உ எல்லாம் சிவமயம் வேலும் மயிலும் துணை திருச்சிற்றம்பலம் வள்ளி மணாளன் அட்சரமாலை விநாயகர் காப்பு ராகம் : நாட்டை பள்ளியிலுறையும் பிள்ளாய் பணிந்தேனுனையே வலமாய் புள்ளி மயிலேறி புவனமதை நொடியில் வலமாய் வந்த வள்ளி மணாளன் அட்சர மாலையையோதியுய்ந்திடயெமக்கு அள்ளி தாரும் ஞானமும் சொல்லும் நல்லபடியே. பள்ளியில் உறையும் பிள்ளாய் பணிந்தேன் உனையே வலமாய் புள்ளி மயில் ஏறி புவனம் அதை நொடியில் வலமாய் வந்த வள்ளி மணாளன் அட்சர மாலையை ஓதி உய்ந்திட எமக்கு அள்ளி தாரும் ஞானமும் சொல்லும் நல்ல படியே. ( கருத்துரை) கல்வி அறிவும் வித்தையும் , கலைகளும் போதிக்கும் இடமாகிய பள்ளியில் முதலாவதாக இருக்கும் பிள்ளையாராகிய விநாயகப் பெருமானே! உனைப்பணிந்து வலமாய் வந்தேன். அன்று புள்ளி மயில் ஏறி உலகை ஓர் இமை பொழுதில் வலம் வந்த , வள்ளியின் மணவாளனாகிய முருகப் பெருமானின் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு தொகுத்த , அட்சரமாலை என்னும் நூலைப் படித்து , பாடி , நற்கதி அடைந்திட எனக்கு ஞானமும் சொற்களும் வாரி வழங்கிட அருளினைத் தருவாய் (என்றவாறு)