளியே! (29)
அங்கையில் சூலந்தாங்கி அகிலங் காத்தவளே!
எங்கும் இருப்பவளே! ஈச்சுவரியே! மகமாயி
கங்குல் பகல் எந்நேரமுங் காக்கும் அங்காளியே! நீ
இங்கு எழுந்தருளாய் பெருகவே பல்வளமும் ! (30)
பல்வள நாயகியே! பாலா திரியுர சுந்தரியே!
அல்லியங் கோதையே! அகிலாண்டேச்சுவரியே!.
வல்லாம்பிகையே! வன முலையாளே ! வண்டார் குழலியே!
செல்லியம்மையே! அங்காளியே வருகவே சீர் ஓங்க ! (31)
ஓங்காரியே ஓசை கொடுத்த நாயகியே! சுருதி
ரீங்காரியே! ரிக்வேத நாயகியே! இராக சொரூபிணியே
ஆங்கார சூரரையழித்த அங்காளியே! நீயே
பாங்காக வந்து என் பழவினை களைவாய் பரிவோடு! (32)
பரிமள சுகந்த நாயகியே! பாகம்பிரியாளே!.
பெரியநாயகியே ! பண்ணின் மொழியாளே பொற்பாவை
சரிவார் குழலியே! சகிதேவியே! சொக்க நாயகியே!
அரிய புற்றுக் கோயில் அங்காளியே! இங்கு எழுக! (33)
எழுபாருமுய்ய வரும் இளங் கொம்பணையாளே!
கொழுந்தே! கோல்வளை நாயகியே! கிருபாநிதியே!
செழுந்தேனே! சுந்தர குசாம்பிகையே உமையே!
தொழுதேன் உனையே! அங்காளியே ! துணை நிற்பாயே! (34)
நிற்கு இடமே நிலையாய்க் கொண்ட நீலாம்பிகையே!
பொற் கொடியே புற்றுக் கோயிலுறை அங்காளியே
அற்புத வடிவே! அம்பாயிரவல்லியே! நீயே
உற்ற துணையாய் வாருமம்மா! உலக நாயகியே! (35)
நாயகியாய் பல தலங்களுறையும் நறுங்குழலியே!
மாயா சொரூபிணியே! மயானத்தில் நின்ற உமையே!
ஆயர் குல கண்ணனது தங்கையே! அங்காளியே!
காய மறுத்து கதியளித்து நின் கழலில் சேர்ப்பாய்! (36)
சேர்கின்ற மூலப் பொருளாயுறையுஞ் சிவகாமியே!
பார்க்கின்ற இடமெலாம் பார்வதியே! உன் வடிவே தான்
நேர்கின்ற தடைநீக்கி அங்காளியே! நீடுகயுன்
மார்கொண்ட மாலையொடு மழலைச் செல்வமுமே! (37)
செல்வ நாயகியே! சௌந்திர வல்லியே! காக்கும்
எல்லை அம்மையே! இறையார் வளையாளே! இணையிலா
தில்லை நாயகியே! தேனார்குழலியே! அங்காளியே!
நல்குவாய் நாநிலத்தில் நலம்பல நயமுடனே! (38) .
நயன சுந்தரியே நித்ய கல்யாணியே
அயனங்கள் தோறும் உற்சவங் காணும் அங்காளியே!
கயல்விழியாளே! கருத்தார் குழலியே! கமலமே!
புயபலமோடு தருவாய் பொருளும் பொன்னுமே! (39)
பொன் மயிலம்மையே! போகமார்த்த பூண்முலையாளே!
கன்னலின் இரசமே! காம்பன்ன தோளியம்மையே!
நன்முலை நாயகியே! நீநெடுங்கண்ணியே! நாடும்
இன்னலை யகற்ற வருவாய் அங்காளியே! புவனேசியே! (40)
புவனேச்சுவரியே! புறவாம்பிகையே! புத்தேனே!
குவலயந்தனிலே குயிலினும் நன்மொழியாளே!
சிவ சங்கரியே! சோதி மின்னம்மையே! சுவையே!
நவராத்திரி நங்கையே அங்காளியே! வருகவே! (41)
வருகவே வாள்நெடுங்கண்ணியே! வேதநாயகியே!.
மிருதி முகிழாம்பிகையே! மதுர மொழியாளே!
கரும்படு சொல்லம்மையே! கயிலாய நாயகியே!
அருணை அபிதகுசாம்பாளே! அங்காளியே வரமீவாய்! (42)
ஈரேழுலகமுந் தொழும் இளமுலை நாயகியே!.
சாரேன் நினையலாது பிறரொருவரை சகம்பரியே!
நாரே கொண்டுநன் மலர்கள் புனைந்து நற்றாளிட்டே
நீரே சொரிந்தேன் நின்னடிக்கே அங்காளியே! (43)
அங்குச பாசமேந்திய அங்காளியே! ஆரணியே!
நங்கையுமையம்மையே! நீலாயதாட்சியே! நித்ய
மங்கையர்கரசியே! மாணிக்க வல்லியே! ஆடி
பொங்கலிட்டு பொற்றாள் வணங்க புரிவாய் வாகையே!
வாகை மாலை சூடுபவளே! வார்கொண்ட முலையாளே!
ஈகை குணத்தாளே! யாழின் மொழியாளே! அழகான
தோகை மயில் வாகனனை பெற்ற தடாதகையே! அடியேன்
சாகையும் பிறப்பையுமொழித்தருளாய் அங்காளியே! (45)
அங்கையர்கண்ணியே! அழகுசடைமுடியம்மையே!
பங்கையச் செல்வியே! பெண்ணின் நல்லாளே! பிராமியே
கொங்கைப்பனையாளே! கோகர்ண நாயகியே! கோமதியே!
சங்கிலுறையும் அங்காளியே! தருவாய் சிற்பரமே! (46)
பரமனது மங்கையே! பிரமராம்பிகையே! தேவியே!
நிரந்தரியே! ஞானபிரசுராம்பிகையே! நல்ல
வரந்தரும் வேல்நெடுங்கண்ணியே வினையேனுய்யவே
இரங்கி அருளாய் அங்காளியே! இன்முகத்தோடே! (47)
தோடே வீசி பூரண தண்சுடரழைத்த அபிராமியே!
ஏடே கொண்ட இறைவனோடாடும் அர்த்தாங்கியே!
காடே உறையுங் கங்காளியே! ஆதி அங்காளியே! யான்
ஈடேறவே வரங்கள் பல தருவாய் வளங்குன்றாது! (48)
குன்றாது அருள் தருங் குன்றமுலை நாயகியே!
அன்றரனுக்கிணையாக ஆடிய லலிதாம்பிகையே!
உன்றன் பெருமை கூற யுதித்தேனே அங்காளியே!
என்றென்றும் என்னோடிருப்பாய் யான் வாடி வற்றாம! (49)
வற்றாது வளம் பொழியுங் வடிவாம்பிகையே!
உற்றாரு முறவினருஞ் சதமோ? ஓங்கார ரூபிணியே!
கற்றார்கள் நாவிலுறையுஞ் செங்கரும்பு நாயகியே!
முற்றா முல்லை நிற அங்காளியே! தஞ்சம் உன்இடமே! (50)
இடபாக முறையும் ஏகாம்பரியே! எந்திழையே!
கடம்பவன குயிலே! காமேச்சுவரியே! காரியந்
திடம் பெற வருவாய் தயாநிதியே! தரும வதியே!
விடமுண்டவனோடாடும் அங்காளியே! காரணியே! (51)
காரண நாயகியே! காதம்பரியே! கார்குழலியே!
ஆரண முரைத்தானோடு அகிலங் காக்கும் அங்காளியே!
பூரண கும்பேச்சுவரியே! புவன நாயகியே!
தாரணியில் தமியேன் பிணி யாவுந் தீராய் மருந்தாக! (52)
.
மருந்தென வரும் மாகேச்சுவரியே! முழுமதியே!.
சுரும்பூரும் மலர்குழல் சுந்தரியே! சூலினியே!
கரும்பின் சுவையூறும் நாவிலுறை செங்கமலமே!
அரும்பிலுறை வாசமே! அங்காளியே! மாயையே! (53)
மாயா சொரூபினியே! மந்தாகினியே முழங்கும்
ஆயகலைகள் அனைத்திலுறை அமிர்த வல்லியே!
தூய ஸ்ரீ சக்கர ரூபிணியே! அங்காளியே! நீயே
தாயாயிருந்தென் துயர்தீர அருளாயொரு மழலையே! (54)
மழவார் அன்னமே! மலையரையன் மகளே! மணி
கழலழகியே! காரார்குழலியே! கேதார கௌரியே!
குழலூதுங் கண்ணன் சோதிரியே[ குரல் வள நாயகியே!
அழல் வடிவானவளே! அங்காளியே! தருவாய் மதியே! (55)
மதி முகத்தவளே! மட்டுவார் குழலியே! மணியே!
அதி செளந்திர வல்லியே! அனாத ரட்சகியே!
பதிதோறு முலவி வரும் புற்று கோயில் அங்காளியே!
சதிகாரியே! சாகம்பரியே! தருவாய் நின் சரணே! (56)
சரவணனை ஈன்றவளே! சகமெச்சுஞ் சக்தியே!
பிரணவ சொரூபிணியே! பிரியா நாயகியே!
அரவாட்டுமண்ணலோடுறை ஆனந்த வல்லியே!
வரமீயும் அங்காளியே! வேற்கண் மங்கை வீரியே! (57)
வீரமாகாளியே! வாகேச்சுவரியே! வைடூரியமே!
ஆரமுதமான அங்காளியே! அன்னபூரணியே!
சூரகுல நாசினியே! சாமுண்டீச்சுவரியே!
பார்தனில் பாருமம்மா! வருந்துமிப் பாலகனையே! (58)
..
பாலாம்பிகையே! பண்ணுறை பாவகியே! பாகேஸ்ரீயே !
ஆலால முண்டோனின் ஆனந்த பைரவியே! ஆடுங்.
கோலாகல குமரனின் தாயே! அங்காளியே! தொடருந்
காலாந்தகனை விரட்டுவாய் கண்ணபுரத்தாளே! (59)
புரந்தரியே! புவனநாயகியே! அங்காளியே!
கரந்தனில் கரும்புங் கிள்ளையு மேந்தியவளே!
நிரந்தர வாழ்வொடு நித்திய சேமமும் பெற நீ
வரந்தர வருவாய் வாசமொடு இறங்கியே! (60)
இறங்கும் இன்முகத்தாளே! ஈசனுக்குகந்தவளே!
அறம் வளர்த்த நாயகியே! அங்கோல் வளையம்மையே!
நறவஞ் சொறி நளின மங்கையே! அங்காளியே!
உறங்கும் என் வாழ்வு உயர்ந்து நிலை கொள செய்வாயே! (61)
செயதுங்க நாயகியே செம்பொன்னார் திலகமே!
அயனை குட்டிய ஆறுமுகன் தாயே! அங்காளியே!.
குயம் பூரித்து குழவிக்கமுதங் கொடுத்தவளே!
இயங்கும் என்னுயிர் காத்திட ஈவாய் அத்தமே! (62)
அத்தன் ஆனந்த கூத்தனொடாடும் அங்காளியே!
மத்தகசனை ஈன்றவளே! மயிலாரன்னமே!
சுத்த சுந்தர வதனமே! சொற்கிளி மொழியே!
பந்தன் எனக்கருள் புரிவாய் பார்க்காது பாராமுகமே! (63)
பராசத்தியே பதுமாசினியே! பாளையத்தாளே!
குராபுனை குமரன் கைவேல் உருவானவளே! என்றும்
சராசரியாய் சகமுறையும் சற்குண வல்லியே!.
வராகியே! அங்காளியே! என வறுமையும் இராதே! (64)
இராச இராசேச்சுவரியே! ரேணுக்காம்பிகையே!
சுரார்குலங் காத்த சுகுண வல்லியே! சுந்தரியே!
கராசலங்களில் பாசாங்குசமுங் கட்கமுமேந்தி ·
தராதலமாளும் அங்காளியே! நீடம்மா தயவையே! (65)
தயவருளுந் தாரகையே! தோடே முழுமதியானவளே!
அயமாகி கும்பமதில் நிறைபவளே அங்காளியே!
கயவரின் பகையும் கடுஞ்சொல் வார்த்தையு மொழித்து
உயவே யானும் நீ உறுதுணையாய் வருக இப்பிறவிக்கே! (66)
பிறப்பிறப்பிலா பெம்மானின் பொற்சித்திரமே!
குறமகளைக் கவர்ந்தவன் அன்னையே! அங்காளியே!
உறவும் ஊனுமாயுறையும் உண்ணாமுலைத் தாயே கூறும்
அறநிலை யறிய என்முன் வருக அலர்மேல் மதுவாய்! (67)
.
மதுரவாய் மொழியாளே! மனோன்மணியே! மங்களமே!.
சதுரமறையிலுறையுஞ் சாந்த நாயகியே! சர்வ
பதுமபீட ஸ்ரீசக்கர பிரத்தியட்ச மின்னம்மையே!.
அதி வீரட்டான அங்காளியே! தவிராய் அச்சமே! (68)
அச்சுதன் தங்கையே! அமுதவல்லியே ! அங்காளியே!
நச்சி நஞ்சுண்ட நாயகனின் நற்றுணையானவளே!
உச்சியில் உள்ளொளியை யேற்றுஞ்சத்தியே! உனைப் பாடும்
இச்சுவை எனக்கருள இசைத்தேன் எழுந்தருளுக! (69)
எழுதிங்களொடு நவ பத்து நாட்களும் இன்னு மோர்
முழு கருவாகி யான் மண்ணுலகை அடையாதிருக்க
அழுதே வேண்டினேன் அங்காளியே! சகன் மாயே! நீயே
விழுதென வந்தடியேனை காத்து அறுப்பாய் வினையே! (70.)
வினை தீர்க்கும். வேற்கண்ணழகியே! விமலையே! வீரியே!
பனை முலை நாயகியே! பவானித்தாயே பகவதியே!.
தனை உணர்ந்தார்க்கு தயவருளும் அங்காளியே!
உனையே சரண்டைந்தேன் இச்சிறியேன் உயிரை காவாய்! (71)
காவாய் என வேண்டுவார்க்கருளுங் கனக துர்கையே!
பூவாய் வாசமுறும் பொற்கொடியே! பூலோக நாயகியே!
மூவாறு முனிசித்தரின் முழு சக்தியானவளே !
ஈவாய் அங்காளியே என்றும் நீங்கா சௌபாக்கியமே! (72)
பாக்கிய லட்சுமியே! பவதாரணியே! பரையே!
தூக்கிய திருவடியானின் துணையே! பைங்கிளியே!
நாக்கிலுறையும் வாக்தேவியே! நங்கையர் திலகமே!
ஆக்கும் அங்காளியே! வைகவேயுன் பார்வையை என்பாலே! (73)
பாலே யணையும் பளிங்கு சிலையே! பச்சையம்மனே! -
சேலே எனுஞ் செங்கண் நாயகியே! செண்பகமே!
தாலேலோ என்றூஞ்சலாடி மகிழும் அங்காளியே!
மேலே மூடிய பிணியொடு மோதுங் வினைகள் யாவுங்களைவாய்! (74)
களைத்தே போனேன் உலகிலுழைத்துழைத்து காயத்திரியே!
முளைக்கும் விதைக்குளே உறைகின்ற மூகாம்பிகை தாயே!
வளைக்கை நாயகியே! அங்காள பரமேச்சுவரியே!
சளைக்காது வருவாய் செல்வன் என்மீது கருணை வைத்து! (75)
வைத்த பொருள் ஏதம்மா எனக்கினி வையகந்தனிலே!
வைதீச்சுவரியே | வேதாளியே! வல்லணங்கே ! வலவையே!
மைந்தன் என்மீதுன் சித்தம் இறங்களையோ? அங்காளி!
கைவிடாதெனை காத்திடம்மா கனகாம்பிகை தாயே! (76)
தாயே உனையலாது வேரொருவருளரோ? ஏனென்று கேட்க
ஓயேன் ஒருநாளும் உன்திருநாமங் கூறாது அங்காளியே!
மாயே! மதுர பாடிணியாளே! மங்காத செல்வமே !
சேயேன் குறை தீர்க்க வாராயோ? வந்து பாராயோ என்முகம்! (77)
முகமே முழுமதியானவளே! முத்துமாரியே என்
அகமேயுறைய ஆடிவரும் அங்காளியே! ஈரேழு
சகமே புகழுஞ் சர்வேச்சுவரியே! சாரதையே!.
சுகமே ஏந்தி வருவாய் இச்சிறியோனுக்கு அருள! (78)
அருணனோராயிரங் கூடிலிணையாகா அங்காளியே!
கருணா சொரூபிணியே காத்யாயினியே! கமலாட்சியே!
தருணம் அறிந்து தயவுடனே தரணி வாழ் உயிர்க்கு
வருணனும் வந்து மழையைப் பொழிய வைப்பாய் வாராகியே! (79).
வாராது துன்பமெந்நாளுமென் வாழ்வினிலே வந்து நீ
நேராக பார்த்திடுவாய் நிலையாக நிறுத்திடுவாய்!
ஆராவமுதே! ஆதி அங்காளீச்சுவரியே! அன்ன வாகினியே
நாராயணியே! நாகாத்தாளே! நாமகளே! நாறும் பூவே! (80)
பூவே ! பொன்னியம்மனே! போற்றும் பூவாடைக்காரியே!
தேவேந்திரனைக் காத்து தென்மதுரையை ஆண்டவளே!.
மூவேழு மலர்சூடி முப்பெருந் தேவியராய் வருபவளே!
ஆவே! அங்காளீச்சுவரியே! உனையே நம்பினேனே! (81)
நம்பும் பத்தரை நாடி செலும் நல்ல நாயகியே!
சும்ப நிசும்பரை சங்கரித்த மோகனாங்கியே!
அம்பரந்தனிலே ஆதிசக்தியாய் உருவானவளே!
உம்பரர் போற்றும் அங்காளியே! உன்பாதம் அடைக்கலமே! (82)
அடைந்த வல்வினையும் வாட்டும் வறுமையும் அகலிட
கடைந்த பாற்கடலில் தோன்றிய கற்பக விருட்சமாய்
புடைந்து என் இல்லமதிலே பொலிவுற வாழ வருவாய்!
குடைந்த பொற் பாவையே! அங்காளியே! என் கோமகளே! (83)
மக மாயீ! மலைமகளே! மகிசாசுர மர்த்தினியே!
ககன நாயகியே கந்தனைப் பெற்ற காரணியே.!
அகர முதல் ஐம்பத்தோரட்சர பீட மானவளே!.
பகரும் பாவிலுறையும் அங்காளியே! பாரும் எனையே! (84)
எனையடைந்த இன்னலும் பிணியும் இனியும் வாராது.
வினையேன் விட்டு அகல வேண்டு வரம் தருவாய்!
பனை காய்க்க பாவிசைத்த பாலனுக்கமுதூட்டியவளே!
மனைதோறும் வாழ்பவளே! அங்காளியே! மஞ்சரியே! (85)
மஞ்சளாடைக்கரியே! மான்விழியாளே! மாதேவன் மங்கையே!
அஞ்செழுத்திலுறையும் ஐயனோடுறையும் அங்காளியே!
பஞ்சின் மென் விரலாளே! பங்கச வல்லியே யான்
தஞ்சமுன் பாதமே வருவாய் நீ எனுளமதில் தங்கிடவே! (86)
தங்கையில் தழலேந்தி ஆடிவரும் அங்காளியே!.
குங்குமகாரியே! கோல விழியாளே! கோனியம்மனே!
சங்கேந்தியவன் தங்கையே ! சாகசகாரியே ! உன்
வெங்கண்ணால் வேண்டியது அருளுக வாசமொடு! (87)
வாசவியே! வாலைக்குமரியே! வேப்பிலைக்காரியே!
ஈசனொடு எருதேறி எங்கும் உலாவருபவளே!
கேசவர்த்தினியே! கன்னிகா பரமேச்சுவரியே!
ஆசன மேலமர் அங்காளியே! நீடாயுனருள் வடிவை! (88).
வடிவுக்கரசியே! வாமபாகத்தவளே! வஞ்சியே!
படிகாசு வைத்த பரமனோடு பலதலமுறையும்
மடிசார் மங்கையே! மயிலே! மாதுமையே! மா தேவியே!
அடி நாயேனுக்கருள் புரிவாய் அங்காளி உன் கண்ணாலே! (89).
கண்ணாயிர முடையவளே! கார் முகிலே! கலைவாணியே!
விண்ணாயிர காததூரமும் விரிவடைந்த சக்தியே!
எண்ணாயிரங் கோடி கிரணாரூபிணியே! அங்காளியே!
பண்ணாயிரம் பாடினும் முடியா வழகே! நீயே ஆதாரம்! (90)
ஆதரித்தாளும் ஆதி பராசத்தியே! அங்காளியே!
நாதரிடபாகத்தமர்ந்தவளே! நானுனையென்றும்
ஓதவறியேன் ஒருநாளும் உனைமறந்தறியேன் உலகில்
ஏதடியேனுக்கு துணை நீயல்லாது நிரஞ்சனியே! (91)
நிரந்தரமாய் நீடுக நின் பணியொடு சேமங்களும்
புரந்தரியே புற்றுக் கோயிலுறை அங்காளியே!
கரந்தனில் கிள்ளையுங் கரும்புமேந்தியவளே!
வரந்தர வருவாய் வைச்சனவியே! வேதவல்லியாக! (92)
வல்ல தெல்லாஞ் சொல்லி வாழ்த்தினேன் உனையே!
சொல்லுமம்மா சற்றாகிலும் நின் செவியிற் கேட்கவிலையோ
அல்லிமலர் முகத்தாளே! அங்காளியே! அஞ்சுகமே!
நல்ல தெலாமடைய நல்காய் நின்திரு நயனமதாலே! (93)
நயம்பட ஓதுவார்தமை காக்கும் நாறும் பூவழகியே!
கயல் விழியாளே! கற்பகவல்லியே ! காஞ்சன மாலையே!
மயலார் அன்னமே! மட்டுவார்குழலியே! அங்காளியே!
அயனெழுத்தால் யான் அவதியுறுதல் உனக்கு அழகோ! (94)
அழகெலாம் ஓருருவாய் திரண்ட அங்காளியே!
பழமுதிர் சோலையிலே பவழ வாய்க்கிளியே! பாவையே!
கழலினைகளை அடியேன் மனையில் பதித்து தருவாய்
மழலைச் செல்வமொடு மங்கல வாழ்வும் புகழும் ஓங்க! (95)
ஓங்காரவல்லியே! உமையே! உச்சித் திலகமே!.
பூங்கரகமாய் ஆடி வரும் பூவாத்தாளே ! அன்று
ஆங்கார அசுரரை அழித்த அங்காளியே! அடியேன்
பாங்காக வந்திறங்குமம்மா உனையே பணிந்தேன்! (96)
பணிந்தேன் உனை பணிந்த பிறகு பணியேன் யாரையும்
அணியே! அணிக்கு அழகே! அங்காளியே அந்தரியே!
மணியே! மணியின் ஒலியே! மாதவத்தோர் போற்றும் உமையே!
தணிகை வேலன் தாயே! தாரகையே! என் பிணி யாவுங்களைவாய்! (97)
களையாத செல்வமுங் கல்வியும் ஞானமுங் குணமுமென்றும்
இளைக்காத உள்ளமும் இடுக்கன் இலாத வாழ்வும் வளமும்
கிளையெலாந் தழைத்து குறையற இல்லமதில் தேனும் பாலும்
அளையுங் கொழிக்க அருளாய் அங்காளியே அனுதினமும்! (98)
அனுகூலமாய் இருந்து அகிலங் காக்கும் அங்காளியே!
பனுவல்களில் பலவாறாயுறையும் பாகம் பிரியாளே!
தனுரொடு சூலமுங் கட்கமுங் கதையுந் தாங்கி மகிசன்
எனுஞ் சூரனை மாய்த்தவளே! வருக நீ பாலில் பொங்கியே! (99)
பொங்கரவு சூடும் புற்று கோயில் அங்காளியை
தங்கரந் தொழுது ஆரணி அடியார்க்கடியவன்
இங்கிதமாய் பாடிய ஈரைம்பதையுஞ் சொல
மங்கல வாழ்வொடு பெறுவர் மழலைப் பொன்மானே! (100)
சுபம்.
முற்றும்.