ஏகாம்பரேச்சுரர் Ekambarechurar
நீற்றினை சுத்தமொடு நச்சி டுவரே
கூற்றைப் பற்றுதைத்தம் மானிக் குகந்தவர்
காற்றுமானவர் அவரை ஏத்த வினையறுமே!
கூற்றைப் பற்றுதைத்தம் மானிக் குகந்தவர்
காற்றுமானவர் அவரை ஏத்த வினையறுமே!
ஆற்றினை ஓர் பாகம் வைத்து அங்கு ஆரஞ் சூடி
நீற்றினை சுத்தமொடு நச்சி இடுவரே
கூற்றைப் பற்றி உதைத்து அம்மானிக்கு உகந்தவர்
காற்றும் ஆனவர் அவரை எந்த வினை அறுமே!
ஆற்றினை - கங்கையை, கூற்று - இயமன், ஆரஞ் - கொன்றை மாலை,
மானி- மார்கண்டேயர், நீற்றினை - திருநீறு, உகந்தவர் - அருளியவர்,
நச்சி - விரும்பி, ஏத்த - போற்றி, வணங்கி.
பொழிப்புரை:-
கங்கையை ஒரு புறம் வைத்து அங்கு மாலையும் தரித்து
திருநீற்றை தூய்மையொடு விரும்பி அணிபவரே
இயமனை பிடித்து உதைத்து அந்த மார்கண்டேயருக்கு பொருத்தமானதை தந்தவர்
காற்றாகவும் இருப்பார் அவரை (ஈசனை) வணங்க வினை நீங்குமே!
கருத்துரை:-
கங்கையை தன் சடை முடியில் ஒரு புறமாக வைத்தும், அங்கே கொன்றை மாலையை சூடியும், தூய்மையான திருநீற்றை விரும்பி திருமேனி எங்கும் தரித்து கொண்டிருப்பவரும், இயமனை பிடித்து காலால் உதைத்து தள்ளியவரும், அந்த பக்தரான மார்கண்டேயருக்கு அருளியவரும், காற்றாகி எங்கும் நிறைந்திருப்பவரும் ஆகிய ஏகாம்பரேச்சுரர் எனும் திருநாமங் கொண்ட ஈசனை போற்றி வணங்க தொடரும் வினைகள் யாவும் விலகி நற்பேற்றை அடைவரே!
திருத்தலப் பெருமை:-
சுவாமி :- ஏகாம்பரேச்சுரர்.
அம்பாள் - ஏலவார்குழலி, காமாட்சியம்மை.
தலம் - காஞ்சிபுரம்.
தீர்த்தம் - சிவகங்கை, கம்பைநதி, சர்வ தீர்த்தம்
விருட்சம் - மா மரம்.
வழிபட்டோர் – உமையம்மை, விஷ்ணு, பிரம்மா, இராமர், தேவர்கள், நால்வர், சேக்கிழார், பட்டினத்தார், அருணகிரிநாதர், முனிவர்கள், ருத்ரர், கச்சியப்பர் மற்றும் அநேக புலவர்கள்.
பாடியவர்கள் :- நால்வர், சேக்கிழார், பட்டினத்தார், அருணகிரி நாதர், கச்சியப்பர், ஆரணியடியார்க்கடியவன் மற்றும் அநேக புலவர்கள்
.
நூல் - தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருஏகம்பமாலை
கந்த புராணம், லிங்காட்சர மாலை, கடம்ப மாலை மற்றும்
அநேக இலக்கிய நூல்கள்.
வழிபடும் பலன் - காரிய சித்தி, மண மாலை, மகப்பேறு, முக்தி, கண்நோய் அகலுதல், தோஷ நிவர்த்தி, பாவம் அறுதல், தவம், மனநிம்மதி மற்றும் அநேக பலன்கள் கிடைக்கும்.
வரலாறு - இத்திருத்தலம் பஞ்சபூத தலங்களுள் பிருத்வி (மண்) தலமாகும். தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களுள் முதன்மையானது. முக்தி தலம் ஏழினுள் ஒன்றாகும் இத் திருத்தலம் பல திருப் பெயர்களை கொண்ட தாகும் அவை:-
சத்ய விரத ஷேத்திரம், காஞ்சி, பிரளயசித்து, சிவபுரம், விண்டுபுரம், பிரமபுரம், துண்டீரபுரம், தண்டகபுரம், காமபீடம், தபோமயம் சகலசித்தி, கன்னி காப்பு, மும்மூர்த்தி வாசம் என்பனவாகும்.
இத்தலம் பண்டை காலம் முதலே நகரங்களுள் சிறந்தது என்றும் நகரேஷி காஞ்சி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு அம்பாள் தவமிருந்து 32 அறங்களை (தருமங்களை) வளர்த்ததாக வரலாறு. சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு இடது கண் வழங்கிய சிறப்பு வாய்ந்தது. ஐயடிகள் காடவர் கோன், கழற்சிங்கர் திருக்குறிப்பு தொண்டர் போன்ற நாயன்மார்கள் இறைவனை வணங்கி முக்தி' பெற்ற தலமாகும். சிவலிங்கத்தின் மேல் கல்லை வீசி எறிந்த சாக்கிய நாயனாருக்கும் அருள் புரிந்த தலம். உலக பிரசித்தி பெற்ற பட்டுத் தொழிலை கொண்ட நகரமாக விளங்குகிறது.
இத்திருத்தலம் நால்வர் பெருமக்களாலும் சேக்கிழார், பட்டினத்தார், அருணகிநாதர், கச்சியப்பர் இன்னும் அநேக புலவர்களாலும், ஆழ்வார்களாலும், இலக்கியங்களிலும் பாடல் பெற்ற பெருமைக்குரிய தலமாகும்.
இத்திருக்கோயில் 9 நிலைகளோடு கூடிய ராஜ கோபுரம் மிக சிற்ப வேலைப்பாடுகளுடன் 172 - அடி உயரங் கொண்டு திகழ்கிறது. இக்கோபுரத்தை விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால் கட்டப் பட்டுள்ளதாக கல்வெட்டுகள் கூறுகிறது.
கருவறையில் ஏகாம்பர நாதர் சுயம்பு வடிவாக, மண்ணால் பிடிக்கப்பட்ட லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் இல்லை. புனுகு சட்டம் சாற்றி வழிபாடு செய்யப்படுகிறது. அம்பாள் தவம் இயற்றுகையில் கம்பையாறு பெருகி வர இச்சிவலிங்க திரு மேனியை தழுவிக் கொண்டார். இதனால் ஏற்பட்ட தழும்பு இன்றும் இத்திரு மேனியில் காணலாம். அதனால் இறைவருக்கு தழுவ குழைந்தவர் என்ற திருப்பெயரும் உண்டாயிற்று.
கருவறைக்கு எதிரில் ஸ்படிகலிங்கமும், ஸ்படிக நந்தியும் அமைந்துள்ளது. இவரை வணங்கினால் வெப்பு நோய் அகன்று குளிர்ச்சி அடைவதாக கூறப் படுகிறது. உற்சவர் ஏகாம்பரநாதர் சன்னதியில் ஒரு கண்ணாடி அறையில் 5008 ருத்ராட்சங்களால் வேயப்பட்ட பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். இவரை தரிசித்தால் மறு பிறவி இல்லை எனக் கூறப் படுகிறது.
இராம பிரான் சிவபக்தனாகிய இராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம் நீங்க 108 சகஸ்ரலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டதாக வரலாறு. இந்த சகஸ்ரலிங்கம் முன் 108 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம்.
இங்கே பிரகாரத்தில் ஸ்தல விருட்சமான மாமரம் 3500 வருடங்களுக்கு முன் பழமையானது. 4-வேதங்களை கிளைகளாக கொண்டது. ஒவ்வொரு கிளையிலும் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு போன்ற சுவைகளால் மாங்கனி காய்க்கின்றது. இம்மரத்தின் கனியை உண்டால் புத்ர பாக்கியம் கிட்டுவதாக வரலாறு.
இதை “குமர கோட்டங் கடம்ப மாலை” என்ற ஆரணியடியார்க்கடியவன் எழுதிய நூலில் 70-வது செய்யுளில்
“காயே பல சுவையாய் இனிக்குங் கலைமிகு காஞ்சி" என்று சிறப்பித்து கூறி இருப்பதை காணலாம்.
இந்த மாமரத்தின் அடியில் சிவன் அம்பாளுடன் சோமாஸ்கந்த வடிவில் காட்சி தருகிறார். இது திருமணக் கோலம் என்று கூறப்படுகிறது. இக்கோலத்தை தரிசித்தால் மண மாலை கிட்டும் என்பது திண்ணம்.
இத்திருத்தலத்தில் ஒவ்வொரு தை மாதம் இரத சப்தமியில் கருவறையிலுள்ள ஏகம்பரநாதர் திருமேனியில் சூரிய ஒளி விழுவதை கண்கூடாக காணலாம்.
முன்னர் திருபாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தால் திருமாலின் மேனி கறுத்து அது வெப்பாக மாறி துன்புறுத்தியதால் திருமால் இறைவனை வேண்ட தனது சடை முடியிலுள்ள சந்திரனை ஏவியதால் வெப்பு நீங்கி குளிர்ச்சி அடைந்து பழைய நிறம் பெற்றதாக வரலாறு, அதனால் திருமாலுக்கு “நிலாத் துண்டப் பெருமாள்" என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.
ஆயிரம் கால் மண்டபத்தில் “விகடச் சக்கர விநாயகர்” என்ற சிறப்பு பெயரோடு விநாயக பெருமான் வீற்றிருக்கிறார். இவரை கச்சியப்பர் தமது கந்த புராணத்தில் போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.
இங்கே முருக பெருமான் "மாவடி கந்தன்" என்று அழைக்கப் படுகிறார். 1008 – லிங்கம், 108 – லிங்கம், அகத்தியர் 63 - நாயன்மார்கள் வெள்ளக் கம்பர், நல்ல கம்பர், கள்ள கம்பர், பிக்ஷாடனர், நடராஜர், நிலாத் தூண்ட பெருமாள், பணாதரேசர், மார்க்கண்டேசர், மாதவேசர், பிரளயங்காத்த அம்மை சன்னதிகளும் உள்ளன.
மேலும் இத்திருத்தலத்தின் பெருமையும் சிறப்பையும் பல நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது.
அருணகிரி நாதர் காஞ்சியைப் பற்றி தமது திருப்புகழில் 44 - பாடல்களில் சிறப்பித்து பாடுகிறார்.
நால்வர் பெருமக்கள் தமது தேவரத்திலும் திருவாசகத்திலும் இத்தலத்தை தரிசித்து இறைவனை வணங்குவதால் வரும் நற்பலன்களை மிகவும் தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்கள்.
பட்டினத்து அடிகள் தமது திருவேகம்ப மாலையில் உளம் உருகி பாடி இறைவனை வேண்டுகிறார். சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் காஞ்சியைப் பற்றி பலவாறாக சிறப்பித்து கூறுகிறார். இன்னும் பல புலவர்கள் இத்தலத்தை பற்றி தமது இலக்கியங்களில் சிறப்பித்து பாடியுள்ளனர். அதேபோல் “குமர கோட்டங் கடம்ப மாலை” என்ற நூலில் ஆரணியடியார்க்கு அடியவன் தமது 108-செய்யுள்களில் காஞ்சியின் பெருமைகளை பலவாறாக சிறப்பித்து கூறுகிறார் . இப்படியாக அன்று முதல் இன்றுவரை பல அற்புதங்கள் நிகழ்ந்த இத்திருத்தலத்தை சென்று தரிசிப்பவர்கள் சகல நலங்களும் பெற்று இனிதே வாழ்வார்கள் என்பது திண்ணம்.
குறிப்பு -: இத்தலத்து லிங்காட்சா மாலையில் "ஆற்றினை யோர் பாகம் வைத்து" என்ற சொற்றொடர் திருநாவுகரசர் தேவாரம் திரு கச்சியேகம்பம் (4-ஆம் திருமுறை) "மனத்துள் வைத்த" திருப்பதிகத்தில் 5 - ஆம் செய்யுளில் ( "ஆறேறு சடையானை" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க.
மேலும் இதே பதிகத்தில் 8- ஆம் செய்யுளில் "தரித்தானை கங்கை நீர் தாழ் சடை மேல்" என்ற சொற்றொடரையுங் காண்க
அடுத்து கச்சியேகம்பம் "திருநேரிசை" (4- ஆம் திருமுறை) "நம்பன நகர் மூன்றும்'' என்ற பதிகத்தில் 4-வது செய்யுளில் "தீர்த்தமாங் கங்கையாளனை திருமுடி திகழ வைத்து” என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்குக.
அடுத்து இதே திருநேரிசையில் 6-வது செய்யுளில் "கங்கை தங்கிய சடையன்” என்ற சொற்றொடரையுங் காண்க.
அது வல்லாது சுந்தர மூர்த்தி நாயனார் திருகச்சியேகம்பம் தேவாரத்தில் (9-ஆம் திருமுறை) " ஆலந்தான் உகந்தமுது” என்ற பதிகத்தில் 8-வது செய்யுளில் “ வினை பற்றறுப்பானை" என்ற சொற்றொடர்,
இத்தலத்து லிங்காட்சரமாலையில் வரும் "அவரை ஏத்த வினையறுமே" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க.