மார்கபந்தேச்சுரர் மாலை MargaBandechurar Malai




மார்கபந்தேச்சுரர் மாலை.
விரிஞ்சிபுரம்.

சுவாமி  - மார்க்கபந்தேச்சுரர், வழித்துணைநாதர்..

அம்பாள் - மரகதவல்லி.

தீர்த்தம் -  சிம்ம தீர்த்தம்.

விருட்சம் - பனை மரம்.

PDF ]  [ Docx ]   [ Manuscript ]




திருச்சிற்றம்பலம். 

நாதனார் நமையாளும் நாயகனார் நந்நான்கு

   நற்பேற்றை நல்கும் நான்மறை பொருளானா ரெனவே
வேதனார் பூசித்த தீர்த்த முடை பிரம்மபுரத்தில்
   ஓர் கார்த்திகை கடை ஞாயிறு காணுங் கோயிலில்
மாதர் குல நல்லாள் மரகத வல்லியுட னுறையும்
    முத்தனே மார்க பந்தேச்சுரனே பணிந்தே னுனை
ஆதரவோடு மென்று முன்னரு ளோடும் வாழு மொரு
    அடியார்க்கன் பனான புத்திர பேற்றை நல்குமே! (1)
 
நாதனார் நமை ஆளும் நாயகனார் நந் நான்கு
   நற் பேற்றை நல்கும் நான் மறை பொருள் ஆனார் எனவே
வேதனார் பூசித்த தீர்த்தம் உடை பிரம்மபுரத்தில்
   ஓர் கார்த்திகை கடை ஞாயிறு காணுங் கோயிலில்
மாதர் குல நல்லாள் மரகதவல்லியுடன் உறையும்
   முத்தனே மார்க பந்தேச்சுரனே பணிந்தேன் உனை
ஆதர வோடும் என்றும் உன் அருளோடும் வாழும் ஒரு
    அடியார்க்கு அன்பன் ஆன புத்திர பேற்றை நல்குமே!
 
நந் நான்கும் ----- 4 x 4 = 16 பேறுகள், கடை----- கடைசி, நான்மறை ----- நான்கு வேதங்கள், நல்குமே ----- தருமே, வேதன் -----  பிரம்மன், மாதர்குல நல்லாள் ------ பெண்களில் சிறந்தவள்
 
கருத்துரை ----- ஏழிசையில் ஒலிக்கும் இனிமையைப் போன்றவனே! எல்லாவுயிர்களையும் ஆளுகின்ற தலைவனே! பதினாறு பேறுகளையும் தருகின்றவனே ! நான்கு வேதங்களின் உட்பொருளாய் திகழ்பவனே! என்று பிரம்மன் பூசித்த தீர்த்தமுடைய பிரம்மபுரமாகிய விரிஞ்சிபுரம் எனும் சிவதலத்தில் ஒவ்வொரு வருடமும், கார்த்திகை மாதம்
ஒரு கடைசி ஞாயிற்றுக் கிழமையில் திருவிழா காணுகின்ற திருக் கோயிலில்,
       பெண்களில் சிறந்தவளாகிய மரகதவல்லி எனுந் திருநாமங் கொண்ட உமையம்மையோடு வாழுகின்ற முக்தியை தர வல்லவனாகிய மார்கபந்தேச்சுரனே! அடியேன் உன்னை தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
      அடியேனுக்கு உமது ஆதரவோடும், அருளோடும், உனது அடியார்களுக்கு அன்போடு தொண்டு செய்து வாழுகின்ற ஒரு குழுந்தை பேற்றை தந்து திருவருள் செய்திடுக.!
 
குறிப்பு ----- பிரம்மன் தீர்ந்தமுண்டாக்கி பூசித்த விரிஞ்சிபுரத்தில் கார்த்திகை கடைசி ஞாயிறு அன்று பூசிப்பவர்களுக்கு மகப்பேறு ஈசன் அருளால் உண்டாகும் என்பதாகும்!
 
எங்கு'மெதிலு மியல்பானார் ஏரூர்ந்த செல்வனார்
   இருளகற்றி இகபர மருளு மெமீசனார் மேற்
பங்குனியில் பகலோன் கதிர் வீசி பணிவதை காண
   பேறருளை தவறாது நல்கும் பதியாம் விரிஞ்சையில்
மங்கையர்க் கரசியாம் மரகத வல்லியுடனுறையும்
   மண்ணே மார்கபந்தேச்சுரனே ஏத்தினேனுனை
தங்கையால் தளர்ந்தார்க்கீய போதிய செல்வமு முனது
   திருவருளுஞ் சேர்ந்ததொரு புத்திர பேற்றை நல்குமே! (2)
 
எங்கும் எதிலும் இயல்பு ஆனார் ஏரு ஊர்ந்த செல்வனார்
   இருள் அகற்றி இக பரம் அருளும் எம் ஈசனார் மேற்
பங்குனியில் பகலோன் கதிர் வீசி பணிவதை காண
   பேறு அருளை தவறாது நல்கும் பதியாம் விரிஞ்சையில்
மங்கையர்க்கு அரசியாம் மரகத வல்லியுடன் உறையும்
   மண்ணே மார்கபந்தேச்சுரனே ! ஏத்தினேன் உனை
தங்கையால் தளர்ந்தார்க்கு ஈய போதிய செல்வமும் உனது
   திருவருளுஞ் சேர்ந்த ஒரு புத்திர பேற்றை  நல்குமே!
 
இயல்பு ----- தன்மை,  ஏரு ----- ரிஷபம், கதிர் -----  ஒளி, ஊர்ந்த ----- நகர்ந்த, தளர்ந்தவர்----- இல்லாதோர்,  இகபரம் ----- பூவுலகு,     மேலுலகு, மண்ணே----- பூமிக்கதிபதி, பகலோன்----- சூரியன்.
                             
கருத்துரை ----- எங்கும் எதிலும் உறைகின்ற தன்மை உடையவனே! எருது ஏறி நகர்ந்து செல்பவனே! சகல செல்வங்களையும் தருகின்றவனே! இருளை அகற்றி ஒளியைத் தருபவனே! இவ்வுலகத்திலும் மேலுலகத்திலும் திருவருள் புரிகின்றவனே! என்று சூரியன் ஈசன் மேல் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் தனது ஒளிக் கதிர்களை வீசி  பணிந்து வணங்குவதை காணும் சிவத்தலமாகிய மேலான  உயர்த்த திருவருளை தவறாது தரும் விரிஞ்சிபுரத்தில்,
          பெண்களுக்கு எல்லாம் அரசி போன்று விளங்கும் மரததவல்லி எனுங் திருப்பெயர் கொண்ட உமையம்மையோடு உறைகின்ற மார்கபந்தேச்சுரனே! அடியேன் உம்மை போற்றி வணங்குகின்றேன். 
          அடியேனுக்கு, தனது கைகளால் தளர்ந்தவர்களுக்கு  தனமருள போதிய செல்வமும், உமது திருவருளும் உடைய ஒரு புத்திரப் பேற்றை தந்து திருவருள் செய்திடுக!
 
 குறிப்பு ----- சூரியன் தனது ஒளிக் கதிர்களை ஒவ்வொரு பங்குனி மாதத்திலும் இறைவனாகிய மார்கபந்தேச்சுரனை பூசித்து வணங்கும் இத்தலத்தை சென்று வணங்குவதால் நிச்சயமாக புத்திர பேறு கிட்டும் என்பதாகும்.!
 
  அங்காபரணமா யரவணிந் தடியார்க் கருளும்
   அருமருந்தே ஆதியுமந்தமுமில்லாத மாது
பங்காயென யன்றாதி சங்கரரும் மூவெழுத்திட்டு
   பணித்திட்ட பிணி நீக்கும் பதியாம் விரிஞ்சையில்
மங்காத புகழுடைய மரகத வல்லியுடனுறையும்
   முத்தே மார்க சகாயனே பரவினேனுனை
தங்காது பிணிகளை விலக்கி தன்னார்வ தொண்டோடுன்  
   தாள் பணியுமொரு புத்திர பேற்றை நல்குமே! (3)
 
அங்க ஆபரணமாய் அரவு அணிந்து அடியார்க்கு அருளும்
   அருமருந்தே ஆதியும் அந்தமும் இல்லாத மாது
பங்கா என அன்று ஆதி சங்கரரும் மூ எழுத்து இட்டு
   பணிந்திட்ட பிணி நீக்கும் பதியாம் விரிஞ்சையில்
மங்காத புகழுடைய மரகத வல்லியுடன் உறையும்
   முத்தே மார்க சகாயனே பரவினேன் உனை
தங்காது பிணிகளை விலக்கி தன் ஆர்வ தொண்டோடு உன்
   தாள் பணியும் ஒரு புத்திர பேற்றை நல்குமே!
 
 அங்கம் ----- திருமேனி, அரு ----- அரிய, அரவு ----- பாம்பு,  பிணி ----- நோய், ஆதி ----- முதன்மை, மங்காத ----- குறையாத,  அந்தம் ----- முடிவு, மார்கசகாயர் ----- வழித்துணை நாதர்,  மாது பங்கா ----- அர்த்தநாரீச்சுரர், பரவி ----- போற்றி,  மூவெழுத்து ----- நசி மசி, வசி.
 
கருத்துரை ----- தனது திருமேனி யெங்கும் பாம்பை ஆபரணமாக அணிந்தவனே! சிவனடியார்களுக்கு அருள்பவனே! பிணி நீக்கும் அரிய மருந்தாய் திகழ்பவனே! முடிவும் முதலும் இல்லாதவனே! உமையம்மையை ஓர் பாகம் உடையவனே! என்று ஆதிசங்கரர் மூன்று எழுத்து பீஜாட்சர மந்திரத்தால் தொழுது வணங்கிய நோய் நீக்கும் சிவதலமாகிய
விரிஞ்சிபுரத்தில்,
         என்றும் குறையாத புகழை கொண்டவளாகிய மரகதவல்லி எனுந் திருநாமம் தாங்கிய உமையவளோடு எழுந்தருளி இருக்கும் முத்துக்கு நிகரானவனே மார்கசகாயனே என்றும் வழித்துணையாக வருபவனே! உம்மை போற்றி வணங்குகிறேன். அடியேனுக்கு எந்தநோய்களும் வராமல் விலக்கி மிகவும் ஆர்வத்தோடும். விருப்பத்தோடும் உனது திருவடிகளை தொழுது வணங்குகின்ற ஒரு புத்திரப் பேற்றை
தந்து திருவருள் செய்திடுக.!
 
குறிப்பு ----- ஆதிசங்கரர் மூன்று எழுத்து பீஜாட்சர மந்திரத்தால் பூசித்து வணங்கிய இத்தலத்து இறைவனாகிய அருள்மிகு மார்கபந்தேச்சுரரை பூசித்து வணங்கினால் பக்தியும், ஆர்வமும், ஆற்றலுமுடைய ஒரு புத்திரப் பேற்றை அடைந்து மகிழ்ச்சியாக வாழலாம் என்பதாகும்!
 
வணிகனொருவனுக்கு வழித் துணையாய் வருவே னென்று
   வெள்ளை பரியேறி வந்து காத்தருளிய பதியாம்
பணியணையான் பரவி பூசித்த விண்டு புரத்தில் பார்
   புகழும் பஞ்சதீர்த்த மாடித் தொழும் பத்தருக் கருளும்
மணி முத்தழகியாம் மரகத வல்லியுட னுறையும்
   மூலனே மார்க சகாயனே தொழுதேனுனை
அணியணியாய் குலந் தழைத்தாங்குன் பணியேற்கு மொரு
   ஆற்றலு மறிவும் நிறை புத்திர பேற்றை நல்குமே! (4)
 
வணிகன் ஒருவனுக்கு வழித்துணையாய் வருவேன் என்று
   வெள்ளை பரியேறி வத்து காத்து அருளிய பதியாம்
பணி அணையான் பரவி பூசித்த விண்டுபுரத்தில் பார்
   புகழும் பஞ்ச தீர்த்தம் ஆடித் தொழும் பத்தருக்கு அருளும்
மணி முத்து அழகியாம் மரகத வல்லியுடன் உறையும்
   மூலனே மார்க சகாயனே தொழுதேன் உனை
அணி அணியாய் குலந் தழைத்து ஆங்கு உன் பணிஏற்கும் ஒரு
   ஆற்றலும் அறிவும் நிறை புத்திர பேற்றை நல்குமே!
 
அணி ----- வரிசை, பரி ----- குதிரை, பணி ----- பாம்பு, விண்டுபுரம் ----- விரிஞ்சிபுரம்,  பார் ----- உலகம், மூலன்----- முதன்மையானவன், முதல்வன்,  பணி ----- தொழில், வேலை, பஞ்சதீர்த்தம்-----பாலாறு, பிரம்ம தீர்த்தம், சிம்ம தீர்த்தம், சூலிதீர்த்தம், சோம தீர்த்தம்.
 
கருத்துரை ----- வியாபாரி ஒருவனுக்கு வழித்துணையாக வருவேன் என்று வெள்ளைக் குதிரையில் ஏறி வந்து அவனுக்கு திருவருள் புரிந்ததும், பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் திருமால் பூசித்து வணங்கியதால் விண்டுபுரம் என்று பெயர் பெற்றதும், உலகம் புகழும் பஞ்ச தீர்த்தமதில் நீராடி தொழும் பக்தர்களுக்கு திருவருள் புரிவதும், ஆகிய விரிஞ்சிபுரம் எனும் சிவதலத்தில்,
      மணி போன்றும், முத்து போன்றும் அழகுள்ளவளாகிய மரகதவல்லி எனுந்’ திருநாமங் கொண்ட உமையவளோடு எழுந்தருளி இருக்கும் எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாக திகழ்பவனே! மார்கசகாயனே! வழித்துணையாக வருபவனே! உம்மை வணங்கி தொழுகிறேன்!
      அடியேனுக்கு வழிவழியாக குலம் தழைப்பதற்கும் உமது  திருப்பணியேற்று தொண்டு செய்வதற்கும், அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு புத்திரப் பேற்றை தந்து திருவருள் செய்திடுக.!
 
குறிப்பு ----- திருமாலுக்கு அருள் புரிந்ததும் ஒரு வணிகனுக்கு வழித்துணையாக வந்து அருள்புரிந்ததுமாகிய இந்த விரிஞ்சிபுரம் எனும் சிவதலத்திற்கு சென்று பூசித்து தொழுது வணங்கினால், அறிவும் ஆற்றலுமுடைய ஒரு புத்திர பேறு நிச்சயமாக உண்டாகும் என்பதாகும்!
  
ஏனின்றிவனு மெவ்வகையில் பிரம்மஞானம் பெறுவான்
   என்றறிவோ மென தடை கூறி நிற்றவர் முன் காண
தானின்று சிவசர்மனுந் தனியனா யாகமப்படி
   திருமஞ்சன மாட்டா நிற்க தன்முடி சாய்த்த விரிஞ்சையில்
மானின் நேர் விழியாள் மரகத வல்லியுட னுறையும்
   முதல்வனே மார்க சகாயனே பணிந்தேனுனை
தேனினினிய வாக்கும் வன்மையு முடைய குணமொடுன்
   திருவடி மறவாதொரு புத்திர பேற்றை நல்குமே! (5)
 
ஏன் இன்று இவனும் எவ்வகையில் பிரம்ம ஞானம் பெறுவான்
   என்று அறிவோம் என தடை கூறி நிற்றவர் முன் காண
தான் நின்று சிவசர்மனுந் தனியனாய் ஆகமப்படி
   திரு மஞ்சனம் ஆட்டா நிற்க தன் முடி சாய்த்த விரிஞ்சையில்
மானின் நேர்விழியாள் மரகத வல்லியுடன் உறையும்
   முதல்வனே மார்க சகாயனே பணிந்தேன் உனை
தேனின் இனிய வாக்கும் வன்மையும் உடைய குணமொடு உன்
   திருவடி மறவாத ஒரு புத்திர பேற்றை  நல்குமே!
 
ஏன் ----- எப்படி, ஆட்டா ----- செய்யாது, இவனும் ----- சிவசர்மன், நிற்றவர் ----- தாயாதிகள், ஆகமப்படி ----- சிவபூசை விதிப்படி, திருமஞ்சனம் ----- அபிஷேகம், தன்முடி ----- ஈசன் திருமுடி, நேர் விழி ----- நிகரான விழி,    வன்மை ----- திறமை.
 
கருத்துரை ----- இன்றயபொழுது இவனும் (சிவசர்மன்) எப்படி பிரம்ம ஞானம் (சிவதீட்சை) பெறுகிறான் என்பதை நாங்கள் (சிவசர்மாவை சேர்ந்த ஆகாத பொறாமை கொண்ட உறவினர்கள்) பார்த்து விடுகிறோம் என்று தடங்கல் செய்து நின்றவர்கள் முன்பு, ஈசனுடைய திருவருளால் அவர்கள் காணும்படி, தனி ஒருவனாக நின்ற சிவசர்மனுக்கு ஆகம விதிப்படி ஈசனே சிவதீட்சையும், உபநயனமும் செய்வித்து ஆட்கொண்ட பிறகு சிவசர்மனும் ஈசனுக்கு திருமஞ்சனம் செய்ய ஆரம்பித்தபோது, ஈசனுடைய திருமுடி அவனுக்கு எட்டாமல் போக, சிவபெருமானே அவனுக்காக தனது திருமுடியை சாய்த்து ஏற்று அருளிய சிவதலமாம் விரிஞ்சிபுரத்தில்,
        மாலுக்கு நிகரான திரு விழிகளை கொண்டவளாகிய மரகதவல்லியுடன் உறைகின்ற முழுமுதற் கடவுளாகிய மார்கசகாயனே! உம்மை வணங்கித் தொழுகிறேன்!
       அடியேனுக்கு தேனைப் போன்று இனிமையான சொற்களை
பேசும் சொல்லாற்றலும், திறமையுங் கொண்ட ஒரு புத்திரப் பேற்றை தந்து திருவருள் செய்திடுக.!
 
குறிப்பு ----- விரிஞ்சிபுரத்தில் உறையும் அருள்மிகு மரததவல்லி சமேத மார்கபந்தேச்சுரனை தொழுது வணங்கினால் அறிவும்,ஆற்றலும், திறமையும் கொண்ட புத்திர பேறு உண்டாகும் என்பதாகும்.
 
பைங்கிளிகளொடு குயிலினங்கள் பழங் கொத்தி யுண்டு மகிழ்ந்து
   பாங்காக யிசைக்க யின்பங் கொண்டு மெய்சிலிர்க்கும் பதியாம்
வையகந்தனிலே வழியற்றோர்க்கு வழிகாட்டுமொரு
   உயர் சிம்ம தீர்த்தமாடு மோங்கு புகழ் விரிஞ்சையில்
தையல் நாயகியாம் மரகத வல்லியுடனுறையும்
   தஞ்சமருளும் மார்க சகாயனே நினைந்தேனுனை
ஐயந் தெளிவுற யறிவோடு காரிய மாற்றிடும்
   அன்பொடு பண்பிற் சிறந்ததொரு புத்திர பேற்றை நல்குமே! (6)
 
 பைங்கிளிகளொடு குயில் இனங்கள் பழங் கொத்தி உண்டு மகிழ்ந்து
    பாங்காக இசைக்க இன்பங் கொண்டு மெய் சிலிர்க்கும் பதியாம்
 வையகந்தனிலே வழி அற்றோர்க்கு வழி காட்டும் ஒரு
    உயர் சிம்ம தீர்த்தம் ஆடும் ஓங்கு புகழ் விரிஞ்சையில்
 தையல் நாயகியாம் மரகத வல்லியுடன் உறையும்
    தஞ்சம் அருளும் மார்க சகாயனே நினைந்தேன் உனை
 ஐயந் தெளிவுற அறிவோடு காரியம் ஆற்றிடும்
    அன்பொடு பண்பிற் சிறந்ததொரு புத்திர பேற்றை நல்குமே!
 
பைங்கிளி ----- பச்சைகிளி, காரியம் ----- செயல், இனங்கள் ----- வகைகள் ஆற்றுதல் ----- செய்தல், பண்பு ----- நற்குணம், வையகம் ----- உலகம்,  ஆடும் -----  நீராடுவது, மெய் ----- உடம்பு, ஓங்கு ----- உயர்ந்த, ஐயம் ----- சந்தேகம்.
 
கருத்துரை ----- பச்சை கிளிகள், குயில்கள் போன்ற பறவை வகைகள் பழங்களை கொத்தி உண்டு இனிமையாக இசைகளால் கூவி மகிழ்ச்சி கொள்வதை பார்த்து உடம்பெல்லாம் சிலிர்க்கும் பதியாகவும், உலகில் வழி  தெரியாதவர்களுக்கு வழி காட்டும் ஒரு பதியாகவும் மகப்பேறு அளிக்க வல்ல உயர்ந்த சிம்ம தீர்த்தமுடைய உயர்ந்த புகழ் கொண்ட விரிஞ்சிபுரம் எனும் சிவத்தலத்தில்,
        தையல்நாயகி என்று திருநாமம் புனைந்த மரகதவல்லியோடு எழுந்தருளி அடியார்களுக்கும் பக்தர்களுக்கும் சரணாகதியை அளிக்கும் மார்கசகாயனே! உம்மை நினைந்து வணங்கித் தொழுதேன் !
      அடியேனுக்கு சந்தேகத்தை தீர்க்கும் தெளிந்த அறிவோடும், சிந்தனையோடும் செயல்களை செய்யும் அன்பும், நல்ல குணங்களுங் கொண்ட ஒரு புத்திரப் பேற்றை தந்து திருவருள் செய்திடுக!
 
குறிப்பு ----- உலகில் செய்வது அறியாது நிர்கதியாய் நிற்பவர்களுக்கு ஈசனே ஆதரவாக நின்று காத்து திருவருள் புரிவான் என்பதாகும். மற்றும் மனம் உருகி வணங்கி தொழுபவர்களுக்கு அவர்கள் விருப்பபடி புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பதாகும்!
  
 இலையொடு காயுங் கனியும் வாச மொடெங்கும் பூத்து
    இனிய யிளங் காற்றினீரம் மாலையில் குளிர்ந்து வீசுங்
 கலையொடு நயமுஞ் சேர்ந்து காண்பார் மனங் கவருங்
    கோயிலாங் கரன் கை தொழுதேத்திய கரபுரத்தில்
 மலையரசன் மகளாம் மரகத வல்லியுட னுறையும்
    முக்கண்ணனே மார்க சகாயனே துதித்தேனுனை
 நிலையான நற்குணமொடும் நிறைவான வாழ்வொடும்
    நித்தமுனை மறவாதொரு புத்திர பேற்றை நல்குமே! (7)
 
 இலையொடு காயுங் கனியும் வாசமொடு எங்கும் பூத்து
    இனிய இளங் காற்றின் ஈரம் மாலையில் குளிர்ந்து வீசுங்
 கலையொடு நயமுஞ் சேர்ந்து காண்பார் மனங் கவருங்
    கோயிலாங் கரன் கை தொழுது ஏத்திய கரபுரத்தில்
 மலை அரசன் மகளாம் மரகத வல்லியுடன் உறையும்
    முக்கண்ணனே மார்க சகாயனே துதித்தேன் உனை
 நிலையான நற்குணமொடும் நிறைவான வாழ்வொடும்
    நித்தம் உனை மறவாது ஒரு புத்திர பேற்றை நல்குமே!
 
நயம் ----- அழகு, நேர்த்தி, கரன் ----- ஒரு அசுரன்,    கரபுரம் ----- விரிஞ்சிபுரம், நித்தம் ----- தினமும்.
 
கருத்துரை ----- பச்சை பசேலென்று இலைகளோடு கூடிய காய்களும், பழுத்த பழங்களும் எங்கும் நல்ல மணம் வீசவும், பல வகையான வண்ணப் பூக்கள் பூத்து குலுங்கவும் மாலை பொழுதில் இனிமையான இளங் காற்றின்  ஈரம் குளிர்ந்து வீசவும் காண்பவர்கள் மனதை ஈர்க்கும் வண்ணம் கலையொடு அழகும் நேர்த்தியுங் கூடிய உன்னத சிற்பங்களை உடைய திருக்கோயிலாம், கரன் எனும் அசுரன் பூசித்து கைதொழுது வணங்கிய கரபுரம் என்கின்ற விரிஞ்சிபுரத்தில்,
           இமகிரி இராஜனுடைய புத்திரியான மரகதவல்லி  என்கின்ற திருநாமங் கொண்ட உமையவளுடன் உறைகின்ற  மூன்று கண்களை உடையவனே!  மார்கசகாயனே!  வழித்துணையாய் வருபவனே!  உம்மை துதித்து வணங்குகிறேன் !
         அடியேனுக்கு நல்ல குணங்களொடும் நிறைவான வளம் மிகுந்த வாழ்வொடும், தினமும் உம்மை மறவாது துதிக்கும் ஒரு புத்திரப் பேற்றை தந்து திருவருள் புரிக !
 
குறிப்பு ----- அழகும் கலையும் நிறைந்த அற்புதக் கோயிலாம் விரிஞ்சிபுரத்தில் உறைகின்ற ஈசனை தொழுது வணங்கினால், நல்ல குணங்களொடு கூடிய ஒரு புத்திரப் பேற்றை பெற்று வளமான வாழ்வோடு வாழலாம் என்பதாகும்..
 
நட்ட நாற்றுகள் துளிர் விட்டு பச்சையோட சைந்தாடி
   நாற்புறமும் நெல் மணியாய் வளர்ந்து குவியும் பதியாம்
எட்டுமாங் கயிலைப் பதியென தன்னூ னறுத்தீய
   எத்தனித்த சாவித்திரனுக் கருளிய திருவிரிஞ்சையில்
மட்டுவார் குழலியாம் மரகத வல்லியுடனுறையும்
   மதியே மார்க பந்தேச்சுரனே புகழ்ந்தேதுனை
தட்டாத வார்த்தையொடு தாய் தந்தையரை பேணுகின்ற
   தவறாதுனை துதிக்குமொரு புத்திர பேற்றை நல்குமே! (8)
 
நட்ட நாற்றுகள் துளிர் விட்டு பச்சையோடு அசைந்து ஆடி
   நாற்புறமும் நெல் மணியாய் வளர்ந்து குவியும் புதியாம்
எட்டுமாங் கயிலைப் பதி என தன் ஊன் அறுத்து ஈய
   எத்தனித்த சாவித்திரனுக்கு அருளிய திரு விரிஞ்சையில்
மட்டுவார் குழலியாம் மரகதவல்லியுடன் உறையும்
   மதியே மார்க பந்தேச்சுரனே புகழ்ந்தேன் உனை
தட்டாத வார்த்தையொடு தாய் தந்தையரை பேணுகின்ற
   தவறாது உனை துதிக்கும் ஒரு புத்திர பேற்றை நல்குமே!
 
நாற்று ----- நெல் பயிர், மட்டு ----- பூக்கும் தருவாயிலுள்ள அரும்பு,
வார் ----- பின்னிய முடிந்த, ஊன்----- மாமிசம், சதை, மதி ----- அறிவு
பேணு ----- பாதுகாக்க, குழலி ----- கூந்தலையுடைய.
 
கருத்துரை ----- நட்ட நாற்றுகள் எல்லாம் துளிர் விட்டு பச்சைபசேல் என்று காற்றில் அசைந்தாடி நான்கு திசைகளிலும் நெல் மணிகளாக வளர்ந்து குவிந்து செழிப்புற்று இருக்கும் புதியாகவும் கயிலை மலையை மனித பிறவியில் காண்பது மிக கடினமானது என்று கேட்ட சாவித்திரன் என்ற அடியவர் தான் எப்படியாவது கயிலையை காண வேண்டும் என்று உறுதி கொண்டு, பாலாற்றில் நீராடி கடும் தவம் இருந்து, தனது உடலின் தசைகளை அறுத்து அவிர்பாகமாக உக்ர யாகத்தில் இடுவதற்கு போக, ஈசன் இடப வாகனத்தில் காட்சி கொடுத்து அவரை விமானத்தில் ஏற்றி கயிலை அடைய திருவருள் புரித்த திருத்தலமாம் விரிஞ்சிபுரத்தில்,
         மட்டுவார் குழலி (பூக்கும் தருவாயிலுள்ள மொட்டுக்களை
பின்னிய கூந்தலில் சூடியவள்) என்ற திருநாமம் பூண்ட உமையவளாகிய மரகதவல்லியுடன் எழுந்தருளி இருக்கும் சகலவுயிர்களுக்கும் அறிவாய் திகழ்பவனே!  மார்கபந்தேச்சுரனே! உம்மை புகழ்ந்து துதித்து வணங்குகிறேன்!
         அடியேனுக்கு தாய் தந்தையர் சொல்லை தட்டாது, என்றும் அவர்களை பாதுகாத்து பணிவிடை செய்திடவும், தினமும் ஈசனை தவறாது துதிக்கின்ற ஒரு புத்திர பாக்கியத்தை தந்து திருவருள் செய்திடுக!
 
 குறிப்பு -----  ஈசனை என்றும் மன உறுதியோடு தொழுது வணங் குபவருக்கு நினைத்தது நடக்கும். அவர்கள் வேண்டியபடியே புத்திர பேறும் கிட்டும் என்பதாகும்!
 
அரசொடு ஆலும் வேம்புஞ் சூழ்ந்தாங்கே பறவைகள்
   அரவ மெங்குமிசையா யொலிக்க விண்ணவரும் முனிவரும்
பரவுங் பாலாற்றங் கரையில் தெங்கும் பனையுஞ் சூழ்ந்த
   பதியாம் பாவிப்பார்க்கு வரமருளும் விரிஞ்சையில்
மரகத நிறத்தழகி மரகதவல்லி யுடனுறையும்
   மருந்தே மார்க பந்தேச்சுரனே தொழுதேனுனை
குரலினிசை யொடுனை பாடுந் திறமுங் குறைவற்ற செல்வமுங்
   கொண்டுனையே துதிக்குமொரு புத்திர பேற்றை நல்குமே! (9)
 
அரசொடு ஆலும் வேம்புஞ் சூழ்ந்து ஆங்கே பறவைகள்
   அரவம் எங்கும் இசையால் ஒலிக்க விண்ணவரும் முனிவரும்
பரவுங் பால் ஆற்றங் கரையில் தெங்கும் பனையுஞ் சூழ்ந்த
   பதியாம் பாவிப்பார்க்கு வரம்அருளும் விரிஞ்சையில்
மரகத நிறத்து அழகி மரகத வல்லியுடன் உறையும்
   மருந்தே மார்க பந்தேச்சுரனே தொழுதேன் உனை
குரலின் இசையொடு உனை பாடுந் திறமுங் குறைவற்ற செல்வமுங்
   கொண்டு உனையே துதிக்கும் ஒரு புத்திர பேற்றை நல்குமே!
 
ஆல் ----- ஆலமரம், வேம்பு ----- வேப்ப மரம், அரவம் ----- சப்தம் இரைச்சல், பரவுங் ----- போற்றும், வணங்கும், தெங்கு ----- தென்னை மரம், பாவிப்பார் ----- வணங்குவார், மரகதம் ----- பச்சை நிறம்.
 
கருத்துரை ----- அரச மரங்களும், ஆல மரங்களும், வேப்ப மரங்களும் எங்கும் சூழ்ந்துள்ளதும் பறவைகளின் இரைச்சல் சத்தம் பலவகை இசைகளாக ஒலிக்கவும், தேவர்களும் முனிவர்களும் போற்றும் பாலாற்றங்கரையில் தென்னை மரமும், பனை மரமும் சூழ்ந்துள்ளதும், கை தொழுது வணங்குபவர்களுக்கு பலவிதமான வரங்களை கொடுப்பதுமாகிய விரிஞ்சிபுரம் எனும் சிவதலத்தில்,  
                 பச்சை நிற திரு மேனியைக் கொண்ட அழகியாம் மரகதவல்லி என்ற திருப்பெயர் கொண்ட உமையவளோடு உறைகின்றவனே! பலவித நோய்களுக்கு மருந்தாக திகழ்பவனே! மார்கபந்தேச்சுரனே! வழி துணை நாதனே! உம்மை தொழுது வணங்குகிறேன்!
                அடியேனுக்கு இனிமையான குரலோடு இசை பாடும் திறமையும், குறைவற்ற செல்வமுங் கொண்டுள்ள என்றும் உம்மை துதித்து வணங்குகின்ற ஒரு புத்திரப் பேற்றை தந்து திருவருள் புரிந்திடுக!
 
குறிப்பு ----- தேவர்களும், முனிவர்களும் போற்றி தொழும் திருத்தலமாம் விரிஞ்சிபுரத்தில் உறைகின்ற அருள்மிகு மரகதவல்லி சமேத மார்கபந்தேச்சுரனை தொழுது, நீராடி வணங்கினால் திறமை மிக்க ஒரு மகப்பேறு பெற்று இனிமையாக வாழலாம் என்பதாகும்!
 
நதியோடுங் கரையில் நாற்புறமும் பரந்து விரிந்து,
   நல் கமுகும் வாழையுஞ் சூழ்ந்த யினிமை மிகு காட்சியொடு
அதி சுந்தர சிற்பங்களாலணி வகுக்கு மம்புலியு
   மடி பணிந்த யழகான தோர் பதியாம் விரிஞ்சையில்
மதிநிறை நுதலாள் மரகதவல்லி யுடனுறையும்
   மணியே மார்க பந்தேச்சுரனே பணிந்தேனுனை
பதி ஞான வாழ்வொடு பாரோர் புகழ பலகலையும்
   பயின்றுனை துதிக்குமொரு புத்திர பேற்றை நல்குமே! (10)
 
நதி ஓடுங் கரையில் நாற்புறமும் பரந்து விரிந்து
   நல் கமுகும் வாழையுஞ் சூழ்ந்த இனிமை மிகு காட்சியொடு
அதி சுந்தர சிற்பங்களால் அணி வகுக்கும் அம்புலியும்
   அடி பணிந்த அழகானதது ஓர் பதியாம் விரிஞ்சையில்
மதிநிறை நுதலாள் மரகத வல்லியுடன் உறையும்
   மணியே மார்க பந்தேச்சுரனே பணிந்தேன் உனை
பதிஞான வாழ்வொடு பாரோர் புகழ பலகலையும்
    பயின்று உனை துதிக்கும் ஒரு புத்திர பேற்றை நல்குமே!
 
நதி ----- பாலாறு,  கமுகு ----- பாக்கு, அம்புலி ----- சந்திரன், பதி ----- திருத்தலம், மதி ----- சந்திரன், நுதல் ----- நெற்றி, பதிஞானம் ----- சிவஞானம், பாரோர் ----- உலகோர், பயின்று ----- கற்பது.
 
கருத்துரை ----- பாலாறு ஓடும் கரையில் நான்கு பக்கமும் அகலமாக படர்ந்துள்ள நல்ல பாக்கு மரங்களும், வாழை மரங்களும்,சூழ்ந்து வளர்ந்து இனிமை மிகுந்த கண் கொள்ளாக்காட்சியாக தோற்றம் அளிப்பதும், அழகு மிகுந்த அற்புத சிற்பங்கள் வரிசையாக அமைந்துள்ளதும், சந்திரனும் ஈசன் திருவடியை பணிந்து பூசித்ததும் ஆகிய ஓர் அழகான சிவதலமாம் விரிஞ்சிபுரத்தில்,
              பூரண சந்திரனை போன்று அழகு நிறைந்த நெற்றியை உடையவளாகிய மரகதவல்லியுடன் எழுந்தருளி இருக்கும் மணி போன்றவனே! மார்க பந்தேச்சுரனே!  உம்மை தொழுது வணங்குகிறேன்!
              அடியேனுக்கு சிவஞான வாழ்வொடு வளமாக வாழும்படியாகவும், இந்த உலகோர் புகழ்ந்து பாராட்டும் பல கலைகளையும் திறமையோடு கற்று உம்மை என்றும் துதித்து வணங்கும் ஒரு புத்திரப் பேற்றை தந்து திருவருள் புரிந்திடுக !
 
குறிப்பு ----- சிற்பங்கள் நிறைந்த விரிஞ்சிபுரம் எனுஞ்சிவதலத்தில் உறைகின்ற ஈசனை போற்றுவார்கள், அவர்கள் நினைத்தபடியான வாழ்வும், வளமும், கல்வியும், ஆற்றலும் மிக்க ஒருபுத்திர பேற்றை பெற்று வாழ்வார்கள் என்பதாகும்!
  
மண்ணும்விண்ணும் போற்றும் விரிஞ்சையில் வாழ் மூலபொருளாம்
   மரகத வல்லியுடனுறை மார்கபந்தேச்சுரர் மேற்
கண்ணுங் கருத்துமாய் ஆரணியடியார்க்கடியவன்
   கருத்திலுதித்த பாமாலைகளீரைந் தோடொன்றும்
பண்ணுடன் பயின்று பாடுவாரவர் பண்பொடு வாழுமோர்
   புத்திர பேற்றை பெற்று பலகலைகளும் பாங்கொடு கற்று
எண்ணு மெண்ணமு மீடேறி யிடர் யாவுமொழிந் துலகில்
   எல்லா வளமோடினிதே வாழ்ந்தீசனை யடைவரே! (11)
 
மண்ணும் விண்ணும் போற்றும் விரிஞ்சையில் வாழ் மூலபொருளாம்
   மரகத வல்லியுடன் உறை மார்கபந்தேச்சுரர் மேற்
கண்ணுங் கருத்துமாய் ஆரணியடியார்க்கடியவன்
   கருத்தில் உதித்த பாமாலைகள் ஈரு ஐந்தொடு ஒன்றும்
பண்ணுடன் பயின்று பாடுவார் அவர் பண்பொடு வாழும் ஓர்
   புத்திர பேற்றை பெற்று பலகலைகளும் பாங்கொடு கற்று
எண்ணும் எண்ணமும் ஈடேறி இடர் யாவும் ஒழிந்து உலகில்
   எல்லா வளமோடு இனிதே வாழ்ந்து ஈசனை அடைவரே!
 
ஈரைந்தோடொன்றும் ----- 2×5 = 10+1 = Il,  பண் ----- இராகம், பயின்று ----- கற்பது, பண்பு ----- நற்குணம், பாங்கு ----- நேர்த்தி. ஈடேறி ----- நடப்பது, இடர் ----- துன்பம், எண்ணம் ----- நினைப்பது.
 
கருத்துரை ----- இவ்வுலகமும் மேலுகமும் போற்றுகின்ற விரிஞ்சிபுரம் எனும் சிவதலத்தில் வாழுகின்ற முழு முதற் ஆதார பொருளாம், அருள்மிகு மரகதவல்லி சமேத மார்கபந்தேச்சுரரை போற்றி, கண்ணுங் கருத்துமாய் ஆரணி அடியார்க்கு அடியவன் என்கின்ற இச்சிறியவன் சிந்தனையில் உதித்த  பாமாலைகள் (2 X 5 + 1 = 11) ம், இசையொடு கற்று பாடுபவர்கள் நல்ல குணங்களொடு வாழுகின்ற ஒரு புத்திரப் பேற்றை பெற்று, பலகலைகளையும் நேர்த்தியொடும் திறமை யொடும் கற்று, நினைக்கின்ற சிந்தனைகள் எல்லாம் நடந்து துன்பங்கள் யாவும் நீங்கி, உலகில் எல்லா வளமொடு இனிதே வாழ்ந்து ஈசன் திருவடிகளை அடைவரே.!

சுபம்.
திருச்சிற்றம்பலம்.
 
 
 

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai