மாசிலாமணீச்சுரர் MasilaManichurar
வீசியாடு சுவலில் தாழ்ச்சடை யணீசனே!
மாசி மகத்தில் உலாவரும் மறையவனே !
வாசிதீர வளமுடன்வாழ மாகருணை புரிவீரே !
பூசி நீறை பார் புகழ வெள்ள ஏறு ஏறி நாரணியொடு
வீசியாடு சுவலில் தாழ்ச் சடை அணி ஈசனே!
மாசி மகத்தில் உலா வரும் மறையவனே !
வாசி தீர வளமுடன் வாழ மா கருணை புரிவீரே !
ஏறு - ரிஷபம், சுவல் – தோள், வாசி – குற்றம், வேறுபாடு,
தாழ்சடை – தாழ்ந்து படர்ந்த சடை, நாரணி - உமையவள்
திருநீற்றை பூசி உலகம் புகழ வெள்ளை எருது ஏறி நாரணியொடு
தோளில் வீசி ஆடுகின்ற தாழ்சடை அணிந்த ஈசனே !
மாசி மகத்தில் உலா வரும் வேத முதல்வனே !
குற்றம் இல்லாது வளமுடன் வாழ பெருங் கருணை புரிவீரே !
கருத்துரை:-
திருநீற்றை திருமேனி எங்கும் பூசி உலகம் புகழ உமா தேவியோடு வெள்ளை எருது ஏறி செஞ்சடை யானது திருத் தோளில் தவழும்படி அணிந்து, எங்கும் நிறைத்து திருநடனம் ஆடுகின்ற ஈசனே!
மாசி மாதத்தில் மக நட்சரத்தில் ரிஷப வாகனத்தில் வலம் வருகின்ற வேத நாயகனே! அடியேன் குற்றங்கள் எல்லாம் தீர்ந்து வேறுபாடு இல்லாது செழிப்போடு வாழ்வதற்கு உனது உயர்ந்த கருணையை திருவருள் செய்வீராக!
திருத்தல பெருமை:-
சுவாமி – மாசிலாமணீச்சுரர், கோமுத்தீச்சுரர்
அம்பாள் – ஒப்பில்லாமுலையம்மை, அதுல்யகுஜாம்பிகை
தலம் - திருவாவடுதுறை. - சோழநாடு காவிரித் தென்கரைத் தலம் - 36
தீர்த்தம் - கோமுத்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம்.
விருட்சம் - படர் அரசு.
நூல் - தேவாரம், திருவிசைப்பா, திருமந்திரம், திருஏகம்பம் உடையார் திருவந்தாதி, ஆளுடை பிள்ளயார் திருவந்தாதி, ஆளுடையபிள்ளையார் திருவுலா மாலை, ஆளுடையபிள்ளையார் திருத்தொகை, பெரிய புராணம், திரும்புகழ், லிங்காட்சர மாலை.
பாடியவர்கள் - சம்பந்தர், அப்பர், சுந்தரர், திருமூலர், பட்டினத்தார், சேந்தனார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் அருணகிரிநாதர், ஆரணியடியார்க்கடியவன்.
வழிபடும் பலன் – மகப்பேறு, பொருள் சித்தி, திருமண தடை நீக்கம், மாங்கல்ய பாக்கியம், தம்பதியர் ஒற்றுமை.
குறிப்பு -
இத்தலத்து லிங்காட்சரமாலையில் "தாழ்சடையணி ஈசனே" என்ற சொற்றொடர் திருநாவுக்கரசர் திருத்தாண்டகத்தில் திருஆவடுதுறை பதிகத்தில் " பிறைதவழ் செஞ்சடை", நீண்ட சடை முடி", "வார் சடையாய்" போன்ற சொற்றொடர்களை ஒப்புநோக்கி காண்க.
அதுபோன்று சுந்தர மூர்த்தி நாயனார் திருவாவடுதுறை தேவாரத்தில் "செஞ்சடையானை", "வெந்தவெண்போடி பூச" என்ற சொற்களோடு ஒப்பு நோக்குக.
அதுபோன்று சுந்தர மூர்த்தி நாயனார் திருவாவடுதுறை தேவாரத்தில் "செஞ்சடையானை", "வெந்தவெண்போடி பூச" என்ற சொற்களோடு ஒப்பு நோக்குக.