தென்பெண்ணேச்சுரர் ThenPennechurar - 1

தென்பெண்ணேச்சுரர்    ThenPennechurar - 1






மன்றுள் ஓர் மாணிக்கமாய் உறை பரனே!
நன்றுடையார் சுருதி மொழி மெச்சு மண்ணே !
கன்று உண்டப் பாலைப் பெருக செய்வனே ! யென
வென்று வினையை வளம்பல தெளிந்து வாழ்வீரே!

மன்றுள் ஒர் மாணிக்கமாய் உறை பரனே!
நன்று உடையார் சுருதி மொழி மெச்சும் அண்ணே! 
கன்று உண்டப் பாலைப் பெருக செய்வனே! என 
வென்று வினையை வளம் பல தெளிந்து வாழ்வீரே!

மன்று - பொற்சபை,  தெளிந்து - செழித்து, 
உறை - வசிக்கும்,  குடி கொண்ட,   சுருதி - வேதம்,  இசை
வளம் - செழுமை,   அண்ணே - பெருமைமிகு தலைவர்.

பொழிப்புரை:-

பொற்சபையில் ஒரு மாணிக்கமாய் வாழும் பரம்பொருளே,
நன்மை உடையவர்களின் வேத மொழிகளை விரும்பும்  தலைவரே,
கன்று உண்ட பாலை பெருகச் செய்வோனே என (போற்ற)
வினைகளை வென்று வளங்கள் பலவும் பெற்று செழித்து வாழ்வீரே!

கருத்துரை:-

பொற்சபையில் ஒரு மாணிக்கமாய் வாழும் பரம்பொருளே, 
நன்மை உடையவர்களின் வேத மொழிகளை விரும்பும் பெருமைமிகு தலைவரே,

கன்று உண்டப் பின் பாலை கருணையோடு  சுரந்து  பெருக  செய்கின்றவனே என போற்றுபவர்கள்,  சிவபெருமானின் அருளால் வினைகளை வென்று வளங்கள் பலவும் பெற்று செழித்து  வாழ்வார்கள்.
 
திருத்தலப் பெருமை:-

சுவாமி     -    பெண்ணேச்சுரர்.     
அம்பாள்  -   வேத நாயகி.

தலப்பெயர் - பெண்ணேச்சுரமடம்.

தீர்த்தம்    -     பெண்ணையாறு.     

விருட்சம் -      பனை மரம்.

வழிபட்டோர் -  சோழர்கள், ஹொய்சளர், நுளம்பர், விஜயநகர மன்னர்கள்.

பாடியவர்கள் - திருஞானசம்பந்தர், அப்பர், ஆரணியடியார்க்கடியவன்.

நூல்                    லிங்காட்சர மாலை, பெண்ணேச்சுரர் மாலை.

வழிபடும் பலன் - நாக தோஷ நிவர்த்தி,  மணமாலை,  புத்ர பேறு,  காரிய சித்தி,  வெற்றி.

வரலாறு:- 

இத்திருக் கோயில் 1200 வருடங்களுக்கு முன் பழமையானது என இங்குள்ள பல கல்வெட்டுக்கள் மூலம் அறிய வருகிறது. 13 - ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் மடம் என்று அழைக்கப் பட்டுள்ளது. மூன்றாம்  குலோத்துங்க சோழன், மூன்றாம் இராஜ இராஜன், ஹொய்சள மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், நுளம்பர்கள், சேர மன்னர்கள் ஆகிய பல மன்னர்களால் திருப்பணி செய்யப் பட்டுள்ளது என்பதை இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது.

இத் திருக்கோயில் தென்பெண்ணை யாற்றங் கரையில் 7-நிலை இராஜ கோபுரத்துடன் தெற்கு நோக்கியவாறு திகழ்கிறது. கருவறையின் உள்ளே பெண்ணேச்சுரர் கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறார். சுவாமிக்கு
 பெண்ணேச்சுர நாயனார், பெண்ணேச்சுர நாதர் என்ற திருப்பெயரும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. வேதநாயகி அம்பாள் ஈசானிய மூலையில் வேதங்களை முனிவர்களுக்கு கற்றுக் கொடுத்தாக வரலாறு. சுவாமி இங்கே பெண்ணை யாற்றங் கரையில் பனை மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றியதாக வரலாறு.

கோயிலின் உள் பிராகாரத்தில் சங்கடஹர கணபதி வீற்றிருந்து பக்தர்களின் சங்கடங்களை தீர்க்கிறார். இங்கு பைரவருக்கு நாக பைரவர் என்ற பெயர். நாகம் சிரசுக்கு மேலே குடை பிடிக்க கீழே நாய் இல்லாமல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அஷ்டமி, நவமி நாட்களில் இவருக்கு பூசை செய்து வணங்கினால் நாக தோஷம் விலகுவதாக ஐதீகம்.

பிராகாரத்தில் அற்புத லிங்கம், ஆனந்த லிங்கம், மங்கல லிங்கம், ஐஸ்வரிய லிங்கம், பூரண லிங்கம் போன்ற லிங்க திருமேனிகள் அமைந்துள்ளன
.
ஒவ்வொரு மாசி மாதத்திலும் மக நட்சத்திரத்தில் சூரியன் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் வந்து கருவரையில் சுவாமியின் திருமேனியில் விழுவதை பார்க்கலாம் . 
மற்றும் பிராகாரத்தில் இராமன், லஷ்மணன், சீதை, அனுமன், சப்த கன்னியர்கள் அருள் பாலிக்கிறார்கள்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பக்தர்கள் இங்கே திருக்கோயிலுக்கு எதிரேயுள்ள மலையைச் சுற்றி  கிரிவலம் வருகிறார்கள்.

மூன்றாம் குலோத்துங்க மன்னன் முதலில் சமண மதத்தை பின்பற்றியுள்ளான் பிறகு சைவத்தை பின்பற்றியுள்ளான். அதனால் எதிர்த்த சமணர்களை வென்று வந்தால் பெண்ணேச்சுரருக்கு கோயில் கட்டுவதாக பிரார்த்தனை செய்து கொண்டு அவர்களை அழித்த பிறகு இத்திருகோயிலை கட்டியுள்ளதாக வரலாறு.

இத்திருக்கோயில் சோழர்கள் காலத்தில் நிகரிலி சோழ மண்டலம் விடுகாதழகிநல்லூர் என்று அழைக்கப் பட்டுள்ளது. நுளம்பர்கள் காலத்தில் நுளம்பாடி என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஹொய்சளர்கள், நுளம்பர், விஜயநகர மன்னர்கள் ஆண்டுள்ளார்கள் .இங்குதேவார பாட சாலையும் இருந்துள்ளதாக கல்வெட்டுகள் கூறுகிறது.

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai