அருணாசலேச்சுரர் Arunachalechurar
உருவமோ ஓர்சடையன் ஊர்தோறு மிரத்தல்
தருவதோ சுத்தஞான இச்சை தழலேகையினில்சருமமோ அண்ணா ர்க்குடை தொழுமின்
கருநோய் களைந்து இனிதே அவனுள்சேர்வீர்!
உருவமோ ஓர் சடையன் ஊர் தோறும் இரத்தல்
தருவதோ சுத்த ஞான இச்சை தழலே கையினில்
சருமமோ அண்ணார்க்கு உடை தொழுமின்
கருநோய் களைந்து இனிதே அவன் உள் சேர்வீர்!
இரத்தல் - பிட்சை, கருநோய் – பிறப்பு, இச்சை - விருப்பம்,
சருமம் - தோல், தழல் – அக்கினி, களைந்து - விலக்கி
பொழிப்புரை:-
வடிவமோ ஓர் சடை முடியன் ஊர் எல்லாம் பிச்சை எடுத்தல்
அருளுவதோ நிர்குண ஞான விருப்பம் அக்கினி கரங்களில்
தோலோ அவர்க்கு உடை (ஈசனை) வணங்குவீர்
பிறப்பை நீக்கி இன்பமோடு அவன் உள்ளே சேருவீர் !
கருத்துரை:-
ஈசன் சடா முடி தரித்த உருவத்தோடு காட்சி தருபவன். அதனால் சடையன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அடியார்கள் பொருட்டு ஊர் ஊராகச் சென்று பிட்சை எடுத்தவன்.
அது வல்லாது தாருகாவன ரிஷிகளை அடக்குவதற்கு என்றே பிட்சாடனர் வேடங் கொண்டு ரிஷி பத்தினிகள் வீட்டு வாசல் தோறும் பிட்சைக்கு சென்றவன். அதனால் பிட்சாடன மூர்த்தி என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. இது ஈசனுடைய 64 மூர்த்தங்களில் 29- வது மூர்த்தியாக திகழ்கிறது.
தன் அடியார்களுக்கு எப்பொழுதும் சத்த ஞான விருப்பத்தை தந்து ஆட்கொள்பவன். தனது கைகளில் ஒன்றில் அக்கினியை வைத்திருப்பவன். தான் எப்பொதும் புலி தோல் ஆடையை உடுத்துபவன். அத்தகைய சிவபரம் பொருளை வணங்குவீர். அதன் பயனாய் பிறப்பு எனும் நோயிலிருந்து விடுபட்டு அந்த சிவத்தின் உள்ளே சேர்ந்து என்றும் இருப்பீர்.
திருத்தலப் பெருமை:-
சுவாமி – அருணாசலேச்சுரர், அண்ணாமலையார்
அம்பாள் – அபிதகுஜாம்பாள், உண்ணாமுலையம்மை
தலம் – திருவண்ணாமலை.
தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்.
விருட்சம் – மகிழ மரம்.
வழிபட்டோர் – அகத்தியர், விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், சனந்தனர், நால்வர், அருணகிரி நாதர், வள்ளலார், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம், குகை நமசிவாயார், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், சோணாசல பாரதியார், குரு நமசிவாயார், விருபாக்ஷி தேவர், ஈசானிய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர், நாகலிங்க தேசிகர், யாழ்பாணம் தியாகராஜ பிள்ளை, வள்ளல் பச்சையப்பர் இன்னும் பல அடியார்கள், புலவர்கள் மற்றும் ஆரணியடியார்கடியவன்.
நூல் – தேவாரம், திருவெம்பாவை, திருஅம்மானை, திருப்புகழ், திருவண்ணாமலை திருவருட்பதிகம், அண்ணாமலை வெண்பா, அண்ணாமலையார் வண்ணம், அருணை கலம்பகம், சாரபிரபந்தம், அருணாசல புராணம், அண்ணாமலையார் சதகம், சோணாசல சதகம், சோணாசல வெண்பா, திருவருணை கலிவெண்பா, அருணாசலேச்சுரர் பதிகம், உண்ணமுலையம்மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேச்சுரர் அட்சரமாலை, அண்ணாமலை பஞ்சரத்தினம், அருணாசல நவமணி மாலை, அருணை கலம்பகம், திருவருணை வெண்பா, லிங்காட்சர மாலை.
வழிபடும் பலன் - முக்தி பேறு, அமரர் வாழ்வு, பிறப்பு நீக்கம், நவகிரகதோஷ நிவர்த்தி, மணமாலை, குழந்தை பேறு, கல்வி, புலமை, உயர் பதவி, தொழில் விருத்தி, வழக்கு அறுதல், நோய் நீங்குதல், பகை கடிதல், காரிய சித்தி, மன அமைதி அகியவை உண்டாகும்.
குறிப்பு:- இத்தலத்து லிங்காட்சரமாலையில் " சருமமோ அண்ணார்க்குடை" என்ற சொற்றொடர் திருஞானசம்பந்தர் தமது திருவண்ணாமலை தேவாரத்தில் ( 1 - ஆம் திருமுறை) "உண்ணாமுலை உமையாளொடும்" என்ற பதிகத்தில் 8 - வது செய்யுளில்
" புலியதளாடையன்" என்று குறிப்பிடுவதை ஒப்பு நோக்கி காண்க!