சலகண்டேசுரர் Salakandechurar
கலந்த தோர் கருவில் உயிரும் பரந்து
பல நாளுஞ் சுற்றி முற்றிச் சுருண்டே
உலகு கண்டு உருவங்கள் மாறி யழியாமல்
நலந்தரும் நிமலாயுன் சபையின் கண்வைக!
கலந்தது ஓர் கருவில் உயிரும் பரந்து
பல நாளுஞ் சுற்றி முற்றிச் சுருண்டே
உலகு கண்டு உருவங்கள் மாறி அழியாமல்
நலந் தரும் நிமலா உன் சபையின் கண் வைக!
பரந்து - விசாலமான விரிந்த, வியாபித்து, சபை - திருச்சபை, திருவடி
நிமலன் - சிவன்.
பொழிப்புரை:-
பல நாட்கள் சுழன்று முதிர்ச்சி அடைந்து சுருண்டு (பின்)
பூமியைக் கண்டு (தன்) வடிவங்கள் மாற்ற மடைந்து அழிந்து போகாமல்
நன்மைகள் அருளும் சிவனே உனது திருச்சபையில் வைத்திடுக!
கருத்துரை - இவ்வுயிரானது ஒரு தாயின் கர்பத்தில் சேர்ந்து விசாலமாய் முன்னூறு நாட்கள் தங்கி அங்கே மேலுங் கீழுமாய் சுழன்று முதிர்ச்சி அடைந்து,சுருண்டு பின் வெளியே வந்து இம்மண்ணுலகை காண்கிறது. அதன் பிறகு அது மழலை பருவம். பால பருவம், வாலிப பருவம், முதுமை பருவம் என பல வடிவங்களாக மாற்றம் அடைந்து இறுதியில் அழிந்து போகிறது. நன்மைகள் அருளும் சிவபரம் பொருளே இவ்வுயிரானது அவ்வாறு அழிந்து போகாமல் உனது திருச்சபையான திருவடி நிழல் கீழ் வைத்து காத்து அருள் புரிக !
திருத்தல பெருமை:-
சுவாமி - சலகண்டேச்சுரர்.
அம்மன் - அகிலாண்டேச்சுரி.
தீர்த்தம் - தாமரை புஷ்கரணி, கங்கா பாலாறு.
விருட்சம் - வன்னிமரம்.
வழிப்பட்டோர் - அத்திரி, பிரம்மா, திருமால், இலக்குமி. சரஸ்வதி, ஆதிசங்கரர், சனி .
நூல் - லிங்காட்சர மாலை,
பாடியவர் - ஆரணியடியார்கடியவன்.
வழிபடும் பலன் - ஆயுள் விருத்தி, பயம் நீங்க, திருமணங்கூட, திருஷ்டி கழிய, நாக தோஷம், பல்லி தோஷம் நீங்க