வேம்புலீச்சுரர் மாலை Vembulichurar Malai












வேம்புலீச்சுரர் மாலை


சுவாமி -     வேம்புலீச்சுரர்.
அம்பாள் - வேற்கண்நங்கை

தலம்   -       விண்ணமங்கலம்
தீர்த்தம் -   குமார தீர்த்தம்
விருட்சம் - வேம்பு

திருச்சிற்றம்பலம்.

கண்ணும் மூன்றுடையானை கருநீல கண்டத்தானை
   கரித் தோலுரித்தானை காமனை காய்ந்தானை
எண்ணு மெழுத்துமானானை யேழுலகும் படைத்தானை
   என்றுமடியார்கெளி வந்த பிரானை விண்ணோர் புகழும்
விண்ணமங்கல முறைய வேற்கண் நங்கையாளொடு வந்த
   வேம்புலீச்சுரனை யுௗ முருகி வணங்கி வலம் வர
பண்ணிய பாவமும் பழியுமகலி பன்னெடுங் காலம்
   பாரிலினிதே வாழ்ந்து பரகதியடைவரே! (1)


கண்ணும் மூன்று உடையானை கருநீல கண்டத்தானை
   கரித்தோல் உரித்தானை காமனை காய்ந்தானை
எண்ணும் எழுத்தும் ஆனானை ஏழ் உலகம் படைத்தானை
   என்றும் அடியார்க்கு எளி வந்த பிரானை விண்ணோர் புகழும்
விண்ணமங்கலம் உறைய வேற்கண் நங்கையாளொடு வந்த
   வேம்புலீச்சுரனை உளம் உருகி வணங்கி வலம் வர
பண்ணிய பாவமும் பழியும் அகலி பன்னெடுங்காலம்
   பாரில் இனிதே வாழ்ந்து பரகதி அடைவரே!


கரி – யானை,  எளி – எளிமை,  காமன் – மன்மதன்,
அகலி – விலகி,  காய்ந்த – எரித்த,  பார் - உலகம்.

கருத்துரை:-
மூன்று கண்களை உடையவனை, கருமையும் நீலமுங் கலந்த
நிறமுடைய ஆலகால விஷத்தை கழுத்தில் அடக்கியவனை,
எண்களாகவும், எழுத்தாகவும் இருப்பவனை,
ஏழு உலகமும் படைத்தவனை எப்போதும் சிவனடியார்களூக்காக
எளிமையாக இறங்கி வந்து அருள் செய்பவனை,

தேவர்கள் புகழுகின்ற விண்ணமங்கலம் என்ற திருத்தலத்தில்
வீற்றிருப்பதற்காக வேற்கண் நங்கையாள் என்ற திருப்பெயர்
கொண்ட அம்பாளோடு வந்த வேம்புலீச்சுரன் என்ற திருநாமங்
கொண்ட ஈசனை உளம் உருகி வணங்கி வலம் வருபவருக்கு
அவர்கள் செய்த பாவமும், வந்த பழியும் நீங்கி இந்த உலகில்
பல காலம் இன்பமாக வாழ்ந்து பின் பரம்பொருளாகிய சிவனை
அடைவார்கள்.

குருவாகி நால்வர்க்கன்றால் கீழுபதேசித்தானை
   கோமகன் பழித் தீர்த்தானை குமரனும் பூசித்தானை
எருதேறி யெங்குந் திரிந்தானை ஈருருவங் கொண்டானை
   எருக்குந் தும்பையுமணிந்தானை விண்ணமங்கலமதிலே
வருமடியார் குறை தீர்க்க வேற்கண் நங்கையாளொடுறை
   வேம்புலீச்சுரனை சிரந்தாழ்ந்து தொழுது வலம் வர
இருவினை யகன்றெல்லா வளமும் பெற்றினிதே வாழ்ந்து
   இறுதியிலெடுத்த பொற்பாதங் கீழ் சேர்ந்திருப்பரே! (2)


குருவாகி நால்வர்க்கு அன்று ஆல் கீழ் உபதேசித்தானை
   கோமகன் பழித்தீர்த்தானை குமரனும் பூசித்தானை
எருது ஏறி எங்குந் திரிந்தானை ஈர் உருவங்கொண்டானை
   எருக்குந் தும்பையும் அணிந்தானை விண்ணமங்கலம் அதிலே
வரும் அடியார் குறை தீர்க்க வேற்கண் நங்கையாளொடு உறை
   வேம்புலீச்சுரனை சிரந்தாழ்ந்து தொழுது வலம் வர
இரு வினை அகன்று எல்லா வளமும் பெற்று இனிதே
   இறுதியில் எடுத்தபொற் பாதங் கீழ் சேர்ந்து இருப்பாரே!


நால்வர் - சனகாதி முனிவர்,  ஆல் – ஆலமரம்,
கோமகன் – இந்திரன்,  ஈர் – இரண்டு,  சிரம் – தலை,
இருவினை – நல்வினை, தீவினை,
எடுத்த பொற்பாதம் - நடராஜ பெருமான் திருவடி

கருத்துரை:–
அன்று ஆல மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர் நால்வருக்கு
வேதங்களை உபதேசம் செய்தானை, இந்திரனுடைய பிரம்மஹத்தி தோஷம்
தீர்த்தானை, முருகப்பெருமானும் பூசித்தானை, ரிஷப வாகனம் ஏறி எங்கும்
திரிந்தானை, அம்மையும் அப்பனுமாய் இரண்டு உருவமும் சேர்ந்த
அர்த்தநாரீச்சுரனாக இருப்பவனை, எருக்க மலரும், தும்பை மலரும் விரும்பி
அணிபவனை,
 
விண்ணமங்கலமதிலே வருகின்ற அடியார்கள் குறையை தீர்ப்பதற்கு
வேற்கண் நங்கையாள் என்ற திருப்பெயர் கொண்ட அம்பாளோடு அந்த
வேம்புலீச்சுரன் என்ற திருநாமங் கொண்ட ஈசனை தலை தாழ்த்தி வணங்கி
வலம் வருபவருக்கு, அவர்களுடைய பிறப்பு இறப்பு எனும் இரண்டு
வினைகளும் நீங்கி, எல்லா வித நலன்களும் பெற்று இன்பமுடன் வாழ்ந்து,
கடைசி காலத்தில் நடராஜ பெருமான் தூக்கிய திருப்பாதங்களில் சேர்த்து
இருப்பார்கள்.!

தூண்டிய ஓராகுவை தொண்டு கொள மன்னனாக்கி
   தொன்மை வினை யழித்தானை தூக்கிய திருவடியானை
பண்டு கிழ வுருவங் கொண்டானை பால் மதியந் தரித்தானை
   பங்கையன் சிரங் கொய்தானை விண்ணமங்கலமதிலே வந்து
வேண்டுவார் துயர் களைய வேற்கண் நங்கையாளொடுறை
   வேம்புலீச்சுரனை யிருகரமெடுத்து தொழுவார்கள்
நீண்ட ஆயுளொடு நிறை வளர் செல்வமும் பெற்று வாழ்ந்து
   நிகரிலா யிணையடி சேர்ந்து பிரியாதிருப்பரே! (3)


துண்டிய ஓர் ஆகுவை தொண்டு கொள மன்னன் ஆக்கி
   தொன்மை வினை அழித்தானை தூக்கிய திருவடியானை
பண்டு கிழ உருவங் கொண்டானை பால் மதியந் தரித்தானை
   பங்கையன் சிரங் கொய்தானை விண்ணமங்கலம் அதிலே வந்து
வேண்டுவார் துயர் களைய வேற்கண் நங்கையாளொடு உறை
   வேம்புலீச்சுரனை இரு கரம் எடுத்து தொழுவார்கள்
நீண்ட ஆயுளொடு நிறை வளர் செல்வமும் பெற்று வாழ்ந்து
   நிகர் இலா இணை அடி சேர்ந்து பிரியாது இருப்பரே!


ஆகு – எலி, களைய – நீக்க, தொன்மை – பழமை,
இருகரம் - இரண்டு கைகள்,  பண்டு - வயது முதிர்ந்த,
நிகரிலா – இணையிலாத, பால்மதி – சந்திரன், இணை – இரண்டு,
பங்கையன் – பிரம்மன், கொய்தானை – அறுத்தானை.

கருத்துரை:-
ஒரு எலியானது சிவாலயத்தினுள்ளே அணையும் தருவாயில்
உள்ள தீபம் ஒன்றில் எண்ணையை குடிப்பதற்கு சென்ற போது, தன்னை
அறியாமல் தீபத்தின் திரியை தூண்டியது, அதனால் அத்தீபம் மிகவும்
பிரகாசமாக சுடர் விட்டு எரிந்தது. அதன் காரணமாக அந்த எலியை தனக்கு
தொண்டு செய்வதற்காக மறுபிறப்பில் மாபலி சக்கரவர்த்தியாக பிறக்கச்
செய்து அதன் பழைய வினையை நீக்கினானை, தனது இடது பாதம் தூக்கி
நின்று ஆடுகின்றவனை, 

வயது முதிர்ந்த கிழஉருவங் கொண்டு பல
சிவனடியார்கள் ஆட்கொண்டானை (சான்றாக - சுந்தரமூர்த்தி நாயனார்
திரு நீலகண்ட நாயனார், இளயான்குடிமார நாயனார், அமர்நீதி நாயனார்,
திருக்குறிப்பு தொண்ட நாயனார் மற்றும் அனேகர்),

பால் போன்ற வெண்மையுள்ள பிறைசந்திரனை சூடிக்
கொண்டிருப்பவனை, பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஒன்றை அறுத்தானை
விண்ணமங்கலம் என்ற திருத்தலத்தில் வந்து ஈசனை வணங்கி
வேண்டுபவர்களுக்கு அவர்களின் துயரங்களை நீக்குவதற்கு, வேற்கண்
நங்கையாள்
எனும் திருப்பெயர்க் கொண்ட அம்பாளோடு வீற்றிருக்கும்
வேம்புலீச்சுரன் என்ற திருநாமம் கொண்ட ஈசனை தமது இரண்டு
கைகளை மேலே உயர்த்தி கூப்பி வணங்குவார்கள், நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வமும் செழுமையும் பெற்று இம்மண்ணுலகில் வாழ்ந்து பின்
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சிவபெருமானின் இரண்டு
திருவடிகளை சேர்ந்து பிரியாதிருப்பர்.

அரவிந்த மலர் கொண்டர்ச்சித்த யரிகேசனுக்கன்றரிய
   ஆழிப்படை யீந்தானை யம்பலத் தாடுவானை
இரவலர்க் கன்ன சொர்ணமீய யிரங்கியே வந்தானை
   எழுமுனிவர் தொழுத விண்ணமங்கல மதிலடியார்க்கு
வரமருள வேற்கண் நங்கையாளொடு விடையேறி வந்த
   வேம்புலீச்சுரனை விரும்பி விரை மலர் கொண்டேத்த
பரகருணை பெருவாழ்வொடு படிமீதில் வாழ்ந்து
   பாங்கான சாயுச்சிய பதவியைப் பெற்றுய்வார்களே! (4)


அரவிந்த மலர் கொண்டு அர்ச்சித்த அரிகேசனுக்கு அன்று அரிய
   ஆழிப் படை ஈந்தானை அம்பலத்து ஆடுவானை
இரவலர்க்கு அன்ன சொர்ணம் ஈய இரங்கியே வந்தானை
   எழுமுனிவர் தொழுத விண்ணமங்கலமதில் அடியார்க்கு
வரம் அருள வேற்கண் நங்கையாளொடு விடை ஏறி வந்த
   வேம்புலீச்சுரனை விரும்பி விரை மலர் கொண்டு ஏத்த
பரகருணை பெரு வாழ்வொடு படி மீதில் வாழ்ந்து
   பாங்கான சாயுச்சிய பதவியைப் பெற்று உய்வார்களே!

அரவிந்தம் – தாமரை,  ஏத்த – போற்ற, வணங்க,  அரிகேசன் – திருமால்,
படி – பூமி,  ஆழிப் படை – சக்ராயுதம், பாங்கான – மேன்மையான,
இரவலர் – வேண்டுவார்,  சாயுச்சியம் - ஆன்மா பரமான்மாவோடு கலப்பது,
சொர்ணம் – பொன்,  விடை – ரிஷபம்,  விரை – குளிர்ந்த.

கருத்துரை:-
திருவீழிமிழலை என்ற சிவத்தலத்தில் 1008 தாமரை மலர்கள் கொண்டு
அருச்சனை செய்த திருமாலுக்கு அரிதான சக்ராயுதத்தை கொடுத்தானை,
தில்லையில் திருஅம்பலத்தே ஆடுவானை,
வேண்டும் அடியார்களுக்கு பசிக்கு அன்னமும், திருத்தொண்டு செய்வதற்கு
வேண்டிய பொன்னும் கொடுக்க கருணைக் கொண்டு வந்தானை,
ஏழு முனிவர்களாகிய  அத்திரி, பாரத்துவாசர்,
ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிஷ்டர், விசுவாமித்திரர் ஆகியோர்
தொழுது வணங்கிய விண்ணமங்கலம்
அதில்,

அடியார்களுக்கு வரம் அருளுவதற்கு வேற்கண் நங்கையாள் என்ற
திருப்பெயர் கொண்ட அம்பாளோடு ரிஷப வாகனத்தில் ஏறி வந்த
வேம்புலீச்சுரன் எனும் திருநாமங் கொண்டுள்ள சிவனை விரும்பி,
குளிர்ச்சி மிகுந்த மலர்களை கொண்டு போற்றி வணங்க பரம் பொருளாகிய
ஈசனுடைய கருணையோடு பெரு வாழ்வும் பெற்று, இம்மண்ணுலகில்
நெடுநாள் வாழ்ந்து பின் சாயுச்சிய பதவியை (சீவான்மாவாகிய இந்த உயிர்
பரமான்மாவாகிய சிவத்தோடு கலப்பது) பெற்று நற்கதியை அடைவார்கள்.!

நாடும் பாதமதை நாவிலிருத்துவார் கென்றும்
   நன்மையே யளிப்பானை நரியை பரியாக்கினானை
பாடும் பண்ணிலிருப்பானை பெண்ணோர் பாகமுடையானை
   பார் புகழும் விண்ணமங்கலமதிலே யடியார்க்கு
வீடு பேறு நல்க வேற்கண் நங்கையொடு வந்த
   வேம்புலீச்சுரனை பாடி பரவி வழிபடுவாரை
ஆடும் பாதமதிலென்று மகலாதிருத்தி யொப்பிலா
   ஆனந்தங் கொளவும் வைத்துய்வகை காணவுஞ் செய்வானே! (5)


நாடும் பாதம் அதை நாவில் இருத்துவார்க்கு என்றும்
   நன்மையே அளிப்பானை நரியை பரியாக்கினானை
பாடும் பண்ணில் இருப்பானை பெண் ஓர் பாகம் உடையானை
   பார் புகழும் விண்ணமங்கலம் அதிலே அடியார்க்கு
வீடுபேறு நல்க வேற்கண் ங்கையொடு வந்த
   வேம்புலீச்சுரனை பாடி பரவி வழிபடுவாரை
ஆடும் பாதம் அதில் என்றும் அகலாது இருத்தி ஒப்பிலா
   ஆனந்தங் கொளவும் வைத்து உய்வகை காணவுஞ் செய்வானே!


பண் – இராகம்,  பார் – உலகம்,  வீடுபேறு - முக்தி,
நல்க – அருள,  பரவி – போற்றி,  உய்வகை - நற்கதி.

கருத்துரை:-
எல்லோராலும் தேடப்படுகின்ற திருவடிப்பேற்றை
தம்முடைய நாவினால் போற்றி பாடி புகழ்ந்து வணங்குவார்க்கு
என்றும் நன்மைகளே அருள்வானை, அன்று மதுரையில்
மாணிக்கவாசகர் பொருட்டு நரிகளை குதிரைகளாக மாற்றி ஆடல்
புரிந்தானை, பாடுகின்ற இராகத்தில் நாத லயமாய் இருப்பானை, உமா
தேவியை தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்தானை,
இவ்வுலகம் புகழ்கின்ற விண்ணமங்கலம் அதில் அடியார்களுக்கு
முக்தி பேற்றை அருள்வதற்கு,
 
வேற்கண் ங்கையாள் எனும் திருப்பெயர் தாங்கிய அம்பாளோடு
வந்த வேம்புலீச்சுரனை போற்றி பாடி புகழ்ந்து வணங்குவாரை,
ஆடும் திருவடி கீழ் என்றும் நீங்காது வைத்து நிகர் இலாத
பேரானந்தங் கொளவும் வைத்து, நற்பேற்றை தந்து அருள்
செய்வானே.!

குறிப்பு - திருவிளையாடற் புராணத்தில் நரியை பரியாக்கிய திருவிளையாடலை காண்க.

குகையெனுங் கோயிலைக் கட்டி சிவமிருத்தியவரை
   கோமகனுக் குயர்த்தி காட்டிய கண்ணுதல் பெருமானை
தகைமைசிவ ஞானமருளி திருவாதவூரரை
   தன்னடியனாக்கி யாட்கொண்ட பரிமேலழகனை
வகை காட்ட வேற்கண் 
ங்கையாளொடு விண்ணமங்கலம் வந்த
   வேம்புலீச்சுரனை வேண்டி நிதம் வணங்குவார்க்கு வரும்
பகை நீக்கி பல் வளமும் பெருகி பேறும் புகழும் பெற்று
   பரமனடி சேர்ந்து பிரியாது வாழ்ந்திருப்பரே! (6)


குகை எனுங் கோயிலைக் கட்டி சிவம் இருத்தியவரை
   கோமகனுக்கு உயர்த்தி காட்டிய கண் நுதல் பெருமானை
தகைமை சிவ ஞானம் அருளி திருவாதவூரரை
   தன் அடியான் ஆக்கி ஆட் கொண்ட பரிமேல் அழகனை
வகை காட்ட வேற்கண் நங்கையாளொடு விண்ணமங்கலம் வந்த
   வேம்புலீச்சுரனை வேண்டி நிதம் வணங்குவார்க்கு வரும்
பகை நிக்கி பல் வளமும் பெருகி பேறும் புகழும் பெற்று
பரமன் அடி சேர்ந்து பிரியாது வாழ்ந்து இருப்பரே!


குகை – உள்ளம், கோமகன் – அரசன்,  நுதல் – நெற்றி,  தகைமை – மேன்மை,
திருவாதவூரர் – மாணிக்கவாசகர், பரி – குதிரை,  வகை – வழி.

கருத்துரை:-
திருநின்றவூரில் உள்ளமாகிய குகையில் திருக்கோயிலைக் கட்டி அதில்
சிவபரம்பொருளை இருத்திய பூசலார் நாயனாருக்கு முன்னிலை கொடுத்து,
அரசரான காடவர் கோன் கட்டிய கற்கோயிலின் குட முழுக்கு விழாவிற்கு
மற்றொரு நாள் வருவதாக கூறி அந்நாயனாரை உயர்த்தி காட்டிய நெற்றிக்
கண்ணையுடைய சிவ பெருமானை, மேன்மை பொருந்திய சிவஞானத்தை
உபதேசித்து திருவாதவூரராகிய மாணிக்கவாசக சுவாமிகள் தனக்கு
அடியவனாக ஆக்கி ஆண்டுகொள குதிரை மேல் ஏறி ஒரு
சேவகனாக வந்த பரிமேலழகனை,
 
நல்வழி காட்டுவதற்கு வேற்கண் ங்கையாள் எனும் திருப்பெயர்
கொண்ட அம்பாளோடு விண்ணமங்கலமதில் வந்த
வேம்புலீச்சுரனை அநுதினமும் பாடி வணங்குவார்க்கு,
வருகின்ற பகையை நீக்கி பல வளங்கள் பெருகிடவும், பேறும்
புகழும் பெற்று வாழ்ந்து அந்த பரமேச்சுரன் திருவடியைச்
சேர்ந்து என்றும் பிரியாது வாழ்வார்கள்!

கடை தோறும் பலிக்கென்று சென்றானை காணா தொருவன்
   கல்லாலடிக்கப் பெற்றானை கூடல் மாநகரிலன்று
குடைப் பலபுரிந்தானை கொடிய நஞ்சை யுண்டானை
  கூறும் பாவலனாய் வாது புரிந்தானை வெள்ளை விடையேறி
வேற்கண் 
ங்கையாளொடு விண்ணமங்கலமதில்
   விஞ்சையருள வந்த வேம்புலீச்சுரனை அழுதழுது
அடைக்கலம் புகுவார்க்கல்லலறுத் தென்று மவனியிலொரு
   ஆதார மாயிருந்த தமருல கெய்விப்பானே! (7)


கடை தோறும் பலிக்கு என்று சென்றானை காணாது ஒருவன்
   கல்லால் அடிக்கப் பெற்றானை கூடல் மாநகரில் அன்று
குடைப் பல புரிந்தானை கொடிய நஞ்சை உண்டானை
   கூறும் பாவலனாய் வாது புரிந்தானை வெள்ளை விடை ஏறி
வேற்கண் நங்கையாளொடு விண்ணமங்கலம் அதில்
   விஞ்சை அருள வந்த வேம்புலீச்சுரனை அழுது அழுது
அடைக்கலம் புகுவார்க்கு அல்லல் அறுத்து என்றும் அவனியில் ஒரு
   ஆதாரமாய் இருந்து அமரர் உலகு எய்விப்பானே!


கடை - வாசல்படி,  பலி – பிட்சை,  கூடல் மாநகர் – மதுரை, குடை - கூத்து,
ஆடல்,  விடை – ரிஷபம்,  விஞ்சை - ஞானம், அமரர் - தேவர்.

கருத்துரை:-
ஒவ்வொரு வீட்டு வாசல் படிகள் தோறும் பிட்சைக்கு சென்றானை, பிறர்
காணாமல் ஒருவன் கல்லால் அடிக்கப் பெற்றானை, அன்று மதுரையில் பல
திருவிளையாடல் புரிந்தானை,
  கொடிதான விஷத்தை உண்டானை,
கவிபாடும் புலவனாய் வந்து பாண்டியன் சபையில் வாதாடினானை,

வெண்மை நிறங் கொண்ட ரிஷப வாகனத்தில் ஏறி வேற்கண் நங்கையாள்
எனும் சிறப்பு பெயர் கொண்ட அம்பாளோடு விண்ணமங்கலத்திலே,
ஞானத்தை அருளுவதற்கு வந்த வேம்புலிச்சுரனை அழுது அழுது
அடைக்கலம் அடைந்தவருக்கு, அவர்கள் துன்பங்களை நீக்கி, என்றும்
இப்பூவுலகில் ஒரு ஆதாரமாய் இருந்து பின் தேவர்கள் உலகை அடையச்
செய்வானே!

குறிப்பு – 1.) பிறர் காணாமல் கல்லால் அடித்தது சாக்கிய நாயனார்.
- பெரியபுராணம்.

2.) கவி பாடும் புலவனாய் வாதாடியது, செண்பக பாண்டியன்
சபையில் தலைமை புலவர் நக்கீரரோடு வாதாடியது.
- திருவிளையாடற் புராணம்.

இளகி வந்தேனக் குருளைகளுக்கமு தூட்டினானை
   எங்குமெவ்வுருமா யிருப்பானை ஏரூர்ந்தானை
உளமதிலொளி கொண்டுறைவானை தம்மோர்குலப் பிள்ளையை
   ஊனாக்கியுணவிட்ட வரையுடன் கொண்டேகினானை
வளமதுதர வேற்கண் நங்கையாளொடு விண்ணமங்கலம் வந்த
   வேம்புலிச்சுரனை நாளும் நாவினிலுரைப்பார்க்கு
அளவிலா பேரானந்த மொடரியதொரு சித்தியும்
  அகலாதமரருலக வாழ்வும் தந்தருள்வானே! (8)


இளகி வந்து ஏனக் குருளைகளுக்கு அமுது ஊட்டினானை
   எங்கும் எவ்வுருவமாய் இருப்பானை ஏரு ஊர்ந்தானை
உளமதில் ஒளி கொண்டு உறைவானை தம் ஓர் குலப் பிள்ளையை
   ஊன் ஆக்கி உணவு இட்ட வரை உடன் கொண்டு ஏகினானை
வளமது தர வேற்கண் நங்கையாளொடு விண்ணமங்கலம் வந்த
   வேம்புலீச்சுரனை நாளும் நாவினில் உரைப்பார்க்கு
அளவிலா பேரானந்தமொடு அரியது ஒரு சித்தியும்
   அகலாத அமரர் உலக வாழ்வுந் தந்து அருள்வானே!


இளகி - இரக்க குணம்,  ஏனம் – பன்றி,  குருளை – குட்டி
அமுது – பால்,  ஏரு – ரிஷபம்,  ஊன் – மாமிசம், ஏகி - கொண்டு செல்வது.

கருத்துரை:-
இறந்த ஒரு பன்றியின் குட்டிகள் தாய் பாலுக்கு ஏங்கி
தவிப்பதை பார்த்து அக்குட்டிகளின் தாயைப் போல உருமாறி
வந்து பாலை பருக அருள் செய்தானை,
எந்த இடத்திலும் எந்த வடிவமாகவும் இருப்பானை, எருதின் மேல்
ஏறி செல்கின்றவனை, உள்ளத்தின் ஒளியாக இருப்பவனை, தம்முடைய
குலத்திற்கு வாரிசாக இருக்கும் ஒரே பிள்ளையை கொன்று அறுத்து கறி
சமைத்து, பைரவர் வேடந் தாங்கியவராக வந்த சிவனாருக்கு உணவு
படைத்த சிறு தொண்டரையும் அவர்  மனைவி,  புதல்வன்,  தாதி
ஆகியோரை உடன் அழைத்து கொண்டு கயிலை சென்றானை,
 
பற்பல வளமும் நலமுந் தருவதற்கு வேற்கண் நங்கை எனும்
திருப்பெயர் கொண்டு அம்பாளோடு விண்ணமங்லம் வந்த
வேம்புலீச்சுரன் என்கின்ற திருநாமம் தாங்கிய ஈசனை,
தினந்தோறும் தம் நாவினால் புகழ்ந்து பாடி வணங்குவார்க்கு
அளவிட முடியாத பேரானந்தமோடு மிகவும் அரிதான யோக
சக்திகளை அடைந்து பின் நீங்காத தேவர் உலக வாழ்க்கையும்
பெறுவதற்கு அருள் செய்வானே!

குறிப்பு – 1.) பன்றிகுட்டிகளுக்கு பாலூட்டி அருள் புரிந்தது.
- திருவிளையாடற் புராணம்.

2.) சிறுதொண்டர் நாயனார் பிள்ளை கறியை உணவாக படைத்தது.
- பெரியபுராணம்.

அமரரிடர் தீர அறுமுகனை தந்தானை அரியயன்
   அரியாதழலாய் நின்றாணவ மொடுக்கினானை
குமர தீர்த்தங் கொண்டானை கோடொடித்தவன் தாதையை
   கோணல் பிறை தரித்தானை கூறும் விண்ண மங்கலமதில்
வெமர விடந் தீர்க்க வேற்கண் நங்கையாளொடு வந்த
   வேம்புலீச்சுரனை வேண்டி நிதமுருகி தொழுவார்க்கு
நமருலகடையா வண்ணங் காத்து நல்லோர் நாடும்
   நற்றாள் சேர்த்து நீங்காது நிறுத்துவனே! (9)


அமரர் இடர் நீர் அறுமுகனை தந்தானை அரி அயன்
   அறியாது அழலாய் நின்று ஆணவம் ஒடுக்கினானை
குமர தீர்த்தம் கொண்டானை கோடு ஒடித்தவன் தாதையை
   கோணல் பிறை தரித்தானை கூறும் விண்ணமங்கலம் அதில்
வெமர விடங் தீர்க்க வேற்கண் நங்கையாளொடு வந்த
   வேம்புலீச்சுரனை வேண்டி நிதம் உருகி தொழுவார்க்கு
நமர் உலகு அடையா வண்ணம் காத்து நல்லோர் நாடும்
   நற்றாள் சேர்த்து நீங்காது நிறுத்துவனே!


அழல் – நெருப்பு,  கோடு – கொம்பு,  தாதை – தந்தை,
கோணல் பிறை – சந்திரன்,  வெமர – கொடிய,  விடம் – விஷம்,
நமர் – காலன், இயமன்.

கருத்துரை:-
தேவர்கள் துயர் தீர ஆறுமுகனை நெற்றிக் கண்ணில் தோன்ற
செய்தவனை,  திருமாலும் பிரம்மனும் அடிமுடி காணாது
நெருப்புருவமாய் நின்று
அவர்கள் ஆணவத்தை அடக்கினானை,
குமர தீர்த்தம் உடையானை, அன்று மேரு மலையில் வியாச மஹரிஷி
மஹாபாரதத்தை சொல்ல தனது வலது கொம்பாகிய தந்தத்தை ஒடித்து
எழுதிய விநாயக பெருமானுக்கு தந்தையானவனை,

உயர்ந்துந் தாழ்ந்தும் இருக்க கூடிய பிறை சந்திரனை சடை முடியில்
தரித்து உள்ளவனை போற்றும் விண்ணமங்கலம் என்ற திருத்தலத்திலே,
கொடிய விஷத்தை தீர்ப்பதற்கு வேற்கண் நங்கையாள் என்ற
திருப்பெயரைக் கொண்ட அம்பாளொடு வந்த வேம்புலிச்சுரன் எனும்
சிறப்பு பெயர் தாங்கிய ஈசனை,
அநுதினமும் வேண்டி உருகி வணங்குவார்க்கு இயமலோகம்
அடையாதவாறு காத்து, நல்லவர்கள் நாடும் திருவடிகளில் சேர்த்து, அங்கே
என்றும் நீங்காது நிலையாய் இருக்கச் செய்வானே!

நீங்கயொரு நேரிழையாள் துயர் நித்திலசிவிகையற்கு
   நிகரிலா பண்ணிசைக்க யருளிய நாக நாதனை
ஓங்கிவுலகளந்த மாலுக்கு வெப்பு தீர்த்தானை
   ஒல்கிய யடியார்க் குன்னத யருள் செய விண்ணமங்கலமதில்
வேங்கை தோலுடுத்தி வேற்கண் நங்கையாளொடு வந்த
   வேம்புலீச்சுரனை உள்ளத்தாலுணர்ந் தோதுவார்க்கு
தாங்கியே ஈவான் தாயுந் தந்தையுமாயிருந்து
   தரணிதனிலென்றும் நீங்காத தனமுங் கல்வியுமே! (10)


நீங்க ஒரு நேர் இழையாள் துயர் நித்தில சிவிகையர்க்கு
   நிகர் இலா பண் இசைக்க அருளிய நாக நாதனை
ஓங்கி உலகு அளந்த மாலுக்கு வெப்பு தீர்த்தானை
   ஒல்கிய அடியார்க்கு உன்னத அருள் செய விண்ணமங்கலம் அதில்
வேங்கை தோல் உடுத்தி வேற்கண் நங்கையாளொடு வந்த
   வேம்புலீச்சுரனை உள்ளத்தால் உணர்ந்து ஓதுவார்க்கு
தாங்கியே ஈவான் தாயும் தந்தையுமாய் இருந்து
   தரணிதனில் என்றும் நீங்காத தனமும் கல்வியுமே!


நேர் - கற்பு, நேரிழையாள் - கற்புடைய பெண்,
இழையாள் - நூலைப் போன்ற இடையுடைய பெண்,
நித்திலம் – முத்து,  ஒல்கி – வறுமை, சிவிகை - பல்லக்கு
வேங்கை – புலி, பண் – இராகம்,  தரணி – உலகம்,  இசைக்க – பாட,
நித்தில சிவிகையர் – திருஞானசம்பந்தர்,  வெப்பு – உஷ்ணம்.

கருத்துரை:-
ஒரு கற்புடைய பெண்ணின் துயரைத் தீர்க்க முத்து பல்லக்கை உடைய
திருஞானசம்பந்தருக்கு ஒப்பிட முடியாத தேவாரம் பாடுவதற்கு திருவருள்
செய்த நாகநாத பெருமானை,
மேலுங் கீழுமாக நீண்டு உயர்ந்துள்ள உலகத்தை அளந்த திருமாலின்
உஷ்ணத்தை தீர்ப்பதற்கு தன் சடை முடியிலுள்ள சந்திரனை விசி எறிந்தானை,
 
வறுமையில் வாடும் அடியார்களுக்கு மேன்மை பொருந்திய திருவருள்
செய்வதற்கு விண்ணமங்கலம் என்ற திருத்தலத்திலே, புலியின் தோலை
ஆடையாக உடுத்தி வேற்கண் நங்கையாள் எனும் பெயர் கொண்ட
அம்பாளோடு வந்த வேம்புலீச்சுரன் என்று புகழ தக்க ஈசனை,
தமது உள்ளத்தால் உணர்ந்து போற்றி பாட வல்லார்களை, ஈசனே தாயும்
தந்தையுமாய் இருந்து தாங்கி பிடித்து இவ்வுலகில் என்றும் நீங்காத
செல்வமும் கல்வியும் தந்து அருள் செய்வானே!

குறிப்பு - திருஞானசம்பந்தர் ஒரு பெண்ணின் துயர்தீர தேவாரம் பாடிய
வரலாறு திருமருகல் என்ற சிவத்தலத்தின் தல புராணத்தில் காண்க!

திருமாலின் உஷ்ணம் தீர்ந்த வரலாற்றை காஞ்சி ஏகாம்பரநாதர்
சந்நிதியிலுள்ள நிலாத்துண்டப் பெருமாள் தல வரலாற்றில் காண்க!


ஆதியிலால முண்ட யண்ணல் புரிந்த யாடலிற் சில
   அருமை பெருமைகளை ஆரணியடியார்க்கடியவன்
ஓதியுள்ளுணர்ந்துரைத்த பாக்க ளொன்ப தோடிரண்டும்
   ஓங்கு புகழ் விண்ணமங்கல மதில் வேற்கண் நங்கை யொடுறை
சோதிமிகு வேம்புலீச்சுரன் செம் பொன்னடிக்கு வைத்ததை
   சொற்சுவையொடு பாடியுமாடியுஞ் சொல்லவும் வல்லார்கள்
மேதினியில் மேன்மை மிகு சகல வளமும் பெற்று வாழ்ந்து
   மானிடமேந்தியவன் மலர் பாதஞ் சென்றடைவரே! (11)


ஆதியில் ஆலம் உண்ட அண்ணல் புரிந்த ஆடலிற் சில
   அருமை பெருமைகளை ஆரணியடியார்க் கடியவன்
ஓதி உள் உணர்ந்து உரைத்த பாக்கள் ஒன்பதோடு இரண்டும்
   ஓங்கு புகழ் விண்ணமங்கலம் அதில் வேற்கண் நங்கையொடு உறை
சோதிமிகு வேம்புலீச்சுரன் செம்பொன் அடிக்கு வைத்து அதை
   சொற் சுவையொடு பாடியும் ஆடியும் சொல்லவும் வல்லார்கள்
மேதினியில் மேன்மைமிகு சகல வளமும் பெற்று வாழ்ந்து
   மான் இடம் ஏந்தியவன் மலர் பாதம் சென்று அடைவரே!


ஆதி - பழைய காலம், மேதினி – உலகம்,  ஏந்தியவன் – பிடித்தவன்,
பாக்கள் – பாடல்கள்,  ஓதி – பாடி.

கருத்துரை:-
முன்னர் பாற்கடலை கடைந்த போது வெளிபட்ட ஆலகால விஷத்தை
உண்ட பெருமைக்குரிய சிவனார் புரிந்த சில திருவிளையாடல்களின்
அருமை பெருமைகளை ஆரணி அடியார்க்கு அடியவன் உள்ளத்தால்
உணர்ந்தும் சொல்லிய பாடல்கள் ஒன்பதோடு இரண்டையும் ( 9+2= 11),
எங்கும் உயர்வாக புகழக் கூடிய விண்ணமங்கலம் எனுஞ் சிவத்தலத்தில்
வேற்கண் நங்கையாள் எனுந் திருப்பெயர் கொண்ட அம்பாளோடு
வீற்றிருக்கும் வேம்புலீச்சுரர் எனுந் திருநாமங் கொண்ட ஈசனின் சிவந்த
பொன் போன்ற திருவடிகளுக்கு சாற்றியதை சொற்களின் சுவையோடு,
பாடியும் அடியும் சொல்ல வல்லவர்கள், இப்பூவுலகில் மேன்மை மிகுந்த
சகல வளங்களும் பெற்று வாழ்ந்து,

சிறிய மானை தனது இடது கரம் ஒன்றில் பிடித்தவனாகிய சிவபரம்
பொருளின் மலர் போன்ற திருப்பாதங்களை சென்று அடைவார்கள்.!


திருச்சிற்றம்பலம்.


சுபம்.



Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam