நீலகண்டேச்சுரர் Neelakandesurar

நீலகண்டேச்சுரர்   Neelakandesurar




ஆல முண்டார் யறிந்தருள் செய்வாரவர்
கோலமொடுச் சுற்றிவர இச்சைகொண்டே
ஞாலமுமண்டமிரவு பகல் செய்தாரவரைச்
சீலமொடிருத்தி துதித்து நீர் வாழ்வீரினிதே!

ஆலம் உண்டார் அறிந்து அருள் செய்வார், அவர்
கோல மொடுச் சுற்றி வர இச்சை கொண்டே
ஞாலமும் அண்டம் இரவு பகல் செய்தார் அவரைச்
சீலமொடு இருத்தி துதித்து நீர் வாழ்வீர் இனிதே!

ஆலம் -  ஆலகால விஷம்,   இச்சை - விருப்பம்,   ஞாலம் - உலகம், 
அண்டம் - ஆகாயம்,  வெட்ட வெளி,  சீலம் - நற்குணம்.

பொழிப்புரை:-

ஆலகால விஷமுண்டார் அறிந்து அருள் செய்வார்,  அவர்
கோலங்கள் கொண்டு (உலகை) சுற்றிவர இச்சை கொண்டே
உலகம், அண்டம், இரவு பகல் படைத்தார், அவரை 
நற்குணங்களொடு (மனதில்) இருத்தி துதித்து நீங்கள் இனிமையாக வாழ்வீர்கள்!

கருத்துரை: - 

அன்று ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் தன் அடியார்களுக்கு எது எப்போது எப்படி அருள் புரிய வேண்டும் என அறிந்து அப்படி அருள் செய்வார். அவர் பல வேடங்களைக் கொண்டு இப்பூவுலகில் சுற்றிவர விருப்பங் கொண்டே உலகமும் அண்டமும் (ஆகாயம்) இரவும், பகலும் உண்டாக்கினார்
அவரை நல்ல உயர்ந்த குணங்களொடு உள்ளத்தில் இருத்தி வணங்கிட நீங்கள் இன்பமாக வாழ்வீர்கள்.!

திருத்தல பெருமை:-
.
சுவாமி –      நீலகண்டேச்சுரர்,   ஆரண்ய விடங்கர்
அம்மாள் –  விசாலாட்சி,   நீல்னெடுங்கண்ணி

தலப்பெயர் - திருப்பைஞ்ஞீலி. - சோழநாடு காவிரி வடகரைத் தலம் - 61

தீர்த்தம்  –       சிவகங்கை,   அப்பர் தீர்த்தம்.
 
விருட்சம் –      வாழை.

வழிபட்டோர் – உமாதேவி,  அப்பர்,  சம்பந்தர்,  வசிஷ்டர்,  சுந்தரர்,  பல்லவர், சோழர்,  இயமன்,  அக்கினி.

நூல் – தேவாரம்,  தல புராணம்,  லிங்காட்ச மாலை.

பாடியவர்கள் – சம்பந்தர்,  அப்பர்,  சுந்தரர், மெய்ப்பாத புராணிகர், 
ஆரணியடியார்க்கடியவன்.

வழிப்படும் பலன் - திருமண தடை நீங்கல்,  ஆயுள் விருத்தி,  பதவி உயர்வு,  காரிய சித்தி.


குறிப்பு -  

இத்தலத்து  லிங்காட்சர மாலையில்  "ஆலமுண்டார் யரிந்து அருள் செய்வார்" என்ற சொற்றொடரில் "ஆலம் உண்டார்" என்ற சொல்,
7 -ஆம் திருமுறையாகிய சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில் திருப்பைஞ்ஞீலி பதிகத்தில் 1 - வது  செய்யுளில்  "காருலாவிய நஞ்சை உண்டு இருள் கண்டர்" என்ற  சொற்றொடர் ஒப்பு நோக்கிக் காண்க.

மேலும் 3-ஆம் திருமுறையாகிய திருஞானசம்பந்தர் திருப்பைஞ்ஞீலி  தேவாரத்தில்  11- வது கடைகாப்பு செய்யுளில்  "உலகினில் ஓங்கு வாழ்வாரே" என்று குறிப்பிடுகின்றார்.  இங்கு லிங்காட்சர மாலையில் வரும் "நீர்வாழ்வீரினிதே" ஏனும்  சொற்றொடருக்கு ஒப்பு நோக்குவதாக அமைந்துள்ளதை காண்க.

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai