மல்லிகார்ச்சுனர் Malligarchunar
அல்லி மலர் அகவிதழிலுறையு மானந்தனை
சில்லில் சுழலாத பொற்ச்சோதி சீர்
கல்லில் காணுமிறையை வலிவாதம் வாதிப்பானை
சொல்லில் பொருளுமுடை பரமனை சென்று காணீர்!
அல்லி மலர் அக இதழில் உறையும் ஆனந்தனை
சில்லில் சுழலாத பொற்ச் சோதி சீர்
கல்லில் காணும் இறையை வலி வாதம் வாதிப்பானை
சொல்லில் பொருளும் உடை பரமனை சென்று காணீர்!.
அகம் - உள்ளே, சில் - வட்ட வடிவான கருவி, சக்கரம், வலி - வலிமை,
சீர் - அழகு, வாதிப்பது - அறுப்பது, வாதம் - நோய்.
பொழிப்புரை:-
அல்லி மலரின் உள் இதழில் உறையும் ஆனந்தமயமானவனை,
(கால) சக்ரத்தில் சுழலாத பொன்னிற சோதி (ஆன) அழகிய
கல்லில் காணும் இறைவனை வலி வாதம் (நோயை) அறுப்பானை,
சொல்லின் பொருளாக உடைய பரமேச்சுரனை சென்று காண்பீர்!
கருத்துரை:-
அல்லி மலர் இதழின் உள்ளே வாசஞ் செய்யும் ஆனந்தமயமான சிவனை,
கால சக்ரத்தில் சுழலாத பொன் போன்று ஒளி வீசிப் பிரகாசிக்கும் சுடர் போன்றவனை, இடம், காலத்தைக் கடந்தவனை,
கல்லில் காணுகின்ற அழகு மிக்க வடிவமாகிய இறைவனை, வலிமை மிக்க வாதம் எனும் நோயை அறுத்து நீக்குபவனை, சொல்லுகின்ற சொல்லின் பொருளாய் திகழ்கின்ற பரம்பொருளாகிய ஈசனை சென்று காணுங்கள்.
திருத்தல பெருமை:-
சுவாமி - மல்லிகார்ச்சுனர், ஸ்ரீசைலநாதர்.
அம்பாள் - பிரமராம்பிகை.
தலப்பெயர் - ஸ்ரீசைலம்.
விருட்சம் - மருத மரம், திரிபலா மரம்.
தீர்த்தம் - பர்வத தீர்த்தம், பாலாழி முதல் பல தீர்த்தங்கள்.
வழிபட்டோர் - இராமர், நந்தி, லக்ஷ்மி, குபேரன், அனுமன், வீரபத்திரர், தத்தாத்ரேயர், ஆதிசங்கரர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், அகத்தியர், அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், மார்கண்டேயர், சிலாதர், பிருகு, கபிலர், ஸ்கந்தர், பாண்டவர்கள், அக்கமஹாதேவி, மல்லம்மா, சித்தராமப்பா, கேசப்பா, கல்மாஷபாதன், சாண்டில்யர், விஜயநகர மன்னர்கள், சாளுக்கியர், சாதவாகனர், இஷ்வாகர், பல்லவர், சோழர், கடம்பர், ராஷ்டிரகூடர், காகதீயர், சத்ரபதி சிவாஜி, ரெட்டியர் ஆகிய 12 - மன்னர்கள்.
நூல் - ஸ்கந்த மஹா புராணம், மகாபாரதம், பத்ம புராணம், மார்க்கண்டேய புராணம், சிவபுராணம், பாகவத புராணம், அதிதய புராணம், ரசரத்னாகாரம், சிவானந்த லஹரி, கதாசரித்ர சாகரம், மாலதி மாதவம், ரத்னாவளி, பாணபட்டரின் காதம்பரி, லிங்காட்சர மாலை.
பாடியவர்கள் - ஆதிசங்கரர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், அக்க மஹா தேவி, விசுவாமித்திரர், ஆரணியடியார்க்கடியவன்.
வழிபடும் பலன் - பிறப்பு இன்மை, வெற்றி, புகழ், பக்தி, ஞானம், தவம், திருமணம், குழந்தை பேறு, ஆற்றல், அறிவு, புலமை.