தென்பெண்ணேச்சுரர் ThenPennechurar 2


 
அன்றாலமர் அண்ணலை ஆதியான அரனை
சென்று தொழுது சுற்றி உருகிச் செங்கணே!
என்று கொண்டாடி அருளை பெறாமலழி வேனோயுன்
துன்று பொற் கழல் சேர்வ தெக்கால மறியேனே!


அன்று ஆல் அமர் அண்ணலை ஆதியான அரனை
சென்று தொழுது சுற்றி உருகிச் செங்கணே!
என்று கொண்டாடி அருளை பெறாமல் அழிவேனோ உன் 
துன்று பொற் கழல் சேர்வது எக்காலம் அறியேனே!

அண்ணல் :- வணங்க தக்க,  ஆதி – மூலம்,  முழுமுதல்,  அரன் – சிவன், 
செங்கணே - சிவந்த கண்,  துன்று - ஒன்று சேர்ந்த,  கழல் - திருவடி

பொழிப்புரை:-

அன்று ஆல மரம் (கீழ்) அமர்ந்த வணங்க தகுந்தவனை மூலமாகிய சிவனை 
சென்று வணங்கி வலம் வந்து உருகிச் சிவந்த கண்களையுடையவனே 
என்று புகழ்ந்து அருளை பெறாமல் அழிவேனோ உனது
ஒன்றாக சேர்ந்த பொன்னார் திருவடியை சேர்வது எப்பொழுது (என்று) அறியேனே! 

கருத்துரை:- 

அன்று ஆலமரங் கீழே அமர்ந்து சனகாதிய முனிவர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் எனும் நால்வருக்கு உபதேசித்தருளிய வணங்குவதற்குரிய இறைவனாக மூல முழுமுதற் பொருளாய் திகழ்பவனை சென்று வணங்கி உளம் உருகி வலம் வந்து சிவந்த கண்களையுடையவனே என்று புகழ்ந்து போற்றிக் கொண்டாடி அவன் அருளை பெறாமலேயே யான் இவ்வுலகில் அழிந்து போவேனோ! உனது ஒன்று சேர்ந்த பொன்னொளி வீசுகின்ற திருவடிகளை சேர்வது எப்போது என்று அறிய மாட்டேனே!

திருத்தலப் பெருமை:-

சுவாமி     - பெண்ணேச்சுரர்
     
அம்பாள் -  வேத நாயகி

தலம்   -        பெண்ணேச்சுரமடம்.

தீர்த்தம்   -   பெண்ணையாறு
     
விருட்சம் -   பனை மரம்

வழிபட்டோர் -  சோழர்கள்,  ஹொய்சளர்,  நுளம்பர்,  விஜயநகர மன்னர்கள்.

பாடியவர்கள் - திருஞானசம்பந்தர்,  அப்பர்,  ஆரணியடியார்க்கடியவன்

நூல்                    - லிங்காட்சர மாலை, பெண்ணேச்சுரர் மாலை

வழிபடும் பலன் - நாக தோஷ நிவர்த்தி,  புத்ர பேறு, மணமாலை, காரிய சித்தி, வெற்றி.

வரலாறு - இத்திருக் கோயில் 1200 வருடங்களுக்கு முன் பழமையானது என இங்குள்ள பல கல்வெட்டுக்கள் மூலம் அறிய வருகிறது. 13 - ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் மடம் என்று அழைக்கப் பட்டுள்ளது. மூன்றாம்  குலோத்துங்க சோழன், மூன்றாம் இராஜ இராஜன், ஹொய்சள மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், நுளம்பர்கள், சேர மன்னர்கள் ஆகிய பல மன்னர்களால் திருப்பணி செய்யப் பட்டுள்ளது என்பதை இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது.

இத் திருக்கோயில் தென்பெண்ணை யாற்றங் கரையில் 7-நிலை இராஜ கோபுரத்துடன் தெற்கு நோக்கியவாறு திகழ்கிறது. கருவறையின் உள்ளே பெண்ணேச்சுரர் கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறார். சுவாமிக்கு
பெண்ணேச்சுர நாயனார், பெண்ணேச்சுர நாதர் என்ற திருப்பெயரும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. வேதநாயகி அம்பாள் ஈசானிய மூலையில் வேதங்களை முனிவர்களுக்கு கற்றுக் கொடுத்தாக வரலாறு. சுவாமி இங்கே பெண்ணை யாற்றங் கரையில் பனை மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றியதாக வரலாறு.

கோயில் உள்ளே பிராகாரத்தில் சங்கடஹர கணபதி வீற்றிருந்து பக்தர்களின் சங்கடங்களை தீர்க்கிறார். இங்கு பைரவருக்கு நாக பைரவர் என்ற பெயர். நாகம் சிரசுக்கு மேலே குடை பிடிக்க கீழே நாய் இல்லாமல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அஷ்டமி, நவமி நாட்களில் இவருக்கு பூசை செய்து வணங்கினால் நாக தோஷம் விலகுவதாக ஐதீகம்.

பிராகாரத்தில் அற்புத லிங்கம், ஆனந்த லிங்கம், மங்கல லிங்கம், ஐஸ்வரிய லிங்கம், பூரண லிங்கம் போன்ற லிங்க திருமேனிகள் அமைந்துள்ளன.

ஒவ்வொரு மாசி மாதத்திலும் மக நட்சத்திரத்தில் சூரியன் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் வந்து கருவரையில் சுவாமியின் திருமேனியில் விழுவதை பார்க்கலாம் . 
மற்றும் பிராகாரத்தில் இராமன், லஷ்மணன், சீதை, அனுமன், சப்த கன்னியர்கள் அருள் பாலிக்கிறார்கள்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பக்தர்கள் இங்கே திருக் கோயிலுக்கு எதிரேயுள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வருகிறார்கள் .

மூன்றாம் குலோத்துங்க மன்னன் முதலில் சமண மதத்தை பின்பற்றியுள்ளான் பிறகு சைவத்தை பின்பற்றியுள்ளான். அதனால் எதிர்த்த சமணர்களை வென்று வந்தால் பெண்ணேச்சுரருக்கு கோயில் கட்டுவதாக பிரார்த்தனை செய்து கொண்டு அவர்களை அழித்த பிறகு இத்திரு கோயிலை கட்டியுள்ளதாக வரலாறு.

இத்திருக்கோயில் சோழர்கள் காலத்தில் நிகரிலி சோழ மண்டலம் விடுகாதழகிநல்லூர் என்று அழைக்கப் பட்டுள்ளது. நுளம்பர்கள் காலத்தில் நுளம்பாடி என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் ஹொய்சளர்கள், நுளம்பர், விஜயநகர மன்னர்கள் ஆண்டுள்ளார்கள் .இங்குதேவார பாட சாலையும் இருந்துள்ளதாக கல்வெட்டுகள் கூறுகிறது.

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai