மாத்ருபூதேச்சுரர் Mathruboothesurar
செகத்தி லோர் தாயுமாய்வந்தானை பரவிய
யுகத்தின் சுழற்ச்சியைச் செயுந் தேனைஅகப்பூவிலுறையு மருமருந்தை பணிய
மகத்தில் புகுஞ் சனியும் மாறி நன்மை செயுமே !
செகத்தில் ஓர் தாயுமாய் வந்தானை பரவிய
யுகத்தின் சுழற்ச்சியைச் செயுந் தேனை
அகப்பூவில் உறையும் அரு மருந்தை பணிய
மகத்தில் புகுஞ் சனியும் மாறி நன்மை செயுமே !
பொழிப்புரை:-
பூவுலகில் ஒரு தாயுமாகி வந்தவனை, பரந்த
யுகத்தின் சுழற்ச்சியைச் செய்யும் தேனை,
உளம் (எனும்) பூவில் உறைகின்ற அரிய மருந்தை வணங்க
மகத்தில் ( நட்சத்திரம்) புகுந்த சனி கிரகமும் நன்மை செய்யுமே!.
கருத்துரை :-
இப்பூவுலகில் துணையிலா ஒரு வணிக குலப் பெண்ணின் பிரசவ காலத்தில், எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவனை தனக்கு துணையாக இருக்கும்படி வேண்டிக் கொள்ள ஈசனும் அப்பெண்ணின் தாயைப் போலவே உருமாறி வந்து பிரசவம் பார்த்தானை, பரந்து விரிந்துள்ள இந்த யுகத்தின் செயல்பாடுகளை செய்யும் தேன் போன்று இனிப்பவனை, உள்ளம் எனும் பூவில் உறைகின்ற அரிய மருந்தாய் இருப்பவனை வணங்கி தொழுதால் மக நட்சத்திரத்தில் புகுந்த சனி கிரகமும் நன்மையே செய்யும்..
மக நட்சத்திரமானது 27 - நட்சத்திரங்களில் 10-வது நட்சத்திரம் ஆகும். இது சிம்ம இராசிக்குரியது. சனி கிரகத்திற்கு சிம்ம இராசி பகையானது, ஆகையால் சனி கிரகம் சிம்ம இராசிக்கு வரும் போது, பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.
இக்கருத்தை சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது இரண்டு கண்களை இழந்த பிறகு பாடிய திருவொற்றியூர் தேவார்த்தில் ( 7 -ஆம் திருமுறையில் ) "அழுக்கு மெய் கொடு" என்ற பதிகத்தில் 9 - வது செய்யுளில் " மகத்திற் புக்க தோர் சனி" என்று குறிப்பிடுவதை இங்கே லிங்காட்சரமாலையிலும் காணலாம்
திருத்தல பெருமை:-
சுவாமி - மாத்ருபூதேச்சுரர், தாயுமானேச்சுரர்.
அம்பாள் - மட்டுவார்குழலி. சுகந்தகுந்தளாம்பிகை.
தீர்த்தம் - காவிரி, சிவகங்கை
விருட்சம் - வில்வம்
தலம் - திருச்சிராப்பள்ளி - சோழ நாடு -காவிரி தென்கரை தலம் - 6
வழிபட்டோர் - சம்பந்தர், அப்பர், பிரமன், இந்திரன், சடாயு, சப்தரிஷிகள், திரிசிரன், சாரமா முனிவர், மொனகுரு, தாயுமானவர், அருணகிரி நாதர், சைவ எல்லப்ப நாவலர், அகத்தியர், அத்திரி, தூமகேது, அர்ச்சுனன், இராமர், அனுமன், விபீஷணன், நாககன்னிகை, ரத்னாவதி, சேக்கிழார்.
நூல் - தேவாரம், திருப்புகழ், செவ்வந்தி புராணம், லிங்காட்சரமாலை.
பாடியவர்கள் - சம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர், தாயுமான சுவாமிகள், சைவ எல்லப்ப நாவலர், ஆரணியடியார்க்கடியவன்.
வழிபடும் பலன் :- சுக பிரசவம், திருமணம், குழந்தை பேறு, உறுதுணை, நம்பிக்கை, வழிகாட்டுதல், மாங்கல்ய தோஷம் நீங்குதல்.
குறிப்பு - இத்தலத்து லிங்காட்சர மாலையில் "தாயுமாய் வந்தானை" என்ற சொற்றொடர் திருநாவுக்கரசு தேவாரம் (5-ஆம் திருமுறை)
"மட்டுவார் குழலாளொடு "' எனத் தொடங்கும் பதிகத்தில் 10- வது செய்யுளில் "தாயுமாய் எனக்கே" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கி காண்க.