ஐராவதேச்சுரர் மாலை Iyravathesurar Malai

 



ஐராவதேச்சுரர் மாலை   Iyravathesurar Malai

[ Pdf ]

ஐராவதேச்சுரர் மாலை அத்திமுகம்

                          

சுவாமி:--- ஐராவதேச்சுரர்                 இராகம்:---- சங்கராபரணம்

அம்பாள்:--- காமாட்சியம்மை             தாளம்:--- கண்ட ஜம்பை

தீர்த்தம்:--- அகத்திய தீர்த்தம்             அட்சரம்:---- 2 ½

                      

                      திருச்சிற்றம்பலம்

                            

சித்தந்தெளிய சிறப்பான மருந்தொன் றுண்டென்று

     சிந்தையி லிருத்துவாரை சிவமாக்கி யாள்வானை

நித்தம்நீரும் பூவுங்கொண்டு நிறைவாய் நினைந்து

     நேசமொடு தொழுவாரை நேடியேச் செல்வானை

அத்தனை யறிய வொண்ணா யானந்த கூத்தனை

     அமரோன் அகத்திய தீர்த்தமாடி பூசித்தானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை யுடனுறையும்

     ஐராவதேச்சுரனை பணிந்திட பிணியறுமே ! ( 1. )

 

சித்தந் தெளிய சிறப்பான மருந்து ஒன்று உண்டு என்று

     சிந்தையில் இருத்துவாரை சிவம் ஆக்கி ஆள்வானை

நித்தம் நீரும் பூவுங் கொண்டு நிறைவாய் நினைந்து

     நேசமொடு தொழுவாரை நேடியேச் செல்வானை

அத்தனை அறிய ஒண்ணா ஆனந்த கூத்தனை

     அமரோன் அகத்திய தீர்த்தம் ஆடி பூசித்தானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை உடன் உறையும்

     ஐராவதேச்சுரனை பணிந்திட பிணி அறுமே !

 

கருத்துரை:-----  மனது தெளிவு அடைவதற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த

ஈசன்  எனும்  மருந்து  ஒன்று உண்டு என்று அறிந்து, என்றும் தமது  உள்ளத்தில் அந்த மருந்தை இருத்தி என்றும் மறவாது நினைப்பவரை, 

அந்த சிவமாகவே ஆக்கி, அவர்களை ஆண்டு கொள்பவனை,

     அநுதினமும் நீரும் பூக்களுங் கொண்டு, மனதில் அச்சிவனையே

பரிபூரணமாக எண்ணி, அன்பொடு தொழுது  வணங்குவாரை தேடிச்

செல்பவனை, தேவர்கள்  தலைவனான இந்திரன்  அகத்திய தீர்த்தம்

அதிலே நீராடி தொழுது பூசித்தானை,         

     சகல லோகங்களுக்கும் தலைவனை, சகல உயிர்களை காக்கும்

ஆதாரமாய் இருப்பானை, சகல செயல்களுக்கும்  மூலப்பொருளாய்

விளங்குபவனை, சிவபரம்பொருளை,

     யானைமுகங் கொண்ட சிவலிங்க திருமேனியொடு அருள்மிகு

காமாட்சி அம்மையுடன்  வீற்றிருக்கும்  அருள்மிகு  ஐராவதேச்சுரர்

என்ற திருநாமங் கொண்ட  ஈசனை  தொழுது வணங்கிட நோய்கள்

யாவும் விலகிடுமே !

 

   சித்தம்----- மனது,  சிந்தை----- உள்ளம்,  நிறை----- பரிபூரணம்

   நேசம்----- அன்பு,  நேடி----- தேடி,  கூத்தன்----- ஆடுபவன்,

   ஆதி----- மூலம், முதன்மை,  அத்தி----- யானை.

 

பித்தந்தெளிய புவனமதில் பெரும்மருந் துண்டென்று

    படியுடை வடியார்க்கு பலவாறா யாருள்வானை

புத்தியில் தெளிவடைந்து புலனடக்கி பொய்மைநீக்கி

    பொன்னடிக்கே தொண்டு செய்வார்க் கருள்வானை

தத்தனை தவவேடம் பூண்டோனை தன்னிகரிலா

    தன்னடி யார்க்குதனி பெருங்கருணை கடலானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை யுடனுறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணியறுமே ! ( 2. )

 

பித்தந் தெளிய புவனம் அதில் பெரும் மருந்து உண்டு என்று

    படி உடை அடியார்க்கு பலவாறாய் அருள்வானை

புத்தியில் தெளிவு அடைந்து புலன் அடக்கி பொய்மை நீக்கி

    பொன் அடிக்கே தொண்டு செய்வார்க்கு அருள்வானை

தத்தனை தவவேடம் பூண்டோனை தன்நிகர் இலா

    தன் அடியார்க்கு தனிபெருங் கருணை கடலானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை உடன் உறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணி அறுமே !

 

கருத்துரை:-----  இப்பூவுலக  மயக்கம்  எனும் ஆசையால் கட்டுண்டு

திரிந்து அலைபவருக்கு, அம்மயக்கம் தீரும்படி  ஈசன்  எனும் அரிய

பெருமருந்து ஒன்று இருக்கிறது என்று,தகுதியுடையஅடியார்களுக்கு பலவிதமாக காட்சி கொடுத்து அருள் செய்கின்றவனை,

     அறிவில் தெளிவு  அடைந்து  ஐம்புலன்களையும்  உள்ளடக்கி, பொய்மை நீக்கி சிவபரம் பொருளின் பொன் போன்ற  திருவடிக்கே

என்றும் தொண்டு செய்பவர்களுக்கு அருள் செய்வானை,

      சகல உயிர்களுக்கும் தந்தையாய் இருந்து ஆதரிப்பவனை, தவ

வேடம் கொண்டு காட்சி தருபவனை, தனக்கு நிகர் இல்லாத சிவனடி

யார்களுக்கு, தனி தன்மை  வாய்ந்த பெருங்கடல் போன்று கருணை

காட்டுபவனை,

     யானைமுகங் கொண்ட சிவலிங்க திருமேனியொடு அருள்மிகு

காமாட்சி அம்மையுடன்  வீற்றிருக்கும்  அருள்மிகு  ஐராவதேச்சுரர்

என்ற திருநாமங் கொண்ட  ஈசனை  தொழுது வணங்கிட நோய்கள்

யாவும் விலகிடுமே !

 

    பித்தம்----- மயக்கம்,  புவனம்----- உலகம்,  நிகர்----- ஒப்பு

    புலன்----- ஐம்புலன்கள்,  தத்தன்----- தந்தை,  படி----- தகுதி

 

நத்திறம் வாய்ந்ததோர் நல்மருந் துண்டென்று

     நயம்பட நன்கறிந்து நினைவார்க் கருள்வானை

சொத்திறங் கொண்டென்ருஞ் சொன்னவாறே யொழுகி

     செயல்மிகு செயல்கள்பல புரிவார்க் கருள்வானை

நித்தனை நின்மலனை நிறமேழு மானானை

     நீங்கா தடியார் தம்உள்ளத் துறைவானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை யுடனுறையும்

     ஐராவதேச்சுரனை பணிந்திட பிணியறுமே ! ( 3. )

 

நத்திறம் வாய்ந்தது ஓர் நல்மருந்து உண்டு என்று

     நயம்பட நன்கு அறிந்து நினைவார்க்கு அருள்வானை

சொத்திறங் கொண்டு என்றுஞ் சொன்னவாறே ஒழுகி

     செயல்மிகு செயல்கள் பலபுரிவார்க்கு அருள்வானை

நித்தனை நின்மலனை நிறம் ஏழும் ஆனானை

     நீங்காது அடியார்தம் உள்ளத்து உறைவானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை உடன் உறையும்

     ஐராவதேச்சுரனை பணிந்திட பிணி அறுமே !

 

கருத்துரை:--- நற்குணமும் வீரியமும் உள்ள ஈசன் எனும் ஒரு நல்ல

மருந்து  உண்டு என்று பக்குவமாகவும், உறுதியாகவும், நன்றாகவும்

அறிந்து  மனதில்  நினைப்பவர்க்கு அருள் செய்வானை,

     வாக்கு திறமை கொண்டு என்றும் சிவஆகமங்களில் சொல்லிய

வாறே நடந்து, மிகுதியான, பலவிதமான நற்செயல்கள் செய்வார்க்கு  அருள் செய்வானை,

  எங்கும் என்றும் நிலையாக இருப்பவனை, குற்றமற்றவனை, எழு

நிறங்களிலும் நிறைந்து இருப்பவனை, என்றும் நீங்காது அடியார்கள்

உள்ளத்தில் குடி இருப்பவனை,

     யானை முகங் கொண்ட சிவலிங்க திருமேனியொடு அருள்மிகு

காமாட்சி அம்மையுடன்  வீற்றிருக்கும்  அருள்மிகு  ஐராவதேச்சுரர்

என்ற திருநாமங் கொண்ட  ஈசனை  தொழுது வணங்கிட நோய்கள்

யாவும் விலகிடுமே !

 

      நத்திறம்----- நல்லகுணம்,  நயம்----- பக்குவம்,

      சொத்திறங்----- வாக்குதிறமை,  ஒழுகி----- நடப்பது

 

வித்துமுயிரு மாக்கும் வீரியமருந் துண்டென்று

    விரைகழல் தொழுவாரை விளித்துண ர்த்துவானை

தத்தாம் பவவினை களைய தம்மானை நினைந்து

    தவமியற்று வார்க்கு தன்கருணை புரிந்தானை

வித்தன் விமலன் வேதியன் வினைதீர்க்கும் தலைவனை

    விண்ணுல கானைக்கு யருளிய வேதத்தின் பொருளானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை யுடனுறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணியறுமே ! ( 4. )

 

வித்தும் உயிரும் ஆக்கும் வீரிய மருந்து உண்டு என்று

    விரைகழல் தொழுவாரை விளித்து உணர்த்துவானை

தத்தாம் பவவினை களைய தம்மானை நினைந்து

    தவம் இயற்றுவார்க்கு தன் கருணை புரிந்தானை

வித்தன் விமலன் வேதியன் வினைதீர்க்கும் தலைவனை

    விண்ணுலகு ஆணைக்கு அருளிய வேதத்தின் பொருளானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை உடன் உறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணி யறுமே !

 

கருத்துரை:--- எல்லாவிதமான அசையும்  அசையா பொருள்களுக்கும்,

உயிர்களுக்கும் மூலகருவாகவும், விதையாகவும் இருந்து, மிகவும்

விரைவாக செயல்படுங் குணமுள்ள, ஈசன் எனும் ஒரு நல்ல மருந்து

உண்டு என்று அறிந்து, அதுவே  மனதிற்கு  நன்மை  தரும் குளிர்ச்சி

மிகுந்த  திருவடி  என்று வணங்குவார்களை  அழைத்து அவர்களுக்கு

தெளிவு அளிப்பானை,

     தங்களுடைய பிறப்பு எனும் வினையை  நீக்கும்படி தங்களுக்கு  உரிய இறைவனாகிய ஈசனை நினைந்து உருகிதவம் செய்வார்களுக்கு   தனது கருணையை அருள்வானை,

     பற்பல வித்தைகளால் ஆடல் புரிபவனை, குற்றமற்றவனை, ஒரு

அந்தணனாக வந்து சுந்தர மூர்த்தி சுவாமிகளை ஆட்கொண்டவனை,

வினைகள்  அகற்றும்  தலைவனை,  ஐராவதம்  எனும் தேவலோக

யானைக்கு அருள் செய்தானை, வேதபொருளாய் இருப்பவனை,

     யானை முகங் கொண்ட சிவலிங்க திருமேனியொடு  அருள்மிகு

காமாட்சி  அம்மையுடன்  வீற்றிருக்கும்  அருள்மிகு  ஐராவதேச்சுரர்

என்ற  திருநாமங் கொண்ட  ஈசனை  தொழுது வணங்கிட நோய்கள்

யாவும் விலகிடுமே !

 

   ஆக்கும்----- செய்வது,  வீரியம்----- விரைவாக,  பவ----- பிறப்பு,

   விரை----- குளிர்ச்சி,  விளித்து----- அழைத்து, கழல்----- திருவடி,

   தம்மானை----- உரியவன்,  விண்ணுலகானை----- ஐராவதம்.

 

தித்திக்குந் தேனாகிய திருமருந் துண்டென்று

    தெளிவாய் சிந்தித்தறிந்து தொழுவார்க் கருள்வானை

மெத்திகுதி கொண்டெழு மானந்தத்தா லுளமுருகி

    மேதினியில் தம்மெய்யால் தொழுவார்க் கருள்வானை

மத்தமது சூடினானை மான்மழு வேந்தினானை

    மறைநான்கு மானானை மணவாழ்வு நல்குவானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை யுடனுறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணியறுமே ! ( 5. )

 

தித்திக்கும் தேன் ஆகிய திருமருந்து உண்டு என்று

    தெளிவாய் சிந்தித்து அறிந்து தொழுவார்க்கு அருள்வானை

மெத்தி குதிகொண்டு எழும் ஆனந்தத்தால் உளம் உருகி

    மேதினியில் தம் மெய்யால்  தொழுவார்க்கு அருள்வானை

மத்தம் அது சூடினானை மான்மழுவு ஏந்தினானை

    மறைநான்கும் ஆனானை மணவாழ்வு நல்குவானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை உடன் உறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணி யறுமே !

 

கருத்துரை:----  தித்திக்கும் தேன் போன்ற ஈசன் எனும் ஒரு மருந்து

ஒன்று உண்டு என்று மிக தெளிவாக உள்ளத்தில் சிந்தித்து உணர்ந்து

வணங்குவார்க்கு அருள் செய்வானை,

    ஒன்று சேர்ந்து மேலே குதித்து எழுகின்ற மகிழ்ச்சியால் உள்ளம்

உருகி, இவ்வுலகில் தமது உடலால் பல சிவதொண்டுகளை செய்து

வணங்குவார்க்கு அருள் செய்வானை, 

     ஊமத்த மலர்களை  விரும்பி  தனது முடியில் சூடியுள்ளவனை,

சிறுமானும் மழுவும்  தனது  திருக்கரங்களில்  தாங்கி  உள்ளவனை,

நான்கு வேதங்களாய் திகழ்பவனை, திருமணவாழ்வு தருபவனை,

    யானை முகங் கொண்ட சிவலிங்க திருமேனியொடு  அருள்மிகு

காமாட்சி  அம்மையுடன்  வீற்றிருக்கும்  அருள்மிகு  ஐராவதேச்சுரர்

என்ற  திருநாமங் கொண்ட  ஈசனை  தொழுது வணங்கிட நோய்கள்

யாவும் விலகிடுமே !

   மெத்தி----- ஒன்றாகசேர்ந்து,  மேதினி----- உலகம்,  மெய்----- உடல்.

   மத்தம்----- ஊமைத்தமலர்,  மறை----- வேதம்,  நல்கு----- தருவது.

முத்தியளிக்க வல்லதோர் மூலமருந் துண்டென்று

    முழுவதுமா யுணர்வா ருளமதிலி ருப்பானை

நித்தியமுந் தனதான கருமங்களை நேர்மையாய்

    நுண்ணளவுந் தவறாது செய்யவல்லார்க் கருள்வானை

முத்தினை மோனயுருவனை மெய்பொருளாய் நின்றானை

    முக்கண்ணனை முச்சுடரா யொளிர்வானை மறையானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை யுடனுறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணியறுமே ! ( 6. )



முத்தி அளிக்க வல்லதோர் மூலமருந்து உண்டு என்று

    முழுவதுமாய் உணர்வார் உளம் அதில் இருப்பானை

நித்தியமும் தனது ஆன கருமங்களை நேர்மையாய்

    நுண் அளவும் தவறாது செய்ய வல்லார்க்கு அருள்வானை

முத்தினை மோன உருவனை மெய் பொருளாய் நின்றானை

    முக்கண்ணனை முச்சுடராய் ஒளிர்வானை மறையானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை உடன் உறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணி யறுமே !

 

கருத்துரை:--- முத்தி தரக்கூடிய  ஈசன்  எனும்  ஆதிமருந்து  ஒன்று

உண்டு என்று  பரிபூரணமாக உணர்ந்து  வணங்குவார்கள்  உளமதில்

நிறைந்து இருப்பானை,

    தினந்தோறும்  தங்களுக்குரிய  சிவப்பணிகளை  நேர்மையொடு

சிறிதளவும் தவறாது செய்பவர்களுக்கு அருள் செய்வானை,

    முத்துக்கு நிகரானவனை மெளனஉருவமாய் காட்சி  தருவானை,

உண்மை பொருளாய் எங்கும் நிறைந்து இருப்பனை, மூன்று கண்கள்

உடையவனை, மூன்று சுடராய் ஒளி வீசுவானை,

     யானை முகங் கொண்ட சிவலிங்க திருமேனியொடு  அருள்மிகு

காமாட்சி  அம்மையுடன்  வீற்றிருக்கும்  அருள்மிகு  ஐராவதேச்சுரர்

என்ற  திருநாமங் கொண்ட  ஈசனை  தொழுது வணங்கிட நோய்கள்

யாவும் விலகிடுமே !

    மூலம்----- ஆதி,  தனதான----- தங்களுக்குரிய,  கருமம்----- செயல்,

   நுண்----- மிகச்சிறியது, மோனம்----- மெளனம், மெய்----- உண்மை,

   மறை----- வேதம், முச்சுடர்----- சூரியன், சந்திரன், அக்கினி.

 சுத்திதர வல்லதாகிய சூக்குமருந் துண்டென்று

    சொற்றமிழால் பொருளுணர்ந் தறிவார்க் கருள்வானை

வித்தகனாய் தோன்றிபல விளையாடல் புரிந்தானை

    விரிசடையில் பெருகங்கை வியக்கவே வைத்தானை

பித்தனாய் பிஞ்ஞகனாய் பலவேடந் தரித்தானை

    பார்புகழ சரிபாதி பெண்மைக்குபாக மளித்தானை  

அத்திமுகனாய் காமாட்சியம்மை யுடனுறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணியறுமே ! ( 7. )


சுத்திதர வல்லது ஆகிய சூக்கும மருந்து உண்டு என்று

    சொற்றமிழால் பொருள் உணர்ந்து அறிவார்க்கு அருள்வானை

வித்தகனாய் தோன்றி பல விளையாடல் புரிந்தானை

    விரிசடையில் பெருகங்கை வியக்கவே வைத்தானை

பித்தனாய் பிஞ்ஞகனாய் பலவேடம் தரித்தானை

    பார்புகழ சரிபாதி பெண்மைக்ககு பாகம் அளித்தானை 

அத்திமுகனாய் காமாட்சியம்மை உடன் உறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணி அறுமே !

கருத்துரை:---  உள்ளசுத்தம், உடல்சுத்தம், வாக்குசுத்தம், செயல்சுத்தம்

ஆகியவற்றை தரும்  உட்பொருளாகிய  ஈசன்  எனும் மருந்து ஒன்று

உண்டு என்று, செந்தமிழ் நூல்களாலும், திருமுறைகளாலும், அதன்

பொருளை அறிந்து உணர்ந்தவர்களுக்கு அருள் செய்வானை,

    பலவேடங்களில் தோன்றி பல திருவிளையாடல்கள் புரிவானை,

பரந்து விரிந்த செஞ்சடையில் பெருகிவரும் கங்கையை  இவ்வுலகம்

வியக்கவே வைத்தானை,

    தன் அடியார் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஆவணங்காட்டி

ஆட்கொளும் போது, பித்தன் எனும் திருநாமம்  பெற்றானை, பலவித

வித்தைகளையும்,  கூத்துக்களையும்  நடத்த வேண்டி, மாறுபட்ட பல

 வேடங்களை தரித்தவனை, இவ்வுலகம்  புகழும்படி தன்னுள் சரிபாதி

உமையவளுக்கு கொடுத்தானை,

    யானை முகங் கொண்ட சிவலிங்க திருமேனியொடு  அருள்மிகு

காமாட்சி  அம்மையுடன்  வீற்றிருக்கும்  அருள்மிகு  ஐராவதேச்சுரர்

என்ற  திருநாமங் கொண்ட  ஈசனை  தொழுது வணங்கிட நோய்கள்

யாவும் விலகிடுமே !

 

   சுத்தி----- சுத்தம்,  சூக்குமம்----- எளிதில்அறியாத,  விரி----- பரந்த,

   வியக்க----- ஆச்சிரியம்,  பிஞ்ஞகன்----- வேடதாரி.

 

சத்தியங் காக்குமொரு சாயுச்சிய மருந்துண்டென்று

    சாம்பர் பூசித்திரியுஞ் சடைமுடியோர்க் கருள்வானை

எத்திசையு மீசனையே நோக்குவாரோ டிருப்பானை

    ஈடிலா யிணையடிமுடி தேடினார்க் கறியானை

இத்தன்மைய னென்றறிய முடியாதானை யென்றும்

    என்பொடு கொம்பாணிந் தின்புற்றிருக்கும் பிரானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை யுடனுறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணியறுமே ! ( 8. )

 

சத்தியம் காக்கும் ஒரு சாயுச்சிய மருந்து உண்டு என்று

    சாம்பர் பூசித் திரியும் சடைமுடியோர்க்கு அருள்வானை

எத்திசையும் ஈசனையே நோக்குவாரோடு இருப்பானை

    ஈடிலா இணை அடிமுடி தேடினார்க்கு அறியானை

இத்தன்மையன் என்று அரிய முடியாதானை என்றும்

    என்பொடு கொம்பு அணிந்து இன்புற்று இருக்கும் பிரானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை உடன் உறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணி அறுமே !


 கருத்துரை:---  உலகில்  சத்தியம், தர்மம், நீதி, நேர்மை  ஆகியவை

காப்பதற்கும், ஐக்கியநிலையை தருவதற்கும்  ஈசன்  என்கின்ற ஒரு மருந்து உண்டு என்று, அறிந்து திருநீற்றை உடலெங்கும் பூசிதிரியும், சடைமுடி தரித்த முனிவர்கள் தவசிகள் ஆகியோருக்கு அருள்வானை

    எத்திசையிலும் சிவபரம்பொருளையே காண்பார்களோடு நீங்காது

இருப்பானை, ஒப்பிலாத  திருவடிகளையும், திருமுடியையும்  தேடிய

பிரமன் திருமாலுக்கும் காண அரிதானவனை,  

    இன்ன தன்மையன்  என்று அறிவதற்கு முடியாதவனை, என்றும் எலும்பும், பன்றியின் கொம்பும் அணிந்து மகிழும் தேவ தேவனை,

யானை முகங் கொண்ட சிவலிங்க திருமேனியொடு  அருள்மிகு

காமாட்சி  அம்மையுடன்  வீற்றிருக்கும்  அருள்மிகு  ஐராவதேச்சுரர்

என்ற  திருநாமங் கொண்ட  ஈசனை  தொழுது வணங்கிட நோய்கள்

யாவும் விலகிடுமே !

   சாயுச்சியம்----- ஐக்கியநிலை, சாம்பர்----- விபூதி,  பிரான்----- தேவன்,


 குத்திரம் நீக்கிகுணம தாக்கும்மருந் தொன்றுண்டு

    கொள்ளீர் களென்று கூறுவார்க் கருள்வானை

சித்திரசபை யிலென்றுஞ் சிங்காரநட மிடுவானை

    சேணும் பொருளும் நீங்கா சிறப்பனைத்துந் தருவானை

பத்திரமும் பசியாற பாணமும் நிறையமுதும்

    படைத்தார்க்கு படிமீதில் பலநலன்க ளளிப்பானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை யுடனுறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணியறுமே ! ( 9. )


குத்திரம் நீக்கி குணம் அது ஆக்கும் மருந்து ஒன்று உண்டு

    கொள்ளீர்கள் என்று கூறுவார்க்கு அருள்வானை

சித்திர சபையில் என்றும் சிங்கார நடம் இடுவானை

    சேணும் பொருளும் நீங்கா சிறப்பு அனைத்தும் தருவானை

பத்திரமும் பசி ஆற பாணமும் நிறை அமுதும்

    படைத்தார்க்கு படிமீதில் பலநலன்கள் அளிப்பானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை உடன் உறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணி அறுமே !

 

கருத்துரை:---  வஞ்சக எண்ணங்களை நீக்கி நல்ல குணங்களை தரும்

ஈசன்  எனும் மருந்து  ஒன்று உண்டு, வாங்கிக் கொள்ளுங்கள் என்று

கூறுவார்களுக்கு அருள் செய்வானை,

    பஞ்ச சபைகளில் சித்திரசபை எனும் திருக்குற்றாலத்தில் அழகு

பொலிவுற நடனம் ஆடுபவனை, என்றும் நீங்கா உயர்ந்த செல்வமும்,

புகழும், சிறப்பும் தருவானை,

    அடியார்களுக்கு உடுப்பதற்கு உடையும், பசியாற உணவும், நீரும்,

கொடுப்பார்களுக்கு இவ்வுலகில் பல நன்மைகள் அருள்வானை,

    யானை முகங் கொண்ட சிவலிங்க திருமேனியொடு  அருள்மிகு

காமாட்சி  அம்மையுடன்  வீற்றிருக்கும்  அருள்மிகு  ஐராவதேச்சுரர்

என்ற  திருநாமங் கொண்ட  ஈசனை  தொழுது வணங்கிட நோய்கள்

யாவும் விலகிடுமே ! 

    குத்திரம்----- வஞ்சகம்,  சேண்----- உயர்ந்த,  பத்திரம்----- உடை,

    பாணம்----- நீர்,  அமுது----- உணவு,  படி----- உலகம்.

 

பத்தியளிக்க வல்லதோர் பழமருந் துண்டென்று

    பாடிபரவி னார்க்கு பதமருளும் பஞ்சலிங்கனை

சித்தனாய் அன்றாலவா யிலிலாடல் புரிந்தானை

    சிவலோக மாள்வானை சீவனைசுத்தி செய்வானை

உத்திரத்திரு நன்னாளி லுமையொ டெழுந்தானை

    ஓங்காரத் துட்பொருளாய் யொன்றியே யிருப்பானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை யுடனுறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணியறுமே ! ( 1௦. )


பத்தி அளிக்க வல்லது ஓர் பழமருந்து உண்டு என்று

     பாடி பரவினார்க்கு பதம் அருளும் பஞ்சலிங்கனை

சித்தனாய் அன்று ஆலவாயிலில் ஆடல் புரிந்தானை

    சிவலோகம் ஆள்வானை சீவனை சுத்தி செய்வானை

உத்திரத் திருநன்னாளில் உமையொடு எழுந்தானை

   ஓங்காரத்து உட்பொருளாய் ஒன்றியே இருப்பானை

அத்திமுகனாய் காமாட்சியம்மை உடன் உறையும்

    ஐராவதேச்சுரனை பணிந்திட பிணி அறுமே !


கருத்துரை:---  பக்தி  பரவசம்  தருகின்ற  ஈசன்  எனும் ஆதிமருந்து

ஒன்று உண்டு என்று அறிந்து தெளிந்து பாடி துதித்து வணங்குவார்க்கு

அருளுகின்றவனை, ஐந்து லிங்கத் திருமேனி கொண்டு இத்தலத்தில்

எழுந்தருளி உறைகின்றவனை,

    அன்று  மதுரையில் சித்தர்  வேடங் கொண்டு  வியக்கவே  பல திருவிளையாடல்கள்  புரிந்தவனை,  கயிலைமலையை  ஆள்கின்ற

ஈசனை, ஆத்மாவை தூய்மை ஆக்கி தன்னோடு சேர்ப்பவனை,

    பங்குனி  உத்திரத்திருநாளில் உமையம்மையோடு  எழுந்தருளி

காட்சி தருபவனை, ஓம் எனும் பிரணவத்தின் உள்ளே அடங்கி

நிலையாக வீற்று இருப்பவனை,    

   ஆலவாயில்----- மதுரை,  சுத்தி----- தூய்மை,  ஒன்றி----- சேர்ந்து,

   பழமருந்து----- ஆதிமருந்து,  சீவன்----- ஆத்மா.


எத்திறமுந் தம்மோடுடைய இமையோர் துதித்தேத்தும்

    ஏனமொடு கொம்புங்நீருங் கொன்றையுமத்த முமணிந்த

 இத்திறங் கொண்ட ஈசனே அத்திமுகனாய் தானாய்

    இனிதே காமாட்சி யம்மையொடு உயிர்க்கருளியதை

அத்திறமாய் அறிந்து தெளிந்து ஆரணி அடியார்க்கு

    அடியவன் சொல்லிய மாலைக ளொருபத்தும் ஓதுவார்

சொத்திறமுஞ் சொல்லியபேறும் புகழுமிக வாழ்வில்பெற்று

    சிவவாழ்வில் சேர்ந்துய்ந்து நீங்காதிருப்பரினிதே ! ( 11. )


எத்திறமும்  தம்மோடு உடைய இமையோர் துதித்து ஏத்தும்

    ஏனமொடு கொம்பும் நீரும் கொன்றையும் மத்தமும் அணிந்த

இத்திறம் கொண்ட ஈசனே அத்திமுகனாய் தானாய்

    இனிதே காமாட்சி அம்மையொடு உயிர்க்கு அருளியதை

அத்திறமாய் அறிந்து தெளிந்து ஆரணி அடியார்க்கு

    அடியவன் சொல்லிய மாலைகள் ஒருபத்தும் ஓதுவார்

சொல் திறமும் சொல்லிய பேறும் புகழும் இகவழ்வில் பெற்று

    சிவவாழ்வில் சேர்ந்து உய்ந்து நீங்காது இருப்பர் இனிதே !


கருத்துரை:---- எல்லாவித ஆற்றலும் மேன்மையும் தம்மிடம் கொண்ட

தேவர்கள் போற்றி புகழும், ஆமையின் ஓடும், பன்றியின் கொம்பும்,

கங்கையும், கொன்றைமலரும், ஊமத்தம்மலரும் அணிந்ள்ள,

இத்தகைய மாறுபட்ட பலவேடங்களை விரும்பி ஏற்றுக் கொண்ட

ஈசனே,  யானைமுகம்  கொண்ட  லிங்கத்  திருமேனியை  உடைய

சுயம்பு மூர்த்தியாய்  காமாட்சியம்மையொடு  தோன்றி  இவ்பூவுலக

உயிர்களுக்கு திருவருள் செய்த,

    அந்த ஈசனின்  கூறுபாடுகளும்,  இயல்புகளும்,  வரலாறுகளும்

அறிந்து, ஆரணி அடியார்க்கு அடியவன்  என்கின்ற  இச்சிறியவன்

புனைந்து சொல்லிய இந்த  பத்து பாமாலைகளையும்,  படிப்பவர்கள்,

அல்லது பாடுபவர்கள்,

    வாக்குத் திறனையும், சொல்லுகின்ற  அனைத்து  சிறப்புக்களும்,

புகழும் இப்பிறவியில் பெற்று, பின் சிவலோகவாழ்வு எனும் நற்கதி

அடைந்து, என்றும் நீங்கா இன்பம் எய்துவார்கள் !

     திறம்----- கூறுபாடு, இயல்பு,  ஏனம்----- ஆமை,  நீர்----- கங்கை,

    கொம்பு----- பன்றியின்கொம்பு,  சொத்திறம்----- சொல்திறமை, 

    கொன்றை----- மலர்,  மத்தம்----- மலர,  தானாய்----- சுயம்பு.

 திருச்சிற்றம்பலம்

 சுபம்

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai