வேதாரண்யேச்சுரர் Vedharanyesurar
பாதாரமே ஓர் துணையென்றிருந்தேனரனே
நீதான் வருஞ் சுமையை நீக்கச்செய்வையேயு
னோதா உண்மையை உளுணர வைத்த ஒளியே நீயே
ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக !
பாதாரமே ஓர் துணை என்று இருந்தேன் அரனே !
நீதான் வருஞ் சுமையை நீக்கச் செய்வையே உன்
ஓதா உண்மையை உள் உணர வைத்த ஒளியே நீயே
ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக!
பொழிப்புரை:-
திருவடியே ஒரு துணை என்று இருந்தேனே சிவனே,
நீதான் வருகின்ற சுமையை நீக்கச் செய்வாயே, உன்னுடைய
ஓதா (சொல்லமுடியாத) உண்மையை உள்ளே உணர வைத்த ஒளியே, நீயே
ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக!
கருத்துரை -
சிவனே! நீ தான் வருகின்ற துயரங்களையும், சுமைகளையும் நீக்க வல்லவன் ஆயிற்றே என்று உனது. திருவடியே எனக்கு ஒரு துணை என்று எண்ணி இருந்தேனே !
வாக்கினால் சொல்ல முடியாத உனது மெய்பொருள் தன்மையை எனது உள்ளத்தினுள்ளே உணர வைத்த ஒளியே ! நீயே எனக்கு ஆதாரமாக இருந்து வேண்டியதெல்லாம் திருவருள் செய்வாயாக !
பரதாரம் - திருவடி, ஓதா - சொல்ல முடியாத, உண்மை - மெய்பொருள்,
உள் - உள்ளம்
திருத்தல பெருமை:-
சுவாமி - வேதாரண்யேச்சுரர்.
அம்பாள் - யாழைப்பழித்தமொழியாள்
தீர்த்தம் - வேத தீர்த்தம், மணிகர்ணிகை
விருட்சம் - வன்னி மரம்
தலம் - திருமறைக்காடு - சோழ நாடு - காவிரி தென்கரை தலம் - 125.
பாடியவர்கள் - சம்பந்தர், சுந்தரர், அப்பர், அருணகிரிநாதர்
பரஞ்சோதி முனிவர், ஆரணியடியார்க்கடியவன்.
நூல் - தேவாரம், திருப்புகழ், லிங்காட்சரமாலை, தலபுராணம்
வழிபட்டோர்- சுந்தரர், சம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர், இந்திரன், முசுகுந்தன், வேதங்கள், பரஞ்சோதி முனிவர், இராமர், அகத்தியர், கௌதமர், விசுவாமித்திரர், வசிஷ்டர், நாரதர், பிரம்மன், காவிரி, கங்கை.
வழிபடும் பலன் - நாக தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல தோஷங்களும் நீங்கல், திருமணம், குழந்தை பேறு, கல்வி, அறிவு, ஞானம், செல்வம், செழிப்பு, பிணி நீங்குதல், துயர் களைதல், மன அமைதி, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்யோக உயர்வு.
குறிப்பு:- இத்தலத்து லிங்காட்சரமாலையில் "வேண்டியதை தருக" என்று ஈசனை வேண்டும் சொற்றொடர்
திருநாவுக்கரசர் தமது திருமறைக்காடு திருத்தாண்டகத்தில் (6-ஆம் திருமுறை) " "தூண்டு சுடரனைய சோதி கண்டாய்" என்ற பதிகத்தில் முதல் செய்யுளில் "வேண்டுவார் வேண்டுவதே ஈவான்" என்ற சொற்றொடரோடு ஒப்பு நோக்கிக் காண்க!