கனககிரீச்சுரர் Kanagagirichurar




அனலில் ஓர் அற்புதஞ் செயவலரவரே
புனலையுஞ் சுவற யருளைச் செய்வரீவது
வினகில் ஞானமுங் கல்வியும் அறிவுந்
தனமுந் தானியமுமேயென கருதிதொழுதிடுக !

அனலில் ஓர் அற்புதஞ் செய்வலர் அவரே 
புனலையுஞ் சுவற அருளைச் செய்வர் ஈவது 
வினகில் ஞானமுங் கல்வியும் அறிவுந் 
தனமுந் தானியமுமே என கருதி தொழுதிடுக ! 

அனல் - நெருப்பு,  புனல் - நீர்,  சுவற  - வற்றிட,  வினகில் - கேட்பது

பொழிப்புரை:-

அனலில் ஒரு அற்புதஞ் செய்ய வல்லவர் அவரே
நீரை வற்றிட அருளச் செய்வார் தருவது (எதுவென)
கேட்பீராகில் (அது) ஞானமும், கல்வியும், அறிவும்,
தனமும், தானியமுமே என நினைந்து (அவரை)'தொழுதிடுக!

கருத்துரை:-

ஈசன் நெருப்பிலும், நீரிலும் பல அற்புதங்களை செய்ய வல்லவர். அவர் இவ்வுலக உயிர்களுக்கு தருவது எதுவென கேட்பீராகில் அது ஞானமும் கல்வியும் அறிவும் தனமும் தானியமும் ஆகும். ஆகையால் அவரை நினைந்து வழிபட்டு நற்கதியை அடையுங்கள்!

திருத்தல பெருமை:- 

சுவாமி    -   கனககிரீச்சுரர்.
அம்பாள் -  பெரிய நாயகி 

தலம் -  திருதேவிகாபுரம்

தீர்த்தம்  -  சிவ தீர்த்தம் 

விருட்சம் - வில்வம் 

வழிபட்டோர் -  உமாதேவி,  சோழர்கள்,  பல்லவர்கள்,  விஜய நகர மன்னர்கள்,  சித்தர்கள்,  முனிவர்கள்.
 
நூல் -  லிங்காட்சரமாலை.

பாடியவர் -  ஆரணியடியார்க்கடியவன்
 
வழிபடும் பலன் -  மண மாலை,  குழந்தை பேறு,  தவம்,  அமைதி,  மனசஞ்சலம் நீங்குதல், வேலை வாய்ப்பு,  தொழில் விருத்தி,  பதவி உயர்வு.

குறிப்பு -  

இத்தலத்து லிங்காட்சரமாலையில் "அனலில் ஓர் அற்புதஞ்  செயவலர்" என்ற சொற்றொடர் திருஞானசம்பந்தர் மதுரையில் சமணர்களோடு அனல் வாதஞ் செய்கையில் திருநள்ளாறு தேவாரம் (1-ஆம் திருமுறை) "போக மார்த்த பூண் முலையாள் " என்ற பதிகம் எழுதிய திரு ஏட்டை நெருப்பில் இடுகையில் அது வேகாமல் பச்சையாகவே பொன்னொளிர் வீசி பிரகாசித்தது. இத்திருவருட்செயலை  இங்கு ஒப்பு நோக்கி காண்க.!

அதுவல்லாது இத்தலத்து லிங்காட்சரமாலையில் “புனலையுஞ் சுவற அருளைச்  செய்வார்" என்ற சொற்றொடர் திருவிளையாடற் புராணத்தில்  “கடல் சுவுற வேல் விட்ட படலம் " என்ற தலைப்பில் மதுரையின் செழிப்பைக் கண்டு பொறாமையுற்ற இந்திரன் சமுத்திர இராஜனை அழைத்து பொங்கி எழுந்து மதுரையை அழிக்கும்படி கூறினான் இதையறிந்த ஈசன் உக்கிர பாண்டியன் கனவில் தோன்றி வேலால் அக்கடல் நீரை வற்றச் செய்வாயாக எனக்கூறி திருவிளையாடல் புரிந்ததை ஒப்பு நோக்கிடுக.!


Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam

வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai