சலகண்டேச்சுரர் மாலை SalaKandechurar Malai

 












சலகண்டேச்சுரர் மாலை

வேலூர்

சுவாமி  ---   சலகண்டேச்சுரர்.

அம்பாள் --- அகிலாண்டேச்சுரி.

தீர்த்தம் ---  கங்காபாலாறு.

விருட்சம் --- வன்னி மரம்.

 PDF ]     [ Manuscript 




திருச்சிற்றம்பலம். 


பக்குவமாய் பல்வேறு பொருளாலும் நிறமாலும் 
 பன்னாட்பட பார்த்து பார்த்து செய்தவொரு பாண்டமொடு
இக்குவலயந் தன்னிலே பிறந்திச்சையோடு வரும்
   இன்னல்களும் சூழவொரு வழியறியாதுழல்வீர்
சக்ராயுதன் பூசித்த அகழிசூழ் வேலூர் தன்னில்
   சங்கரியாள் அகிலாண்டேச்சுரி தன்னோடுறையும்
நக்கனாந் திருசலகண்டேச்சுரனை நினைவீரே
   நும்மை தொடரும் நீள் வினைகள் நில்லாது நீங்குமே! (1)


பக்குவமாய் பல்வேறு பொருளாலும் நிறமாலும்
   பல நாள் பட பார்த்து பார்த்து செய்தஒரு பாண்டமொடு
இக்குவலயந் தன்னிலே பிறந்து இச்சையோடு வரும்
   இன்னல்களுஞ் சூழ ஒருவழி அறியாது உழல்வீர்
சக்ர ஆயுதன் பூசிந்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   சங்கரியாள் அகிலாண்டேச்சுரி தன்னோடு உறையும்
நக்கனாந் திருசலகண்டேச்சுரனை நினைவீரே நும்மை
   தொடரும் நீள் வினைகள் நில்லாது நீங்குமே!

பாண்டம் --- உடல்,  குவலயம் --- உலகம், 
சக்ராயுதன்--- திருமால்,  நக்கன் --- திகம்பரன், ஈசன்.

விளக்கவுரை ---  மிகத்திறமையாக பலவேறு பொருள்களான தசை, நரம்பு, எலும்பு, உதிரம், தோல் முடி இவைகளை கொண்டும்  அதற்கு தகுந்தாற் போல் நிறமும் அமைத்து பல நாட்களாக (கிட்டதட்ட முன்னூறு நாட்கள்) கவனித்து கவனித்து செய்த ஒரு உருவமானது இப்பூமியில் வந்து பிறந்த மனிதன் என்ற பெயர் கொண்டு வளர்ந்த பின்னர் அத்தகைய மனித உயிராக பிறந்த நீங்கள் பலவித ஆசைகளோடும் வருகின்ற துன்பங்களோடும் சூழ, நல்லகுணங்களோடு' வாழ்வதற்குரிய வழியை தெரிந்து கொள்ளாது இங்கும் அங்குமாக அலைந்து திரிந்து வாழ்வீர்களே! கேளுங்கள்!

சுதர்சனம் என்று சொல்லும் சக்கராயுதத்தை தன் கையில் கொண்டுள்ள திருமால் பூசித்து அருள் பெற்ற, நீர்நிறைந்த அகழி சூழ்ந்த வேலூர் எனும் சிவத்தலத்தில், சங்கரியாள் எனும் திருப்பெயர் தாங்கிய அகிலாண்டேச்சுரி தன்னோடு எழுந்தருளியிருக்கின்ற நக்கன் என்ற திருநாமம் பூண்ட 
திருசலகண்டேச்சுரனை நினைந்து வணங்குங்கள்.  அதனால் உங்களை தொடர்ந்து வரும் நீண்ட முன் வினைகள் யாவும் நில்லாமல் நீங்கி விடும்!


கருவாகி காணாதோர் குடத்தில் கைகாலாகி
   காணுமொரு யறிவாகி யயனாரின் விதியாகி
உருவாகி யுலகு தன்னிலுதித்துடனாகிய பல
   உறவாகி மயலாகி யிடரோடும் அலைவீர்
திருமகளால் பூசித்த அகழிசூழ் வேலூர் தன்னில்
   தற்பரையாம் அகிலாண்டேச்சுரி தன்னோடுறையும்
நிருத்தனாந் திருசலகண்டேச்சுரனை உரைப்பீர்
   நுமது ஊழ்வினைகள் யாவும் நில்லாதொழியுமே! (2)


கருவாகி காணாது ஓர் குடத்தில் கை காலாகி
   காணும் ஒரு அறிவாகி அயனாரின் விதியாகி
உருவாகி உலகுதன்னில் உதித்து உடன் ஆகிய பல
   உறவாகி மயலாகி இடரோடும் அலைவீர்
திருமகளால் பூசித்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   தற்பரையாம் அகிலாண்டேச்சுரி தன்னோடு உறையும்
நிருத்தனார் திருசலகண்டேச்சுரனை உரைப்பீர்
   நுமது ஊழ்வினைகள் யாவும் நில்லாது ஒழியுமே!


குடம் --- கர்பபை, அயன் ---  பிரமன், மயல் --- மயக்கம்,
திருமகள் ---  லட்சுமி,  தற்பரை ---  உமையவள்,
நிருத்தன் ---  திருநடம் புரிபவன்- சிவன்.

விளக்கவுரை --- இவ்வுயிர் பிறப்பதற்கு முன் காணாத கருப்பை எனும் ஒரு குடத்தில் விழுந்து கை கால்களாகி பார்ப்பதற்கு ஒரு அறிவு பூர்வமாக பிரம்மன் அன்று படைத்த விதியை யேற்று ஒரு உருவமாக இவ்வுலகில் வந்து பிறந்து, அதன் பிறகு தன்னோடு பல உறவுகளும் வந்து சேர்ந்து, 
அதன் மூலம் பலவித மயக்கங்களை கொண்டு, அதனால் பல துன்பங்கள்
வந்து சூழ அலைந்து திரிவீர்களே! கேளுங்கள்!

அன்று திருமகள் பூசித்த, அகழி சூழ்ந்த வேலூர் எனும் சிவத்தலத்தில் தற்பரை எனும் திருநாமங்கொண்ட அகிலாண்டேச்சுரி தன்னோடு எழுந்தருளி இருக்கும் திரு அம்பலத்தே ஆடுகின்ற திருசலகண்டேச்சுரனை வணங்கி அவன் திருநாமங்களை சொல்வீர்! அப்படி சொல்வதால் உங்களுடைய முன்னர் செய்த வினைகள் எல்லாம் நில்லாது அழிந்து போகுமே.!

குறிப்பு --- திருஅம்பலத்தே ஆடுகின்ற ஈசன் திருநாமங்களை
உச்சரிப்பதால் உங்கள் முன் வினைகள் எல்லாம் நீங்கி
நற்பயனை அடைவீர்கள் என்பதாகும்.!

மங்கையுடலதில் மாதம் பத்து முருண்டுந்திரண்டு முருவம்
   முழுதாய் பெற்று பின்னோர் வேளை மண்ணில் விழுந்தழுது
தங்கிய தரணியில் பொருளொடு தாளாத ஆவல் கொண்டு
   தளர்ந்தார்க்கீயாது தன் பிணியால் வாடித் திரிவீர்
பங்கையத்தோன் பூசிந்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   பைரவியாம் அகிலாண்டேச்சுரி தன்னோ டுறையும்
பொங்கரவனாந் திருசலகண்டேச்சுரனை தொழுவீர்
   பொல்லா வினையொடு பிணிகளானவை நில்லா தோடுமே! (3)


மங்கை உடல் அதில் மாதம் பத்தும் உருண்டுந் திரண்டும் உருவம்
   முழுதாய் பெற்று பின் ஓர் வேளை மண்ணில் விழுந்து அழுது
தங்கிய தரணியில் பொருளொடு தாளாத ஆவல் கொண்டு
   தளர்ந்தார்க்கு ஈயாது தன் பிணியால் வாடித் திரிவீர்
பங்கையத்தோன் பூசித்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   பைரவியாம் அகிலாண்டேச்சுரி தன்னோடு உறையும்
பொங்கரவனாந் திருசலகண்டேச்சுரனை தொழுவீர்
   பொல்லா வினையொடு பிணிகள் ஆனவை நில்லாது ஓடுமே!


தரணி --- உலகம்,  பொங்கரவம் --- எழுந்தாடும் பாம்பு,
தளர்ந்தார் --- வறுமையில் வாடுவோர், பைரவி --- உமையவள்.
பங்கையத்தோன்--- பிரம்மன்.

விளக்கவுரை --- ஒரு தாயின் உடலில் பத்து மாதங்களாக நாளுக்கு நாள் பெருகி அசைந்து ஒரு முழுமையான உருவம் அடைந்த பிறகு பின்னர் ஓரு நாள், இரவோ அல்லது பகலோ ஏதோ ஒரு நேரத்தில் வெளி வந்து இந்த பூமியில் விழுந்து அழுது வளர்ந்த பின்னர், இவ்வுலகில் பொருளும் செல்வமும் சேர்ந்த பின்னரும் மேலும் அடங்காது ஆசைக் கொண்டு, வறுமையில் வாடுபவர்களுக்கு ஏதும் கொடுக்காது வாழ்ந்து தன்னை அடைந்த நோய்களால் வாட்டமுற்று தளர்ந்தும் திரிவீர்களே!  கேளுங்கள்!

அன்று பிரம்மன் பூசித்த வேலூர் எனும் சிவத்தலத்தில் நீர் நிறைந்த அகழி சூழ்ந்த திருக்கோயிலில், பைரவி எனும் திருநாமம் தாங்கிய அகிலாண்டேச்சுரியுடன் எழுந்தருளி இருக்கும், மேலெழுந்து ஆடுகின்ற பாம்பை ஆபரணமாக பூண்ட திருசலகண்டேச்சுரனை தொழுது உருகி வணங்குவீர்! அதனால் உங்களை தேடிவரும் கடுமையான வினைகளொடு
எல்லா நோய்களும் நில்லாது ஓடி விடும்!


குறிப்பு --- இவ்வுலகில் மானிட பிறவி எடுத்த பிறகு செல்வத்தோடு
வாழ்ந்தாலும், வறுமையில் வாடுபவர்களுக்கு இயன்ற அளவு தானம்
கொடுப்பதாலும், ஈசனை மறவாது வணங்குவதால் மட்டுமே
முன் வினைகளையும், நோய்களையும் போக்க முடியும்
என்பதை அறிய வேண்டும்.!

ஆக்குமயன் அவரவர் புரியுஞ் செயலைக் கொண்டு பின்னோர்
   அகப்பையிலிட்டு விதி செய்தனுப்பிய இவ்வுடலும் பிறந்து
நோக்கு முலகில் யாவும் நிலையென ஈசனை
   நுண்ணறிவாலுணராது நோயாலவதியுறுவீர்
வாக்தேவியாள் பூசித்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   வலவையாம் அகிலாண்டேச்சுரி தன்னோடுறையும்
நாக்கோடுலவுஞ் சலகண்டேச்சுரனை துதிப்பீர்
   நும்மோடுறையும் மாவினைகள் நில்லாது வீடுமே! (4)


ஆக்கும் அயன் அவர் அவர் புரியுஞ் செயலைக் கொண்டு பின் ஓர்
   அகப்பையில் இட்டு விதி செய்து அனுப்பிய இவ்வுடலும் பிறந்து
நோக்கு உலகில் யாவும் நிலை என ஈசனை
   நுண்ணிறிவால் உணராது நோயால் அவதி உறுவீர்
வாக்தேவியாள் பூசித்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   வலவையாம் அகிலாண்டேச்சுரி தன்னோடு உறையும்
நாக்கோடு உலவுஞ் சலகண்டேச்சுரனை துதிப்பீர்
   நும்மோடு உறையும் மாவினைகள் நில்லாது வீடுமே!

ஆக்கும் --- படைக்கும், அயன் ---  பிரம்மன்,
அகப்பை --- கருப்பை,  நுண்ணறிவு --- கூர்மையான அறிவு.
வாக்தேவி --- சரஸ்வதி, வலவை ---  உமையவள்.

விளக்கவுரை ---  படைக்கும் தொழிலை புரிகின்ற பிரமன் இவ்வுலகில் எல்லாவுயிர்களும் செய்கின்ற செயல்களை கொண்டு அதற்கு தகுந்தவாறு மறுபடியும் ஒரு தாயின் கருப்பையில் செலுத்தி அவைகளுக்குரிய விதியை நியமித்து பிறக்கும் படி செய்கின்ற முறையில், இவ்வுடலானது வந்து பிறந்து, உலகில் பார்க்கின்ற யாவும் நிலையானவை என நினைத்து, ஈசனே யாவும் என தம்முடைய கூரிய அறிவால் உணர்ந்து கொள்ளாது மதி மயங்கி, பின் வருகின்ற துயரங்களையும், நோய்களையும் அடைந்து அவதிப்பட்டு அலைகின்றீர்களே! கேளுங்கள்!

கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதி பூசித்து அருள் பெற்ற வேலூர் எனும் 
சிவத்தலத்தில், நீர் நிறைந்த அகழி சூழ்ந்த திருக்கோயிலில், வலவை என்ற 
திருநாமம் பூண்ட அகிலாண்டேச்சுரியுடன் உறைகின்ற நாவில் ஐந்து எழுத்து வடிவமாக அமர்ந்துள்ள திருசலகண்டேச்சுரனை துதித்து வணங்குங்கள்!
அதனால் உங்களோடு சேர்ந்து உள்ள முன் செய்த பெரிய வினைகள்
எல்லாம் நில்லாது அழிந்து விடுமே.!

குறிப்பு --- இப்பூவுலகில் பார்க்கும் யாவும் நிலையற்றவை.
ஈசன் ஓருவனே நிலையானவன்.
ஆகையால் ஈசனை நினைத்து
வணங்குவதால், எல்லா துயரங்களும் அழியும் என்பதாகும்.!

நத்திறமொடு நாலாறு நிங்களாய் நல்லுருவாய்
   நாட்குறித்த வேளையில் வெளி வந்து நாத்திறந்தழுது
இத்திணைதனில் பருவங்களொடு நகர்ந்துந் திரிந்துந் தளர்ந்தும்
   இகலது குன்றியும் பிணியதுயேறி நலிந்தும் போவீர்
அத்திரி முனி பூசித்த அகழிசூழ் வேலூர் தன்னில்
   அம்மையாம் அகிலாண்டேச்சுரி தன்னோடுறையும்
நித்தியனாந் திருசலகண்டேச்சுரனை வணங்குவீர்
   நும்மை நாடிடுமிட ரெலாங் காணா தேகுமே! (5)


நல் திறமொடு நாலு ஆறு திங்களாய் நல்உருவாய்
   நாள் குறித்த வேளையில் வெளி வந்து நாத்திறந்து அழுது
இத்திணைதனில் பருவங்களொடு நகர்ந்தும் திரிந்தும் தளர்ந்தும்
   இகல் அது குன்றியும் பிணி அது ஏறி நலிந்தும் போவீர்
அத்திரி முனி பூசித்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   அம்மையாம் அகிலாண்டேச்சுரி தன்னோடு உறையும்
நித்தியனாந் திருசலகண்டேச்சுரணை வணங்குவீர்!
   நும்மை நாடிடும் இடரெலாங் காணாது ஏகுமே!


நாலாறு ---  4 + 6 = 10 -மாதங்கள், திங்கள் --- மாதம்,
இகல் --- உடல்,  திணை --- உலகம்,  நித்தியன்--- நிலையானவன்,
பருவங்கள் --- பால பருவம், இளமை பருவம், வாலிப பருவம், வயோதிக பருவம்.

விளக்கவுரை ---  அன்று ஒரு தாய் வயிற்றில் நான்கொடு ஆறு மாதங்களாய் நல்ல திறமையும் முழுமையும் அடைந்த மானிடவுருவமாய் குறித்த நாளில் குறித்த நேரத்தில் வெளியே வந்து வாய் திறந்து அழுது, இப்பூமியில் ஒவ்வொரு மானிட பருவங்களை கடக்கும் போதும், பல துயரங்களுக்கு ஆளாகி திரிந்தும் அலைந்தும் அதனால் உடல் தளர்ச்சியுற்றும், ஒளி இழந்தும், நோய்கள் வந்து சேர்ந்தும் செயல் இழந்தும் போவீர்களே! கேளுங்கள்!

அன்று அத்திரி முனிவர் பூசித்த வேலுர் எனும் சிவத்தலத்தில் நீர் நிறைந்த அகழி சூழ்ந்த திருக்கோயிலில் அம்மையாகிய அகிலாண்டேச்சுரியுடன்  எழுந்தருளி இருக்கும் என்றும் எங்கும் நிறைந்த நிலையான பரம்பொருளாகிய திருசலகண்டேச்சுரனை வணங்கி கைத்தொழுவீர்கள்!
அதனால் உங்களைத் தொடர்ந்து வரும் துன்பங்கள் எல்லாம் காணாமல் போய் விடுமே.!

குறிப்பு --- இப்பூமியில் பிறந்த அனைவரும் ஒவ்வொரு  மானிடப்பிறவியை கடக்கும் போதும் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. இவைகளை தாண்டி விடுதலை பெற்று இன்புற வேண்டும் என்றால் பரம்பொருளாகிய ஈசனை வணங்குவது ஒன்றே நற்கதிக்கு வழியாகும் என்பதை அறியவேண்டும்.!

மும்மியல் குணமதி லொன்றில் முந்நூறு நாளில் முழுதாய்
   முறையாய் தொகுத்த யிக்குரம்பையொடு மேதினியில்
பிறந்துந்
தம்மிடையே தீரா வாசையொடு பொருளுஞ் சேர்த்து
   தீதும் வாதும் புரிந்து திரிந்தழிவை தேடுவீர்
பொம்மி நாயக்கன் பூசித்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   பொற்கொடியாம் அகிலாண்டேச்சுரி தன்னோடுறையும்
எம்மிறைவனாந் திருசலகண்டேச்சுரனை புகழ்வீரே
   எல்லா பகையும் பழியும் பாவமும் நில்லாதேகுமே! (6)


மும் இயல் குணம் அதிலொன்றில் முந்நூறு நாளில் முழுதாய்
   முறையாய் தொகுத்த யிக்குரம்பையொடு மேதினியில்
பிறந்துந்
தம் இடையே தீரா ஆசையொடு பொருளுஞ் சேர்த்து
   தீதும் வாதும் புரிந்து திரிந்து அழிவை தேடுவீர்
பொம்மி நாயக்கன் பூசித்த அகழிசூழ் வேலூர் தன்னில்
   பொற்கொடியாம் அகிலாண்டேச்சுரி தன்னோடு உறையும்
எம் இறைவனாந் திருசலகண்டேச்சுரனை புகழ்வீரே
   எல்லா பகையும் பழியும் பாவமும் நில்லாது ஏகுமே!


இயல் --- தன்மை, வாது --- வாதம், குரம்னப --- உடல்,
மேதினி --- உலகம், ஏகுமே --- அகலுமே, நீங்குமே.

விளக்கவுரை ---   மூன்று இயல்பான குணங்களான சாத்வீக குணம், இராசத குணம், தாமச குணம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முந்நூறு நாட்களில் முழுமையாகவும் முறையாகவும் உண்டாக்கிய இவ்வுடலோடு இவ்வுலகில் பிறந்தும், தன்னோடு தீராத ஆசைகளை கொண்டு, செல்வங்களை சேர்த்தும், தீமைகள் புரிந்தும் வீண் வாக்கும் வாதமும் செய்தும் அழிவைத் தேடிச் செல்வீர்களே! கேளுங்கள்!

நாயக்க மன்னர்களில் ஒருவரான பொம்மி நாயக்கன் திருப்பணிகளும் பூசைகளும் செய்த, வேலூர் என்ற சிவத்தலத்தில் நீர் நிறைந்த அகழி சூழ்ந்த திருக்கோயிலில் பொற்கொடி போன்ற வடிவழகை கொண்டவளான அம்மை அகிலாண்டேச்சுரியுடன் உறைகின்ற எமது இறைவனாகிய
திருசலகண்டேச்சுரனை புகழ்ந்து பாடி வணங்கி தொழுங்கள் ! அதனால் எல்லாவித பழியும் பாவமும், உங்களை சேராது ஓடி விடுமே.!
 
குறிப்பு --- பிறப்பில் அரிய பிறவியாகிய மானிடப்பிறவி எடுத்த பிறகு வீண் ஆசைகளோடு, தீமைகளும் வாதங்களும் செய்து அழிவை தேடாமல் மெய்பொருளாகிய ஈசனை பாடி பணிந்து நற்கதியை அடையுங்கள் என்பதாகும்.!

நம்பிய மாதொடு மனைமக்களும் நாடிய சுற்றமும் வெகு
  நாளாய் தேடிய செல்வமுங் கொண்டு நிலையென மகிழ்ந்து
வெம்பிய யுடலோடலைந்து திரிந்து நோய் கண்டு நலிய
  வகையறியாது வீணாள் கழித்துலகில் திகைப்பீர்
கும்ப முனிவர் பூசித்த அகழி சூழ் வேலூர் தன்னில்
  குண்டலினியாம் அகிலாண்டேச்சுரி தன்னோடுறையும்
அம்பலவாணன் சலகண்டேச்சுரனை பாடுவீரே
  அவனிதனிலே வரும் அல்லல் யாவும் நில்லா தோடுமே! (7)

நம்பிய மாதொடு மனை மக்களும் நாடிய சுற்றமும் வெகு
  நாளாய் தேடிய செல்வமுங் கொண்டு நிலையென மகிழ்ந்து
வெம்பிய உடலோடு அலைந்து திரிந்து நோய் கண்டு நலிய
  வகை அறியாது வீன நாள் கழித்து உலகில் திகைப்பீர்
கும்ப முனிவர் பூசிந்த அகழி சூழ் வேலூர் தன்னில்
  குண்டலினியாம் அகிலாண்டேச்சுரி தன்னோடு உறையும்
அம்பலவாணன் சலகண்டேச்சுரனை பாடுவீரே
  அவனிதனிலே வரும் அல்லல் யாவும் நில்லாது ஓடுமே!

வெம்பிய --- வாடிய, கும்ப முனி --- அகத்தியர்,
குண்டலினி --- அம்பாள், அம்பலவாணன் --- நடராசர்,
அவனி --- உலகம்.

விளக்கவுரை --- நம்பிய பெண்களொடு வீடும் மக்களும் தன்னை
சேர்ந்த உறவினர்களும், பல நாளாக சேர்த்த செல்வங்களும் கொண்டு, இதுவே என்றும் நிலையானவை மற்றும் இதுவே வாழ்க்கை என மிக்க மகிழ்ச்சி கொண்டு, சில நாள் சென்ற பின் நோய்கள் வந்து சேர்ந்து உடலும் வாட்டம் அடைந்து அலைந்து திரிந்து அவதியுற்று, மீளும் வழி எதுவும் தெரியாது வீணாக நாட்களை கழித்து உலகில் திகைப்படைந்து நிற்பீர்களே ! கேளுங்கள் !
 
கும்பமுனிவராகிய அகத்தியர் பூசித்து அருள் பெற்ற அகழி சூழ்ந்த திருக்கோயிலையுடைய வேலூர் எனும் சிவத்தலத்தில், குண்டலினி சக்தியாகிய உமையவளாகிய அகிலாண்டேச்சுரி தன்னோடு
எழுந்தருளி இருக்கும் அம்பலவாணன் என்ற திருப்பெயர் தாங்கிய திருசலகண்டேச்சுரனை பாடி பணியுங்கள்! அதனால் இவ்வுலகில் உங்களை தேடி வரும் துன்பங்கள் எல்லாம் நில்லாது ஓடி விடுமே!

குறிப்பு --- இவ்வுலக வாழ்க்கையும், இவ்வுடலும் நிலையற்றது
என்பதை அறிந்து ஈசனை பாடி பணிந்து வரும் துன்பங்கள்
எல்லாம் அகல நற்கதியை அடையலாம் என்புதாகும்.

தீதின் வழியே முன்னர் திரட்டிய பாவங்களால்
   திரும்பவும் மாது கர்பமதிலே விழுந்து வளர்ந்து
ஊதியந் தேடியுமுலகி லோய்ந்த பின்னொரு நாள்
   உடலுங் கூனி குறுகி யுணவுங் கொள்ளாது வருந்தீர்
ஆதிசேடன் பூசித்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   அங்கயற்கண்ணி அகிலாண்டேச்சுரி தன்னோடுறையும்
பாதி மதியன் சலகண்டேச்சுரனை ஏத்துவீர் அது
   பாரிலினி பிறவாது பரமனடி சேர்க்குமே! (8)


தீதின் வழியே முன்னர் திரட்டிய பாவங்களால்
   திரும்பவும் மாது கர்பம் அதிலே விழுந்து வளர்ந்து
ஊதியந் தேடியும் உலகில் ஓய்ந்த பின் ஒரு நாள்
   உடலுங் கூனி குறுகி உணவுங் கொள்ளாது வருந்தீர்
ஆதிசேடன் பூசித்த அகழிசூழ் வேலூர் தன்னில்
   அங்கயற்கண்ணி அகிலாண்டேச்சுரி தன்னோடு உறையும்
பாதி மதியன் சலகண்டேச்சுரனை ஏத்துவீர் அது
   பாரில் இனி பிறவாது பரமன் அடி சேர்க்குமே !


பாதிமதி  --- பிறை சந்திரன்,  ஏத்துவீர் ---  தொழுவீர்,  பார் --- உலகு.

விளக்கவுரை --- முற்பிறவியில் தீய வழிகளில் சேர்த்த பாவங்களால் மீண்டும் ஒரு தாய் கர்பத்தில் வந்து விழுந்து, வளர்ந்து பல வழிகளில் பொருள் வரவை தேடியும் உலகில் பின்னர் ஒரு நாள் அது முடியாது ஓய்ந்து விட்டு இவ்வுடலானது முதுகு கூன் விழுந்து தசைகள் சுருங்கி உணவும் ஏற்றுக் கொள்ளாது வருத்தப் படுவீர்களே ! கேளுங்கள் !

ஆதிசேடன் பூசித்து வணங்கிய வேலூர் என்னும் சிவத்தலத்தில் அகழி சூழ்ந்த திருக்கோயிலைக் கொண்டுள்ள அங்கையற்கண்ணி என்ற திருநாமம் பூண்ட
உமையவள் அகிலாண்டேச்சுரியுடன் வீற்றிருக்கும் பிறை சந்திரனை சூடியுள்ள திருசலகண்டேச்சுரனை, போற்றி வணங்குவீர்கள். அது உங்களை இனியும் உலகில் பிறவாமல் செய்து ஈசன் திருவடிகளில் கொண்டு சேர்க்குமே!

குறிப்பு --- முற்பிறவியில் செய்த பாவங்களால் மீண்டும் பிறப்பு எடுப்பதை தவிர்க்க வேண்டுமானால் ஈசன் திருவடிகளை போற்றி வணங்குவதால் மட்டுமே முடியும் என்பதை அறிக.!

பஞ்சேந்திரியங்களொடு திங்கள் பத்தும் பானையில் கிடந்து
   பிரிதொரு நாள் பாரில் விழுந்து பேரொடு வளர்ந்து பின்
வஞ்சக மாதர் வலையிலகப்பட்டு வகையறியாது
   வருந்தி வாரா பிணிகளும் வந்து சேர உழல்வீர்
செஞ்சுடரோனும் பூசித்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   செவ்விதழாள் அகிலாண்டேச்சுரி தன்னோடுறையும்
அஞ்செழுத்தோன் சலகண்டேச்சுரனை போற்றுவீரே அது
   ஆரா துன்பமொடு அவுதியுறாதருள் தருமே! (9)

பஞ்சேந்திரியங்களொடு திங்கள் பத்தும் பானையில் கிடந்து
   பிரிதொரு நாள் பாரில் விழுந்து பேரொடு வளர்ந்து பின்
வஞ்சக மாதர் வலையில் அகப்பட்டு வகை அறியாது
   வருந்தி வாரா பிணிகளும் வந்து சேர உழல்வீர்
செஞ்சுடரோனும் பூசித்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   செவ்விதழாள் அகிலாண்டேச்சுரி தன்னோடு உறையும்
அஞ்செழுத்தோன் சலகண்டேச்சுரனை போற்றுவீரே அது
   ஆரா துன்பமொடு அவுதி உறாது அருள் தருமே!

திங்கள் --- மாதம்,   பானை --- கருப்பை, செஞ்சுடரோன் --- சூரியன்,  செவ்விதழ் --- சிவந்த இதழ், அஞ்செழுத்து --- நமசிவய.

விளக்கவுரை ---  ஒரு தாயின் கர்ப்பபையாகிய பானையில், ஐம்புலன்களோடு பத்து மாதக்காலம் இருந்து வளர்ந்து முழு உருவமும் எய்திய பின்னர் ஒரு நாள்,
இம்மண்ணில் வந்து விழுந்து, அதன் பிறகு ஒரு பெயர் வைக்து அழைத்து, வளர்ந்து வாலிப பருவம் எய்தி வஞ்சக குணம் கொண்ட பெண்கள் வசப்பட்டு ஆதிலிருந்து மீளும் வழி அறியாமல் வருத்தமுற்று, வராத நோய்கள் எல்லாம் வந்து அதனால் அவுதியுற்று அலைந்து திரிவீர்களே ! கேளுங்கள் !

சிவந்த இளஞ்சுடர் ஒளி கதிர்களை வீசும் சூரியனும் பூசித்து வணங்கிய வேலூர் என்னும் சிவத்தலத்தில், நீர் நிறைந்த அகழி சூழ்ந்த திருக்கோயிலில் சிவந்தமலர் போன்ற இதழ்களையுடையவளாகிய அகிலாண்டேச்சுரியுடன் உறைகின்ற "ந ம சி வா ய" எனும் ஐந்து அட்சரங்களையுடைய திருசலகண்டேச்சுரனை போற்றி வணங்கி நினையுங்கள்.! அது உங்களுக்கு தீராத துன்பத்தில் அவதி படாதவாறு நற்கதி காட்டி திருவருள் செய்யுமே.!

குறிப்பு ---  ஈசனை போற்றி துதித்து வணங்குவதால் இவ்வுடல் தகாத செயல்பாடுகளிலிருந்து விடுபட்டு நற்பேற்றை அடையலாம் என்பதாகும்.!


நரம்பொடு யுதிரமுந் தசையுஞ் சேர்ந்த நாரி பாகத்தில்
   நாலாறு மாதமாய் தங்கி நல்லுருவாய் வெளி வந்து
உரங் கொண்டு யுன்னதமாய் வளர்த்த யிவ்வுடலொருநாள்
  உருவமும் மாறியுலகோர் நகைக்கவும் வருந்துவீர்
புரந்தரனும் பூசித்த அகழி சூழ் வேலூர் தன்னில்
   பூங்குழலாள் அகிலாண்டேச்சுரி தன்னோடுறையும்
வரந்தருந் திருசலகண்டேச்சுரனை சேர்வீர் அது
   வினையாவும் விலக்கி வேதநாயகனடி வைக்குமே! (10)


நரம்பொடு உதிரமுந் தசையுஞ் சேர்ந்த நாரி பாகத்தில்
   நாலு ஆறு மாதமாய் தங்கி நல்உருவாய் வெளி வந்து
உரங் கொண்டு உன்னதமாய் வளர்த்த இவ்உடல் ஒருநாள்
   உருவமும் மாறி உலகோர் நகைக்கவும் வருந்துவீர்
புரந்தரனும் பூசித்த அகழிசூழ் வேலூர் தன்னில்
   பூங்குழலாள் அகிலாண்டேச்சுரி தன்னோடு உறையும்
வரந்தரும் திருசலகண்டேச்சுரனை சேர்வீர் அது
   வினை யாவும் விலக்கி வேத நாயகன் அடி வைக்குமே!


உதிரம் --- இரத்தம்,  நாரி --- பெண்,  நாலாறு --- 4+ 6 = 10,
உரம் --- உணவு,  நகைக்க --- சிரிக்க,  புரந்தரன்--- இந்திரன்.

விளக்கவுரை --- நரம்பொடு இரத்த மாமிசமும் சேர்ந்த ஒரு பெண்ணின் பாகமாகிய கருப்பையில் நான்கும் ஆறும் சேர்ந்த பத்து மாதங்களாய் தங்கி நல்ல வடிவம் எய்திய பின் வெளியே வந்து, மூவேளையும் உணவு கொண்டு சிறப்பாக வளர்ந்த இவ்வுடல் ஒருநாள், தனது உருவம் அருவறுக்கதக்கவாறு மாறி பார்ப்பவர்கள் சிரிக்கும்படி அலைந்து, அதனால் மனம் நொந்து வருத்தம் கொள்வீர்களே! கேளுங்கள்!

தேவர்கள் தலைவனான இந்திரனும் வந்து பூசித்து அருள் பெற்ற வேலூர் எனும் சிவத்தலத்தில், நீர் நிறைந்த அகழி சூழந்த திருக்கோயிலில், பூவுக்கு நிகரான மென்மையான கூந்தலையுடையவளாகிய அகிலாண்டேச்சுரி தன்னோடு எழுந்தருளி இருக்கும், வேண்டும் வரங்களை வாரி வழங்கும் திருசலகண்டேச்சுரனை சென்று தரிசித்து வணங்குவீர்!
அது உங்கள் வினைகள் யாவையும் விலக்கி அந்த வேதங்களுக்கு தலைவனான ஈசன் திருவடியில் கொண்டு சேர்க்குமே.!

குறிப்பு ---- மானிடவுடல் நிலையற்றது. அது உருமாறி தன்
செயல் இழக்கும் முன்னரே பரம்பொருளாகிய ஈசனை
நினைந்து வணங்கினால், வினைகள் அகன்று உய்வு பெறலாம்

என்பதாகும்.!

ஓரணியாய் திரண்ட முன் வினைகளாலுண்டான
   உள்ளத் துயரமுமுறு பிணிகளும் பழிபாவமுந் தீர
வீரணியாகிய வேய்குரலாள் அகிலாண்டேச்சுரி
   உமையுடனுறை சலகண்டேச்சுரனை யுருகி வணங்கி
ஆரணியடியார்க் கடியவனுரைத்த பாமாலைகள்
   ஆறோடைந்தும் ஆராய்ந்தக மதிலிருத்துவார்
தாரணியில் தனிஞான செல்வமொடு திடமான வாழ்வும்
   தவறாது பெற்றினிதே வாழ்ந்தீசனை யடைவரே! (11)


ஓர் அணியாய் திரண்ட முன் வினைகளால் உண்டான
   உள்ளத் துயரமும் உறு பிணிகளும் பழி பாவமுந் தீர
வீரணி ஆகிய வேய் குரலாள் அகிலாண்டேச்சுரி
   உமையுடன் உறை சலகண்டேச்சுரனை உருகி வணங்கி
ஆரணி அடியார்க்கு அடியவன் உரைத்த பா மாலைகள்
   ஆறோடு ஐந்தும் ஆராய்ந்து அகம் அதில் இருத்துவார்
தாரணியில் தனிஞான செல்வமொடு திடமான வாழ்வும்
   தவறாது பெற்று இனிதே வாழ்ந்து ஈசனை அடைவரே!


உறு ---  உண்டாவது,  வீரணி ---  வெற்றி மாலை அணிவது,
வேய் ---  மூங்கில், ஆறோடு ஐந்தும்  ---  6+ 5 =11, .
அகம்:--- உள்ளம்,  தாரணி ---  உலகம்,  திடம் ---  உறுதி.

விளக்கவுரை ---  ஒரே வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக வரும் முன் வினைகளால் உண்டான துயரங்களும், உடன் வந்து சேர்ந்த நோய்களும், பழி பாவங்களும் தீர்ந்திட வீரமிக்க வெற்றி மாலையை அணிந்துள்ளவளும், மூங்கிலினுள்ளே உண்டாகும் இசையின் ஒலியைப் போன்ற குரலையுடையவளுமாகிய உமையவள் அகிலாண்டேச்சுரியுடன் உறைகின்ற திருசலகண்டேச்சுரனை மனமுருகி வணங்கி ஆரணி அடியார்க்கு அடியவன் என்கின்ற இச்சிறியவன் உரைத்த பாமாலைகள் ஆறோடு ஐந்தையும் (6+5=11) பார்த்து படித்து மனதில் இருத்துவார்கள் 'உலகில் மற்ற ஞானங்களை விட சிறப்பான சிவஞானச் செல்லமும் நிரந்தரமான நல்வாழ்வும் என்றும் தவறாது பெற்று உலகில் இன்பமாய் வாழ்ந்து ஈசனை அடைவார்களே.!

குறிப்பு ---- பரம்பொருளாகிய சலகண்டேச்சுரன் என்ற திருநாமங் கொண்ட ஈசனோடு எழுந்தருளி இருக்கும்  அகிலாண்டேச்சுரி என்ற திருநாமம் புனைந்த உமையவளையும் சேர்த்து பாடிய இந்த பதிகத்தை படிந்து உள்ளத்தில் இருத்தி வணங்கினால் முன் வினைகள் எல்லாம் விலகி நல்வாழ்வு வாழ்ந்து 'ஈசனை அடையலாம் என்பதாகும்.!

சுபம்.
திருச்சிற்றம்பலம்.


Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai