கங்காதரேச்சுரர் Gangatharechurar

கங்காதரேச்சுரர்   Gangatharechurar




அங்கியை யோர் யங்கையிலடக்கி யரவொடு
கங்கையைச் சுழல வைத்தச் சதுரரே
சங்கையை தவிர்த்திட காரணமானவரவரே
உங்கள் வல்வினை மாய்க்க வல்லவராவார்!

அங்கியை ஓர் அங்கையில் அடக்கி அரவொடு 
கங்கையைச் சுழல வைத்தச் சதுரரே 
சங்கையை தவிர்த்திட காரணமானவர் அவரே 
உங்கள் வல் வினை மாய்க்க வல்லவர் ஆவார்! 

அங்கி - அக்கினி,  சங்கை - பகை,  ஐயம்,  அங்கை - உள்ளங்கை, 
வல் - வலிமை,  அரவு - நாகம்,  சதுரர் - நான்கு வேதங்களுக்கு நாயகன் (ஈசன்)

பொழிப்புரை:-

அக்கினியை ஒரு உள்ளங்கையில் அடக்கி, நாகமொடு 
கங்கையை (முடியில்) சுழல வைத்த நான்கு வேதங்களுக்கு நாயகனே,
பகை நீங்கிட காரணமானவர்  அவரே 
உங்கள் வலிமை மிக்க வினையை அழிக்க வல்லவர் ஆவார்!

கருத்துரை:-

நான்கு வேதங்களுக்கும் தலைவனாக விளங்கக்கூடிய ஈசன் தனது சடா முடியில் நாகத்தையும், விரைவாகச் சுழன்று ஓடுகின்ற கங்கையையும் வைத்துத் தனது உள்ளங்கை ஒன்றில் அக்கினியையும் அடக்கிக் காட்சி தருபவர்.
அவர் எழுகின்ற ஐயமும், வருகின்ற பகையும் நீங்குவதற்கு காரணமாக இருப்பவர். அவரே உங்கள் வலிமை வாய்ந்த வினைகள் அழிக்கவும் வல்லவர் ஆவார்.!


திருத்தல பெருமை:- 

சுவாமி  -     கங்காதரேச்சார்,   உமாபதி 
அம்பாள் -  மோகன வல்லி,   கிரிராஜ கன்னிகை

தலம்  -    திருவூறல் - தொண்டை நாடு - 12 -வது தலம்

தீர்த்தம்  -        நந்தி தீர்த்தம் 

விருட்சம் -      நெல்லி மரம் 

வழிபட்டோர் - சம்பந்தர்,  அப்பர்,  சுந்தரர்,  திருமுலர்,  சேரமான் பெருமான் நாயனார்,  பட்டினத்தார்,  நம்பியாண்டார் நம்பி,  சேக்கிழார்,  சூரியன்,  சந்திரன்,  தக்ஷ்ன்,  தாட்சாயினி,  உததி முனிவர், சோழர்கள்,  விஜயநகர மன்னர்கள்,  நந்தி தேவர்,  பல்லவர்,  இராட்டிர கூடர்,  இயமன்,  கங்கர்,  சித்தர்கள். 

நூல் -  தேவாரம்,  திருமந்திரம்,  பொன் வண்ணத்து அந்தாதி,  திருஏகம்பம்  உடையார் திருவந்தாதி,  ஆளுடைபிள்ளையார் திருவந்தாதி,  பெரிய புராணம்,  லிங்காட்சர மாலை. 

பாடியவர்கள் – சம்பந்தர்,  அப்பர்,  சுந்தரர்,  திருமூலர்,  சேக்கிழார்,  சேரமான்  பெருமான் நாயனார்,  பட்டினத்தார்,  நம்பியாண்டார் நம்பி,  ஆரணியடியார்க்கடியவன்.

வழிபடும் பலன் -   நோய் நீங்கல்,  நீர் வளம் பெருகல்,  திருமணம்,  மகப்பேறு  கண் கோளாறு நீங்கல்,  வினை ஒழிப்பு,   செழிப்பு.


குறிப்பு: - 

இத்தலத்து லிங்காட்சர மாலையில்  “உங்கள் வல்வினை மாய்க்க வல்லவர் ஆவார்"  என்ற சொற் றொடர் திருஞான சம்பந்தர் தேவாரம்  “மாறில் அவுணரரணம்” எனத் தொடங்கும் திருவூறல் பதிகத்தில் 10-வது செய்யுளில் “வினை கெடுப்பான் திருவூறலை உளகுதுமே" என்ற வரிகளின் கருத்துக்குத் தொடர்புள்ளதாக அமைந்துள்ளதை காணலாம்.

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai