விருபாட்சீச்சுரர் மாலை Virupatchechurar Malai

 



விருப்பாட்சீச்சுரர் மாலை

அத்திமூர்- போளுர்.

சுவாமி   -   விருப்பாட்சீச்சுரர்
அம்பாள் - பருவதவரத்தினி

பண் - கொல்லி
இராகம் - நவரோஸ்


திருச்சிற்றம்பலம்

ஆற்றி லேடெதிர்த்தானை ஆறங்க மானானை
   அகிலபுவன நாயகனை அருவுருவமானானை
கூற்றை யுதைத்தானை கொடிய முயலகனை மிதித்தானை
   கோறிய பொற்கிழி தந்தானை கோள்களை படைத்தானை
காற்றிலுயிரை வைத்தானை கனியமுது தந்து என்றுங்
   காலடியில் வைத்தானை காசிபர் கைதொழுத அத்திமூர்
வேற்கண் மங்கையாள் பருவதவர்த்தினி யுடனுறையும்
   விருப்பாட்சீச்சுரனை தொழுதிட வினை மாளுமே! (1)

ஆற்றில் ஏடு எதிர்த்தானை ஆறு அங்கம் ஆனானை
   அகில புவன நாயகனை அரு உருவம் ஆனானை 
கூற்றை உதைத்தானை கொடிய முயலகனை மிதித்தானை
   கோறிய பொற்கிழி தந்தானை கோள்களை படைத்தானை 
காற்றில் உயிரை வைத்தானை கனி அமுது தந்து என்றுங்
   காலடியில் வைத்தானை காசிபர் கை தொழுத அத்திமூர் 
வேற்கண் மங்கையாள் பருவதவர்த்தினி உடன் உறையும் 
   விருப்பாட்சீச்சுரனை தொழுதிட வினை மாளுமே! 

ஆறு - வைகை,  பொற்கிழி - பொன் மூட்டை,  புவனம் - உலகம்,  கோள் - கிரகம் 
அரு - உருவமற்ற,  கனி - மாங்கனி,  கூற்றை - இயமன்,  கோறிய - வேண்டிய,
ஆறு அங்கம் - சிக்ஷை,  வியாகரணம், சந்தசு,  நிருத்தம்,  சோதிடம்,  கற்பம்.

கருத்துரை:-
வைகையாற்றில் ஏடு (ஓலை சுவடி) எதிர்த்து செல்ல அருள் புரிந்தானை, நான்கு வேதங்களுக்குரிய ஆறு அங்கங்களாக திகழ்பவனை,   எல்லா உலகங்களுக்கும் இறைவனாக இருப்பவனை,  உருவமில்லாதவனாகவும், உருவம் இருப்பவனாகவும் திகழ்பவனை,  மார்க்கண்டேயருக்காக இயமனை காலால் உதைத்தவனை, கொடிய முயலகன் என்னும் அசுரனை ஒரு காலால் மிதித்தவனை, மதுரையில் தருமிக்கு வேண்டிய பொன் பெற்று தந்தவனை, நவகிரகங்களை படைத்தவனை, காற்றின் ஆதாரத்தால் உயிர்களை வாழ வைத்தானை, சுவையுள்ள மாங்கனியை தந்து காரைக்கால் அம்மையாரை தன் திருவடிக்கீழ் என்றும் வைத்தானை,

காசிப மகரிஷி தொழுது வணங்கிய அத்திமூர் எனுந் திருத்தலத்தில் வேலைப் போன்ற கண்களையுடையவளாகிய பருவதவர்த்தினி எனும் திருப்பெயர் கொண்ட அம்பாளோடு வீற்றிருக்கும் விருப்பாட்சீச்சுரன் எனும் திருநாமங் கொண்ட ஈசனை வணங்கிட வினைகள் எல்லாம் அழியுமே!

குறிப்பு - வைகை ஆற்றில் ஏடு எதிர்த்தது பெரிய புராணத்தில் திருஞான சம்பந்தர் வரலாற்றில் காண்க!

இயமனை காலால் உதைத்தது
“திருக்கடவூர்" தலபுராணத்தில் காண்க!

முயலகனை ஒரு காலால் மிதித்தது
'திருபாச்சிலாச்சிரமம்" தலபுராணத்தில் காண்க !

தருமிக்கு பொற்கிழி அளித்தது
"திருவிளையாடற் புராணத்தில்" காண்க!

கனியமுது அளித்தது
"பெரிய புராணத்தில்" காண்க!

ஒடுங்குமுயிர்களுக்குரிய பிறவி பயனை தருவானை
   ஊறும் பாம்பையுவந்தணிந்தானை யோங்கி நின்றானை
கொடுங் கனலால் காமனை காய்ந்தானை கருதுவார்
   குறை களைவானை கருங் குருவிக்குப தேசித்தானை
இடும் பிச்சையை யேற்றானை யெப்பிணிக்கும் மருந்தானானை
   இன்பமுந் துன்பமு மில்லானை இந்திரனுந் துதித்த அத்திமூர்
வடுவகிர் நுதலாள் பருவத வர்த்தினியுடனுறையும்
   விருப்பாட்சீச்சுரனை வணங்கிட வினையறுமே! (2)

ஒடுங்கும் உயிர்களுக்கு உரிய பிறவி பயனை தருவானை 
   ஊறும் பாம்பை உவந்து அணிந்தானை ஓங்கி நின்றானை 
கொடுங் கனலால் காமனை காய்ந்தானை கருதுவார்
   குறை களைவானை கருங்குருவிக்கு உபதேசித்தானை 
இடும் பிச்சையை ஏற்றானை எப்பிணிக்கும் மருந்து ஆனானை
   இன்பமும் துன்பமும் இல்லானை இந்திரனுந் துதித்த அத்திமூர்
வடுவகிர் நுதலாள் பருவதவர்த்தினி உடன் உறையும் 
   விருப்பாட்சீச்சுரனை வணங்கிட வினை அறுமே! 

 உவந்து - விரும்பி,  கனல் - நெருப்பு,  காமன் - மன்மதன்,  காய்ந்து - எரித்து,
வடு - நுண்ணிய,  வகிர் - நேர்கோடு,  நுதல் - நெற்றி,  அறும் - விலகும்.

கருத்துரை: - 
தம் இறுதி காலத்தில் எல்லா உயிர்களும் அடங்கி ஒடுங்கி மரணம் என்ற ஒன்றை எய்தும் போது அவைகளுக்குரிய பிறவி பயனை தருவானை,  ஊர்ந்து செல்லும் பாம்பை விரும்பி தன் மேனியெங்கும் அணிந்துள்ளானை, எங்கும் எதிலும் உயர்ந்து நின்றானை , கொடிய நெருப்பால் மன்மதனை எரித்தானை, தன்னை எப்பொழுதும் நினைந்து தொழுவார்கள் குறைகளை தீர்ப்பானை, அன்று கருங்குருவிக்கு உபதேசம் அருளினானை, 

அன்று தாருகாவனத்தில் வீடுகள் தோறும் இட்ட பிச்சையை ஏற்றுக் கொண்டானை,  எல்லா நோய்களுக்கும் மருந்தாக இருப்பவனை,  இன்பமும் துன்பமும் இல்லாதவனை,
இந்திரனும் துதித்து வணங்கிய அத்திமூர் எனும் சிவ தலத்தில் நெற்றியில் நுண்ணிய நேர் கோடு கொண்டவளாகிய பருவதவர்த்தினி எனுந் திருநாமங் கொண்ட அம்பாளோடு விற்றிருக்கும் விருப்பாட்சீச்சுரன் எனும் திருப்பெயர் தாங்கிய ஈசனை வணங்கிட வினைகள் எல்லாம் அறுந்து போகுமே!

குறிப்பு - மன்மதனை எரிந்தது "திருக்குறுக்கை" தலபுராணம் காண்க.

கருங்குருவிக்கு உபதேசித்ததை திருவிளையாடற் புராணத்தில்  "கருங்குருவிக்கு உபதேசித்த படலம் "காண்க

தேடாயடிமுடியா யிருவர்க்கு தெரிந்து நின்றானை
   தேனமுத திருமுறையாய் திகழ்ந்திருந்தானை
கூடா புரம் மூன்றையுங் கூட்டி சிரித் தெரித்தானை
   கொண்டதொரு முதலை வாய்ப் பாலகனை யழைத்தானை
ஆடா யாடலை யடியார்க் காடி காண்பித்தானை
   ஆகமச் சாரமா யத்திரியு மர்ச்சித்த அத்திமூர்
வாடா மலரிதழாள் பருவத வர்த்தினியுடனுறையும்
   விருப்பாட்சீச்சுரனை துதித்திட வினை களையுமே! (3)

தேடா அடி முடியாய் இருவர்க்கு தெரிந்து நின்றானை
   தேன் அமுத திருமுறையாய் திகழ்ந்து இருந்தானை 
கூடா புரம் மூன்றையுங் கூட்டி சிரித்து எரித்தானை 
   கொண்டது ஒரு முதலை வாய்ப் பாலகனை அழைத்தானை 
ஆடா ஆடலை அடியர்க்கு ஆடி காண்பித்தானை
   ஆகமச்சாரமாய் அத்திரியும் அர்ச்சித்த அத்திமூர் 
வாடா மலர் இதழாள் பருவதவர்த்தினி  உடன் உறையும்
   விருப்பாட்சீச்சுரனை துதித்திட வினை களையுமே!

இருவர் - பிரமன் திருமால்,  ஆகமம் - வேதம்,  சாரம் - பயன்,  திருமுறை - 12 - திருமுறைகள்

கருத்துரை:- 
அன்று பிரமனும் திருமாலும் ஈசனின் அடியும் முடியும் தேட முடியாதபடி அக்கினி பிழம்பாய் நின்று பின் அவர்கள் வணங்க அரிய காட்சி கொடுத்தானை, தேன் போன்று இனிக்கும் 12 - திருமுறைகளாகிய செந்தமிழ் பாக்களை உடையவனை,  ஒன்று சேர முடியாத மூன்று பட்டணங்களையும் ஒன்று சேர்த்து சிரித்து எரித்தானை, முதலை உண்ட பாலகனை மீண்டும் அழைத்தானை,
ஆடாத ஆடற் கலைகளை எல்லாம் தன் அடியார்களுக்காக ஆடி காண்பித்தானை,  வேதத்தில் சொல்லப் பட்டுள்ள முறைகளால் அத்திரி மகரிஷி பூசித்து வணங்கிய அத்திமூர் எனும் சிவதலத்தில் வாடாத மலர் போன்ற இதழ்களை உடையவளாகிய  பருவதவர்த்தினி எனுந் திருப்பெயர் தாங்கிய உமையவளோடு வீற்றிருந்து அருள் பாலிக்கும் விருப்பாட்சீச்சுரன் எனுந் திருநாமம் கொண்ட ஈசனை துதித்திட வினைகள் யாவும் அகலுமே! 

குறிப்பு - ஈசன் அக்கினி பிழம்பாய் நின்றது "திருவண்ணாமலை" தலபுராணம் காண்க!

திரிபுரங்களை எரித்தது  "திருவதிகை " தலபுராணம் காண்க! 

முதலை உண்ட பாலகனை அழைத்தது "திருஅவிநாசி"  தலபுராணம் காண்க!

அத்திமூர் திருத்தலம் அத்திரி மகரிஷி பூசித்த தலமாகும்.


தாய் போல் பரிந்து நினைந் திறங்கியே வருவானை
   தஞ்சம் புகுந்தோரை தவறாது நின்று காப்பானை
சேய் போல் வந்து சிக்கல் தீர்த்தாண் டருளினானை
   செல்வமுஞ் சீருஞ் செழிப்பும் பிறப்பிடமாயமைந்தானை
காய் கனியிலுறையுஞ் சுவையானை கண்ணின் மணியானை
   குத்திய சூலத்தானை குடமுனி பூசித்த அத்திமூர்
வேய்குழல் மொழியாள் பருவத வர்த்தினியுடனுறையும்
   விருப்பாட்சீச்சுரனை வணங்கிட வினை யொழியுமே ! (4)

தாய் போல் பரிந்து நினைந்து இறங்கியே வருவானை
   தஞ்சம் புகுந்தோரை தவறாது நின்று காப்பானை 
சேய் போல் வந்து சிக்கல் தீர்த்து ஆண்டு அருளினானை 
   செல்வமுஞ் சீருஞ் செழிப்பும் பிறப்பிடமாய் அமைந்தானை 
காய் கனியில் உறையுஞ் சுவையானை கண்ணின் மணியானை
   குத்திய சூலத்தானை குடமுனி பூசித்த அத்திமூர் 
வேய் குழல் மொழியாள் பருவதவர்த்தினி உடன் உறையும்
   விருப்பாட்சீச்சுரனை வணங்கிட வினை ஒழியுமே! 

பரிந்து - கருணை, தஞ்சம் - அடைக்கலம்,  சேய் - குழந்தை,  குடமுனி - அகத்தியர்,  வேய் குழல் - புல்லாங்குழல்

கருத்துரை: - 
தன் அடியார்களின் துயர் தீர்க்க தாயைப் போல நினைந்து கருணையோடு இறங்கி வந்து அருள் புரிவானை, அடைக்கலம் புகுந்தவர்களை தவறாது காப்பானை, குழந்தையைப் போல வந்து அடியார்களின் விடுபட முடியாத துன்பங்களை தீர்த்து அவர்களை ஆட்கொள்பவனை, சீருஞ் செல்வமும், செழிப்பும் பிறப்பதற்கு காரண மானவனை,

காய் கனிகளின் உள்ளே சுவையாக இருப்பவனை,  கண்ணின் மணிப் போன்றவனை, பல துஷ்டர்களை குத்தி அழித்த திரிசூலத்தை உடையவனை,  அகத்திய மாமுனிவர் பூசித்து வணங்கிய அத்திமூர் எனுஞ் சிவ தலத்தில்,

புல்லாங் குழலில் தோன்றும் இனிமையான இசையைப் போன்று குரலையுடையவளாகிய பருவதவர்த்தினி எனுந் திருப்பெயர் கொண்ட உமையவளோடு வீற்றிருந்து அருளை வாரி பொழியும் விருப்பாட்சீச்சுரன் எனும் திருநாமங் கொண்ட ஈசனை வணங்கிட வினைகள் யாவும் ஒழியுமே! 

குறிப்பு - தாயைப் போல் வந்தது "திருச்சிராப்பள்ளி"  தலபுராணம் காண்க!

திருவிளையாடற் புராணத்தில் "பன்றி குட்டிகளுக்கு முலை கொடுத்த படலம்" காண்க!

குழந்தையாக வந்தது  "விருத்த குமார பாலரான படலம்" காண்க!

உரைக்க வேதங்களை யோர் ஆலின் கீழ் அமர்ந்தானை
   ஒன்றியே யெங்குமெதிலு மெத்தன்மையுமாயிருப்பானை
கரை சேர பிறவிக் கோர் காரண பொருளானானை
   கடலேழு மானானை கலையாவும் படைத்தானை
அரையிலரவமணிந் தங்கையிலன லேந்தினானை
   ஆனந்த கூத்தனை அங்கியுந் தொழுதேத்திய அத்திமூர்
விரை மலர் குழலாள் பருவதவர்த்தினியுடனுறையும்
   விருப்பாட்சீச்சுரனை வேண்டி தொழ வினை நீங்குமே! (5)

உரைக்க வேதங்களை ஓர் ஆலின் கீழ் அமர்ந்தானை
   ஒன்றியே எங்கும் எதிலும் எந்தன்மையுமாய் இருப்பானை 
கரை சேர பிறவிக்கு  ஓர் காரண பொருள் அனானை
   கடல் ஏழும் ஆனானை கலை யாவும் படைத்தானை 
அரையில் அரவம் அணிந்து அங்கையில் அனல் ஏந்தினானை
   ஆனந்த கூத்தனை அங்கியுந் தொழுது ஏத்திய அத்திமூர் 
விரை மலர் குழலாள் பருவதவர்த்தினியுடன் உறையும் 
   விருப்பாட்சீச்சுரனை வேண்டி தொழ வினை நீங்குமே!

ஒன்றி - சேர்ந்து,  அரை - இடுப்பு,  அரவம் - பாம்பு,  அங்கை - உள்ளங்கை, அனல் - நெருப்பு,  அங்கி - அக்கினி தேவன்,  ஏத்திய – போற்றிய

கருத்துரை:- 
அன்று சனகாதி முனிவர்களுக்கு வேதங்களை உபதேசிப்பதற்கு கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்தானை, எல்லாவற்றிலும் ஒன்றியபடியே எங்கும் எதிலும் எந்தன்மையுமாய் இருப்பானை, பிறவி கடலை கடந்து கரை சேருவதற்கு ஒரு காரண கர்த்தாவாக இருப்பவனை, ஏழு கடலுமாய் திகழுபவனை, 64 - கலைகளையும் படைத்தானை, தனது இடுப்பில் ஒரு பாம்பை சுற்றி கொண்டு இருப்பவனை, தனது உள்ளங் கையினில் நெருப்பை ஏந்திக் கொண்டு இருப்பவனை,

ஆனந்த தாண்டவம் ஆடுபவனை, அக்கினியும் தொழுது வணங்கிய அத்திமூரில் குளிர்ச்சி மிகுந்த மலர்களை போன்ற கூந்தலை உடையவளாகிய பருவதவர்த்தினி எனுந் திருப்பெயர் கொண்ட அம்பாளோடு உறைகின்ற விருப்பாட்சீச்சுரன் எனுந் திருநாமந் தாங்கிய ஈசனை தொழுதிட வினைகள் யாவும் நீங்குமே!

குறிப்பு - அத்திமூர் திருத்தலத்தை அக்கினி பகவான் பூசித்து உள்ளார்


நீள் கோவணயாடையின் மேல் கொம்புஞ் சங்குமணிந்தானை
   கொன்றையுங் கூவிளமுங் கோதிய சடையிற் தரித்தானை
கோள் தரும் பலன்கள் கூடாதடியாரை காப்பானை
   குமிழ் சிரிப்புங் கொவ்வைக் கனிவாயிதழு முடையானை
தாள் பணியுந் தவசீலரை தன்னடியில் வைத்தானை
   தனபதியுஞ் தாமரை கொண்டேத்தி தொழுத அத்திமூர்
வாள் நெடுங் கண்ணினாள் பருவதவர்த்தினியுடனுறையும்
   விருப்பாட்சீச்சுரனை வணங்கிட வினையகலுமே! (6)

நீள் கோவண ஆடையின் மேல் கொம்புஞ் சங்கும் அணிந்தானை
   கொன்றையுங் கூவிளமுங் கோதிய சடையிற் தரித்தானை 
கோள் தரும் பலன்கள் கூடாது அடியாரை காப்பானை
   குமிழ் சிரிப்யுங் கொவ்வைக் கனிவாய் இதழும் உடையானை 
தாள் பணியுந் தவ சீலரை தன் அடியில் வைத்தானை
   தனபதியுந் தாமரை கொண்டு ஏத்தி தொழுத அத்திமூர் 
வாள் நெடுங் கண்ணினாள் பருவதவர்த்தினி உடன் உறையும்
   விருப்பாட்சீச்சுரனை வணங்கிட வினை அகலுமே! 

கீள் - இடுப்பில் கட்டும் கயிறு,  அரை நாண் கயிறு, கோவணம் - இடுப்பில் அணியும் ஒரு சிறு ஆடை,  கொம்பு - பன்றியின் கொம்பு,  கூவிளம் - வில்வம் கோதிய - வருடிய,  கோள் - நவகிரகங்கள்,  குமிழ் - இரண்டு உதடுகளும் சேர்ந்தது,  கொவ்வைக்கனி - கோவை பழம்,  தனபதி  - குபேரன்

கருத்துரை:- 
இடுப்பில் அணியும் சிறிய கோவண ஆடையின் மேல் கட்டும் கயிற்றால் பன்றியின் கொம்பும், சங்கும் கோர்த்து அணிந்துள்ளவனை கொன்றை மலரும் வில்வமும் வருடுகின்ற செஞ்சடையில் தரித்துள்ளவனை, அடியார்களுக்கு நவகிரகங்களால் ஏற்படும் இடர்கள் வந்து சேராமல் காத்து அருள் புரிபவனை,

கோவைப் பழம் போன்ற வாய் இதழ்களை குவித்து புன்சிரிப்போடு காட்சி தருபவனை,  தன் திருவடிகளை வணங்கி தவம் செய்த நற்குணமுடையவர்களை தன் அடியிலேயே வைத்தானை, குபேரனும் தாமரை மலர்கள் கொண்டு போற்றி வணங்கிய அந்திமூர் வாழ் வாளைப் போன்ற நீண்ட கண்களை உடையவளாகிய பருவதவர்த்தினி எனும் திருப்பெயர் தாங்கிய அம்பாளோடு விருப்பாட்சீச்சுரன் எனும் திருநாமங் கொண்ட ஈசனை வணங்கிட வினைகள் எல்லாம் அகலுமே! 

குறிப்பு - இப்பாடலில் வரும் "குமிழ் சிரிப்புங் கொவ்வைக் கனி வாயிதழ்'" என்ற சொற்றொடர் திருநாவுக்கரசர் தேவாரம் (4-ஆம் திருமுறை)  "கரு நட்ட கண்டனை"  என்ற திருவிருத்தத்தில்  4 - வது செய்யுளில் "குனித்த புருவமுங் கொவ்வைச் செய்வாயிற் குமிண் சிரிப்பும்" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க!  

அத்திமூர் திருத்தலத்தை குபேரன் பூசித்துள்ளான்.

செஞ்சடையில் நீரை வைத்து சீறும் பாம்பாட்டினானை
   சிறுவனுக் காதரவாய் சென்று வழக்குரைத்தானை
அஞ்செழுத்தையும் மாற்றி யுரைப்பார்க்குரிய தருள்வானை
   அறுபத்து நான்கு மூர்த்தமாய் விரிந்திருப்பானை
நஞ்சை யமுதாயுண்டானை நல்லோருளே யிருந்தானை
   நான்முகனும் நன்னீராட்டி பூசித்த அத்திமூர்
வஞ்சிக் கொடியிடையாள் பருவதவர்த்தினி யுடனுறையும்
   விருப்பாட்சீச்சுரனை வேண்டி தொழ வினை தேயுமே! (7)

செஞ்சடையில் நீரை வைத்து சீறும் பாம்பு ஆட்டினானை
   சிறுவனுக்கு ஆதரவாய் சென்று வழக்கு உரைத்தானை
அஞ்செழுத்தையும் மாற்றி உரைப்பார்க்கு உரியது அருள்வானை
   அறுபத்து நான்கு மூர்த்தமாய் விரிந்து இருப்பானை
நஞ்சை அமுதாய் உண்டானை நல்லோர் உளே இருந்தானை
   நான்முகனும் நல் நீர் ஆட்டி பூசித்த அத்திமூர்
வஞ்சிக் கொடி இடையாள் பருவதவர்த்தினி உடன் உறையும்
   விருப்பாட்சீச்சுரனை வேண்டி தொழ வினை தேயுமே!


மூர்த்தம் - வடிவம், விரிந்து - பரவி, திகழ்வது,  நஞ்சு - விஷம்,  நான்முகன் - பிரம்மன்,  வஞ்சிக் கொடி - பெண் கொடி.

கருத்துரை:- 
செஞ்சடையில் கங்கையை வைத்து சீறுகின்ற நாகத்தை அடக்கி ஆட வைத்தானை,  ஒரு சிறுவனுக்கு ஆதரவாக சென்று வழக்கு ஆடினானை, நமசிவாய எனும் ஐந்து எழுத்துக்களையும் மாற்றி மந்திர பீஜாட்சரமாக உரைப்பவர்களுக்கு உரிய பலனை தருவானை 64 - மூர்த்தங்களாய் வடிவு கொண்டு பரவி திகழ்ந்து இருப்பானை, விஷத்தை அமுதமாக உண்டானை நல்லவர்கள் உள்ளத்தில் இருப்பானை,
 
பிரம்மனும் நன்னீரைக் கொண்டு அபிஷேகம் செய்து. பூசித்து வணங்கிய அத்திமூர் எனும் சிவதலத்தில் கொடி இடையை கொண்டவளாகிய பருவதவர்த்தினி எனும் திருப்பெயர் கொண்ட உமையவளோடு வீற்றிருந்து அருளை வாரி வழங்கும் விருப்பாட்சீச்சுரன் எனும் திருநாமங் கொண்ட ஈசனை வேண்டி தொழுதிட வினைகள் எல்லாம் தேய்ந்து அழியுமே

குறிப்பு - சிறுவனுக்காக வழக்கு ஆடியது திருவிளையாடற் புராணத்தில் "மாமனாக வந்து வழக்குரைத்த படலம்" காண்க!

64 - மூர்த்தங்களையும், திருத்தல வரலாறுகளையும் இணைய தளத்தில் காண்க நமசிவாய எனும் ஐந்து எழுத்துக்கள் மாறும் விதம்.

ந ம சி வ ய
ய ந ம சி வ
வ ய ந ம சி
சி வ ய ந ம
ம சி வ ய ந


அத்திமூர் திருத்தலத்தை பிரம்மனும் பூசித்து உள்ளான்.

முளைக்கும் வித்தினுளே மூலக் கருவாய் திகழ்ந்தானை
   முத்தமிழிலுறையும் முழுநாதப் பொருளானை
திளைக்கு மின்பமுந் துன்பமு மில்லானை தீதகற்றுமொரு
   திருவைந்தெழுத்தா யிருப்பானை தேவ தேவனை
களைக்கு மடியார் கருதிய போது சோறளித்தானை
   கதிரோனுங் யொளி வீசி கைதொழுதேத்திய அத்திமூர்
வளை குழல் வடிவழகி பருவத வர்த்தினியுடனுறையும்
   விருப்பாட்சீச்சுரனை துதித்திட வினை தீருமே! (8)

முளைக்கும் வித்தின் உள்ளே மூலக் கருவாய் திகழ்ந்தானை
   முத்தமிழில் உறையும் முழு நாதப் பொருளானை
திளைக்கும் இன்பமும் துன்பமும் இல்லானை தீது அகற்றும் ஒரு
   திரு ஐந்து எழுத்தாய் இருப்பானை தேவ தேவனை
களைக்கும் அடியார் கருதிய போது சோறு அளித்தானை
   கதிரோனும் ஒளி வீசி கை தொழுது ஏத்திய அத்திமூர்
வளை குழல் வடிவு அழகி பருவதவர்த்தினியுடன் உறையும்
   விருப்பாட்சீச்சுரனை துதித்திட வினை தீருமே!  

கரு - பிறப்பு, காரணம், முத்தமிழ் - இயல், இசை, நாடகம்,
செந்தமிழ் தீந்தமிழ், இசைத்தழிழ், நாதம் - இசை, லயம்.  திளைக்கும் - மூழ்கும் தீது - கெடுதி, தீமை, கேடு,    திரு ஐந்து எழுத்து - ந ம சி வ ய,   களைக்கும் - சோர்வுற்ற,    கதிரோன் - சூரியன்.


கருத்துரை: - 
பிறப்பதற்கு காரணமாக இருக்கும் விதையின் உள்ளே ஒரு மூலப் பொருளாக இருப்பவனை, முத்தமிழின் உள்ளே உறைவிடமாகவும், இசையின் உள்ளே நாதலயமாகவும் இருப்பானை, மூழ்கும் இன்ப துன்பம் இரண்டும் இல்லாதவனை, தீமை அகற்றும் ஒரு மந்திர பொருளான "நமசிவாய" எனும் அட்சரத்தில் இருப்பானை, தேவர்களுக்கு எல்லாம் தேவனாக இருப்பவனை,
சோர்வுற்ற தன் அடியார்கள் நினைத்த போது உணவு அளித்தானை, சூரியனும் ஒளியை வீசி கை தொழுது போற்றிய அத்திமூர் எனுஞ் சிவ தலத்தில் வளைந்த அழகான கூந்தலை உடையவளாகிய வடிவழகி பருவதவர்த்தினி எனுந் திரு நாமம் கொண்டவளாகிய அம்பாளோடு தங்கி அருள் புரிகின்ற விருப்பாட்சீச்சுரன் எனுந் திருப்பெயர் கொண்ட ஈசனை துதித்திட வினைகள் யாவும் தீருமே!

குறிப்பு - களைக்கும் அடியார் கருதிய போது சோறு அளித்தானை என்ற சொற்றொடருக்கு விளக்கம் பெரிய புராணத்தில் தடுத்தாட் கொண்ட புராணம், திருநாவுக்கரசர் புராணம் ஆகியவற்றில் காண்க!

அத்திமூர் திருத்தலத்தை சூரியனும் பூசித்து உள்ளான்.

கான் மாறி மாடக் கூடலி லாடிக் காட்டினானை
   கல்லானையை கரும்புண்ண வைத்தானை குவலயந்தனிலே
ஊன் ஒடுங்குமுயிர்களை உரிய இடத்தில் சேர்ப்பானை
   ஓங்கியுலகளந் தானுக்காழிப் படையளித்தானை
தேன் ஊறும் தேவார திருப்பதிகங்களில் திகழ்ந்தானை
   திங்களும் திருவடியை பூசித் தருள் பெற்ற அத்திமூர்
வான் மதி நுதலாள் பருவத வர்த்தினியுடனுறையும்
   விருப்பாட்சீச்சுரனை தொழுதிட வினை ஒல்குமே! (9)

கான் மாறி மாடக் கூடலில் ஆடிக் காட்டினானை
   கல் ஆனையை கரும்பு உண்ண வைத்தானை குவலயந்தனிலே
ஊன் ஒடுங்கும் உயிர்களை உரிய இடத்தில் சேர்ப்பானை
   ஓங்கி உலகு அளந்தானுக்கு ஆழிப் படை அளித்தானை
தேன் ஊறுந் தேவார திருப்பதிகங்களில் திகழ்ந்தானை
   திங்களும் திருவடியை பூசித்து அருள் பெற்ற அத்திமூர்
வான்மதி நுதலாள் பருவதவர்த்தினியுடன் உறையும்
   விருப்பாட்சீச்சுரனை தொழுதிட வினை ஒல்குமே!


கான் - கால்,  மாடக்கூடல் - மதுரை, குவலயம் - உலகம், ஊன் - மாமிசம், தசை ஒடுங்கும் - சுருங்கி, வற்றி,   ஆழிப்படை - சக்ராயுதம், திங்கள் - சந்திரன், வான்மதி - பூரண சந்திரன்,  நுதல் - நெற்றி

கருத்துரை:- 
அன்று மதுரையில் இராஜ சேகர பாண்டியன் வேண்டிக் கொள்ள வெள்ளியம்பல பெருமானாகிய ஈசன் தனது ஊன்றிய வலது காலையும் தூக்கிய இடது காலையும் மாற்றி ஊன்றிய இடது காலாகவும் தூக்கிய வலது காலாகவும் ஆடிக் காட்டினானை, கல் யானைக்கு கரும்பு கொடுத்து உண்ணச் செய்தானை,
இப்பூவுலகில் தசைகள் ஒடுங்கி செயல்கள் அடங்கும் போது அவ்வுயிர்களை ஆதரித்து உரிய இடத்தில் சேர்ப்பானை, ஓங்கி உலகை அளந்த திருமாலுக்கு சக்ராயுதத்தை அளித்தானை, தேன் சொட்டும் செந்தமிழ் தேவார பதிகங்களில் திகழ்ந்தானை,
சந்திரனும் ஈசன் திருவடிகளை பூசித்து அருள் பெற்ற அத்திமூர் எனுஞ் சிவதலத்தில் வானில் தோன்றும் பூரண சந்திரனைப் போல நெற்றியின் அழகை உடையவளாகிய பருவதவர்த்தினி எனுந் திருப்பெயர் கொண்ட அம்பாளோடு உறைகின்ற விருப்பாட்சீச்சுரன் எனுந் திருநாமங் கொண்ட ஈசனை தொழுதிட வினைகள் எல்லாம் அடங்கி அழியுமே!

குறிப்பு:- ஈசன் மதுரையில் கால் மாற்றி ஆடியது திருவிளையாடற் புராணம் " கான் மாறி யாடின படலம்" காண்க.

கல்யானைக்கு கரும்பு கொடுத்தது திருவிளையாடற் புராணம்
"கல்லா னைக்குக் கரும்பருத்திய படலம்" காண்க.

திருமாலுக்கு சக்ராயுதம் அளித்தது
"திருவீழிமிழலை" தலபுராணம் கண்க!

அத்திமூர் திருத்தலத்தை சந்திரனும் பூசித்துள்ளான் என்பதை அறிக!



எண்டிசையும் நிறைந்தானை யிரவுபகல் மாற்றினானை
   ஏரூர்ந்த செல்வனை யேட்டிலே கலந்துறைவானை
அண்டினோர்க் கிரங்கினானை யெளிவந்த பிரானை
   அம்மையு மப்பனுமாயரிய தோற்ற முடையானை
உண்டியுயிர்களுக்கு வகுத்தானை யுள்ளொளியிலிருப்பானை
   உருவிலியு முதயத்தில் தொழுது வணங்கிய அத்திமூர்
வண்டார் குழலியாள் பருவத வர்த்தினியுட னுறையும்
   விருப்பாட்சீச்சுரனை வேண்டிட வினை ஓடுமே! (10)

எண் திசையும் நிறைந்தானை இரவு பகல் மாற்றினானை
   ஏர் ஊர்த்த செல்வனை ஏட்டிலே கலந்து உறை வானை
அண்டினோர்க்கு இரங்கினானை எளி வந்த பிரானை
   அம்மையும் அப்பனுமாய் அரிய தோற்றம் உடையானை
உண்டி உயிர்களுக்கு வகுத்தானை உள் ஒளியில் இருப்பானை
   உருவிலியும் உதயத்தில் தொழுது வணங்கிய அத்திமூர்
வண்டார் குழலியாள் பருவதவர்த்தினியுடன் உறையும்
   விருப்பாட்சீச்சுரனை வேண்டிட வினை ஓடுமே!


எண்- எட்டு, ஏர் - எருது, ஏட்டிலே - ஓலைச்சுவடி
அண்டி - அடைந்த, இரங்கி - கருணை, பரிவு, உண்டி - உணவு, வகுத்து - பிரித்து, உருவிலி - மன்மதன்


கருத்துரை:- 
எட்டு திசைகளிலும் நிறைந்திருப்பவனை, இரவையும் பகலையும் மாறி மாறி வரச் செய்தானை, எருது மேல் ஏறி எங்கும் செல்பவனை, ஏட்டு சுவடிகளில் உள்ள பாக்களில் கலந்து இருப்பவனை, தன்னை அடைந்தவர்களுக்கு கருணை புரிபவனை, அடியார்களுக்கு எளிமையாக காட்சி கொடுப்பவனை,
அம்மையும் அப்பனுமாக அரிய அர்த்தநாரீச்சுரர் தோற்றமாய் இருப்பவனை, எல்லா உயிர்களுக்கும் உணவை பிரித்து அளிப்பவனை, உள்ளத்தின் உள்ளே ஒளியாய் குடி கொண்டு இருப்பவனை,
மனமதனும் விடியற்காலையில் தொழுது வணங்கிய அத்திமூர் எனும் சிவ தலத்தில் வண்டுகள் மொய்க்கும் அழகிய கூந்தலை உடையவளாகிய பருவதவர்த்தினி எனுந் திருப்பெயர் கொண்ட உமையவளோடு வீற்றிருக்கும் விருப்பாட்சீச்சுரன் எனும் திருப்பெயர் தாங்கிய ஈசனை வேண்டி வணங்கிட வினைகள் எல்லாம் பறந்து ஓடுமே!

குறிப்பு:- ஈசன் அடியார்களுக்கு எளிமையாக காட்சி கொடுப்பவன் என்பதை "பெரிய புராணத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் " அறியலாம்.

அத்திமூர் திருத்தலத்தை மன்மதனும் பூசித்து வணங்கியுள்ளான் என்பதை அறிக!

முத்தீயும் முனிவருந் தேவரும் முழங்கிய மறை நான்கும்
   மூவேளையும் முறையாக வலம் வந்து வணங்கிய
புத்தொளிரும் பொழில் சூழ்ந்த யழகான அத்திமூர் வாழ்
   பொற்பாவை பருவதவர்த்தினியுடனினிதே யுறையும்
வித்தகன் விருப்பாட்சீச்சுரனை யுளமுருகி தொழுது
   வேண்டி ஆரணியாடியார்க் கடியவன் கூறியவை
பத்தும் விரும்பி பாடி பயில வல்லார்கள் யாவரும்
   பல் வளமும் பெற்று பார்புகழ வாழ் வாரினிதே! (11)


முத்தீயும் முனிவருந் தேவரும் முழங்கிய மறை நான்கும் 
   மூவேளையும் முறையாக வலம் வந்து வணங்கிய 
புத்து ஒளிரும் பொழில் சூழ்ந்த அழகான அத்திமூர் வாழ் 
   பொற் பாவை பருவதவர்த்தினி உடன் இனிதே உறையும் 
வித்தகன் விருப்பாட்சீச்சுரனை உளம் உருகி தொழுது 
   வேண்டி ஆரணி அடியார்க்கு அடியவன் கூறியவை 
பத்தும் விரும்பி பாடி பயில வல்லார்கள் யாவரும்
   பல் வளமும் பெற்று பார் புகழ வாழ்வார் இனிதே! 

முத்தீ - சூரியன், சந்திரன், அக்கினி, முழங்க - ஒலிக்க, மறை - வேதம், மூவேளை - சாத்மீகம், இராஜதம், தாமஸம், புத்து - புதுமை, பொழில் - சோலை, வித்தகன் - புலமை, திறமை,. பாவை - பதுமை, பயில் - கற்க,. பயிற்சி

கருத்துரை:- 
சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூவரும், முனிவர்களும், தேவர்களும், ஒலிக்க கூடிய நான்கு வேதங்கஞம், சாத்மீகம், இராஜதம், தாமஸம் ஆகிய மூன்று வேளைகளும் முறையாக வலம் வந்து வணங்கிய
புதுமையான ஒளியை தருகின்ற சோலைகள் சூழ்ந்த அழகு மிக்க அத்திமூர் எனுஞ் சிவ தலத்தில் வாழுகின்ற பொன்னால் ஆன பதுமையை போன்று காட்சி தரும் பருவதவர்த்தினி எனுந் திருநாமங் கொண்ட உமையவளோடு இனிதே உறைகின்ற புலமை மிக்கவனாகிய விருப்பாட்சீச்சுரன் எனும் திருப்பெயர் கொண்ட ஈசனை உளமுருகி தொழுது வேண்டி,
ஆரணி அடியார்க்கு அடியவன் என்கின்ற சிறியவன் கூறிய மேற்கண்ட பத்து பாடல்களையும் விரும்பி பாடி கற்க வல்லார்கள் எவரும் பல் வளமும் பெற்று இவ்வுலகம் புகழ இனிதாக வாழ்வார்களே!

குறிப்பு - இந்த மூன்று வேளைகளும் ஞாயிறு முதல் சனிக் கிழமை வரை ஒவ்வொரு நாளும் காலை 6 - மணிமுதல் மாலை 6 - மணி வரையிலும், பிறகு மாலை 6 - மணி முதல் காலை 6 - மணி வரையிலும்
ஒவ்வொரு 1 1/2 மணி நேரத்திற்கும் மாறி கொண்டே வரும். அவ்வகையில் சாத்மீக வேளை வரும் போது தெய்வ காரியங்களும், இராஜத வேளை வரும் போது மற்ற எல்லா காரியங்களும், தாமல வேளை வரும் போது எல்லா காரியங்களும் நிதானமாகவும் மந்தமாகவும் நடைபெறும்.

மேற்சொன்ன இந்த மூன்று வேளைகளுக்குரிய தேவர்கள் ஈசனை வணங்குவதாக சொல்லப்படுகிறது இப்பாடலில் என்பதை அறிக!

திருச்சிற்றம்பலம்.

சுபம்.

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam