சிவகிரிநாதேச்சுரர் மாலை விரிவுரை SivagiriNathechurar Malai ViriUrai


திருச்சிற்றம்பலம்

அருள்மிகு சிவகிரிநாதேச்சுரர் மாலை

சுவாமி       சிவகிரிநாதர்.
அம்பாள் –  இளங்கிளி மொழியாள்.
விருட்சம்   பவழ மல்லி.
தீர்த்தம்     சரவண பொய்கை,  சிவகிரி தீர்த்தம்.   

காலங்கள் பல நகரச் செய்தானை தன்னை நிதங்
   கண்குளிர காண்பாரைக் காட்டுவித்தானை
கோலங்கள் பலக் கொண்டு கோரினார்க்கருளிட
   குறுகியே சென்றானை கோமகனு மருச்சித்த
ஆலமுமத்தியு மடர்ந்திடும் ஈசன் மலையில்
   அழகொளிருமிளங்கிளி மொழியாளுடன் வந்த
சீலனைச் சித்தனை சிவகிரி நாதேச்சுரனை
   சிந்தித்து வணங்கிட யவனியிலினிதிருப்பீர் ! (1)

காலங்கள் பலநகரச் செய்தானை தன்னை நிதங்
   கண்குளிர காண்பாரைக் காட்டு வித்தானை 
கோலங்கள் பலக் கொண்டு கோறினார்க்கு அருளிட
   குறுகியே சென்றானை கோமகனும் அருச்சித்த 
ஆலமும் அத்தியும் அடர்ந்திடும் ஈசன் மலையில்
   அழகு ஒளிரும் இளங்கிளி மொழியாள் உடன் வந்த 
சீலனைச் சித்தனை சிவகிரி நாதேச்சுரனைச் 
   சிந்தித்து வணங்கிட அவனியில் இனிது இருப்பீர்!

கோமகன் – இந்திரன்,  குறுகி – சுருங்கி,  கீழ் இறங்கி, 
சீலம்  நற் குணங்கள்.

கருத்துரை - இவ்வுலகில் அன்றிலிருந்து இன்றுவரை நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்துச் செல்ல செய்தவனை தன்னை தினங் கண்குளிர தரிசிப்பவருக்கு காட்சி தருபவனை, வேண்டுவாருக்கு அருள் புரிய பல வேடங்களைத் தாங்கி கீழ் இறங்கிச் செல்வானை, தேவலோகத்தை ஆளும் இந்திரனும் வந்து அருசித்த,
ஆல மரமும், அத்தி மரமும் அடர்த்தியாக வளர்ந்துள்ள ஈசன் மலையில் அழகு மிகுந்து ஒளிவீசும் இளங்கிளிமொழியாள் எனுந்திரு நாமங்கொண்ட அம்மையோடு வந்த நல்ல குணம் வாய்த்தவனை சித்துக்கள் பல புரிபவனை, சிவகிரிநாதேச்சுரன் எனும் திருப்பெயர் கொண்டவனை மனதில் தியானித்து வணங்கினால் இவ்வுலகினில் இன்பமாய் வாழ்வீர்கள் !

நாவதனில் நாள்தோறும் நமசிவயமேற்றிடும்
   நல்லாரை நாடுவனை நன்னெறியால் நீரொடு 
பூவதனைக் கொண்டன்று ஆட்டுவித்தார்க்கு
   புண்ணியங்கள் பலவுஞ் சேர்ந்திடச் செய்தானை 
நாவலும் நன்னீரும் பெருகிடுமீசன் மலையில்
   நளினமிகு இளங்கிளி மொழியாளுடன் வந்த 
தேவ தேவனைச் சிவகிரி நாதேச்சுரனைத்
   தொழு துளமுருகிட வரும் துயரங்களொழிப்பீர்! (2)   

நாவு அதனில் நாள்தோறும் நமசிவயம் ஏற்றிடும்
   நல்லாரை நாடுவனை நன்னெறியால் நீரொடு
பூவு அதனைக் கொண்டு அன்று ஆட்டுவித்தார்க்கு
   புண்ணியங்கள் பலவுஞ் சேர்ந்திடச் செய்தானை 
நாவலும் நன்னீரும் பெருகிடு ஈசன் மலையில்
   நாளினமிகு இளங்கிளி மொழியாளுடன் வந்த 
தேவ தேவனைச் சிவகிரி நாதேச்சுரனைத்
   தொழுது உளம் உருகிட வருந் துயரங்கள் ஒழிப்பீர்!

ஆட்டுவித்தல் - அபிஷேகம் செய்வித்தல்,  நளினம் - ஒய்யாரம்

கருத்துரை - தம் நாவினில் தினந்தோறும் "நமசிவய" எனும் பஞ்ச அட்சரத்தை ஏற்றி ஜெபிக்கும் நல்லோரை நாடிச் செல்பவனை, அன்று நல்ல தரும நெறியைக் கடைப்பிடித்து தண்ணீரையும் பூக்களையுங் கொண்டு அபிஷேகம் செய்தவருக்கு புண்ணியங்கள் பல சேர்த்திட செய்தவனை,
நாவல் மரங்களும், நல்ல நீர் ஓடைகளும் பெருகி வளரும் ஈசன் மலையில் ஒய்யாரம் மிகுந்த இளங்கிளி மொழியாள் எனும் திருப்பெயர் கொண்ட அம்மையோடு வந்த தேவர்களுக்கு எல்லாம் தலைவனை சிவகிரி நாதேச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட ஈசனை வணங்கி உள்ளம் உருகுவாருக்கு வருந் துயரங்கள் எல்லாம் ஒழிந்து இனிதாய் வாழ்வார்கள்! 

அன்றாலின் கீழ் அறம் நான்கும் விரித்தானை
   அஞ்செழுத் தோது வார்க்கருளானை புலனைந்தும்
வென்றாரைப் புகழோடு வைப்பானை வேண்டுவார்க்கு
   வேண்டிய தீவானை வேதாவுக்கருளிட
கொன்றையும் வன்னியும் பெருகி வளரீசன் மலையில்
   கொவ்வையிதழிளங்கிளி மொழியாளுடன் வந்த
மன்றுளாடுவனை சிவகிரி நாதேச்சுரனை
   மனமாரத் துதித்திட மறுப்பிறப்பறுப்பீரே! (3)

அன்று ஆலின் கீழ் அறம் நான்கும் விரித்தானை
   அஞ்செழுத்து ஓதுவார்க்கு அருளானை புலன் ஐந்தும் 
வென்றாரைப் புகழோடு வைப்பானை வேண்டுவார்க்கு
   வேண்டியது ஈவானை வேதாவுக்கு அருளிட 
கொன்றையும் வன்னியும் பெருகி வளர் ஈசன் மலையில் 
   கொவ்வை இதழ் இளங்கிளி மொழியாள் உடன் வந்த 
மன்றுள் ஆடுவனை சிவகிரி நாதேச்சுரனை
   மனம் ஆரத் துதித்திட மறுப்பிறப்பு அறுப்பீரே!

அறம் –  வேதங்கள்,  வேதா – பிரம்மன், 
மன்று:– பொற்சபை, திருஅம்பலம்

கருத்துரை - அன்று ஆலமரத்தின் கீழ் வேதங்கள் நான்கையும் விரிவாக எடுத்து சனகாதி முனிவர்களுக்கு உரைத்தானை, பஞ்ச அட்சரமாகிய "நமசிவாய" மந்திரம் ஓதுவார்களுக்கு அருள்புரிவானை, ஐம்புலன்களையும் வென்றாரை புகழோடு வைப்பானை வேண்டுவார்க்கு  வேண்டியதை தருவானை அன்று பிரம்மனுக்கு அருள் செய,
கொன்றை மரமும், வன்னி மரமும் பெருகி வளர்ந்துள்ள ஈசன் மலையில் கோவை பழத்திற்கு நிகரான இதழ்களை உடையவளாகிய இளங்கிளி மொழியாள் எனுந் திருநாமங் கொண்ட உமையம்மையோடு வந்த திருஅம்பலத்தில் நடனம் ஆடுகின்றவனை சிவகிரி நாதேச்சுரன் எனும் திருப்பெயர் கொண்ட ஈசனை மனமாரத் துதித்து இனி வரும் பிறப்பை ஒழிப்பீர்கள்!

நிலா வொளிர் நுதலானை நித்த பேணுவார்க்கு
   நிகரிலா வாழ்வொடு வளங்களருள்வானை
கலாரூபனை கருதுமடியார்க்கு கருத்தானை
   காலகாலனுங் கண்ணாய் கருதி பூசித்த
பலாவும் விளாவும் பரவி சூழுமீசன் மலையில்
   பவழயிதழிளங்கிளி மொழியாளுடன் வந்த
சிலா ரூபனை சிவகிரி நாதேச்சுரனை
   சிற்சபையை பணிந்திட செல்வங்கள் பெறுவீர்! (4)

நிலா ஒளிர் நுதலானை நித்தம் பேணுவார்க்கு
   நிகர் இலா வாழ்வொடு வளங்கள் அருள்வானை 
கலா ரூபனை கருதும் அடியார்க்கு கருத்தானை
   கால காலனுங் கண்ணாய் கருதி பூசித்த 
பலாவும் விளாவும் பரவி சூழும் ஈசன் மலையில் 
   பவள இதழ் இளங்கிளி மொழியாளுடன் வந்த 
சிலாரூபனை சிவகிரி நாதேச்சுரன் 
   சிற்சபையை பணிந்திட செல்வங்கள் பெறுவீர்!

நுதல் - நெற்றி.  கலாரூபன் - சிவனின் அரிய நடன வடிவங்கள், 
காலன் - இயமன்,  சிலாரூபன் - சிலை வடிவமாகிய உற்சவமூர்த்தி,
சிற்சபை - பொன் அம்பலம் 

கருத்துரை - முழு நிலாவினைப் போன்று ஒளி வீசுகின்ற நெற்றியை உடையவனை தினமும் வணங்கி போற்றுவாருக்கு நிகர் இல்லாத வளம் மிகுந்த வாழ்வு அளிப்பானை, கலை அம்சங்கள் நிறைந்த பல வடிவங்களை கொண்டவனை, அடியார்கள் நினைக்கும் நல்ல நினைப்பில் இருப்பானை, காலங்களுக்கே காலனாய் திகழும் யமன் தன் இரு கண்களாக நினைத்து பூசித்த,
பலா மரமும், விளா மரமும் பரவலாய் வளர்ந்து சூழ்ந்துள்ள ஈசன் மலையில் பவழ இதழ் கொண்ட இளங்கிளி மொழியாள் எனும் திருநாமங் கொண்ட அம்மையோடு வந்த சிலை வடிவமாக காட்சி தருபவனை சிவகிரி நாதேச்சுரன் எனும் திருப்பெயர் கொண்ட ஈசனின் சிற்சபையாகிய திருஅம்பலத்து திருவடிகளைப் பணிந்திட எல்லா செல்வங்களும் பெறுவீர்கள்!

கூம்புந் தாமரையின் குணமுடைய அடியாரை
   குறை விலாதேற்றமது தந்தாள் வானை
பாம்பு முடைய அண்ணலை பலகாலம் பழுதறப்
   பாடி தவமியற்றிய சித்தர்கள் தங்கிய
வேம்பும் வில்வமும் வெகு விளையுமீசன் மலையில்
   வேய் குழலிளங்கிளி மொழியாளுடன் வந்த
ஆம்பல் வாயழகன் சிவகிரி நாதேச்சுரனை
   அநுதினமும் வணங்கிட அகலா பொருளடைவீர்! (5)

கூம்புந் தாமரையின் குணமுடைய அடியாரை
   குறைவு இலாது ஏற்றம் அது தந்து ஆள்வானை 
பாம்பும் உடைய அண்ணலை பல காலம் பழுது அறப்
   பாடி தவம் இயற்றிய சித்தர்கள் தங்கிய 
வேம்பும் வில்வமும் வெகு விளையும் ஈசன் மலையில்
   வேய்குழல் இளங்கிளி மொழியாளுடன் வந்த 
ஆம்பல் வாய் அழகன் சிவகிரி நாதேச்சுரனை 
   அநுதினமும் வணங்கிட அகலா பொருள் அடைவீர்!

கூம்பு - ஒன்றாக சேர்ப்பது,  வேய் - மூங்கில்,  ஆம்பல் அல்லி

கருத்துரை - தாமரை மொட்டானது தன் குணத்தால் தன் இதழ்களை ஒன்றாக குவித்து சேர்ந்து இருப்பது போன்று தங்கள் புகழையும் பெருமைகளையும் வெளிகாட்டாது தன்னடக்கத்தோடு வாழும் அடியார்களுக்கு குறைவு இலாது ஏற்றம் அளித்து அவர்களை ஆள்வானை, பாம்பை உடனாக வைத்துள்ள அண்ணலை பல காலமாக குற்றம் இல்லாது பாடி தவம் செய்த சித்தர்கள் வந்து தங்கிய,
வேப்ப மரமும், வில்வ மரமும் நிறையவே விளைந்துள்ள ஈசன் மலையில் மூங்கிலால் ஆன புல்லாங்குழலின் இசைக்கு இணையான குரல் அழகுடைய இளங்கிளி மொழியாள் எனும் திருநாமங் கொண்ட அம்மைமோடு வந்த அல்லி மலரின் (ஆம்பல்) இதழ் போன்ற திருவாய் உடைய அழகனை சிவகிரிநாதேச்சுரன் எனுந் திருப்பெயர் தாங்கிய ஈசனை தினமும் வணங்கிட என்றும் நீங்காத செல்வமொடு வாழ்வீர்கள்!
 
அரும்பும் மலரினிலமுதும் மணமும் வைத்தானை
   அவுணர் குலஞ் சுவற அறுமுகனை படைத்தானை
விரும்பி அஞ்செழுத்தை விடாதுச் செப்பி யென்றும்
   வயதும் வாழ்வும் பெற்ற மானி பூசித்த
கரும்புந் தேக்குங் கண்ணொளிருமீசன் மலையில்
   கார்குழலி இளங்கிளி மொழியாளுடனுறையும்
நிருத்த மாடுவனை சிவகிரி நாதேச்சுரனை
   நினைந்திட நலம்பல பெற்று நீடு வாழ்வீர்! (6)

அரும்பும் மலரினில் அமுதும் மணமும் வைத்தானை
   அவணர் குலஞ் சுவற அறுமுகனை படைத்தானை 
விரும்பி அஞ்செழுத்தை விடாதுச் செப்பி என்றும்
   வயதும் வாழ்வும் பெற்ற மானி பூசித்த 
கரும்புந் தேக்குங் கண் ஒளிரும் ஈசன் மலையில்
   கார் குழலி இளங்கிளி மொழியாளுடன் உறையும் 
நிருத்தம் ஆடுவனை சிவகிரி நாதேச்சுரனை
   நினைந்திட நலம்பல பெற்று நீடு வாழ்வீர்!

சுவற - வற்றுவது, மானி - மார்கண்டேய மகரிஷி, கார் - கரிய மேகம், 
நிருத்தம் - நடனம்.

கருத்துரை - பூக்கும் மலர்களில் தேனும் மணமும் வைத்தானை அசுரகுலம் அழிய திருமுருகப் பெருமானை படைத்தவனை விருப்பமுடன் பஞ்ச அட்சரத்தை “நமசிவய.” விடாமல் தொடர்ந்து கூறி வயதும் வாழ்வும் பெற்ற மார்கண்டேய மகரிஷி பூசித்த,
கரும்புந் தேக்கு மரமுங் கண்ணுக்கு ஒளி விசும்படி எங்கும் வளர்ந்துள்ள ஈசன் மலையில் கருநிற மேகங்களுக்கு நிகரான கூந்தலைப் பெற்ற இளங்கிளி மொழியாள் எனுந் திருப்பெயர் தாங்கிய அம்மையோடு உறையும், நடனம் ஆடும் ஈசனை சிவகிரி நாதேச்சுரன் எனுந் திருநாமங் கொண்டவனை நினைந்து வழிபட நலன்கள் பல பெற்று நெடுநாள் வாழ்வீர்கள்!

அல்லியும் முல்லையு மாரமாயணிந்தானை
   ஆணும் பெண்ணுமா யுலகிலார்த்து நின்றானை
கொல்லி வரையில் கண்ணுதல் கடவுளைப் பூசித்த
   குறுமுனியுங் கால் பதித்துலாவி வணங்கிய
நெல்லியும் நுணாவும் நிறை வளருமீசன் மலையில்
   நறுங்குழலி இளங்கிளி மொழியாளுடனுறையுந்
தில்லை நாயகனை சிவகிரி நாதேச்சுரனைத்
   தினந் தினந் துதித்து தீங்கறுத்துய்வீர்! (7)

அல்லியும் முல்லையும் ஆரமாய் அணிந்தானை
   ஆணும் பெண்ணுமாய் உலகில் ஆர்த்து நின்றானை 
கொல்லி வரையில் கண்ணுதல் கடவுளைப் பூசித்த
   குறுமுனியுங் கால் பதித்து உலாவி வணங்கிய 
நெல்லியும் நுணாவும் நிரை வளரும் ஈசன் மலையில்
   நறுங் குழலி' இளங்கிளி மொழியாளுடன் உறையுந்
தில்லை நாயகனை சிவகிரி நாதேச்சுரனைத் 
   தினந் தினந் துதித்து தீங்கு அறுத்து உய்வீர்!

கண்ணுதல் – நெற்றிகண்,  குறுமுனி - அகத்திய முனிவர்
நறுங்குழல் – மணம்வீசும் கூந்தல்,  தில்லை - சிதம்பரம்.

கருத்துரை - அல்லி மலரையும், முல்லை மலரையும் மாலையாக அணிந்தவனை ஆணும் பெண்ணுமாய் உலகிலில் சேர்ந்து இருப்பவனை கொல்லி மலையில் முக்கண் இறைவனை பூசித்த அகத்திய முனிவர் தம் திருவடிகளை பதித்து உலாவி வணங்கிய,
நெல்லி மரமும், நுணா மரமும் நிறைந்து வளரும் ஈசன் மலையில் , சுகந்த மணம் வீசும் கூந்தலை உடைய இளங்கிளி மொழியாள் எனும் திருநாமங் கொண்ட அம்மையோடு உறைகின்ற தில்லையில் "சிதம்பரத்தில்"  தலைவனாக இருப்பவனை சிவகிரிநாதேச்சுரன் எனும் காரண பெயர் கொண்ட ஈசனை தினம் தினம் துதித்து வருந்தீங்கை அறுந்து நற்கதியை அடைவீர்.!

கரமதில் மானும் மழுவுமேந்தி கனக சபையில்
   களிநடம் புரிவானை காமனை காய்ந்தானை
நிரவிய செஞ்சடையில் நிலாவொளிரழகனை
   நீள் சூலப் படையானை நிதம் பணிவார்க்கருள
அரசும் வேங்கையு மரவணைக்குமீசன் மலையில்
   அன்னமாம் இளங்கிளி மொழியாளுடன் வந்த
பரமேச்சுரனை சிவகிரி நாதேச்சுரனை
   பாடி பரவிட பல் வளமும் புகழுமெய்துவர்! (8)

கரம் அதில் மானும் மழுவும் ஏந்தி கனக சபையில் 
   களி நடம் புரிவானை காமனை காய்ந்தானை 
நிரவிய செஞ்சடையில் நிலா ஒளிர் அழகனை 
   நீள் சூலப் படையானை நிதம் பணிவார்க்கு அருள 
அரசும் வேங்கையும் அரவணைக்கும் ஈசன் மலையில் 
   அன்னமாம் இளங்கிளி மொழியாளுடன் வந்த 
பரமேச்சுரனை சிவகிரி நாதேச்சுரனை
   பாடி பரவிட பல்வளமும் புகழும் எய்துதீர்!

காமன் – மன்மதன்,  நிரவிய – படர்ந்த,  கனக சபை - பொன் அம்பலம்.

கருத்துரை - ஒரு கரந்தனில் மானும் மற்றொரு கரமதில் மழுவும் ஏந்தி பொற் சபையில் மகிழ்ச்சியுடன் நடனம் புரிவானை, மன்மதனை எரித்தவனை, படர்ந்த செஞ்சடையில் பிறை சந்திரன் ஒளி வீசும் அழகனை, நீளமாயுள்ள சூலாயுதம் தாங்கியவனை தினந்தோறும் வணங்குவாருக்கு அருள் புரிய,
அரச மரம், வேங்கை மரம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வளர்ந்திருக்கும் ஈசன் மலையில் அன்ன பறவைக்கு இணையான இளங்கிளி மொழியாள் எனும் திருநாமங் கொண்ட அம்மையோடு வந்த பரத்திற்கு மேம்பட்ட பொருளாகிய ஈச்சுவரனை சிவகிரி நாதேச்சுரன் எனுந் திருப் பெயர் கொண்டவனை பாடி உரைக்க பல் வகையான செல்வ செழிப்பும், வளமான வாழ்வும் சுகமும் அடைவீர்கள்.!

இச்சகமதிலென்று மடியார்க்கெளியானை
   ஈருருவுமோருருவாய் நின்றானை இமையோர்
அச்சந் தீர்த்தானை மாலுக்காழிப் படையை
   அருள் புரிந்தானை யன்றவை முன் வாதாடினானை
நொச்சியு மீச்சமுந்தழைக்குமீசன் மலையில்
   நுதலழகி இளங்கிளி மொழியாளுடனுறையும்
அச்சிவ சம்புவை சிவகிரி நாதேச்சுரனை
   அகமதிலிருத்தி வரும் அல்லலறுப்பீரே! (9)

இச்சக மதில் என்றும் அடியார்க்கு எளியானை 
   ஈர் உருவும் ஓர் உருவாய் நின்றானை இமையோர் 
அச்சம் தீர்த்தானை மாலுக்கு ஆழிப் படையை
   அருள் புரிந்தானை அன்று அவை முன் வாது ஆடினானை
நொச்சியும் ஈச்சமுந் தழைக்கும் ஈசன் மலையில் 
   நுதல் அழகி இளங்கிளி மொழியாளுடன் உறையும் 
அச்சிவ சம்புவை சிவகிரி நாதேச்சுரனை
   அகம் அதில் இருந்தி வரும் அல்லல் அறுப்பீ!

ஆழிப் படை - சக்ராயுதம்,  சிவசம்பு - ஜம்புநாதேச்சுரர்.  அகம் - உள்ளம்

கருத்துரை - இப்பூவுலகில் அடியார்களுக்கு எளிமையாக காட்சி தருபவனை சக்தியும் சிவமுமாய் சேர்ந்த ஓர் உருவமாக "அர்த்த நாரீச்சுரனாக"  நின்றவனை, தேவர்கள் பயம் தீர்த்தவனை திருமாலுக்கு சக்ராயுதத்தை அளித்தவனை, அன்று சபையின் நடுவே நின்று வாது புரிந்தவனை,
 
1) மாமனாக வந்து வழக்கு உரைத்தது - திருவிளையாடல் புராணம்

2) முதிய அந்தணராக வந்து சுந்தர மூர்த்தி சுவாமிகளை ஆட்கொண்டது
                                                                - பெரிய புராணம்


நொச்சி மரமும், ஈச்சமரமும் தழைத்து வளர்ந்துள்ள ஈசன் மலையில் அழகு வாய்ந்த நெற்றியை உடைய இளங்கிளி மொழியாள் எனும் 'திருப்பெயர் கொண்ட உமையவளோடு உறைகின்ற சிவசம்புநாதன், சிவகிரிநாதேச்சுரன் என்னும் திருநாமங்கள் கொண்ட ஈசனை உள்ளத்தில் இருத்தி வருகின்ற துன்பங்களை அறுத்து இனிதே வாழ்வீர்கள்!

உலகனைத்து மோருரு வாயொளியாய் நின்றானை
   உயிரனைத்து முயிர் வாழ ஊணையுகப்பானை
மலம் மூன்றையுங் கடக்க மாநெறி போதித்தானை
   மங்கைக்கோர் இடமளித்து மண்ணிலுயர்ந்தானை
அலரியுங் குராவு மார்த்திடுமீசன் மலையில்
   அயில் விழியாளிளங்கிளி மொழியாளுடன் வந்த
சல சங்கரனை சிவகிரி நாதேச்சுரனை
   சேவித்து சொல்லொடு பொருளுஞ்சிறப்பாய் பெறுவீர்! (10)

உலகு அனைத்தும் ஓர் உருவாய் ஒளியாய் நின்றானை
   உயிர் அனைத்தும் உயிர் வாழ ஊனை உகப்பானை 
மலம் மூன்றையுங் கடக்க மாநெறி போதித்தானை
   மங்கைக்கு ஓர் இடம் அளித்து மண்ணில் உயர்ந்தானை 
அலரியங் குராவும் ஆர்த்திடும் ஈசன் மலையில்
   அயில் விழியாள் இளங்கிளி மொழியாளுடன் வந்த 
சல சங்கரனை சிவகிரி நாதேச்சுரனை 
   சேவித்து சொல்லொடு பொருளுஞ் சிறப்பாய் பெறுவர்!

ஊண் - உணவு.  அயில் - வேல்,  சல சங்கரன் - ஐம்பு நாதேச்சுரர்,
மா நெறி - உயர்ந்த தருமம்.

கருத்துரை - உலகில் எங்கு நோக்கினும் ஒரே சிவலிங்க வடிவமாகவும் ஒரே ஒளியாகவுங் காட்சி தருபவனை, சகல உயிர்களும் உயிர் வாழ உணவு அளிப்பவனை, மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) கடந்து செல்வதற்கு மகா தரும நெறியை உபதேசித்தவனை, உலகில் முதன் முதலாக பெண்ணுக்கு சரிபாதி இடம் அளித்து உயர்ந்த இடத்தில் இருப்பவனை,
அலரியுங் குரா மரமும் அடர்ந்து வளர்ந்துள்ள ஈசன் மலையில் வேலுக்கு நிகரான கண்களை உடையவளான இளங்கிளி மொழியாள் எனும் திருநாமங்கொண்ட உமையம்மையோடு வந்த நீரில் தோன்றிய சங்கரனாகிய சிவகிரிநாதேச்சுரன் எனும் திருப்பெயர் கொண்டவனை வணங்கி நல்ல வாக்கும் பொருளும் பெற்று சிறப்பாய் வாழ்வீர்.!

பரவிய பவழக் கல்லொடு மரகத மரங்களும்
   படிந்த பார் புகழு மீசன் மலையில் வாழும்
விரவிய இளங்கிளி மொழியாளுடனுறையும்
   வேத நாயகனை சிவகிரி நாதேச்சுரனை
சிரமது தாழ ஆரணியடியார்க்கடியவன்
   சொல்லிய பாக்கள் பத்தொடு ஒன்றையும் பாடி
பரவ வல்லார்கள் படி மீதில் பிணியகல
   பல நாளுமெல்லாமும் பெற்றினிதே வாழ்வர்! (11)

பரவிய பவழக் கல்லொடு மரகத மரங்களும்
   படிந்த பார்புகழும் ஈசன் மலையில் வாழும் 
விரவிய இளங்கிளி மொழியாளுடன் உறையும்
   வேத நாயகனை சிவகிரி நாதேச்சுரனை 
சிரமது தாழ ஆரணியடியார்க்கு அடியவன்
   சொல்லிய பாக்கள் பத்தொடு ஒன்றையும் பாடி 
பரவ வல்லார்கள் படிமீதில் பிணி அகல 
   பல நாளும் எல்லாமும் பெற்று இனிதே வாழ்வர்!

கருத்துரை - எங்கும் பவழக் கற்களும் பச்சை மரங்களும் படர்ந்து சூழ்ந்துள்ள உலகம் புகழும் ஈசன் மலையில் வாழும் அழகிய இளங்கிளி மொழியாள் எனுந் திருநாமங் கொண்ட உமையவளோடு உறையும் வேதங்களுக்கு எல்லாம் தலைவனை சிவகிரி நாதேச்சுரன் எனும் திருப்பெயர் கொண்டவனை,
ஆரணி அடியார்க்கடியவன் எனும் சிறியவன் தன் தலையை தாழ்த்தி வணங்கி சொல்லிய பாடல்கள் பத்தொடு ஒன்றையும் பாடி  பரவ  வல்லார்கள் உலகில் நோய்கள் அகன்று பல நாளும் எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ்வீர்.!

திருச்சிற்றம்பலம்.

- சுபம்

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam