விசுவநாதேச்சுரர் ViswaNathechurar

விசுவநாதேச்சுரர்     ViswaNathechurar



சடையொடு யோர்பிறையும் புனலும் அரவும் 
இடையினில் சுழல் புலிகச்சுவுந் தேயும்
உடைநாதனை உருகி வணங்கிட வினையகலி
சுடலையினில் மறுபடி விழுவது தவிருமே!

சடையொடு ஓர் பிறையும் புனலும் அரவும் 
இடையினில் சுழல் புலி கச்சுவுந் தேயும் 
உடை நாதனை உருகி வணங்கிட வினை அகலி 
சுடலையினில் மறுபடி விழுவது தவிருமே!

புனல் – கங்கை,  புலி கச்சு - புலித்தோல் ஆடை
அரவு – பாம்பு,  அகலி – நீங்கி,  விலகி,  சுழல் – சுற்றிய, 
சுடலை – சுடுகாடு,  தேயு - நெருப்பு,  தவிருமே - விலகுமே

பொழிப்புரை:- 

சடையொடு ஓர் சந்திரனையும் நீரையும் (கங்கை) 
இடுப்பில் அணிந்த புலிதோல் ஆடையும் நெருப்பும் 
கொண்ட தலைவனை உருகி தொழுதிட வினை நீங்கி
சுடுகாட்டில் மீண்டும் எரிக்கப் படுவது விலக்கப்படுமே. !

கருத்துரை:- 

திருமுடியில் செஞ்சடையொடு இளம்பிறையாகிய சந்திரனும், புனலாகிய கங்கையும், பாம்பும், இடைதனில் புலித்தோல் ஆடையும், திருக்கரங்களில் ஒன்றில் அக்கினியும் உடைய நாதத்தின் தலைவனாகிய அந்த சிவபரம்பொருளை உள்ளம் உருகி போற்றி புகழ்ந்து தொழுவார்க்கு மறுபடியும் பிறந்து இவ்வுலகில் அல்லல் பட்டு இறந்து சுடுகாடு சேர்ந்து எரியூட்டப்படுவது விலக்கப்படுமே

திருத்தல பெருமை:-

சுவாமி     - விசுவநாதேச்சுரர்

அம்பாள் - விசாலாட்சி

தலம்    -       ஆவலநத்தம்

தீர்த்தம்    - காசி தீர்த்தம்

விருட்சம் - வில்வமரம்

வழிபட்டோர் - சித்தர்கள், குலோத்துங்க சோழன்
 
பாடியவர்  -      ஆரணியடியார்க்கடியவன்.

நூல்   -                லிங்காட்சர மாலை, விசுவநாதேச்சுரர் மாலை

வழிபடும் பலன் -  மணமாலை, மகப்பேறு,நோய் தீருதல்,தொழில் விருத்தி

வரலாறு: - சுமார் 900 வருடங்களுக்கு முன்னர் சித்தர் ஒருவர் கனவில் இங்குள்ள காட்டுப் பகுதியில் ஒரு கற்பாறைக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதாகவும் மேலே நீரூற்று கிளம்பி வருவதாகவும் அறிந்து அவ்விடத்தை குடைந்து பார்க்கையில் அங்கே சிவலிங்கமும் அம்பாளும் இருப்பதை கண்டு மகிழ்ந்து அச்சிவலிங்கத்திற்கு காசி விசுவநாதர் என்றும், அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் அங்குண்டான நீர் ஊற்றுக்கு காசி தீர்த்தம் என்றும் பெயரிட்டு பூசித்து வந்தார், சில காலஞ் சென்றபின் அவர் யோக சமாதி அடைந்து விட்டார்.
அதன் பிறகு அங்கே வந்த குலோத்துங்க சோழ மன்னன் இதை அறிந்து அவ்விடத்தில் திருக் கோயில் எழுப்பி வழிபட்டதாக வரலாறு
இங்கே மூன்று திருக்கோவில்கள் அமைந்துள்ளன.

1. அருள்மிகு விசாலாட்சியுடனுறை காசி விசுவநாதர் குகைக்கோயில்.
2. அருள்மிகு பசவேஸ்வரர் (நந்தீஸ்வரர்) திருக் கோயில். 
3. அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில். 

இங்கு வீசும் மூலிகை காற்று நோய் தீர்க்க வல்லது. காசி தீர்த்தத்தில் குளித்த பின்னரே ஈசனை வழிபட வேண்டும் என்பது ஐதிகம். கால் நடைகளுக்கு நோய் கண்டால் இங்குள்ள தீர்த்தம் கொண்டு சென்று தெளித்தால் நோய் தீருவதாக வரலாறு. பின்னர் இங்கு மண் பொம்மை வைத்து வழியடுவது வழக்கம்.



Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai