ஆதிகும்பேச்சுரர் Athikumbesurar

ஆதிகும்பேச்சுரர்    Athikumbesurar




வேதியனை யோர் விடையேறிய காரிய காரணனை
மாதினை மெச்சுமோர் மணியைச் செல்வ பேறை
ஓதியும் மறையை நன்கு உணரச் செய்தானை
பாதிமதி சூடியவனை தொழ ஆவதெலாம் நலமே !

வேதியனை ஓர் விடை ஏறிய காரிய காரணனை 
மாதினை மெச்சும் ஓர் மணியைச் செல்வ பேறை
ஓதியும் மறையை நன்கு உணரச் செய்தானை
பாதிமதி சூடியவனை தொழ  ஆவது எலாம் நலமே !

வேதியன் - வேதப்பொருளானவன்,  விடை - எருதுரிஷிபம்,  மாது - உமையம்மை,  பேறை - உயர்ந்த,  மேன்மை, பயன்,  மறை - வேதம்

பொழிப்புரை - 

வேதம் உரைத்தவனை ஒரு எருது ஏறிய காரிய காரணமானவனை,
உமையம்மையை விரும்பும் ஒரு மணியை,  செல்வத்தின் பயனை,
மறையை ஓதி நன்றாக உணரச் செய்தவனை,
பிறை சந்திரனை சூடியவனை துதிக்க நடப்பதெல்லாம் நன்மையே !

கருத்துரை:- 

அன்று ஆல மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் வேதங்களை உபதேசித்தவனை, எங்கும் ரிஷப வாகனம் ஏறிச் செல்பவனை, எல்லா செயல்களுக்கும் காரணமாகவும் கர்த்தாகவும் இருப்பவனை,  உமா தேவியை விரும்பும் மணி போன்றவனை,
செல்வத்தின் பயனாக இருப்பவனை,  தேவர்களும், முனிவர்களும், தன் அடியார்களும் நன்றாக  உணரும்படி வேதங்கள தெளிவாகச் சொல்பவனை,  பிறை சந்திரனை முடியில் தரித்து இருப்பவனை வணங்கிட நடப்பது எல்லாம் நன்மையாகவே அமையும். 

திருந்தால பெருமை:- 

சுவாமி  -   ஆதிகும்பேச்சுரர்,   அமுதேச்சுரர். 
அம்பாள் - மங்களாம்பிகை.

தலம்  -  கும்பகோணம்.-  சோழ நாடு - காவிரி தென்கரை - 26 - வது தலம். 

தீர்த்தம் -    மகாமகம், காவிரி. 

விருட்சம் -  வன்னி,  வில்வம். 

வழிபட்டோர் - சம்பந்தர்,  அப்பர்,  அருணகிரி நாதர்,  கும்பமுனி,.  ஏமரிஷி,  நவகன்னியர், மூர்க்க நாயனார், கோவிந்த தீஷிதர்.

நூல் - தேவாரம்,  திருப்புகழ்,  திருக்குடந்தை புராணம், 
லிங்காட்சரமாலை.

பாடியார்கள் - சம்பந்தர்,  திருநாவுக்கரசர், அருணகிரி நாதர்,  மீனாட்சி சந்தரம் பிள்ளை,  ஆரணியடியார்க்கடியவன். 

வழிபடும் பலன் - கல்வியறிவு, ஆற்றல்,  திருமணம்,  மகப்பேறு,  செல்வம்,  தொழில் வளர்ச்சி,  பாபநாசம்.

குறிப்பு:-  இத்தலத்து லிங்காட்சாமாலையில் "பாதிமதிசூடியவனை" என்ற சொற்றொடர் திருஞான சம்பந்தர் தமது திருக்குடமூக்கு  தேவாரத்தில் (3-ஆம் திருமுறை)  " அரவிரி கோடளிட" எனத் தொடங்கும் பதிகத்தில் 9-வது செய்யுளில் "புன்சடைமேல் நிரம்பா மதிசூடி” என்று குறிப்பிடுவதை காணலாம்.
அதுவல்லாது அருணகிரி நாத சுவாமிகளின் " திருவேரக திருப்புகழில்” "பாதிமதி நதி" என்ற சொற்றொடரை ஆரம்ப சொல்லாக வைத்துப் பாடியுள்ளதையும் காண்க!

Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai