காளஅத்தீச்சுரர் Kalatheechurar

காளஅத்தீச்சுரர்   Kalatheechurar








அளவிலா யோர்பேரா னந்தங்கொண் டுரவொடு
இளவேனில் சுகம்போன்றுச் சீவனை தீண்டி
குளத்தில் மூழ்கி அவனருள் குழைந்து
உளம் அவன்பாற் செலுங்கால டைவீர்சித்தி !

அளவு இலா ஓர் பேரானந்தங் கொண்டு உரவொடு
இளவேனில் சுகம் போன்றுச் சீவனை தீண்டி
குளத்தில் மூழ்கி அவன் அருள் குழைந்து
உளம் அவன் பாற் செலுங்கால் அடைவீர் சித்தி!

உரவு – வலிமை, வேகம்,  இளவேனில் – வசந்தகாலம்,  சீவன் - ஆன்மா
தீண்டி - தொடுவது,   குளம் - இன்பமாகிய அருள் குளம்,  குழைந்து – கலந்து, சேர்ந்து.

பொழிப்புரை:-

அளவில்லாத ஒரு பேரானந்தம் கொண்டு அதிகமான
இளவேனில் (காற்று) சுகம் போன்று சீவனை தீண்டி,
(அருள்) குளத்தில் (மனம்) மூழ்கிச் சிவனருள் கலந்து,
உள்ளம் இறைவனிடம் செல்லும்போது அடைவீர்  வீடுபேற்றை!

கருத்துரை:-  

இளவேனில் (வசந்த கால) தென்றல் காற்று வேகமாக வீசித் தீண்டும் இனிமையான சுகத்தைப் போன்று,
சிவபெருமான் தனது அளவிட முடியாத பேரானந்த அருளைக் கொண்டு சீவன்மாவை தீண்டி உள்ளத்தைச் சிவனருள் குளத்தில் மூழ்கிக் குழைந்து நெகிழச் செய்யும் அருட்செயலினால்,
உள்ளம் மாசகன்று தூய்மையாகி அவரிடம் செல்லும் பொது, பிறவிப் பயனாகிய ஈசன் திருவடி நிழலாகிய வீடுபேற்றை அடைவீர்கள்.!

திருத்தல பெருமை:-

சுவாமி -     காள அத்தீச்சுரர்.
அம்பாள் - ஞானப்பூங்கோதை.

தலப்பெயர் - திருக்காளத்தி.

தீர்த்தம் –   பொன்முகலியாறு, சரஸ்வதி தீர்த்தம்.

விருட்சம் - கல்லால மரம்.

வழிபட்டோர் – சிலந்தி,  பாம்பு,  யானை,  முசுகுந்தன்,  பரதவாஜர்,  சிவகோசாரியார்,  கண்ணப்ப நாயனார்,  சுந்தரர்,  சம்பந்தர்,  அப்பர்,  அகத்தியர்,  நக்கீரர்,  அருணகிரிநாதர்,  அர்ச்சுனன்,  கிருஷ்ணதேவராயர்,  
வீர நரசிம்ம யாதவர்,  குலோத்துங்க சோழன்,  ஆதிசங்கரர்,  சப்த ரிஷிகள்,  அனுமன்,  சித்ரகுப்தன்,  இயமன்,  தருமர்,  வியாசர்,  சீதை,  லட்சுமணன்,  ஆனந்த கூத்தர்,  கருணை பிரகாசர்,  ஞானப் பிரகாசர்,  வேலப்ப தேசிகர்,   காகத்திய மன்னர்கள், விஜய நகர மன்னர்கள்,  சாளூக்கிய மன்னர்கள்.

நூல் – தேவாரம்,  கயிலை பாதி காளத்தி பாதி,  திருக்காளத்தி புராணம்,   திருப்புகழ்,  லிங்காட்சர மாலை.
 
பாடியவர்கள் – சம்பந்தர்,  அப்பர்,  சுந்தரர்,  நக்கீரர்,  அருணகிரிநாதர்,  அனந்த கூத்தர்,  கருணை பிரகாசர்,  ஞான பிரகாசர்,  வேலப்ப தேசிகர்,  ஆரணி யடியார்க்கடியவன்.

வழிபடும் பலன் - சர்ப தோஷ நிவர்த்தி,  இராகு கேது ஜென்ம தோஷ நிவர்த்தி,  கல்வியில் ஆற்றல்,  புலமை,  வெப்புநோய் நீங்குதல்,  வீடுபேறு,  அட்ட சித்திகள்,  பேசும் திறன்,  கயிலை காட்சி பெறுதல்,  இராகு கால சாந்தி,  காரிய சித்தி.


குறிப்பு - 

இங்கு லிங்காட்சர மாலையில் மனம் ஈசன் பால் செல்லும் போழ்து சித்தியை அடையலாம் என்று கூறுகிறது.

இதே கருத்தைத் திருஞானசம்பந்தர் தேவாரம் 3 -ஆம் திருமுறையில் சந்தமார் அகிலொடு" எனத் தொடங்கும் திருக்காளத்தி தேவாரத்தில் 11 - வது செய்யுளில் “அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி” என்று பாடுவதை ஒப்பு நோக்குக.

இதே போல் “காடதிடமாக” தேவாரத்தில் 11 - வது செய்யுளில் “பரலோகமெளிதே” என்று பாடுகிறார்.

"வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்"  - அப்பர் தேவாரம்.

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai