புத்ரகாமேச்சுரர் - 2 Puthrakamechurar - 2

 


தார் பொழி சீர்மிகு திருவடியைச் சாரயுன்
ஊர் பலச்சுற்றியு மருச்சித்துமே யறியேன்
கார்முகில் ஆரணங் கொடருள காட்சித் தருக
பேர் பலவாய் புகழும் பரமனே !

தார் பொழி சீர்மிகு திருவடியைச் சார உன்
ஊர் பலச் சற்றியும் அருச்சித்துமே அறியேன்
கார் முகில் ஆரணங் கொடு அருள காட்சித் தருக!
பேர் பலவாய் புகழும் பரமனே !

முகில் - மேகம்,  ஆரணம் - வேதம்,  பொழி - சொரி , கொட்டு
தார் - பூக்கள்,  சீர் - அழகு,  சார - சேர,  அடைய,  கார் - கருமை

பொழிப்புரை:-

பூக்கள் சொரிய அழகு மிகுந்த திருப்பாதங்களை சேர உன் 
ஊர்கள் பல வலம் வந்தும் அருச்சனை செய்துமே அறியேனே
கரு மேகங்கள் (மழையைப் பொழிவதுபோல) 
வேதங்களை அருள்வதற்கு காட்சிதருக 
பெயர்கள் பலவாக புகழ்கின்ற பரம் பொருளே! (சிவனே)

கருத்துரை:-  

பல வண்ண பூக்களைக் கொண்டு சொரிந்து அருச்சனை செய்துள்ள அழகு மிகுந்த திருவடிகளை யான் சேர்வதற்கு, நீர் திருக்கோயில் கொண்டிருக்கும் பல ஊர்களை சென்று வலம் வந்தும் உனது திருப்பாதங்கள் மலர்களால் அருச்சனை செய்துமே உனை அறிந்து கொண்டிலனே !

கருமை நிறங் கொண்ட மேகங்கள் மழையை வாரி பொழிவதற்கு 
கூடுவது போல யான் உனை அறிந்து கொள்வதற்க்கு, நீர் அடியேனுக்கு 
வேத மந்திரங்களை பொருளோடு உபதேசிக்க காட்சி தந்தருள்வாயாக ! அடியார்கள் போற்றி புகழ்கின்ற பல திருப்பெயர்களை கொண்ட பரமேஸ்வரனே !

திருத்தல பெருமை :-
 
சுவாமி -            புத்திரகாமேச்சுரர் 

அம்பாள் -        பெரிய நாயகி, பிரம்ம நாயகி 

தலம்   -               புதுகாமூர், ஆரணி.

தீர்த்தம் -           கமண்டல நதி

விருட்சம் -         பவழ மல்லி

வழிபட்டோர் - தசரதன், சூரியன், சனீஸ்வரன்

பாடியவர் -       ஆரணியடியார்க்கடியவன்

நூல் -                   லிங்காட்சர மாலை புத்திரகாமேச்சுரர் மாலை

வழிபடும் பலன் - புத்ர பாக்கியம் பெறுதல் , நாக தோஷம் விலகல்


வரலாறு :- தசரத மஹாராஜன் புத்ர பாக்கியம் வேண்டி இத்திருத்தலத்தில் தம்முடைய குல குருவான வசிஷ்டர் கூறியதின் பேரில் புத்ரகாமேட்டி யாகம் செய்து அதன் பலனாய் இராமன், லஷ்மணன், பரதன், சத்ருக்னன் என்ற நான்கு புத்திரர்கள் பெற்றான். இந்த யாகம் ரிஷ்யசிருங்கர் என்ற முனிவரின் தலைமையில் நடைபெற்றதாக வரலாறு. யாகத்தின் போது தசரதன் தன் மேனியில் ருத்ராட்சம் தரித்து கையில் கமண்டலம் தாங்கி தவக்கோலம் பூண்டு இருந்ததாக இங்குள்ள சந்நிதியில் அறியலாம். இங்கு ஆஞ்சனேயருக்கு வேறு எங்கும் காண முடியாதபடி சங்கு சக்கரம் தரித்தவராக இருப்பதை காணலாம். இங்கு கிருஷ்ணன் பாமா ருக்மினியோடு காட்சி தருகிறான்.

இங்குள்ள புளியமரத்தின் அடியில் உள்ள நாகர் சிலைகளை வலம் வந்து வழிபட்டால் நாக தோஷம் புத்ர தோஷம் நீங்குவதாக வரலாறு. இங்குள்ள விநாயகர் திருநாமம் சுவர்ண விநாயகர் . இங்குள்ள சோமஸ்கந்தர் உற்சவராக வீற்றிருக்கிறார்.

ஜமதக்னி முனிவர் தம்முடுடைய கமண்டலத்திலுள்ள நீரை கொட்டி கமண்டல நதியை உற்பத்தி செய்ததாக வரலாறு.

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam