அருணாச்சலேச்சுரர் மாலை Arunachalechurar Malai
அருணாசலேச்சுரர் மாலை
திருவண்ணாமலை.
சுவாமி - அருணாசலேச்சுரர், அண்ணாமலையார்.
அம்பாள் - அபிதகுசாம்பாள், உண்ணாமுலையம்மை.
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்.
விருட்சம் - மகிழ மரம்.
[ PDF ] [ Manuscript ]
ஆவுங் கன்றொடமுது பெருகி வழிய நீடுஞ் சாரல்
ஆங்குயிரெலாம் வாழ வாவியுஞ் சோலையுஞ் செழிக்கமாவும் மாதுளமும் மணம் நாற மணிக்கதிர் வேவ
மந்திகள் மருத மரமேறி கிளை முறிய யிங்குமங்குந்
தாவு மருணையிலபித குசாம்பாளோடுறையுந்
தேவர்கள் புகழருணாசலேச்சுரனை வணங்க
மேவு பல பிணிகளானவும் மறையவே நுமது
மனமுருகி மாறா தென்றும் மகிழ்வு கொளுமே! (1)
ஆவுங் கன்றொடு அமுது பெருகி வழிய நீடுஞ் சாரல்
மந்திகள் மருதமரம் ஏறி கிளை முறிய இங்கும் அங்குந்
தாவும் அருணையில் அபிதகுசாம்பாளோடு உறையுந்
தேவர்கள் புகழ் அருணாசலேச்சுரனை வணங்க
மேவு பல பிணிகள் ஆனவும் மறையவே நமது
மனமும் உருகி மாறாது என்றும் மகிழ்வு கொளுமே!
ஆவு - பசு. நாற – வீச, கதிர் - ஒளி, அமுது - பால், மணி - சூரியன், மேவு - படர்ந்த, சாரல் - மலை, வேவ - காய, வாவி - நீரோடை, மந்தி – குரங்கு.
கருத்துரை - பசுக்கள் தம் கன்றோடு பாலை பெருக்கி பொழியும்
உயர்ந்த மலையில் உயிர்கள் எல்லாம் வாழ்வதற்கு தேவையான நீர் ஓடைகளும், மரஞ் செடி கொடி வகைகள்
செழிப்புற்று இருக்கவும் மாங்கனியும் மாதுளமும் பழுத்து மணம் வீசவும் சூரியன் தனது
ஒளிக் கதிர்களைவீசி பரப்பவும், குரங்குகள் மருத மரத்தில் ஏறி
கிளைகள் முறியும் படி இங்கும் அங்கும் தாவி குதிக்கவும் அமைந்துள்ள திருவருணை எனுஞ் சிவதலத்தில்,
அபிதகுசாம்பாள் என்ற திருப்பெயர் கொண்ட அம்பாளோடு உறைகின்ற தேவர்கள் எல்லாம் புகழும் அருணாசலேச்சுரன் எனும் திருநாமங் கொண்ட ஈசனை
வணங்க உங்களை நாடி வருகின்ற நோய்கள் யாவும் நீங்கி உங்கள் மனதும் உருகி என்றும்
மாறாத மகிழ்ச்சி கொளுமே!
குறிப்பு - இப்பாடலில் வரும் "மந்திகள் மருத மரமேற " என்ற சொற்றொடர் திருஞானசம்பந்தர் திருவண்ணாமலை தேவாரத்தில் (1-ஆம் திருமுறை) "கடுவன் கொள விடு கொம்பொடு" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க!
மந்தி – குரங்கு, கடுவன் - குரங்கு
அது வல்லாது இப்பாடலில் வரும் "நீடுஞ் சாரல்" என்ற சொற்றொடர் அதே திருவண்ணாமலை தேவாரம் 3-வது மற்றும் 11-வது செய்யுளில் "விரிசாரல் " என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்குக! மேலும் இப்பாடலில் வரும் "பிணிகளானவும் மறையவே" என்ற சொற்றொடர் அதே தேவாரத்தில் 6-வது செய்யுளில் "உறுநோயடையாவே" என்ற சொற்றொடரையும் ஒப்பு நோக்கி காண்க!
ஏடுமுடைய மலரின் மணம் பரவும் விடியற்காலையில்
எங்கும் பாயும் பரிதியினிளஞ் செங்நிற யொளியில் கோணல்கோடுமுடைய களிறும் பிடியொடு பிளிறும் வேளையில்
கமுகுந் தெங்கு மோங்குஞ் சோலையில் கோகிலங்கள் வந்து
பாடு மருணையிலபித குசாம்பாளோடுறையும்
பருமா மணி யருணாசலேச்சுரனை காணவுங்
கூடும் பிரியும் வேளையில் வந்து கொள்வான் நும்மை நீர்
கோரிய பதமளித்து தொண்டர் குழாம் வைப்பானே! (2)
ஏடும் உடைய மலரின் மணம் பரவும் விடியற்காலையில்
எங்கும் பாயும் பரிதியின் இளஞ் செந்நிற ஒளியில் கோணல்கோடும் உடைய களிறும் பிடியொடு பிளிறும் வேளையில்
கமுகுந் தெங்கும் ஓங்குஞ் சோலையில் கோகிலங்கள் வந்து
பாடும் அருணையில் அபிதகுசாம்பாளோடு உறையும்
பருமா மணி அருணாசலேச்சுரனை காணவுங்
கூடும் பிரியும் வேளையில் வந்து கொள்வான் நும்மை நீர்
கோரிய பதமும் அளித்து தொண்டர் குழாம் வைப்பானே!
அபிதகுசாம்பாள் எனும் திருப்பெயர் தாங்கிய
உமையவளோடு அருள் பாலிக்கும் ஆதிகுருவாம் உயர்ந்த மணிப் போன்ற அருணாசலேச்சுரன்
எனும் திரு நாமங் கொண்ட ஈசனை கண்டு வணங்கிட, உடலானது உயிரை விட்டு பிரியும் போது அந்த சிவனே
உங்களை ஏற்றுக் கொண்டு நீங்கள் வேண்டிபடி தன் திருவடியைத் தந்து சிவனடியார்கள்
கூட்டத்தில் வைப்பானே!
குறிப்பு - இப்பாடலில் வரும். "களிறும் பிடியொடு பிளிறும்' என்ற சொற்றொடர் திருஞான சம்பந்தர் தேவாரம் 1-ஆம் திருமுறை. “உண்ணாமுலை " எனத் தொடங்கும் பதிகத்தில், 8-வது செய்யுளில் "பிளிறூ குரல் மத வாரண ' என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க!அதுவல்லாது " பூவார் மலர் கொண்டு" என்ற தேவாரத்தில் 5-வது செய்யுளில் "பருமாமணி" என்ற சொற்றொடர், இப்பாடலில், 6-வது செய்யுளிலும் "பருமாமணி" என்று அமைந்துள்ளதை ஒப்பு நோக்கவும்.
வீசு தென்றலும் வீங்கிள வேனிலுங் கூடும் வேளையில்
விரியும் வெள்ளாம்பலும் விதுவுங் கூடி வெண்மை தூவதேசும் மங்க தினகரனும் வானில் செந்நிறங்கொண்டிறங்க
தேடி வந்து கொவ்வை கனியைக் கோதுந் தத்தைகள்
பசுபதியாமருணாசலேச்சுரனை பாடவும்
மாசுமுள்ள மனமுமுடலும் மாறி நற்குணமுங் கொண்டு
மண்ணில் வாழ்வொடு வளமும் நலமும் பெற்றிட யருள்வானே(3)
தேசும் மங்க தினகரனும் வானில் செந்நிறங்கொண்டு இறங்க
தேடி வந்து கொவ்வை கனியைக் கோதுந் தத்தைகள்
பேசும் அருணையில் அபிதகுசாம்பாளோடு உறையும்
பசுபதியாம் அருணாசலேச்சுரனை பாடவும்
மாசும் உள்ள மனமும் உடலும் மாறி நற்குணமுங் கொண்டு
மண்ணில் வாழ்வொடு வளமும் நலமும் பெற்றிட அருள்வானே!
கருத்துரை - வீசுகின்ற இளந் தென்றல் காற்றொடு மிதமான வசந்தமுங் கோடையுஞ் சேர்ந்த மாலை பொழுதில், தன் இதழ்களை விரிக்கும் வெள்ளை நிறங் கொண்ட ஆம்பல் மலர்களும் சந்திரனும் சேர்ந்து எங்கும் வெண்நிற ஒளி கதிர்களை படரச் செய்ய சூரியனும் தன் செந்நிற ஒளிக்கதிர்களை மங்கச் செய்து வானில் மெதுவாக இறங்கி கொண்டிருக்க, கொடிகளில் பழுத்துள்ள கோவைப் பழங்களை கடித்து உண்ணும் பொருட்டு கூட்டமாக தேடி வரும் கிளிகள் பேசுகின்ற திருவருணை எனும் சிவதலத்தில்,
அபிதகுசாம்பாள் எனுஞ் சிறப்பு பெயர் கொண்ட அம்பாளோடு விற்றிருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் தலைவனாகிய அருணாசலேச்சுரன் எனும் திருப்பெயர் தாங்கிய ஈசனை மனமுருகி பாடிட, குற்றமுள்ள மனமும், இவ்வுடலும் மாற்றமடைந்து நல்ல குணங்களோடு, இப்பூமியில் செழிப்பும், நன்மைகளும் பெற்று வாழ்வதற்கு ஈசன் திருவருள் புரிவானே!
குறிப்பு - இப்பாடலில் வரும் தத்தைகள் பேசுமருணையில் என்ற சொற்றொடர் "பூவார் மலர் கொண்டு ” எனத் தொடங்கும் திருவண்ணாமலை தேவாரத்தில் (1-ஆம் திருமுறை) “அஞ்சொற்கிளிகள் ஆயோ என்னும்" எனுஞ் செற்றொடரொடு ஒப்பு நோக்கி காண்க. அது வல்லாது இப்பாடலில் வரும் “தினகரனும் வானில் செந்நிறங் கொண்டிறங்க" என்ற சொற்றொடர் "உண்ணாமுலை" எனத் தொடங்கும் பதிகத்தில் 11-வது செய்யுளில் "வெம்புந்திய கதிரோன் ஒளி விலகும்" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க!
பொழிலொடு புனலுஞ் சூழ்ந்த புத்தொளிர் வாடையொடெங்கும்
பவனமுஞ் சுழன்று வீச மின்னலும் மோத கார்முகில்
கிழிந்து மாரியுஞ் சொரிந் தோய்ந்த பின் புள்ளினங் கீச்சிட
கண்ணுக்கு விருந்தாய் கலாபந் தோகை விரித்தாடும்
எழில்மிகு மருணையிலபித குசாம்பாளோடுறையும்
எந்தை யருணாசலேச்சுரனை நாவாலுரைக்க
விழித்தோடுமே வினைக ளொடு வறுமையும் பிணியும்
வேண்டிய படியே விண்ணுல கெய்தின்புற்றிருப்பாரே! (4)
பொழிலொடு புனலுஞ் சூழ்ந்த புத்து ஒளிர் வாடையொடு எங்கும்
பவனமுஞ் சுழன்று வீச மின்னலும் மோத கார்முகில்
கிழிந்து மாரியுஞ் சொரிந்து ஓய்ந்த பின் புள்இனங் கீச்சிட
கண்ணுக்கு விருந்தாய் கலாபந் தோகை விரித்து ஆடும்
எழில்மிகும் அருணையில் அபிதகுசாம்பாளோடு உறையும்
எந்தை அருணாசலேச்சுரனை நாவால் உரைக்க
விழித்து ஓடுமே வினைகளொடு வறுமையும் பிணியும்
வேண்டியபடியே விண்ணுலகு எய்தி இன்புற்று இருப்பாரே!
பொழில் - சோலை, மோத - இடிக்க, கிழிந்து - உடைந்து, புள் - பறவை, புனல் - நீர், கலாபம் – மயில், புத்து - புதிய, எழில் - அழகு, வாடை' - மணம், பவனம் - காற்று, கார் - கருமை, முகில் – மேகம்..
கருத்துரை - மரஞ் செடி கொடிகளோடு நிறைந்துள்ள சோலைகளும் நீர் ஊற்றுகளும் சூழ்ந்துள்ள புத்தம் புதிய ஓளியோடும் மணமோடும் எங்கும் சுழன்று வீசுங்காற்றும், மின்னலும் மோத, கருமேகங்கள் உடைந்து மழையைப் பொழிந்து ஓய்ந்த பின், பறவை இனங்கள் "கீச்கீச்" என்று ஒலி எழுப்ப அங்கே கண்களுக்கு விருந்தாக மயிலானது தோகையை விரித்து ஆடுகின்ற அழகு மிகுந்த திருவருணை எனும் சிவதலத்தில்,
அபிதகுசாம்பாள் எனும் திருப்பெயர் கொண்ட உமையவளோடு உறைகின்ற தந்தையாகிய அருணாசலேச்சுரன் எனும் திருநாமங் கொண்ட ஈசனை நாவால் கூறி வணங்கிட, உங்கள் வினைகளும், வறுமையும், நோயும் ஓன்றும் செய்ய முடியாது அகன்று ஓடி விடுமே! அதுவல்லாது நீங்கள் வேண்டியபடியே கயிலாயம் அடைந்து ஈசன் திருவடிகளில் இன்புற்று இருப்பீர்கள்!
பூவிலுறு மது கொண்டேகும் பொன் வண்ண ஈக்களொடு
புன்னையுங் கொன்றையு மடர்ந்த பொலிவான சோலைதனில்நாவிகள் நீரோடையில் நீர் பருகி குதித்தோட
நடை பழகு மெகினங்கள் பெடையொடு கூடி மகிழும்
வாவி சூழருணையிலபித குசாம்பாளோடுறையும்
விடையேறு மருணாசலேச்சுரன் நாமம் நச்சி மலர்
தூவி செவியால் கேட்க தொடரும் வல்வினை யாவும்
தூரத்தேகி தூநெறியர் பாதஞ் சேர்க்குமே! (5)
பூவில் உறு மது கொண்டு ஏகும் பொன் வண்ண ஈக்களொடு
புன்னையுங் கொன்றையும் அடர்ந்த பொலிவான சோலைதனில்
நாவிகள் நீர் ஓடையில் நீர்பருகி குதித்து ஓட
நடை பழகும் எகினங்கள் பெடையொடு கூடிமகிழும்
வாவி சூழ் அருணையில் அபிதகுசாம்பாளோடு உறையும்
விடை ஏறும் அருணாசலேச்சுரன் நாமம் நச்சி மலர்
தூவி செவியால் கேட்க தொடரும் வல்வினை யாவும்.
தூரத்து ஏகி தூநெறியர் பாதஞ் சேர்க்குமே!
உறு - இருக்கும், மது – தேன், ஏகும் - கொண்டுசெல்வது,நாவிகள் - மான்கள், எகினங்கள் – அன்னங்கள், நச்சி - விரும்பி, பெடை - பெண் அன்னம், வாவி – குளம், விடை - ரிஷபம், தூநெறியர்: - தூய்மையான பண்புஉடையவர் – சிவன்.
அபிதகுசாம்பாள் எனுஞ் சிறப்பு பெயர் கொண்ட அம்பாளோடு உறைகின்ற ரிஷப வாகனம் எறி வருகின்ற அருணாசலேச்சுரன் எனுந்திருப்பெயர் தாங்கிய ஈசனின் திருநாமங்களை விரும்பி கூறி பூக்களைக் கொண்டு திருவடிகளுக்கு சாற்றி, தமது செவிகளால் ஈசனுடைய செந்தமிழ் பாக்களை கேட்டு மகிழ, அவர்களை தொடரும் வலிமை மிக்க வினைகள் யாவும் தூரமாக ஓடி செல்ல, பின் ஈசன் உயர்ந்த திருவடிகளை சென்று அடைவார்களே!
உயலு மரசும் வேம்பும் ஓங்கிய பனையுந் தேக்கும்
ஊருமுயிர்களு மூடுங் கொடியுமுலாவும் விலங்கும்
அயந்திரண்டோடுமழகிய அருவியு மோடைகளும்
அடர்ந்து படர்ந்த வனமும் வாலைகளெழும்பி பாயும்
வயல்களுஞ் சூழருணையிலபித குசாம்பாளுடன்
வருமருணாசலேச்சுரனை யிருகரங் கூப்பி தொழ
இயலிசையொடு ஈடிலா செல்வ செழிப்புந் தந் தென்றும்
இணைப்பதம் நீங்காது நிலைத்திருக்கச் செய்வானே! (6)
உயலும் அரசும் வேம்பும் ஓங்கிய பனையுந் தேக்கும்
ஊரும் உயிர்களும் ஊடுங் கொடியும் உலாவும் விலங்கும்
அயந்திரண்டு ஓடும் அழகிய அருவியும் ஓடைகளும்
அடர்ந்து படர்ந்த வனமும் வாலைகள் எழும்பி பாயும்
வயல்களுஞ் சூழ் அருணையில் அபிதகுசாம்பாளுடன்
வரும் அருணாசலேச்சுரனை இருகரங் கூப்பி தொழ
இயல் இசையொடு ஈடு இலா செல்வ செழிப்புந்தந்து என்றும்
இணைப்பதம் நீங்காது நிலைத்து இருக்கச் செய் வானே!
உயல் - அசையும், ஊரும் – நகருதல், ஊடும் - படர்தல், அயம் - நீர், வாலை
– மீன்.
கருத்துரை - அசையும் அரசமரமும், வேப்ப மரமும், உயர்ந்து வளர்ந்துள்ள பனை மரமும், தேக்கு மரமும்
நகர்ந்து 'செல்லக் கூடிய உயிரினங்களும், படர்ந்து வளரக் கூடிய கொடி வகைகளும், எங்கும்
திரிகின்ற மிருகங்களும், நீர் திரண்டு ஓடும் அழகிய
அருவிகளும் ஓடைகளும் அடர்ந்து படர்ந்துள்ள காடும் மேலே எழும்பி பாயும் வாலை
மீன்களையுடைய வயல்களுமுள்ள திருவருணை எனும் சிவதலத்தில்,
அபிதகுசாம்பாள் எனுந் திருப்பெயர் கொண்ட உமையவளோடு அருள் பாலிக்கும் அருணாசலேச்சுரன் என்ற திருநாமங் கொண்ட ஈசனை இரண்டு கைகளையும் மேலே கூடப்பி தொழுது வணங்கிட, இலக்கியஞ் சார்ந்த நூல்களோடு இசையும், சொல்ல முடியாத செல்வங்களும், செழிப்பும் பெற்று இவ்வுலகில் வாழ்ந்து பின் ஒன்று சேர்ந்த ஈசனின் திருவடிகளை அடைந்து என்றும் நீங்காது இருக்க அருள் செய்வானே!
குறிப்பு - இப்பாடலில் வரும் "அருவியு மோடைகளும்" என்ற சொற்றொடர், திருஞானசம்பந்தர் திருவண்ணாமலை
தேவாரத்தில் "உண்ணாமுலை"
எனத் தொடங்கும் பதிகத்தில் 3-வது வரியில் “அருவி திரள்” என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்குக!
அதுவல்லாது "பூவார்
மலர் கொண்டு” என தொடங்கும் திருவண்ணாமலை. தேவாரத்தில் 5-வது செய்யுளில் “அருவித்திரளோடிழியுஞ்·சாரல்" என்ற சொற்றொடரையும் நோக்குக!
செண்டு போற் விளாவும் வேங்கையுஞ் சந்தனமுங் கடம்புஞ்
செண்பகமுஞ் சேர்ந்தாற் போற் படர்ந்துள்ள அடவிதனில்
அண்டிய சித்தர்களொடு முனிவர்களருந் தவம் புரிந்து
அரிய பல சித்திகளடைந்த யருவிசூழ் சோலையில்
வண்டுகள் முரலருணையிலபித குசாம்பாளோடுறையும்
வேதரூபனருணாசலேச்சுரனுறையும் வெற்பைக்
கண்டு காலாற் வலம் வர கொடிய கரு நோயறுத்து
கமல பதஞ் சேர்ந்தென்றுங் களித்திருக்கச் செய்வானே! (7)
செண்டு போல் விளாவும் வேங்கையுஞ் சந்தனமுங் கடம்புஞ்
செண்பகமுஞ் சேர்ந்தாற் போல் படர்ந்து உள்ள அடவிதனில்
அண்டிய சித்தர்களொடு முனிவர்கள் அருந்தவம் புரிந்து
அரிய பல சித்திகள் அடைந்த அருவிசூழ் சோலையில்
வண்டுகள் முரல் அருணையில் அபித குசாம்பாளோடு உறையும்
வேதரூபன் அருணாசலேச்சுரன் உறையும் வெற்பைக்
கண்டு காலாற் வலம்வர கொடிய கரு நோய் அறுத்து.
கமல பதஞ் சேர்த்து என்றுங் களித்து இருக்கச் செய்வானே!
செண்டு – உருண்டை, கமலம் – தாமரை, விளா - பழம், வேங்கை - மரம், களித்து – மகிழ்ந்து, அடவி - காடு, முரல் - இசைக்க, வெற்பு - மலை, வேத ரூபன் - மறை வடிவு – சிவன், கருநோய் - பிறவி.
கருத்துரை - உருண்டை வடிவமுள்ள விளாம் பழங்களை உடைய மரமும், வேங்கை மரமும் சந்தன மரமும்,
கடம்ப மரமும், செண்பக மரமும் சேர்ந்து
வளர்ந்துள்ள காட்டில் சித்தர்களும் முனிவர்களும் அடைக்கலம் புகுந்து தவம் செய்து
பல அரிய சித்திகளை பெற்றுள்ள, நீர் ஓடைகள் சூழ்ந்தூள்ள சோலையில்,. வண்டுகள் இசை எழுப்புகின்ற திருவருணை என்ற சிவதலத்தில்,
அபிதகுசாம்பாள் எனும் சிறப்பு பெயர் கொண்ட அம்பாளோடு
வீற்றிருந்து அருள் பாலிக்கும். வேதங்களின் வடிவமாக திகழ்கின்ற
அருணாசலேச்சுரன் எனும் திருநாமம் கொண்ட ஈசன் உறைகின்ற
மலையைக் கண்டு வணங்கி கால்களால் வலம் வர, ஈசன் கொடிய பிறப்பு எனும் நோயிலிருந்து விடுவித்து, தனது தாமரை மலர் பாதங்களில் சேர்த்து என்றும் அங்கே மகிழ்ந்திருக்க செய்வானே!
குறிப்பு - இப்பாடலில் வரும் “வண்டுகள் முரலருணையில்” என்ற சொற்றொடர், திருநாவுக்கரசர் திருவண்ணாமலை தேவாரம் (4-ஆம் திருமுறை) "ஓதி மாமலர்"
என்ற பதிதத்தின் 6-வது செய்யுளில் “வரிமிகு
வண்டு பண் செய் பாத" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க!
இலாத யற்புதங்களரு ளெழில் மிகுயட்ட மூர்த்தியொடு
இலந்தையு மத்தியு மாலமு மெங்குஞ் சூழ்ந்து
பலாவொடு வாழையும் பலகனியின் சுவைகளொடும்
பறவைகளெழுப்புங் குரலொடும் பசும் வயலில் நாரைகள்
உலாவு மருணையிலபித குசாம்பாளோடுறையும்
உலகம் புகழருணா சலேச்சுரனை யுள்ளியிருத்தி முழு
இலாத அற்புதங்கள் அருள் எழில்மிகு அட்ட மூர்த்தியொடு
இலந்தையும் அத்தியும் ஆலமும் எங்குஞ் சூழ்ந்து
அட்ட மூர்த்தி – அஷ்டலிங்கம், உள் - மனது, முழுநிலா - பௌர்ணமி, நிமலன் - சிவன், செப்பி – சொல்லி, நெடுஞ்சாரல் - உயர்த்த மலை, பசும் வயல் - பச்சை வயல், உலா - சுற்றுவது.
கருத்துரை - எங்கும் காண முடியாத பல அற்புதங்களை அருள்கின்ற அழகு மிகுந்த அஷ்டலிங்க மூர்த்திகளொடும், இலந்தை மரமும், அத்தி மரமும், ஆலமரமும், பலாமரமும், வாழை மரமும் எங்கும் சூழ்ந்து வளர்ந்துள்ளதும், பலவித பழங்களின் சுவைகளோடு நறுமணமும் வீச, பறவைகள் எழுப்பும் ஒலியோடு நாரைகள் உலாவி வரும் பச்சை வயல்கள் சூழ்ந்துள்ளதுமாகிய திருவருணை எனுஞ் சிவதலத்தில்,
முழு நிலாவின் ஒளி வீசுகின்ற பௌர்ணமியில் மனது நிறைவோடு ஈசனின் திருநாமங்களை சொல்லி உயர்ந்து காணும் திருஅருணை வெற்பை வலம் வந்து வணங்குவார்க்கு நல்ல பல மேன்மையான பேறுகளை தந்து அருள் புரிவானே!
குறிப்பு - இப்பாடலில் வரும் "எழில்மிகு அட்ட மூர்த்தியொடு" என்ற சொற்றொடர், திருநாவுக்கரசர் திருவண்ணாமலை குறுந்தொகையில் ''பட்டி ஏறுகந் தேறிப்" என்ற பதிகத்தில் 1- வது செய்யுளில் "அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க!
அதுவல்லாது இப்பதிகத்தில் 6-வது செய்யுளில்"அட்டமூர்த்தி அண்ணாமலை மேவிய" என்ற சொற்றொடரோடும் ஒப்பு நோக்குக!
முகரும் பல் வகை வண்ண மலர்களொடிணைந்த தென்ற லெங்கும்
மோத தடாகங்களில் தாமரை பூக்க தேவதருவுக்கு
நிகருடைய வில்வமும் நாவலும் நாகலிங்க முமடர்ந்த
நானிலம் வாழ நாற்றிட்ட வயல் வெளியில் நள்ளிகள்
நகருமருணையிலபித குசாம் பாளோடுறையும்
நான் மறையோ னருணாசலேச்சுரனை மறவாது
பகருவாருக் கென்று மல்ல லகற்றி யரியதொரு சிவ
பதவியளித்து பேரானந்தங் கொளச் செய்வனே! (9)
முகரும் பல்வகை வண்ண மலர்களொடு இணைந்த தென்றல் எங்கும்.
மோத தடாகங்களில் தாமரை பூக்க தேவ தருவுக்கு
நிகருடைய வில்வமும் நாவலும் நாகலிங்கமும் அடர்ந்த
நானிலம் வாழ நாற்று இட்ட வயல் வெளியில் நள்ளிகள்
நகரும் அருணையில் அபித குசாம்பாளோடு உறையும்
நான் மறையோன் அருணாசலேச்சுரனை மறவாது
பகருவாருக்கு என்றும் அல்லல் அகற்றி அரிய தொரு சிவ
பதவி அளித்து பேரானந்தங் கொளச் செய்வானே!
தேவதரு - கற்பக மரம், நானிலம் - பூவுலகு, நள்ளிகள் :- நண்டுகள், பகரு – சொல்வது, அடர்ந்த - சேர்ந்த, மோத - கலக்க, படர.
கருத்துரை -- முகர்ந்து பார்க்க கூடிய பலவகை வண்ண மலர்களின்
நறுமணத்தோடு தென்றல் காற்றும் சேர்ந்து எங்கும் கலந்து வீச, குளங்களில்
தாமரைமலர்கள் பூத்து இருக்க, கற்பக
விருட்சத்திற்கு நிகரான வில்வ மரமும், நாவல் மரமும், நாகலிங்க மரமும் சேர்ந்து வளர்ந்துள்ள, இப்பூவுலகம் வாழ்வதற்கு வேண்டிய
நெல் மணிகளின் நாற்று நட்டுள்ள வயல்களில் நண்டுகள் இங்கும் அங்குமாக நகர்ந்து
கொண்டிருக்கும்படியான,
திருவருணை எனுஞ் சிவதலத்தில்,
அபிதகுசாம்பாள் என்ற சிறப்பு பெயர் கொண்டுள்ள உமையவளோடு வீற்றிருக்கும், நான்கு வேதங்களிலும் இருப்பவனாகிய அருணாசலேச்சுரன் எனுந் திருநாமம் தாங்கிய ஈசனின் திருநாமங்களை மறவாது சொல்வார்களுக்கு, என்றும் துயரங்கள் வந்து சேராதுவாறு விலக்கி அரிதான ஒரு சிவ பதவியை அளித்து பேரானந்தங்கொள திருவருள் செய்வானே!
குறிப்பு - இப்பாடலில் வரும் "அல்லல்
அகற்றி அரிய தொரு சிவபதவி மளித்து” என்ற
சொற்றொடர், திருநாவுக்கரசர் தமது, திருவண்ணாமலை
தேவாரத்தில் "பட்டி ஏறுகந் தேறி"
என்ற "திருக்குறுந் தொகை” என்ற பதிகத்தில் 3-வது செய்யுளில் "அல்லல் தீர்க்கும்
அண்ணாமலை கை தொழ" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க!
மகிழமொடிலுப்பையும் மங்காத புங்கையும் முருக்கையும்
மாறாத வன்னியும் பாதிரியும் நெல்லியுங் குருந்தமும்
அகிலொடு நொச்சியும் நுணாவு மலரியும் நெடிதோங்கி
ஆர்த்துள்ள யடவியிலன்று நெடுமாலயனறியாத
திகிரி யென அருணையிலபித குசாம்பாளுடன்
தொண்டர்கள் தோள் சுமக்க வருமருணாசலேச்சுரனை
நெகிழ்வோடுள்ளும் புறமும் நினைந்து துதிக்க
நீடுவான் வாழ்வொடு வளமும் நினைத்தபடியே! (10)
மகிழமொடு இலுப்பையும் மங்காத புங்கையும் முருக்கையும்
மாறாத வன்னியும் பாதிரியும் நெல்லியுங் குருத்தமும்
அகிலொடு நொச்சியும் நுணாவும் அலரியும் நெடிதோங்கி
ஆர்த்து உள்ள அடவியில் அன்று நெடுமால் அயன் அறியாத
திகிரி என அருணையில் அபிதகுசாம்பாளுடன்
தொண்டர்கள் தோள் சுமக்க வரும் அருணாசலேச்சுரனை
நெகிழ்வோடு உள்ளும் புறமும் நினைந்து துதிக்க
நீடுவான் வாழ்வொடு வளமும் நினைத்தபடியே!
மங்காத - குறையாத, ஆர்த்து - படர்ந்து, நெடிது - உயர்ந்து, அடவி – காடு, நெடுமால் - மஹாவிஷ்ணு, அயன் - பிரம்மா, திகிரி - மலை, உள் - மனது, உயிர், நீடு – தருவது, நெகிழ்வு - உருக்கம், புறம் - வெளியே, உடல்.
கருத்துரை - மகிழ மரமொடு இலுப்பை மரமும், குறையாத நிழல் தரும் புங்க மரமும், முருக்கை மரமும், என்றுங் குணத்தில் மாறாத வன்னி மரமும், பாதிரி மரமும் நெல்லி மரமும், குருத்த மரமும் நறுமணம் வீசும் அகில் மரமும் நொச்சி மரமும் நுணா மரமும் அலரி மரமும் உயர்ந்து சேர்த்தாற் போல் வளர்ந்துள்ள காட்டில், அன்று திருமாலும் பிரம்மனும் தேடி காண முடியாத மலையாக திகழும் திருவருணை எனுஞ் சிவதலத்தில்,
அபிதகுசாம்பாள் எனுந் திருப்பெயர் கொண்ட உமையவளோடு,
அடியார்கள் கூட்டமாக தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு வருகின்ற அருணாசலேச்சுரன் எனும் திருநாமந் தாங்கிய ஈசனை உருக்கத்தோடு உயிரும் உடலும் ஒன்றாக இணைந்து நினைத்து துதிக்க, அவர்கள் நினைந்தபடியே வாழ்வும், பல்வகை செழிப்பும் தந்து திருவருள் புரிவான்!
குறிப்பு - இப்பாடலில் இடம் பெறும் "நெடுமாலயனறியாத" என்ற சொற்றொடர், திருநாவுக்கரசர் திருவண்ணாமலை
தேவாரம் "ஓதி மாமலர்கள்"
என்ற பதிகத்தில் 9-வது செய்யுளில் "மாலு நான் முகனுங் கூடிக் காண்கிலா" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கிடுக!
அதுவல்லாது திருஞானசம்பந்தர் திருண்ணாமலை தேவாரம்
"பூவார் மலர் கொண்டு" என
தொடங்கும் பதிகத்தில் 9-வது செய்யுளில் "தேடி கானார் திருமால் பிரமன்" என்ற
சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க!
பல் வகை பூக்களும் பொழில்களுங் கனிதருந் தருக்களும்
புள்ளினங்களும் விலங்குகளும் போற்றிய அருணை வெற்பை
சொல் மாலையாக மூவிரண்டு மஞ்சுங் கோர்த்தளித்த
சிறியோன் ஆரணியடியார்க்கடியவனின் வினையை
வெல்வதற்குரிய பாக்களை யொன்றிய யுடலு முயிரும்
உருகி பாடியு மாடியும் பரவ வல்லாரவர்கள்
அல்லல் நீங்கி யகலாத செல்வமொடு வாழ்ந் திறுதியில்
அரிய பதத்தினை யடைந் தென்று மின்புற்றிருப்பாரே! (11)
புள் இனங்களும், விலங்குகளும் போற்றிய அருணை வெற்பை
சொல்மாலையாக மூஇரண்டும் அஞ்சங் கோர்ந்து அளிந்த
சிறியோன் ஆரணி அடியார்க்கு அடியவனின் வினையை
வெல்வதற்கு உரிய பாக்களை ஒன்றிய உடலும் உயிரும்
உருகி பாடியும் ஆடியும் பரவ வல்லார் அவர்கள்
அல்லல் நீங்கி அகலாத செல்வமொடு வாழ்ந்து இறுதியில்
அரிய பதத்தினை அடைந்து என்றும் இன்புற்று இருப்பாரே!
தருக்கள் - மரங்கள், பரவ - போற்ற, புள் - பறவை, அல்லல் - துன்பம், அகலாத - நீங்காத, பாக்கள் – பாடல்கள். மூவிரண்டுமஞ்சுங் - 3×2 = 6 + 5 = 11.
ஒன்றிய - இணைந்த, பரவ - போற்ற, கோர்த்து - கட்டி, புனைந்து,
இனங்கள் – வகைகள்.
கருத்துரை - பல வகையான பூக்களும், சோலைகளும், பல சுவையுள்ள
பழங்களை தரும் மரங்களும், பலவகையான பறவைகளும், விலங்குகளும் போற்றுகின்ற திருஅண்ணாமலை எனுஞ் சிவதலத்தை, ஆரணி அடியார்க்கு அடியவன் என்கின்ற சிறியவன் புனைந்து அளித்த,
வினைகளை வெல்வதற்குறிய பாமாலைகள் மூஇரண்டுடோடு ஐந்தும் (3x2 = 6+5 = II) உடலும் உயிரும் உருகி பாடியும் ஆடியும் போற்றி புகழ வல்லார்கள் எவரும், வருந் துன்பங்கள் நீங்கி நீங்காத செல்வங்களை பெற்று வாழ்ந்து கடைசியில் அரிதாகிய ஈசனின் திருவடிகளை அடைந்து அங்கே என்றும் இன்பமொடு வாழ்வார்கள்!
குறிப்பு - இப்பாடலில் வரும் "பாடியு
மாடியும் பரவ வல்லார்" என்ற சொற்றொடர், திருநாவுக்கரசர் தேவாரம் "பட்டி
ஏறுகந்து” என்ற
குறுந்தொகையில் 4-வது மற்றும் 5-வது செய்யுளில்
"ஆடிபாடி
அண்ணாமலை கைதொழ" என்ற
சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க!
திருச்சிற்றம்பலம்.
சுபம்.