தான்தோன்றீச்சுரர் Thanthondrechurar

தான்தோன்றீச்சுரர்   Thanthondrechurar





மன்றுள் ஓர் மாணிக்கமே! மண்ணே மாரனை
வென்ற பூரண சுத்தசைவனேச் சொலொன்றீவதும்
என்றோ யென்பால் தோன்றுமோ யிரக்கம்
நன்றுஎன கருணையொடுன் தாளெனக் கருளுக!


மன்று உள் ஓர் மாணிக்கமே! மண்ணே மாரனை
வென்ற பூரண சுத்த சைவனேச் சொல் ஒன்று ஈவதும்
என்றோ என் பால் தோன்றுமோ இரக்கம் 
நன்று என கருணை யொடு உன் தாள் எனக்கு அருளுக!


மன்று - சபை, அம்பலம்,  மண்ணே - மண்ணுக்கு அதிபதியே, மாரன் - மன்மதன்,  ஈவது - தருவது,  இரக்கம் - பரிவு,  கருணை, தாள் -  திருவடி 
நன்று - நன்மை,  நல்லது.

பொழிப்புரை:-

பொற்சபையில்  (ஆடுகின்ற) ஒரு மாணிக்கமே! மண்ணே,  மன்மதனை 
வென்ற பூரண சுத்த சைவனே, (உபதேச) சொல் ஒன்று தருவதும்
என்றோ என்மேல்  தோன்றுமோ இரக்கம்
நன்மை என கருணையொடு உன் திருவடியை எனக்கு அருளுக!

கருத்துரை:- 

பொன் அம்பலத்தில் ஆடுகின்ற ஒரு மாணிக்கமே ! பஞ்ச பூதங்களில் மண் வடிவாக திகழ்பவனே! மன்மதனை வென்ற பரிபூரண சுத்த சைவமாய் விளங்குபவனே,

அடியேனுக்கு உபதேச சொல் ஒன்றை தந்து ஆள்வதும் எந்த நாளோ தெரியவில்லையே ! அடியேன்பால் உனக்கு பரிவு தோன்றாதோ!  எல்லாம் நன்மையே என கருணையோடு உனது திருவடியை தந்து அடியேனுக்கு திருவருள் செய்வாயாக.! 

திருத்தல பெருமை:-

சுவாமி -     தான்தோன்றீச்சுரர்,   எழுத்தறிநாதர்.
அம்பாள் - கொந்தார பூங்குழலி,   நித்தியகல்யாணி. 

திருத்தலம் -  திருஇன்னம்பர் - காவிரி வடகரைத்தலம் -  (45)
 
தீர்த்தம் -   ஐராவத தீர்த்தம்.

தலமரம் -  பலா,  சண்பகம்.

வழிபட்டோர் - சம்பந்தர், அப்பர்,  சுந்தரர்,  சேக்கிழார்,  அகத்தியர்,  சூரியன்.

 நூல் -  தேவாரம்,  லிங்காட்ச மாலை. 

பாடியவர்கள் -  சம்பந்தர்,  அப்பர்,  சுந்தரர்,  சேக்கிழார்,   ஆரணியடியார்க்கடியவன் 

வழிபடும் பலன் - மணமாலை,  குழந்தை பேறு,  பேச்சு திறன்,  கல்வி,  அறிவு,  திறமை,  தவம்,  வித்யாரம்பம்,  வாக்கு. 


குறிப்பு - 

இத்தலத்து லிங்காட்சர மாலையில் "மாரனை வென்ற " என்ற சொற்றொடரின் கருத்து திருநாவுகரசர் தமது இன்னம்பர் தேவாரத்தில் (4-ஆம் திருமுறை) "என்னிலாடும் எனக்கினி' எனத் தொடங்கும் திருகுறுந் தொகையில்  9-வது செய்யுளில் "காமனை வேவப் புருவமும்" என்று பாடியுள்ள சொற்றொடரோடு ஒப்பு நோக்குக.

அடுத்து  (4-ஆம் திருமுறை"விண்ணவர் மகுட கோடி"  எனத் தொடங்கும் திரு நேரிசையில் 5-வது செய்யுளில் "காமனை விழிப்பர் போலும்"  என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்குக. 

அடுத்து  (6- ஆம் திருமுறை)   "தொண்டர்கள் தம் தகவிலுள்ளார்" எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில்  "காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும் " என்ற சொற்றொடரோடு  ஒப்பு நோக்குக.

இத்தலத்து  லிங்காட்சர மாலையில் "சொலொன் றீவதும் என்றோ" என்ற சொற்றொடர் இத்தலத்து ஈசனுக்கு "எழுத்தறிநாதர் ","அட்சரபுரீச்சரர்" என்ற சிறப்பு பெயர் உள்ளதால் இங்கு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தால் நல்ல கல்வி கிறன் உண்டாகும் மேலும்  பேச்சு சரியாக வராத குழந்தைகள் பேச்சு திறன் பெறுவதும் சிறப்பானதாகும். 

ஆகையால் சொல் என்று சொன்னால் வாக்கு இத்தலத்து  ஈசனை வணங்கினால் வாக்கு திறன் உண்டாகும்  என்ற கருத்தோடு ஒப்பு நோக்கி காண்க .


Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam