முதுகுன்றீச்சுரர் Mudukundrechurar
முதுமையை சேர்பிணி யொடுவரும் இடரவை
எதுவாயினுஞ் சுவறிட சிவச்சொ லொன்றீய
மதுகொன்றை மத்தங் குறிஞ்சி கூவிளமும்
புதுபொலி வோடணியு மீசனை முக்கண்ணனைதுதி !
முதுமையை சேர் பிணி யொடு வரும் இடர் அவை
எதுவாயினுஞ் சுவறிட சிவச் சொல் ஒன்று ஈய
மது கொன்றை மத்தங் குறிஞ்சி கூவிளமும்
புது பொலிவொடு அணியும் ஈசனை முக்கண்ணனை துதி!
முதுமை - வயது கடந்த நிலை, சுவறிட - விலகிட, பொடியாக,
இடர் - துயரம், மது - தேன், மத்தம் - ஊமத்தம் மலர், கூவிளம் - வில்வம்,
பொலிவு - அழகு.
பொழிப்புரை:-
முதுமையை சேர்ந்த பிணியொடு வருகின்ற துயரங்கள்
எதுவாயினும் விலகிட, சிவச் சொல் ஒன்று அருள
தேன் கொன்றையும் ஊமத்தமும் குறிஞ்சியும் வில்வமும்
புதுபொலிவோடு அணியும் ஈசனை முக்கண்ணன்னை துதிசெய்க!
கருத்துரை:-
எடுத்த மானிட பிறவியில் வயதும் முதிர்ந்து இயலாத நிலையில் வரக்கூடிய நோய்களால் ஏற்படும் துயரங்கள் எதுவாக இருந்தாலும் அவைகள் விலகுவதற்குரிய ஒரு சிவச் சொல்லை உபதேசமாக பெற்றிட,
தேன் ஒழுகும் கொன்றை மலரோடு ஊமத்தம் மலரும், குறிஞ்சி மலரும், வில்வமும் புதிய அழகோடு அணிந்துள்ள ஈசனை மூன்று கண்களையுடையவனை துதித்து போற்றி அருள் பெறுங்கள்.!
திருத்தல பெருமை:-
சுவாமி - முதுகுன்றீச்சுரர், பழமலை நாதர், விருத்தகிரீச்சுரர்.
அம்பாள் - பெரிய நாயகி, பாலாம்பிகை , விருத்தாம்பிகை.
தலம் - திருமுதுகுன்றம், விருத்தாசலம் - நடு நாடு - 9 - வது தலம்
தீர்த்தம் - மணிமுத்தாறு, அக்கினி குபேர சக்கர தீர்த்தம்.
தல மரம் - வன்னி மரம்,
வழிபட்டோர் - பிரமன், அகஸ்தியர், முருகன், அக்கினி, குபேரன், சம்பந்தர், அப்பர், அருணகிரி நாதர், சுந்தரர், சிவபிரகாசர், வள்ளலார், குமார தேவர், குருநமச்சிவாயர், நாதசர்மா, அனவர்த்தினி, உரோமசர், விபசித்து, சோழர், பாண்டியர், காடவர்.
நூல் - தேவாரம், பெரிய நாயகியம்மை பதிகம், ஷேத்திர கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரிய நாயகி விருத்தம், கலித்தொகை, பிட்சாடன நவமணி மாலை, குரு தரிசனப் பதிகம், பிள்ளைத் தமிழ், திருப்புகழ், திருவருட்பா, லிங்காட்சர மாலை.
பாடியவர்கள் - சம்பந்தர், அப்பர், சுந்தரர், அருணகிரி நாதர், குமார தேவர், சிவபிரகாசர், வள்ளலார், குரு நமச்சிவாயர், ஆரணியடியார்க்கடியவன் .
வழிபடும் பலன் - ஐஸ்வரியம், மன நிம்மதி, நோய் தீருதல், திருமணம், குழந்தை பாக்கியம், தவவலிமை, இம்மைப் பயன் மறுமைப் பயன்.
குறிப்பு -
இத்தலத்து லிங்காட்சரமாலையில் “பிணியொடு வரும் இடரவை " என்ற சொற்றொடர் திருஞான சம்பந்தர் முதுகுன்றம் தேவாரம் (1 - ஆம் திருமுறை) மத்தாவரை நிறுவிக் கடல்" எனத் தொடங்கும் பதிகத்தில் 11 வது திருக்கடை காப்பு செய்யுளில் " பகருமடியவர்கட்கிடர் பாவமடையாவே " என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்குக.
அடுத்து "நின்று மலர் தூவி' எனத் தொடங்கும் திருவிருக்குக்குறளில் 5-வது அடியில் “ பிணியாயின கெட்டுத் " என்ற சொற்றொடரையும் ஒப்பு நோக்கி காண்க.
அதுவல்லாது சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதுகுன்றம் தேவாரத்தில் “நஞ்சியிடையின்று நாளை" எனத் தொடங்கும் பதிகத்தில் 11- வது செய்யுளில் " ஏத்து வார்க்கிடர் இல்லையே" என்ற சொற்றொடரையும் ஒப்பு நோக்கிடுக.