வேம்புலீச்சுரர் Vembuleechurar
எழு முனிவர் பூசித்தானை சிவ குமரனுந்
தொழுத நற்சுனையை யுடையச் சிவனை சொல்லீர்!
பழுதற ஓத புகழடைவீரும் குலமும்
விழுதென படர தனமும் வேண்டியதீவானே!
எழு முனிவர் பூசித்தானை சிவ குமரனுந்
தொழுத நற்சுனையை உடையச் சிவனை சொல்லீர்
பழுது அற ஓத புகழ் அடைவீர் உம் குலமும்
விழுது என படர தனமும் வேண்டியது ஈவானே !
நற்சுனை - நல்ல நீரூற்று, குளம், விழுது - வேர், கிளை, பழுதற - குற்றமில்லாது, தனம் - செல்வம், ஓத - பாட, படித்து.
கருத்துரை: -
சப்தரிஷிகளான ஏழு முனிவர்கள் அத்திரி, பாரத்வாஜர், ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிஷ்டர், விசுவாமித்திரர் ஆகியோர் தொழுது வணங்கிய ஈசனை,
சிவகுமாரனாகிய முருகப்பெருமான் துதித்து பூசித்த நல்ல நீர் ஊற்றாகிய குமார தீர்த்தத்தை கொண்ட ஈசனை போற்றி புகழ்வீர்.
இங்கு வீற்றிருக்கும் வேம்புலீச்சுரனை பழுது இல்லாமல் பக்தியோடு பாடி பரவி வழிப்பட்டால் உங்கள் குலம் ஆலம் விழுது போல் படர்ந்து என்றும் தழைத்து உலகில் பெரும் புகழோடு வாழ, வேண்டிய செல்வங்களை தந்து திருவருள் புரிவானே !
திருத்தல பெருமை:-
சுவாமி - வேம்புலீச்சுரர்..
அம்பாள் - வேற்கண் நங்கை.
தலம் - விண்ணமங்கலம்.
தீர்த்தம் - குமார தீர்த்தம்.
விருட்சம் - வேப்ப மரம்.
வழிபட்டோர் – தேவர்கள், சித்தர்கள், அத்திரி, பாரத்வாசர், ஜமதக்கனி,
கௌதமர், காசிபர், வசிஷ்டர், விசுவாமித்திரர்.
நூல் - லிங்காட்சர மாலை, வேம்புலீச்சுரர் மாலை.
பாடியவர் - ஆரணியடியார்க்கடியவன்..
வழிபடும் பலன் - பழி பாவம் அகலுதல், செழிப்பு, ஆயுள், செல்வம், புகழ், கல்வி, மேன்மை, இருவினை நீக்கம், சித்தி, சாயுச்சிய பதவி, முக்தி.