இரத்தினகிரி வாழ் பாலமுருகன் இரத்தின மாலை விரிவுரை Rathinagiri Vazh Balamurugan RathinaMalai ViriUrai

 





இரத்தினகிரி வாழ்  பாலமுருகன்  இரத்தினமாலை  விரிவுரை

Rathinagiri Vazh Balamurugan RathinaMalai ViriUrai








    இரத்தினகிரி வாழ் பாலமுருகன்
இரத்தினமாலை


விநாயகர் காப்பு
  மேலவர் போற்றும் மேன்மைமிகு இரத்தினகிரி வாழ்
பாலமுருகன் மேற் இரத்தின மாலையை புனைந்திட
ஞாலம் புகழ் விநாயகரே! நவிலுக ஞானமுஞ்
சலமிகு தெளிவுஞ் சகல சௌபாக்கியமுமே!

கருத்துரை - தேவர்கள் எல்லோரும் போற்றும் உயர்ந்த திருத்தலமாகிய இரத்தினகிரியில் வாழுகின்ற பாலமுருகன் மேல் “இரத்தின மாலை” என்கின்ற பாமாலையை ஒன்றன் பின் ஒன்றாக தொடுத்து பாடிட உலகம் புகழ்கின்ற விநாயகப் பெருமானே! நீ அடியேனுக்கு தருக ஞானமும் முதிர்ச்சி அடைந்த அறிவொடு விளக்கமுஞ் சகல சௌபாக்கியங்களுமே!

புனைதல் – தொடுத்தல், ஞாலம் – உலகம், மேலவர் – தேவர்கள், நவிலுக – தருக, சால – முதிர்ச்சி

முருகனின் திருவடி திருப்புகழ் பாடும் பணி பெற             
         
அசையுமசையா பொருளனைத்தும் படைத்த யிவ்வுலகில்
குசையால் நெகிழ்ந்துன் திருப்புகழையுங் கழலையுமெண்
திசைதொறும் செந்தமிழால் பாடும் பணியைத் தருவாய்!
இசையே இரத்தினகிரி வாழ் இரத்தினமே! (1)  

கருத்துரை - இரத்தினகிரி எனும் மலையில் வாழுகின்ற இசையின் உயிராகவும் நாதமாகவும் விளங்கும் பால முருகனாகிய இரத்தினமே அசையும் அசையா பொருள்கள் அனைத்தும் படைத்த இவ்வுலகில் உளமுருகி பாடி மகிழும் உனது திருப்புகழையும் உனது திருவடி பெருமைகளையும் எட்டு திசைகளிலும் செந்தமிழால் பாடும் திருப்பணியைத் தந்து அருள் புரிக!

இசை - மகிழ்ச்சி, கழல் – திருவடி
      
முருகன் அருளால் குறையிலா வாழ்வு வாழ

மறை நான்கையும் மாசற்ற முனிவர்க்கு அன்றுரைத்த
இறையவர்க்கிரு செவியுங் குளிர பொருளுரைத்த நீ
குறையுள யென் வாழ்வை குளிர செயலாகாதோ?
உறையே இரத்தினகிரி வாழ் இரத்தினமே! (2)

கருத்துரை - இரத்தினகிரி எனும் திருத்தலத்தில் பிணி தீர்க்கும் மருந்தாய் வீற்றிருக்கும் பால முருகனாகிய இரத்தினமே, வேதங்கள் நான்கையும் குற்றும் ஒன்றுங் காண முடியாத சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அன்று உரைத்து ஈசனாகிய இறைவனுடைய இரு செவியுங் குளிர பொருள் சொன்ன நீ எனது குறைகளை நீக்கி வாழ்வை குளிர செய்வது என்பது உனது திருவருளால் முடியாத ஒன்றோ? கருணை கூர்ந்து அருள்புரிக!

உறை – மருந்து, பெருமை, மாசற்ற - குற்றமற்ற

முருகன் அருளால் பிழைபொறுத்து பிறவி நீக்க

கறுப்பால் கயவ ரைவரொடு கலந்துடனாகிய
உறுப்பால் வினையேன் புரிந்த பிழைகள் யாவையும்
பொறுப்பாய்! பொறுத்து இனி இம்மண்ணுலக பிறவியை
அறுப்பாய்! இரத்தினகிரி வாழ் இரத்தினமே! (3)

கருத்துரை - இரத்தினகிரி எனுந் தலத்தில் வாழுகின்ற பால முருகனாகிய இரத்தினமே! சினம் என்னுங் கோப குறிப்பால் துஷ்டர்களாகிய ஐம்பொறிகளோடு சேர்ந்து உடலில் அமைந்து உள்ள மற்ற உறுப்புக்களால் செய்த பிழைகள் யாவையும் பொறுப்பாய் பொறுத்து இனி அடியேனுக்கு இப்பூவுலகில் மீண்டும் பிறவாதிருக்க அருள்புரிவாய்

கறுப்பு - சினம்.

முருகன் அருளால் வாழ்வில் இருள் நீங்கி ஒளிபெற

பொருளே தேடி போதா வினைகளே புரிந்து
மருளே கொண்டு மண்மேலுழன்ற என் வாழ்விலினி
இருளே ஒழிந்து ஒளியே பிறக்க புரிவாய் திரு
அருளே இரத்தினகிரி வாழ் இரத்தினமே! (4)

கருத்துரை - இரத்தினகிரி எனும் மலையில் கோயில் கொண்டுள்ள பால முருகனாகிய இரத்தினமே! இவ்வுலகில் அளவற்ற பொருள்களை தேடி அதன் காரணமாக பல தேவையற்ற செயல்களை செய்து, மயக்கங் கொண்டு திரிகின்ற அடியேன் வாழ்வில் சூழ்ந்துள்ள இருளை நீக்கி ஒளி பிறக்க அருள் புரிக!
 
மருள் - மயக்கம்.
 
முருகன் கருணை பெற்று துயர் நீங்க

காவாய் எனநின் கழலுக்கே அழுது தொழுது
பாவாய் இசையாய் பொழிந்து நின்றேனே! நீயும்
பூவாய் மணமாய் பொங்குமுன் கருணையை வாரி
ஈவாய் இரத்தினகிரி வாழ் இரத்தினமே! (5)

கருத்துரை - இரத்தினகிரி எனும் பதியில் உறைகின்ற பால முருகனாகிய இரத்தினமே, அடியேனை காத்து இரட்சிப்பாய் என்ற உனது திருவடியில் அழுது தொழுது இசையைக் கூட்டி பாமாலைகள் பல பாடி நின்றேனே! நீயும் பாரா முகமாய் இருப்பதேனோ? பூவின் மணமாய் திகழும் பொங்கும் உனது கருணையை வாரி தருவாயாக!
 
பாவாய் – பாமாலைகள்
 
முருகன் அருளால் வாழ்வு செழுமை பெற

செழுத்தே என் வாழ்வை நின் சிற்றடிக்கே உரிதாக்குக!
கொழுத்தே சமர் புரிந்த அவுணரை குலைத்தொழித்து
பழுத்தே ஞானத்தால் பாடும் புலவர் சொல்லிலுறை
எழுத்தே இரத்தினகிரி வாழ் இரத்தினமே! (6)

முருகன் அருளால் மனதை ஞானத்தால் பக்குவபடுத்த

கழுவாய் என யெறிந்த காயமதை ஞானங்கொண்
டுழுவாய் மனமே! உழுது உடனாகிய உறுப்பால்
தொழுவாய்! தொழுது இசையாலுருக என்னுளே
எழுவாய்! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                       7


முருகன் அருளால் இடர் யாவும் நீங்கிட

இழிவே கொண்டயிப் பிறவியிலென் இடர் தீர்த்தலுன்
தொழிலே! என்முகம் பாராதது ஏனோ? சொல்!
பொழிலே சூழும் பலபதியிலுங் குன்றிலு முறையும்
எழிலே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                        8

முருகன் அருளால் கவலைகள் அகன்றிட

பொருப்பால் சூழ்ந்த இப்புவிமீதில் என் வாழ்வும்
கருப்பால் சூழ்ந்து கவலைக் குள்ளானதே! நீயும்
விருப்பால் என்பால் வந்து மிடிதீர என்னுளே
இருப்பாய்! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                      9

முருகனே என்றும் ஆதாரமும் துணையுமாய் இருக்க

திணையே யில்லாது குறுகி தக்கையாய் என்வாழ்வும்
பிணையே யில்லாது போனதே! இப்பேதைக்குந்
துணையே புரிந்து தருவாய் உனது தேன்சொரியும்
இணையே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     10

முருகன் அருளால் சஞ்சலம் நீங்கி ஒளி வீசிட

சிறியேன் செய்த பிழைகளை பொறுத்து சஞ்சலம் நீக்கி
நெறியே புரிந்து நினைத்தது நடந்து வாழ்விலென்றும்
எறியே வீசிட யருளுக! அறிவா லறியும்
அறிவே இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                        11


முருகன் அருளால் வாழ்வின் சுமையும் வறுமையும் நீங்கிட

அமைந்த யிப்பிறவியில் அடியேன் எதிர்கொளும் வாழ்வின்
சுமையும் வறுமையின் கொடுமையும் நீங்கி சுகம்பெற
உமையின் உன்னத வேல்கொண்டு வருகவே என்கண்ணின்
இமையே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     12             

முருகன் அருளால் ஐம்பொறிகளை அடக்கி வினை களைய

குழியெனுங் குவலயந்தனிலே ஐவரரோ டிணைந்து
இழிதொழில் புரியாது அவரை அடக்கி யுனது
விழியால் காத்து யுடனாகிய யென் வினைகளையும்
அழிப்பாய்! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                      13


ஐம்பொறிகளுங் கைவிடும்போது முருகன் வந்து காத்திட

நனைந்த குறுதியொடு நரம்பையுஞ் சேர்த்து என்பொடு
புனைந்த இவ்வுடலாகிய என்னோடு பழகிய
அனைவருங் கைவிட்டு மெய்விடும் போது காவாய்
எனையே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                       14

முருகன் அருளால் உலக மாயைகளில் இருந்து விடுபட

தெளியேனோ? இத்தாரணியில் மாயைகளி னின்றும்
துளியேனுமுன் திருக்கண் நோக்க லாகாதோ?
எளியேன்மீது! இச்சகத்துக்கொரு இணையிலா
ஒளியே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                        15

     
முருகன் அருளால் சபையேறி பாடுந்திறன் பெற

நவையேது மிலாத நற்பாவலர் பாடிய பொற்
குவையோயென பொதிந்து கிடக்குமுனது பாக்களை
அவையேறி இசையொடுருகி பாடுந்திறனை தருக!
சுவையே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                       16

முன்வினைகள் நீங்கி முருகனுக்கு அடிமையாகிட

சொன்னேன் பலகவிகளை யானுமுனது சிற்றடிக்கே!
முன்னே யான்செய்த வினைகளை முழுதும் முடிவித்து
பின்னே யெனையுன் னடிமையாய் புகுத்திக்கொள்க ஒளிரும்
பொன்னே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                      17

முருகனே மருந்தாய் அமுதமாய் அணிகலனாய் இருக்க

பிணியே னுக்கொரு மருந்தா யுனதுபுகழ் செப்ப
திணியே னுக்கொரு திருப்புக ழமுதமாய் அணியை
அணியேனுக் குன்னடியே அணிகலனாய் திகழ்க!
மணியே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                       18

முருகன் அருளால் மதியால் வித்தகனாகிட

இருளே சூழ்ந்த யென் வாழ்வை இனிதாக்கி
மருளே நீங்கி மதியால் வித்தக னாகிடயுன்
அருளே புரிக! அவனியி லுதித்த காரணப்
பொருளே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                      19


முருகன் அருளால் உலக சிற்றின்ப மாயை அகலிட

சித்தேது மறியேனை யுலக சிற்றின்ப மாயையில்
பித்தே பிடித்துழல செய்வது தகுமோ? பாராய்
வித்தேயாகி உயிர்களை படைத்துலகில் விட்ட நல்
முத்தே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                         20

முருகன் அருளால் எதிலும் வெற்றியே அடைந்திட

முற்றியே யெனதாக்கையும் பிணிப்பட்டு மூழ்காது
சுற்றியே வரும் வினைகளைச் சாடியுனது பதமலரை
பற்றியே உய்ந்திட தருக பேரருளொடு எதிலும்
வெற்றியே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     21


முருகன் அருளால் இன்முகவாழ்வும் புகழும் பெற்றிட

நிகழேற்றமுந் தாழ்வுமுடைய நேமி தனிலே
திகழேழ் பிறப்பிலுமுன் திருவடிக்கே தொண்டாற்ற
இகழேதுமிலா இன்முக வாழ்வொடு தருவாய்
புகழே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                          22

முருகன் அருளால் மணமாலையும் நன்மக்கட்பேறும் பெற

இல்வாழ்வில் இணையவொரு மணமாலையைத் தந்து
பல்வளமும் பெருகி பாங்குடன் வாழ வேண்டிய
செல்வமொடு சிறந்த நன்மக்கட்பேறுந் தருவாய்
சில்மிகுந் இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                       23


முருகனை இசையால் தொழும் ஆற்றல் பெற்றிட

தூற்றலே இலாதொரு திருத்தொண்டினை புரிந்துனை
போற்றலே பிறவியின் பயனென வாழ்ந்தெதிலும்
ஏற்றலே பெற்றிசையால் தொழுதிட ஈவாய்
ஆற்றலே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                      24

வரும் பகையை முருகன் அருளால் அஞ்சாது வென்றிட

பணிவேன் பலபதிகளிளுஞ் சென்று பாடியுனை
திணிவேனோ எனதுளே? வரும் பகை தீர
அணிவேலொடு வந்து நீ அஞ்சேலென நீடாய்
துணிவே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                       25

முருகன் அருளால் நீண்ட ஆயுளை பெற்றிட

காயுளே காணா பல்சுவையுங் கூட்டி வளருஞ்
சேயுளே மாறும் பருவமுஞ் சேர்த்து தோன்றா
வாயுளே உயிரையும் வைத்த நீ தருவாய் நீள்
ஆயுளே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                        26

முருகனே நோய்க்கு மருந்தாகவும் அமுதாகவும் இருக்க

சேயின் குரலை சங்கேதத் தாலறிந்து ஊட்டுந்
தாயின் கருணை யோடொத்த தயாவாகி வந்து
நீயின் னமுதாயும் மருந்தாயு மிருந்து நீடாய்
நோயின்மையே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                27

முருகன் அருளால் இருமையிலும் மறுமையிலுந் தொழுதிட

கருமை படாநெஞ்சோடு கடையேன் நின்கழலை
இருமையிலும் மறுமையிலும் விடாதிருகப் பற்றி
ஒருமையுடன் தொழ தருவாய் உன்னருளொடு புகழும்
பெருமையும்! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   28

 முருகன் அருளால் சுமையுங் குறையும் நீங்கிட

நிறைவோ டெதுவரினும் நினதரு ளாளேயென
கறையேன் கூறுங் கவிகளை களிப்புடனேற்று
பொறையிலாது பூமிதன்னில் வாழ தீராய் என்
குறைகளை! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    29

முருகன் அருளால் சோர்விலாத முயற்ச்சியும் வெற்றியும் அடைய

பெயர்ச்சி யிலாதொரு பேருவகையா லென்றும் யான்
அயர்ச்சி யிலாதுன் அறுமுக வடிவுக்குத் தொண்டாற்றி
உயர்ச்சி பெற்று எதிலும் வெற்றியே அடைய தருவாய்
முயற்ச்சியை! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   30


 முருகன் அருளால் திருக்கோயில்களில் உழவார பணி புரிந்திட

குளமே கெல்லியதில் கோகனகமு மிட்டெடுத்து
தளமே ஆய்ந்தழகொளிர் தாரும் புனைந் தர்ச்சித்து
உளமே நெகிழ்ந்துருகி பாடிடும்படி வழங்காய்
வளமே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                         31


முருகன் அருளால் மும்மலங்களை அறுத்து நலமே பெற

இலமே காரணமாய் இடர்ப்படுமிவ் வுடலெனுங்
கலமே உடைந்து போகாமுன் கூறிய மும்
மலமே அறுத்து மதலையொடு பரவ தருக
நலமே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                         32

 முருகன் அருளால் இழுக்கு அகன்று நல்ஒழுக்கமொடு வாழ

வழுக்குமே என்றுயான் வகையறியாது செய்தது
பழுக்குமே ஒருநாள் என்றிருந்தேனுன் பார்வையால்
இழுக்குமே எனக்கென்றும் வாராது ஈவாய் நல்
ஒழுக்கமே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     33

முருகன் அருளால் நினைத்த மணமாலையை பெற

வாலையில் என்றும் வறுமையில் வாடாவண்ணம் நீ
ஆலையில் திரளுமரு ளமுதமாய் வந்து எனது
காலையில் வளமுற தருவாய் கோறிய மண
மாலையே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     34

முருகன் அருளால் குழந்தை செல்வம் பெற

நிழலையே உருவாக கொண்ட நிழலோனை தகித்த
தழலையே உருவாக கொண்ட தளிர்மிகு முனது
கழலையே தொழுதேன் கண்ணோக்கி யருளுக வொரு
மழலையே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     35


முருகன் அருளால் துன்பங்கள் நீங்கி திருவடியில் இன்பமுற

ஒன்பது துளையொடான ஒழுகும் பாண்டந் தினமுந்
தின்பதும் துயில்வதுமே யொழிய உன் திருவடியின்கண்
இன்பமுற எண்ணியதில்லையே! இந்நிலை நீக்காய் வருந்
துன்பமொடு! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    36

வரும் பழிச்சொற்கள் முருகன் அருளால் நீங்கிட

அரும் பாடுபட்டு சேர்த்த பொருள் அங்கத்திற்காகா
பெரும் பழிபட்டு போனதே! பேதையேனுக்கு
வரும் பழிச்சொற்களை அறுத்துரிய வழிகாட்டுவாய்
உருந் தவிர்க்கும் இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                37

முருகன் அருளால் நோய் துக்கம் நடுக்கம் நீங்கிட

பனிமையால் யெனதாக்கையு மிப்புவியில் பாழ்பட்டு
குனிமையால் கூனிகுறுகி போகாதுன் வேலின்
நுனிமையால் காத்து யென்றும் நீடாய் ஈடிலா
இனிமையே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    38

முருகன் அருளால் குற்றம் பொறுத்து வருந் தீமை அகன்றிட

ஏதுமறியா சிறியேன் செய்குற்றம் பொறுத்து வருந்
தீதும்வழி மாறிட வல்லதோர் வரந் தருவாய்!
மாதுபாகர் கேழ்க மடிமீதமர்ந்து மறை
ஓதிய குமரா! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   39
  
முருகன் அருளால் கேது கிரகத்தால் இடர் வராதிருக்க

மிகசங் கடனாகி மண்மேலு ழலுமடி யேற்கு
அகசனார் வந்து இடரிழைக்கா வண்ணங் காத்து
சுகசௌ பாக்கியமருள சிகியேறி வருக
குகசண்முக! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     40

முருகன் அருளால் சுவாசகலையை யோகத்தால் உருவேற்றிட

செக்கினில் எள்ளென சிதையுமிவ் வாக்கையை சொல்லிய
அக்கினி கலையால் உருவேற்றி யுனதடியே
புக்கிடச்செய பரிவாக வோர்சொல் பகர்வாய் எண்
திக்கிலும் புகழ் இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                  41

முருகன் தயவால் இவ்வுலகில் வேண்டியதை பெற்று வாழ

ஆமாறொன்று மறியேன் யான் அவனியில் வாழ
போமாறெனைப் போகவிட்டு பார்பதுஞ் சரியோ?
தாமாறு தயவை வேண்டினேன் பலமுறை யெனக்
கீமாறு வருக இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    42

முருகன் அருளால் நினைத்தது யாவுங் கைகூட

வினைத் திரளுமொரு பிறவியுமினி வேண்டேனே!
உனைத் தினந்தொழு தொழுகுமுயரிய பத்திமையோடு
நினைத்தது யாவுங் கைகூட நீடுக யுனதருளை
புனைத் திரளுமொரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!             43

முருகனால் புலனாசை,பகை,நோய்,வினைபிறவி யாவுமற்றிட

அடக்கும்படி ஐம்பொறி களொடு அவாவினையும்
முடக்கும்படி வரும் பகையொடு மூளும் நோயையும்
கடக்கும்படி வினையொடு இப்பிறவியையும் கண்பார்க்க
நடக்கும்படியே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                  44

முருகனே உயிர்க்கு ஆதாரமாயிருந்து மாகாரியம் புரிந்திட

வீகாரியம் புரிந்து வசையும் பட்டுழலாது
மாகாரியம் புரிந்து மண்மேல் வளமொடு வாழ
ஆகாரிக் குரிய ஆதாரமாய் இருப்பாய்!
ஓகாரமே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                       45

முருகன் அருளால் உடல் உறுப்புக்கள் பழுதடையாது காக்க

அவ்வினையால் வந்தடைந்த இப்பிறவியி லாக்கையும்
ஒவ்வா தனைத்து உறுப்புக்களும் பழுதடையும் போது
எவ்வாறுன் பணி இயற்றுவேன் சற்றே நோக்குக!
இவ்வேழையை! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                 46

முருகன் அருளால் பிறவிஎனுஞ் சேற்றை கடக்க

சங்கடமுற்ற இக்கடந்தான் சகதியி லுழன்றுமே
இங்கண் கண்டதொன்று மிலையே மாறாக யுனது
பங்கய முகத்தழகும் பாதமுங் காண அருளுக!
மங்கலமே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                      47


முருகன் அருளால் முதுமையில் நற்பயன் அடைய

அகவையுமேறி அறுபத்தோ டைந்து மானதே
இகமதில் இதுகாறும் யான் எவ்வித பயனையும்
சுகமொடு அடைந்திலனே! சிறியேனை பாரும்
குகனே! குமரா! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                  48

முருகன் அருளால் ஞான அறிவை பெற்றிட

மண்ணினில் பிறந்து மயக்கமுற்ற மதியிலி யெனைமுன்
பண்ணிய கருமம் பரவி யலைத்து பாதிக்காதுன்
திண்ணிய வேலால் தீட்டி தருக ஞானமொடு
நுண்ணிய அறிவை! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!              49

முருகன் அருளால் உடல் பிணியற்று கருதிய செயலாற்ற

ஆயதனந் தொழுதுன் அருளைப் பெற்றுய போதிய
காயமும் பிணியற யுழன்று கருதிய தாற்ற
நேயமொடு வருக! நீலமயி லேறிய
தூயனே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                         50

முருகன் நாமங்களை மாலையாக பாடிச் சாற்றிட

ஆர்த்தலொடு பழியும் பாவமும் நிறைந்த அவனியில்
ஈர்த்தெனை யுன்திரு நாமங்களை இசையால் செப்பி
கோர்த்து மாலையா யுனடியிற் சேர்க்க திருக்கண்
பார்த்திடுகவே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   51


`முருகன் புகழை பார்த்துங்,கேட்டுங்,கற்றும்,உருகி பாடிட

காண்டுங் கேட்டுமுன் புகழையே கற்றுமுருகியும்
ஈண்டும் பாடுவதலாது வேறொன்று மறியேனே!
ஆண்டெனை யுன்னடிக்கே தொண்டு புரிய தருகவே
வேண்டியதை! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   52

முருகனை மனதுள் காணும் அருள் பெற்றிட

பூணும் பொருளுஞ் சேர்த்து போதாதென புவியில்
ஊணும் ஒழியாதுடலை பெருக்கி ஊறுமடைந்து
நாணும் ஒருவாழ்வை நீக்கி நீடுக என்னுள் உனைக்
காணும்படியே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   53

முருகன் அருளால் தியானத்தால் இவ்வுடம்பை ஒளியாக்க

அம்பரந்தனில் பரவிய அநிலமதை உள்ளடக்கி
கும்பரந்தனில் புரியுங் கலையறிந்து காயந்தனை
உம்பரென யொளிபெற கூட்டுகயுன் திருவருளை
எம்பரமே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                        54

முருகன் அருளால் தீரா பிணிகள் தீர்ந்திட

போராடி வாழ்நாளை போக்கியுமென் முதுமையில்
ஓராங்கு என்னோ டுறைந்து வாட்டி யெடுத்திடுமித்
தீராப் பிணியுந் தீர பார்க்க லாகாதோ?
பாராய் திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     55

  
முருகன் அருளால் பாம்பின் விஷம் ஏறாதிருக்க

எகினமொத்த இருமாதர் புடைசூழ சிங்கார
சிகியேறி வந்துன் [சீ]கூரிய வேலால் தீண்டிய
அகிபேநம் ஏறாதருள்வாய் சொல்லிய மறையில்
சுகிர்தா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    56

இவ்வுடல் அழியாமுனரே முருகன் அருள் பெற்றிட

ஐந்தொடு ஈரிரண்டு தொளையு மடங்கா கரிகளுங்
கையிரண்டும் உலையொடு குடமுந் தாங்கிய காலும்
பையுறை பவனமா யுடையாமுன் அருளுக! கௌரி
மைந்தனே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                      57

   
முருகனின் கருணையை பெற்றிட

நணாது போகுமோ நின் கருணையும் நாயேனுக்கு
பணாகரம் பிடித்த பரிமேல் வந்து கூறாய்
குணாதிசயங்கள் பலவுஞ் செயவல தெய்வகுஞ்சரி
மணாளா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   58

முருகனின் திருவடி பேற்றை அடைந்திட

விழலுக் கிறைத்த நீராய் போனதே யென்வாழ்வும்
முழங்கியு மழுதும் முறையிட்டேனே என்றுன் கருணையுங்
கழலுங் காட்டி கடையேனை யாள்வாய் குறிஞ்சி
கிழவனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                  59

  
பிரமன் எழுதிய விதியின் துயரை முருகன் அருளால் மாற்றிட

அண்டசன் விதியாலரிய துயரொடு வாழுமிந்த
பண்டமும் பாழ்பட்டு பயனற்று போகாதருளுக!
கண்டமதில் கடிவிடமடக்கிய காருண்யர் தந்த
சண்முகா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                  60

முருகனுடைய பாதாரமே ஆதாரமாய் இருக்க

சேதாரமே பெற்றென் வாழ்நாளுங் கடந்ததே!
பாதாரமே கதியென்றிருந்த யெனக்கு நீதான்
ஆதாரமே! கைவிடா தருள்க தெய்வமங்கையின்
நாதா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                      61

முருகன் அருளால் இவ்வுடல் நான்கு பருவங்களிலும் நலியாதிருக்க

தோலாகிய கூரையில் துதைந்து சிதைந்து யான்
நாலாவுரு வொடுமாறி நலியுமு னருளுக!
சூலாயுதன் நுதற்றீ யுதித்து வேலாடிய
வேலா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     62

முருகன் அருளால் இவ்வுடல் சிவம் ஊறி ஞானம் பெற்றிட

படம்மாற்றி பலகுடில் புகுவது அறுத்து னடியில்
இடம்பெற் றுய்ந்திட ஏதுவாகிய இச்சிறியேன்
உடம்பினில் சிவமூறிய உயர்ஞான மருள்வாய்!
கடம்பா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    63


முருகன் அருளால் யமன் வருமுனரே ஞானவடிவை பெற்றிட

விந்ததி லொருபது திங்களுமூறி வெளியில் வந்து
பந்தமொடு பலநாள் உழன்ற இவ்வாவியை வாங்க
அந்தகன் வருமுனரே அருளுக ஞான வடிவை
கந்தனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    64

முருகன் அருளால் குறைகள் நீங்கி ஆண்டுகொள

நாள்பலவுங் கழிய நயந்துனை நான் வேண்டியுமுன்
தாள்பணிந்துங் கூறினேன் குறைகளை தீர்த்தெனை
ஆள்வதுன் கடனேகாண் ஆறுமுகவா! வள்ளிக்
கேள்வனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                 65

முருகன் அருளால் நோயும் வறுமையுந் தீர்ந்திட

நித்தியமென்முன் நிற்கும் நோயும் வறுமையுந் தீராய்
அத்திமுகன் துணையொடு அடவிதனில் ஆயலோட்டி
மெத்தி குதிகொண்ட குறமானை மணம் புரிந்த ஞான
சத்திதரனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                 66


முருகன் அருளால் காலனிடங் கலங்காது காத்திட

காலாயுதன் கையில் கலங்கா முனெனை காவாய்
வேலாயுதம் ஏவி கிரௌஞ்சம் பிளந்த வெற்றியை
மாலாகிய கண்ணனும் மகிழ்ந்து மெச்சிய பவருச
சீலா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                       67
  
முருகன் அருளால் வறுமையும் நோயும் நீங்கி நலம் பெற்றிட

இலம் நீங்கி நோயறுத்தோர் இங்கித வாழ்வொடும்
நலம்பல பெற்று நானிலத்தில் நினைத்தது கூடி
தலம்பல தரிசித்துனை பாடயருளுக தண்டையணி
சிலம்பனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                 68

முருகன் அருளால் பிறவி கடலை நீந்தி கரையேற

ஏந்தலிலா இப்பிறப்பினில் யானும் பிடிப்பட்டு
மாந்தரொடு மக்களும் மனையுமான வாரிதியை
நீந்தவழி யொன்று மறியேனே! வகை நீடுவாய்
சேந்தனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                  69

முருகன் அருளால் வேண்டியப் பொருளை வேண்டியபோது பெற

வெவ்வினையா லிடர்ப்பட்டு வாழுமென் வாழ்வில் வேண்டும்
அவ்வேளைக் குரிய பொருளை தந்து அருள் புரிவாய்!
எவ்வளவோ அசுரரை கொன்ற ஈடிலா வேலுடை
செவ்வேளே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                70

முருகன் அருளால் வருமையுந் துன்பமும் நீங்கிட

தாங்க முடியா வறுமையுந் துன்பமும் வரும் போழ்து
ஆங்கெனக்கீவது முள்ளதோ? கூறாய் யெங்கும்
ஓங்குபுகழ் மாமறையில் உன்னத பொருளான
காங்கேயா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                 71

  
உடல் ஒடுங்கி இயங்காத போது முருகன் அருளால் காத்திட

கட்டிய கூட்டில் காலத்தால் படும் பல நோயால்
இட்டிமை கொண்டு இயங்காத நிலை வந்தெய்தும் போழ்து
கொட்டிய மணிபோல் ஒளிவீசி வந்தெனை காவாய்!
செட்டியே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                  72

முருகன் திருநாமம் நாவால் உரைத்து குறை களைய

கோலாகாலமாய் வந்தென் குறை களைவா யென்று
தாலாலுன் நாமந் தவறாது ரைத்தேன் பாரும்
ஆலால முண்டோன் அருளிய சிவ கார்த்திகை
பாலா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                      73

முருகன் அருளால் இவ்வுயிர் அவனை சிந்தித்து உய்ந்திட

நிசாவும் பகலும் பொருளைத் தேடி திரிந்துலகி லுன்னை
உசாவு லிலாத இவ்வுயி ருய்ய அருள் புரிக!
திசாமுகனை பிரணவ பொருள் வினவி தளையிட்ட
விசாகா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    74

முருகன் அருளால் ஆறுமுக தரிசனம் பெற

காரணமாய் குவலயம் புகுவித்த யெனை யுனது
ஆரமுதமான ஆறுமுக வடிவை காணும்
பேரருளை தாராயோ சொல்? கிரௌஞ்சம் பிளந்த
தாரகாரியே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     75


இவ்வுடல் படுந்துயரமும் இருவினையும் முருகனால் அகன்றிட

சருகாகி யுதிருமிச் சரீரம் படுந் துயரொடு
இருவினையுங் களைந்துனிரு தாளில் வைப்பா யரிய
பொருளுரைத்து சிவனாரை மகிழ்வித்த பிரணவ
குருபரா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    76

முருகன் அருளால் வினை பெருகாமல் பெருவாழ்வு பெற்றிட

ஒருகாலும் மறவாதுனை வேண்டினே னென்வினை
பெருகாதறுத்து பெருவாழ்வு தந்து என்செயலுக்கு
தருகாவலா யிருந்து துணை நிற்பாய் ஆதி
முருகா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    77

முருகன் அருளால் முடிவிலாத நோயும் வறுமையும் நீங்கிட

தறுகனுடைய இத்தாரணியில் யானும் வந்துதித்து
சிறுமையாற் குறுகி சிதைந்துண்டு போனேன் நீயும்
இறுதலற்ற யெனிடர் களைய வருவாய் அழகொளிர்
அறுமுகா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                  78

உடல் மண்ணை அடையும் போது முருகனடியில் சேர்த்திட

துயில்கொண்டிவ் வாக்கையுந் திணையிலணையும் வேளையில்
குயில்கூவ யுன்கோயில் திருமணி யொலிக்க நீயும்
அயில் கொண்டு வந்து உன்னடியினில் சேர்த்திடுக நீல
மயில்வாகனா! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   79

  
முருகன் அருளால் செவ்வாய் கிரகத்தால் வரும் இடர் நீங்கிட

அரத்தனால் வருமிடரை நீக்கி அவனிதனில்
இரத்தலிலாது வாழ இச்சிறியேனை சற்றே
சிரத்தையொடு நோக்கிடுக! சூர்துணித்த ஆறிரு
கரத்தோனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                80

வழி ஒன்றும் அறியா வேளையில் முருகனே ஆதரவாய் இருக்க

வரும் வறுமையில் வழியொன்று மறியாது நிற்குமத்
தருணமதில் தமியேனுக் காதரவா யிருந்து
கருணை புரிக! ககனமளந்த கரிய மாலோன்
மருகா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     81

முருகன் அருளால் இனி வருங்காலம் நன்றாய் அமைய

இழந்ததே யல்லாது யான் பெற்றதேது மில்லை
உழன்றே போனதென் காலமும், அருள் செய்குவையோ?
அழகெலா மோருருவாய் வந்தம்புயத்தில் தவழ்ந்த
குழகனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   82

வாழ்நாள் முடியும் முனரே முருகன் திருவருளை பெற்றிட

உதிக்குங் கதிரவனை ஒவ்வொரு நாளுங் காணும்போது
விதித்த யென்நாளும் ஒவ்வொன்றாய் குறையுதே நீயும்
அதியற்புதமாய் வந்து என்றுதான் அருள் புரிவாய்?
நதிபுத்திரனே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    83
  
முருகன் திருப்பாதங்களை இறுகப்பற்றி இடர் களைந்திட

ஆனாலு மித்தனை இடர்களாகா தய்யா யென்
ஊனாலும் பிற உயிராலு முறுகண் வந்தாலும்
போனாலும் உன்பாதம் விடுவதாயில்லை தேவ
சேனாபதயே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    84

   
முருகன் அருளால் பிழை பொறுத்து உய்வு பெற

செடியேன் பலபிழையே செயிதிருந்தாலு முலகில்
மடியேன் பலமாலைக ளுன்னடிக்கே தொடுக்காது!
அடியேனு முய்ந்திட அருட்கண் நோக்கிடுக குக்குடக்
கொடியோனே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   85

முருகனால் விதியை மாற்றி அருள் புரிய

ஆவதெல்லாம் விதிப்படியே ஆயின் அவ்விதியை யுன்
ஏவலால் மாற்ற லாகாதோ? சொல்வாய் என்
நாவது கொண்டு நயந்துறுகினேன் நலமருள்வாய்
பாவகியே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                       86

முருகனே உலகில் ஆதரவாய் இருந்து இடர் களைய

இரவொடு பகலு மின்னல்கள் தொடர்வதே யல்லாது
பரவிய வுலகிலுனை யன்றி பார்ப்பா ருளரோ?
அரவணைத் தருள்பொழிய வருவாய் பொய்கையி லுதித்த
சரவணா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   87


முருகனே வாரா வழிக்கு வந்து கருணை புரிய

ஊராரு முற்றாரு முடனாகிய பொருளும்
வாரா வழிக்காகுமோ? உன் கருணை யலாது
ஈராறு கரங்கொண்டு சூரனை யிருகூறிட்ட
தீரா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                        88

முருகன் புகழை நாவால் பாடி உய்ந்திட

நாவலாதுன் புகழ்பாடி நற்கதி யடைய வேறு
ஆவலா லடைந்திட இயலுமோ? இவ்வுயிருமுன்
ஏவலால் அத்திறனை பெற்றுய்ந்திட இனியருளுக!
சேவலா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   89

முருகன் அருளால் வறுமை, பிணி, குறைகள் நீங்கிட

காயமொடு பாடுங் கல்வி யறிவும் புகுத்திய நீ
நேயமொடு யென்வறுமை பிணியை யொழித்தா யிலையே!
தேயயென் குறைகளுந் திருவருள் புரிக குறவள்ளி
நாயகா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     90

முருகனே ஆதாரமாய் இருந்து பிணி களைய

போதா வினையால் வந்த பிணியை பொருதி களைய
ஏதாகிலும் வழியைக் கூறி இருப்பாய் நீயே
ஆதாரமாய்! அயனைக் குட்டி யவன்பணி செய்த
வேதா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     91

  
முருகன் அருளால் வாயுவை உள்ளடக்குங் கலை அறிய

உலைவாய் மூடிதிறந்து வாயுவை யுள்ளடக்கி
கலைவாய் அறிந்து கருத்திலுனை யிருத்த அருளுக!
அலைவாயுகந்து அசுரர் குலமழித்த அமரர்கள்
தலைவா! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   92
           
இவ்வுடம்பு அழியும்போது முருகன் திருவடியில் சேர்ந்திட

பொல்லேன் கொண்டயிப் புட்கலம் செயலொழியும் நாளரிய
வல்லே னாயினுமவ் வேளையில் வந்து கதியேதும்
இல்லேனை இணையடியில் சேர்ப்பாய் ஏட்டிலுறையுஞ்
சொல்லே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                  93


முருகன் அருளால் விதியை வென்று வற்றாத செல்வம் பெற்றிட

சில்வதும் சிவந்ததுமான நின் தண்டையணி பாதங்களை
கல்வதோடு கவிகள் பாடவும் வைத்த நீயென் விதியை
வெல்வதற்குரிய வழியுங் காட்டி தருக வற்றாத
செல்வமே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                 94

முருகன் உருவமதை உள்ளத்தில் நிறுத்தி பாட

ஓயேன் ஒருநாளுமுன் கழலை பாடாது
வேயேன் உனையன்றி வேறொரு ருவமெ னுளமதில்
நாயேன் இவை பெற்றிட நீ அருளுக மலைமகள்
சேயே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                     95

  
முருகன் அருளால் இவ்வுலக மாயையிலிருந்து விடுபட

அழுந்தி கிடக்கு மிவ்வுலக மாயையி லடியேனுனை
தொழும்படி வைத்து எனுளமதை நின்திருக்கை வேலால்
உழுது செப்பனிட்டு இணையடிக்கே கொள்க சிவனார்
கொழுந்தே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                 96

 முருகன் அருளால் ஞான திருவடி பேற்றை பெற்றிட

ஈனசீழ் நிணமொடு எலும்பையுங் கோர்த்து சதையால்
ஆனயிவ்வுட லிடர்ப்பட்டு பிணிப்பட்டு வேகாமுன்
ஞான திருவடி பேற்றை நீடுகவே! உத்தம
தானனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   97

முருகன் அருளால் குற்றம் நீங்கி அடியாரொடு சேர

ஏதமே யான் புரிந்திருப்பினுந் தாயென பொறுத்துன்
பாதமே நல்கி பணியு மடியாரொடு கூட்டுக!
வேத நாயகனுக்கே வேதமுரைத்த சுவாமி
நாதனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    98

முருகனே வழித்துணையாய் வந்து வரும் ஆபத்தை நீக்க

நீப மலரிட்டு நின் தாளுக்கு நிதந் தூபமொடு
தீபமும் வைத்தேன் நீ வழித்துணையாய் வந்து வரும்
ஆபத்தை நீக்கி காத்து அருளுக! ஓங்கார
ரூபனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                    99

 முருகன் அருளால் வறுமை நீங்க பொருள் பெற்றிட

ஆதரவற் றடியேன் அவனியில் படுந்துயரொடு
பூதரமென சூழும் வறுமையும் நீங்க பொருளை
நீதர வேண்டும் ஞாலம் வலம் வந்த இபமுகச்
சோதரனே! இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                      100

முருகனை பாட இசைஞானமும் குரல்வளமும் பெற்றிட

உலவவந்த யிவ்வுலகிலுன் கழற்கு கவிகூறி
சொலவல சொற்களோடு பாடும் போழ்து குரல்வளம்
நிலவ தருகவே இசைஞானம்! சகல கலையறி
புலவனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                  101
                
முருகன் அருளால் துஷ்ட்டரொடு சேராதிருக்க

பாசாங் கிலாத யுன்னடி யாரொடு பரவாது
தூசானேன் மண்ணில் கூடா துட்டரொடு கூடி
மாசானேன் இவனையு மேற்பாய் மறையுரைத்த
ஆசானே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   102

முருகன் அருளால் இகழ்வுந் தாழ்வும் அடையாதிருக்க

ஏளனமு மேசலுமே பெற்றிறுகி போனயென்
நாளது கழிந்து நாடிய தேதுமிலை இவனை
ஆளவும் வருக அவுணரை யழித்த ஈராறு
தோளனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                  103
  
முருகன் திருநீற்றை பூசி வரும் பகையும் வினையும் ஒழிக்க

கேசவன் மருகா! கந்தா! கடம்பா! யென்று சொல்லி
பூசயுன் திருநீற்றை வரும் பகையொடு வினையும்
நாசமடைய செய்வாய்! நவநாதர் புகழ் இமகிரி
வாசனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   104

காலன் வரும்போது சண்முகா எனக்கூறி முருகனடி சேர

கரிய காலனும் வந்திவ்வுயிரை கவரும் வேளையில்
சரிய இச்சரீரமும் சண்முகா என்றிட நீயும்
அரிய உன்னடியி லடியேனை வைத்திடுக! அம்பிகை
பிரியனே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                   105

முருகன் அருளால் பாடிய கவிகளை ஏற்றுக்கொள்ள

ஈன்றவர் விட்டேகிய பின் அடியேன் இவ்வுலகில்
ஊன்றிய கவிகலனைத்து முன்னடிக் கேற்பையோ? சொல்
கீன்ற சூரன்தனை கலாபமாக்கிய ஐமுக
தோன்றலே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!                106

முருகன் அருளால் யமன் இவ்வுடலை அணுகாமுன் ஆட்கொள

நரம்பொடு கூடியநாறு முடலெடுத்து  நாளும்
உரம்பட வளர்த்து ஒருநாள் கூற்றுக் கீவதை யுன்
கரங் கொடுத்தேற்றி நின்கழற் காளாக்கிடுக! சிவ
பரம்பொருளே! திரு இரத்தினகிரி வாழ் இரத்தினமே!              107


இரத்தினகிரி மாலையை ஓதுவார்கள் அடையும் பயன்

எண்டிசையும் போற்றி தொழுமெந்தை இரத்தினகிரி வாழ்
அண்டர் தலைவனை ஆரணியடியார்க் கடியவன்
பண்டை வினையற பகன்ற பாக்கள் பத்தாறொடாறெட்டுங்
கொண்டாடி கூறவலர் குறையற வாழ்வரினிதே!                 108


              திருச்சிற்றம்பலம்


                  







 


   






 



  

  





   
   


   












                                                               



      

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai