செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam
செந்திலாதிபன் செண்பகமாலை
விநாயகர் காப்பு
வேண்டு வரமீயும் வேலவனின் புகழ் பாடும்
நீண்டு நிகரிலா நிதியாஞ் செண்பக மாலையை
யாண்டுமிரு வேளையும் இசையால் செப்பிட
தூண்டுகை விநாயக! துணைபுரிக எந்தனுக்கு!
தண்டையணி என்ற திருப்புகழ்
பண்டை வினைகள் யாவும் பறந்தோட ஈராறு
கண்களும் ஓராறு முகமுங் கரமதில் வேலுங்
தண்டையணி பாதமுங் கொண்டு என்முன் தோன்றிடுக!
அண்டர்புகழ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 1
நிலையாப் பொருளை என்ற
திருப்புகழ்
நிலையாப் பொருளை உடலாக் கொண்டு நாளுமுழன்று
தொலையாப் பிணியொடு துவண்டிடுமடியேன் வினையை
குலைத்திடுக கூரான வேல் கொண்டு ! எழுகின்ற
அலைசூழுந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 2
வஞ்சங் கொண்டுந்திடு என்ற திருப்புகழ்
வஞ்சங் கொண்டு வெற்பெனெ நின்ற சூரன் தோளையுமவன்
நெஞ்சையும் பிளந்து சேவலும் மயிலுமாக்கி நிதம்
அஞ்சிய அமரர் தளையும் நீக்கிய நீ அடியேன்
சஞ்சலந் தவிர் திருச்செந்திலம்பதி வாழ்
செண்பகமே! 3
நாலுமைந்து வாசல் என்ற திருப்புகழ்
நாலுமைந்து வாசலொடு எடுத்த நரசனனம்
கோலுடனுழன்று குலையும் முனரே கூரான
வேலுடன் வந்து சேர்ப்பாயுன் விரைமலர் பாதத்தில்
மாலும் புகழ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 4
அமுதுததி என்ற திருப்புகழ்
எமது பொருளெனு முனது அருளே இருக்கினினி
நமனே யாயினும் நாடுவது மெளிதோ சொல்?
அமரோரின் அடிமை தளை யகற்ற அவுணரோடு
சமரே புரிந்த திருச்செந்திலம்பதி செண்பகமே! 5
கொடியனைய என்ற திருப்புகழ்
வெகுகனக சிறுகமல பங்கயமொடு வீர
மிகுதோளும் வேலுஞ் சேவற் கொடியொடும் வந்து
புகுவாய் என்னுள்ளே பேரொளியாய்! சூரனை
செகுத்த சிவத்திருச் செந்திலம்பதி வாழ்
செண்பகமே! 6
அம்பொத்த என்ற
திருப்புகழ்
அம்பொத்த விழியால் அலைப்புண்டு அயர்வாகி சகல
சம்பத்து மிழந்து சார்வாருமற்று போகாமுன்
செம்பொத்த நின்சரண கமலஞ் சேர்ந்தின்புற வருளுக!
உம்பர்புகழ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 7
கொங்கை
பணையிற் என்ற திருப்புகழ்
தலையிற் சந்தப்பதம் வைத்து தமியேனை யாண்டு
மலையென தொடரும் வல்வினையை மாய்த்தருளுக!
வலைவீசி விந்தைகள் புரிந்தவர் நுதலில்
வந்துதித்த
கலைமிகுஞ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 8
புகரப் புங்க என்ற திருப்புகழ்
பைம்பொற் சிகரக் குன்றைப் படியிற்சிந்த வேலைவீக்கி
வையகமேழும் வாழ வகுத்த நீ வினையேன்
மைசூழ் வாழ்வை வளம்பெற மாற்றலாகாதோ
சைவம்புகழ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 9
அளகபாரம் என்ற திருப்புகழ்
கபடுடைய புவியில் கயவரால் கூனிகுறுகி
அபயமென்றடியே னரற்றினேன் அறியாயோ!
உபயசீதள பங்கய மென்கழல் என்று உகப்பாய்?
சுபமருளுஞ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 10
கமல மாதுடன் என்ற திருப்புகழ்
தொலைவிலாத அறம் பொருள் இன்பமுந் தேடிய
விலையிலாத ஞானமும் உருகிய இசையுமென்
நிலையிலாத தேகமும் நீயே ஏற்றருளாய்!
சிலைமிகுந்த திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 11
அவனிபெறுந் என்ற திருப்புகழ்
நவகோள்களால் நாளும் நலிந்துழலும் நாயேன்
பவமற நெஞ்சாற் சிந்தித்துன் கடம்பமலரை பெற்று
அவனியில் பிறந்தபயனை அடைந்து உயவருளுக!
சிவகுருவே! திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 12
குழைக்குங் என்ற திருப்புகழ்
உழைக்குஞ் சங்கடத்துன்பன் உலகிலுழன்று உடலாற்
இழைக்குஞ் செயல் யாவும் நலம்பெற்று வீடுங்
குலமுந்
தழைக்கும்படி தயை புரிவாய்! அடியார்க்கருள் தர
அழைக்குந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 13
மனத்தின்பங் என்ற திருப்புகழ்
மனத்தின்பங் என்ற திருப்புகழ்
வன்நெஞ்சினரோடு இணங்கி வினையேன் புரிந்திட்ட
புன்தொழிற் பங்கங்கெடத் துன்பங் கழித்தின்பம்
பெருக
உன்மரகத மஞ்சை மீது ஒளிவீச வருகவே!
தென்றல்சூழ் திருச்செந்திலம்பதி வாழ்செண்பகமே! 14
கரிக் கொம்பங் என்ற திருப்புகழ்
சிரப்பண்புங் கரப்பண்புஞ் சிவப்பண்புந்
தவப்பண்பு மகத்துள்
சுரக்கும்படி செய்து சிறியேனை யாட்கொள வருக!
அரக்கர்குல மன்றழித்து தேவர்மகளை மணந்த
தரணிபுகழ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 15
கருப்பந்தங் என்ற திருப்புகழ்
மயல் கொண்டு மண்ணுலகில் சிக்கி மனஞ்சிதறாது
இயல் இசையாலென்று முனை ஏத்த இவ்வடிமையை
உயக் கொண்டு என்பிறப்பங்கஞ் சிதைத்து உன்பதந்
தருவாய்!
நயம் மிகு திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 16
அனிச்சங் கார்முகம் என்ற திருப்புகழ்
விகற்பங் கூறிடு மோக விகாரனை விளித்து
தகராலய ஒளியினை உணர்த்தி பின் தெளிவித்து
இகபரம் இரண்டிலும் ஈடேறி உயவோர் சொல்
பகர்வாய் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 17
நிறுக்குஞ் என்ற
திருப்புகழ்
ஆறு அட்சரமுங் கடப்பங்கமழ் தாரொடகத்துள்
வீறு கொண்டெழும் உன்திருமுக வொளியுங் கண்டு யான்
பேறு பெற்றுய்ந்து பேரானந்தங் கொள அருள்வாய்!
நீறுபுகழ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 18
தொடரிய என்ற திருப்புகழ்
தினம் படிமீது இத்தேகமுந் தன் தேவைக்கென
அனலாய் தேடியலைந்துய ஒன்றுமடைந்திலையே!
மனம் உன் தாட்கன்புற்று இசையால் மூழ்க அருளுக!
தனமருளுந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 19
உருக்கம் பேசிய என்ற திருப்புகழ்
அருட்கண் பார்வையினா லடியார் தமையாளும்
பொருட்டயில் கொண்டு பதிதோறும் நின்ற நீ அடியேன்
இருள்நீக்கி வாழ்விலொளி பெற்றிட ஈவாயுன்
திருத்தாரை திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 20
பெருக்கச்சஞ் என்ற திருப்புகழ்
இரக்கைக்கென்றே என்வாழ்வுங் கழிந்தே போனதினி
புரக்கைக்குன் பதத்தைத் தந்துனக்குத் தொண்டு
பற்றயருளுக!
அரக்கரை யன்றழித் தமரரணங்கை மணமே கொண்ட
குரவனே! திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 21
சங்கு போல் என்ற திருப்புகழ்
துன்ப நோய் சிந்த நற்கந்த வேளென்றுனைத் தொண்டினால்
அன்பு கொண்டிரைஞ்ச அடியேற்குன் விழியாலருள்
செய்க!
இன்பமுடன் எண்ணிலாத் தலங்களிலுமுலவி வந்துபின்
பொன்னொளிருந் திருச்செந்திலம்பதி நின்ற
செண்பகமே! 22
காலனார் என்ற திருப்புகழ்
பாலில்படு நெய்யென பதிஞானம் என்னுள் உணரயுன்
வேலின் ஒளியொடுனதறு முக தரிசனந் தருக!
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கையஞ்சார
ஆலிபொழி திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 23
பருத்தந்தத் என்ற திருப்புகழ்
புனத்துறை புள்ளிமான் விழியாளொடும் பரியேறியொரு
கனப்பொழுதில் வலம்வரும் நின்செம்பொற்
பதத்திலின்புற்று
எனக்கென்று பொருள் தங்க விழிநோக்கி அருளுக! உள்
மனத்துறை திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 24
சங்கைதானொன்று என்ற திருப்புகழ்
ஆடம்பர சம்ப்ரம ஆனந்த மாயை கொண்டுலகில்
தேடம்பர வாழ்வில் திளைத்தழிந்து போகாதுனை
நாடம்பர ஞான வாழ்வில் திளைக்க அருளுக!
வீடம்பர திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 25
தண்டேன் என்ற திருப்புகழ்
வண்காயப் பொய்க்குடில் வேறாய் வன்கானஞ் சேராமுன்
தண்டையணி பாதங்களில் சரண்புக தயை புரிவாய்!
கண்ணிமை பொழுதில் கைவேலேறிந்து கிரிதுளைத்து
பின்
எண்டிசைபுகழ் திருச்செந்திலம்பதி நின்ற
செண்பகமே! 26
பங்கமேவும் என்ற திருப்புகழ்
பங்கமேவும் பிறப்பந்தகாரந்தனில் தடுமாறும்
இங்கிவனுமுய இறங்கி வருவாய் எனதுமுனே!
அங்கியில் அதியற்புதமா யுதித்தவுணரை வென்று
வருஞ்
சங்கைகளற திருச்செந்திலம்பதி நின்ற செண்பகமே! 27
முந்து தமிழ்மாலை என்ற திருப்புகழ்
வந்த காயமதிலே வாடுமடியேற்கு இனியும்
முந்தை வினையே வராமற்போக செம்பொன் மயிலேறி
சிந்தை குடிபுக வருக! சிவனார்க்கு குருவான
கந்தனே! திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 28
சத்தமிகு என்ற திருப்புகழ்
ஏழை யடிமைக்காக வச்ரமயில்
ஏறி வந்தென்
மாழை யகற்றி முத்தொழிலால் தொண்டுபுரிய ஒரு
பேழையி லொளிரும் பூணாய் மனதுளொளிர்வாய்!
தாழைசூழ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 29
சந்தன சவ்வாது என்ற திருப்புகழ்
சந்தன சவ்வாது என்ற திருப்புகழ்
எறிவுற்ற பொருளாய் இப்பூமியில் உதவாத
அறிவற்றேனை வந்தடிமைகொண்டு யாண்டு உனது
குறிவுற்றிட நீ குருவாய் வருவாய்! தரளங்கள்
செறிவுற்ற திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 30
அங்கைமென் என்ற திருப்புகழ்
அங்கைமென் என்ற திருப்புகழ்
ஊழ்வினையி லுழழு மடியேனுன் கருணையால் பா
ரேழ்மண்டலம் புகழ் நீயாய் நானாயிருக்க
மூழ்குமொரு மோன நிலையை தந்தருள வேண்டும்!
ஆழ்கடல் வாய்நின்ற திருச்செந்திலம்பதி செண்பகமே! 31
விறல் மாரன் என்ற
திருப்புகழ்
குளிர் மாலையின்கண் கலாபமேறி கடுகி வந்துன்
தளிர் மேனியின் கண் தவழும் அணிமாலை தந்தென்
வாழ்வும்
ஒளிர் பெற திருக்கண் நோக்கிடுக! வெண்சங்கு
புரளும்
வெளிர் கரையில் நின்ற திருச்செந்திலம்பதி
செண்பகமே! 32
விதிபோலும் என்ற திருப்புகழ்
இருளாய துன்ப மருள்மாயை வந்தெனை ஈர்வதை நின்
திருவாயால் விலகிட செப்ப லாகாதோ?
உருவான அரக்கர் குலம் முழுதும் ஒழித்த உயர்
குருவான திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 33
அந்தகன் வருந் என்ற திருப்புகழ்
சிந்தையு மவிழ்ந்து உரையுமொழித்து சிற்றுயிர்
மீண்டு
உந்தனை கந்தனென்றே வந்தனை செய்து வாழ தருக
எந்தனுக்கு அறிவு ஆற்றல் பொருள் பிணியகல் வாழ்வு
இந்திரன் தொழுந் திருச்செந்திலம்பதி வாழ்
செண்பகமே! 34
இயலிசையிலுசித என்ற திருப்புகழ்
மனையொடு மாறா பொருளும் மிடியிலா வாழ்வும்
உனையென துளறியு மன்புந் தருவாய் என்றுமே!
நினைதொழு மன்பரின் உருகிய பாடலொடு நிதந்
தினையுங் கொளுந் திருச்செந்திலம்பதி வாழ்
செண்பகமே! 35
வெங்காளம் என்ற திருப்புகழ்
குன்றாயென் வினையின் பயனாய் கருவா யுருக்கொண்ட
அன்றேயெனை யாண்டு கொண்ட நீ பொருள் தேடியான்
வன்பே துன்ப படலாமோ? வையகந்தனில் சொல்வாய்
தென்கடல் முனைவாழ் திருச்செந்திலம்பதி செண்பகமே! 36
அறிவழிய என்ற திருப்புகழ்
அறிவழிய விழிசுழல உரையுமற வுடலின்
பொறியொடு அனலவிய புரியாது மலமொழுக
முறியவரு முனரே வந்து நீ மீட்டருளுக!
பிறிதின்றி திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 37
அருணமணி என்ற திருப்புகழ்
படியில் யானுந் தோன்றி பலவாறாய் துன்பப்பட்டு
மடியாதுன் கருணையால் மாறா வளம் பெற
கடிதில் நீயுங் கலாபமேறி வந்து என்னுள்ளே
குடிபுகுவாய் திருச்செந்திலம்பதி செண்பகமே! 38
அனைவரும் என்ற திருப்புகழ்
எலும்பலம்பும் அவலவுடலுஞ் சுமந்து தடுமாறி
புலம்புமென் வாழ்வை பொன்னாக்கிடுக! நினதருளால்
கலங்குங் கடலலைகள் நடுவே சங்கும் நித்திலமுஞ்
சிலம்பிடுந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 39
இருகுழை என்ற திருப்புகழ்
மங்கிய பொறிகளின் குறைகளும் மீளா வறுமையும்
பொங்கிவரும் பகையும் பிணியும் நீங்கிட அருளுக!
அங்கியின் கிரணமொடு முன்றலின்புறம் அலைபொருதி
தங்கிச் செலுந் திருச்செந்திலம்பதி வாழ்
செண்பகமே! 40
இருள்விரி என்ற திருப்புகழ்
படைத்தெனையும் பாரில் பரிதவிக்க விடலாமோ?
அடைக்கலம் நீயே யல்லால் யாருலரெனக்கு!
சடைமுடி யிறைவருக்குச் சாத்திர முறை கூறிய
படைகொண்டு நின்ற செந்திலம்பதி செண்பகமே! 41
ஓராது ஒன்றைப் என்ற திருப்புகழ்
தீராப் பிணியும் வறுமையுந் தமியேனை என்றுஞ்
சாராது நீக்கிடுக! சேவேறு மெந்தைக்கு
ஆராவமுதென இனிய சொற் பகர்ந்து சூரொடு
போராட திருச்செந்திலம்பதி வந்த செண்பகமே! 42
ஏவினை என்ற திருப்புகழ்
மாவினை மூடிய நோய் பிணியாளனை யுனக்கு
மூவினையால் தொண்டாற்ற மாற்றி யிருத்திடுக
தீவினை புரிந்த அசுரரை யழித்து தேனமுத
பாவினை கொண்ட திருச்செந்திலம்பதி செண்பகமே! 43
கட்டழகு என்ற திருப்புகழ்
கட்டழகு விட்டுத் தளர்ந்து முனங் கருதிய தாற்றிய
இட்டபொறிகள் தப்பும்போது இணைகொடுயாள்வாய்
விட்டவேலால் கிரௌஞ்சமொடு வேண்டாது புரிந்த
துட்டரை யழித்த திருச்செந்திலம்பதி செண்பகமே! 44
உததியறல் என்ற திருப்புகழ்
வெம்புலாலால் ஆனவுடல் வெம்பி யொருநாள் சுவை
கொம்பு மதகரட தந்திவாயிற் போற் குலையாது
அம்புகொடு வந்துன்னடியில் வீழ்த்தியுய
செய்திடுக!
நம்பும் பதியெனுந் திருச்செந்திலம்பதி செண்பகமே! 45
களபமொழுகிய என்ற திருப்புகழ்
விரல்சேரேழ் தொளைகள் விடுகழை விரல்தடவி
பரவிய இசையால் பலபதி வணங்க அருள்வாய்!
இரவலருக்கு வேண்டியது இன்னதென யறிந்து
தரவருந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 46
கண்டுமொழி என்ற திருப்புகழ்
பண்டைவினை கொண்டுழன்று வெந்து போகின்றயடியேற்கு
வண்டுபடுகின்ற தொங்கல் தர வருவாய் வேலொடு!
அண்டர்புகழ சூரனை வென்று ஆரணங்கை மணங்
கொணடு வலம்வந்த திருச்செந்திலம்பதி செண்பகமே! 47
கனங்கள் என்ற திருப்புகழ்
சினங்கொடு சிவனாரின் கண்சிந்திய பொறியிலன்று
அனகன் வெந்ததுபோல் அசுரருமடிய உதித்த நீ
தினம் இவ்வேழை படும் துன்பமறியாயோ? சொல்
மனம் இரங்காய்! திருச்செந்திலம்பதி செண்பகமே! 48
கன்றிலுறு மானை என்ற திருப்புகழ்
நஞ்சுபுசி தேரை யங்கமது வாடி நைந்து விடும்
பஞ்சபுலனு முனடிமை யாகிட பார்த்திடுக!
அஞ்சி யொதுங்கிய அமரோரை காத்த அலைபுரண்டு
மிஞ்சி யெழுந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 49
கொங்கைகள் என்ற திருப்புகழ்
வெம்பிணி யுழன்ற பவசிந்தனை நினைந்துனது சரண்
கும்பிட்டேன் இனியுமொரு கருக்குடில் புகாவண்ணம்
அம்பிட்டறுத்துனடி புகயருளா யிவ்வடிமைக்கும்
தும்பிகளிசைக்குந் திருச்செந்திலம்பதி செண்பகமே! 50
குகர மேவு என்ற திருப்புகழ்
இரைதேடி இங்குமங்கும் அலையுமென் வுடலும் வாடி
நரையும் வந்து நாடியு மொடுங்காமுன் நாயேனை
கரை சேர்த்து அம்பொற்றண்டைக் கழல் தாராய்!
திரை புரளுந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 51
குடர்நிணம் என்ற திருப்புகழ்
குறியொன்றுந் தெரியாது குவலயந்தனிலே யென்
அறிவழிகின்ற குணமற வுன்றனடியிணை தந்து
பிறியாதிருக்க பரிவோடு ஒருகண் பாராய்!
எறிவீசுந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 52
கொம்பனையார் என்ற திருப்புகழ்
என்புருக யெனதுள்ளும் புறமும் உனக்கே யாளாய்
அன்புடன் ஆசாரபூசை செய்துய்ந்திட யருளுக!
முன்பு ஈசன் செவியிலிங்கிதமாய் மறையோதி
இன்புற்ற திருச்செந்திலம்பதியில் திகழ்
செண்பகமே! 53
கொலைமத கரியன் என்ற திருப்புகழ்
சவலை கொண்டு சாந்தையெனுஞ் சகதியில் பெருகிய
கவலைகள் கெட உனதருள்விழி என்பால் நிலைபெற
திவலையேனுந் தயை புரியலாகாதோ? சொல்
நவலைமிகு திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 54
தகரநறை என்ற திருப்புகழ்
தகரநறை என்ற திருப்புகழ்
உற்றதொரு பிறவியிலுனக்காளா யென்தலையிற் நின்
பொற்புளக மலர்பூண்டு வந்திடுவேனோ சொல்?
அற்புத வடிவாய் அரனார் நுதற்றீ வந்துதித்த
சற்புதல்வா! திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 55
சேம கோமள என்ற திருப்புகழ்
மாயத்தே மூழ்கி மண்ணின் மேலிச்சையாலெனது
காயத்தே பசுபாசத்தே காமுற்றேயாது
நேயத்தே யுருகியுய்ந்திட நினதருளைத் தருக!
தூயத்தேனே! திருச்செந்திலம்பதி செண்பகமே! 56
தந்தபசி என்ற திருப்புகழ்
முந்தை வினையால் வந்தபிறவி முடிவுற்று கரிய
அந்தகனுமெனை யடர்ந்து வருகையிலினி அஞ்சலென
வந்துனது வரிய பதத்திடை வைத்து காத்திடுக!
கந்தனே! திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 57
தரிக்குங் கலை என்ற திருப்புகழ்
சதிகாரரைவர் செயலா லவதியுறாது யான்
அதிசுந்தர கிரணமொடு அலைவாய்சூழ் யுனது
பதியான திருச்செந்திலை யுரைத்துய்ந்திட வருளுக!
நிதியே! திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 58
துன்பங் கொண்டங்கம் என்ற திருப்புகழ்
ஒன்றிய உடலுமுயிரு மொருநாள் பிரியுமுனரே
உன்திருவடிக்கே யுருகியழுது தொழுது தஞ்சம்
என்று தொண்டு செயும்படி ஏற்றுயருளுக அசுரரை
வென்றருளிய திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 59
தொந்தி சரிய என்ற
திருப்புகழ்
கயிருங் கட்கமுமேந்தி வருங் காலனைக் கண்டு
உயிர் மங்குபோழ்து கடிதே மயிலின்மிசை வருவாய்
எயிறு கடித்து விழும்படி அசுரரை யன்று மாய்த்த
அயிலுடைய திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 60
நிலையாப் பொருளை என்ற திருப்புகழ்
அலக்கண் மிகுந்த யவனியிலிவ்வாக்கையு முழன்று
மலநீர்ச்சயன மிசையாப் பெருகி மடியாதுன்
அலர்தாள் பணிந்து ஆங்கொரிடமும் பெற யருளுக!
உலத்தலிலா திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 61
நாலுமைந்து என்ற திருப்புகழ்
வாய்த்த பிறவியு முலகில் பயனுறவே யென்றும்
நோய்கலந்த வாழ்வுறாமல் நீ கலந்த ஞானமதை
சேயெனக் கருளுகயுன் சேவடிபாட யவுணரை
மாய்த்த திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 62
பஞ்சபாதகமுறு என்ற திருப்புகழ்
இழிகுணத்தவ ரைவர் ஏவலா லிழுக்கப் படாது
வழிவழி யருள்பெறும் அன்பினா லுனதடி உரைக்க
அழிவிலா ஞானமும் ஆனந்த வாழ்வுந் தருவாய்!
பழிதீர்க்குஞ் திருச்செந்திலம்பதி வாழ்
செண்பகமே! 63
தோலொடு மூடிய என்ற திருப்புகழ்
காலொடு சேர்த்து நாட்டிய இருகம்பத்தின் மேல்
தோலொடு மூடிய கூரையை நம்பி திணையில் யான்
மாலொடு திரிந்து மதிகெடா தருள்க! சூர்மடித்த
வேலொடு திருச்செந்திலம்பதி நின்ற செண்பகமே! 64
நிதிக்கு பிங்கலன் என்ற திருப்புகழ்
நிலத்திற் பிறந்து நாளுமொரு வேடந்தரித்து மும்
மலத்திற் பிணிக்கப்பட்டு மூர்க்க குணங்களொடுழலுமென்
புலத்திற் சஞ்சலங் குலைத்திட்டுன் பதம்புக
அருளுக!
தலத்திற் சிறந்த திருச்செந்திலம்பதி நின்ற
செண்பகமே! 65
படர்புவியின் என்ற திருப்புகழ்
திங்களுமோர் பத்தில் தாயுதிரத்தி லூறிய செனனம்
எங்கண் எனக்கிங்கே வந்து கூடியதென் றறியேனே
செங்கண் மாலுக்குதவிய மகேசர்பாலா! சற்றே
உங்கண் பாருந் திருச்செந்திலம்பதி வாழ்
செண்பகமே! 66
பதும இருசரண் என்ற திருப்புகழ்
இலதிவ் வுலகிலேது மெனக்கென்று விதித்தனையோ?
பலதிக்கிலும் பொருளை தேடியுமென் வறுமையொடு
கலதியுமகல விலையே! நின்கடைக்கண் நோக்குக!
சலதியலை பொருதுந் திருச்செந்திலம்பதி செண்பகமே! 67
மங்கை சிறுவர் என்ற திருப்புகழ்
சங்கைகள் சூழ்ந்த சார்பிலா யிவ்வாக்கையுங்
கடந்து
வெங்கண் மறலிதன்கை மருவ வெம்பியிடறும் வேளையில்
தங்கை வேல்கொடு வந்துன் திருவடி சேர்ப்பாய்!
பொங்கும் அலைவாயுறையுஞ் செந்திலம்பதி செண்பகமே! 68
பூரணவார என்ற திருப்புகழ்
மாய பிரப்பஞ்சமதில் மதிநிலை கெடாதெடுந்த
காயமு நாவு நெஞ்சுமோர் வழியாயுன் கழலுக்கு
நேயமொடு அன்புசெய்து நினைத்தது பெற அருளுக!
தூயதிருவுருவே! செந்திலம்பதி செண்பகமே! 69
மஞ்செறுங் குழலும் என்ற திருப்புகழ்
உண்டலு முறங்கலு மொருநாளுந் தப்பாதல்லாது
கண்டதேதுமிலை யிக்குரம்பையும் உயவே யருளாய்!
அண்டரிந்திரனுஞ் சரணம்புக வென்ற அயிலையுடைய
தண்டமிழோய்! திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 70
பாத நூபுரம் என்ற திருப்புகழ்
பூழைகள் மும்மூன்றொடும் பொதிந்த பிணிசேர் ஆக்கை
கூழையெனும் புவனங் கடந்து நீங்கா கதிபெற
நீழைமிகுயுன் திருவடி நீழலில் வைத்திடுக!
தாழை வானுயர்ந்தாடுந் செந்திலம்பதி செண்பகமே! 71
மனைகனக மைந்தர் என்ற திருப்புகழ்
கனவுநிலை யின்பமதனை எனது என்று கருதி
உனகமுடை வாழ்வுறாது யுனது மதுவூறும்
வனசமலர் பாதம் விரும்பி பாடிட யருளுக!
சினமிகுஞ்சூர் வென்ற திருச்செந்திலம்பதி
செண்பகமே! 72
முகிலாமெனும் என்ற திருப்புகழ்
இகவாழ் வொடினைந்த யிவ்வுயிரினி பிறவாதருள்க!
அகமேவிய நிருதன் போர்க்கு வரவே சமர்புரிந்து
சகமெச்சிட அயிலேவி சேவலும் மயிலுமாக்கி
உகந்தோறு மழியா திருச்செந்திலம்பதி வாழ்
செண்பகமே! 73
மான்போற் கண் என்ற திருப்புகழ்
தேன்போற் மொய்த்தரு ளுனடியார் நடுவே யானும்
ஊன் உருகி பாடயுனது திருக்கண் நோக்காய்!
மான்போற் நயனங்கள் கொண்ட வாரணமங்கையை மணந்து
வான்புகழ திருச்செந்திலம்பதி நின்ற செண்பகமே! 74
மாயவாடை என்ற திருப்புகழ்
நானுலவ வந்தபுவியில் நெஞ்சம் வாடும்வேளை நீ
ஆனுலவ வந்து ஆனந்தமய கருணை புரிக!
தேனுலவு கடம்பணிந்த தேவர் நாயகனென
கானுலவர் புகழ் செந்திலம்பதி வாழ் செண்பகமே! 75
பரிமள களப
என்ற திருப்புகழ்
படங்கொளரவின் பாதிப்பெனை யணுகா தருள்வாய்
விடங்கொ ளிறைவர் செவியிலன்று வேத பொருளுரைத்த
கடம்பத் தொங்கற்றிரு மார்பொடு கருதுமடியாருள்
நடங்கொள் வருந் திருச்செந்திலம்பதி வாழ்
செண்பகமே! 76
வந்து வந்து முன் என்ற திருப்புகழ்
பண்டை வினைகளின் பயனால் கட்டுண்டு யானுமிங்கு
கொண்டதொரு கோலங்களைந் தினியொரு கோலமெடாதுன்
தண்டைகொஞ்சு செஞ்சதங்கை தங்கு பங்கையங்கள்
தாராய்!
வண்டிசைக்குந் திருச்செந்திலம்பதி வாழ்
செண்பகமே! 77
வரியார் கருங்கண் என்ற திருப்புகழ்
பொருப்போடுயர் பொறாமையெனும் பிணியாலுழன்று
இருபோது நைந்து மெலியாதுன் இருத்தாளி லன்புற்று
ஒருபோதேனு முன்திரு நாமம் மொழிந்துய அருள்க!
நெருப்போடு வந்த திருச்செந்திலம்பதி செண்பகமே! 78
விந்ததுனூறி என்ற திருப்புகழ்
வந்தமுன்கலி தீர்ந்து வன்சிவ ஞானவடிவை தந்து
சிந்தையிலுன் சடாட்சரங்களை பதித்து சொலொணாத
உந்தன் தண்டைகளொளிர் பாதங்களில்
வைத்தெனையாள்வாய்!
கந்தனே! திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 79
வெஞ்சரோருக என்ற திருப்புகழ்
பண்பாடுந் திறமொடு குரலின் இனிமையும்
பெற்றிடயுன்
கண்பார்த்து கருணை புரிய கலாபமேறி வருக!
செண்பகாடவியொடு துங்க மாமதிள் சூழ கரையில்
வெண்முத்து புரளுந் திருச்செந்திலம்பதி வாழ்
செண்பகமே! 80
வஞ்சத்துடன் என்ற திருப்புகழ்
துஞ்சிக்கிடந்த வாழ்நாளில் துணையிலாது
வெம்பியிப்
பஞ்சிப் புழுவுடல் அங்கிக்கிரையென போகாமுன்
வஞ்சிக்குற மாதொடு வானவர் கொழுந்துஞ் சூழ வருக!
இஞ்சிச்சுவை வீசுந் திருச்செந்திலம்பதி
செண்பகமே! 81
மூளும் வினைசேர என்ற திருப்புகழ்
அன்பெனு
மானந்த வெளியீடு பெருகியுருகி
இன்ப யமுதூறலை
நாடி அதன்மீது போய் நிற்க
உன்பதமொ
டறுமுக தரிசனமும் உள்ளே புகுத்துக!
பொன்பரி
யேறுந் திருச்செந்திலம்பதி செண்பகமே! 82
வஞ்சங் கொண்டுந்திட என்ற திருப்புகழ்
எறிவேலன்
திருப்புகழை இதுகாறும் பாடாத
சிறியேன்
மதிகொஞ்சங் கொஞ்சஞ் சற்றேனுமருள் புரிக!
அறிவோடறிந்
துணர்ந்து இன்னிசையொடு பாட! தீப்
பொறியோ
டுதித்த திருச்செந்திலம்பதி செண்பகமே! 83
மூப்புற்று என்ற திருப்புகழ்
ஏச்சுற்றே பிறரால்
என் வாழ்நாளுங் கடந்தது பெரு
மூச்சுற்றுச்
செயல் தடுமாறி மூப்புற்று வாயும்
பேச்சற்று போகாமுனுன்
பதமலரில் சேர்ப்பாய்!
வீச்சுற்ற
சூர்மடித்த செந்திலம்பதி செண்பகமே! 84
முலைமுகந் திமிர்ந்த என்ற திருப்புகழ்
தஞ்சமென
யுனிரு தாள்பிடித்தேன் தமியேனை
அஞ்சேலென
அபயமளித்து காப்பாய்! விரியுங்
கஞ்சமலர் மீதே
அளிகலந் திரங்கும் இசையொடு
வெஞ்சமரில்
சூர்வென்ற செந்திலம்பதி செண்பகமே! 85
ஏகமாய் என்ற திருப்புகழ்
ஆரவாரச்சமன்
அந்தியிலெனை யனுகும் வேளையில்
சாரமிகுயுன்
நாமமலா தெனக்கார் துணை! சொல்க!
வீரமாக்
குலையாக் குலவரை சாய்த்தவீர
தீரனே!
திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 86
தோடுமென்குழை என்ற திருப்புகழ்
உண்டிக்கு ஊனெடுத்து திரிந்தோய்ந்தே னுன்னடி
வைப்பாய்
எண்டிசையும் புகழ் ஏரூர்ந்த செல்வரின்
நுதலிலுதித்து
வெண்டிரை சூர்மார்பு ஊடுறுவ வேல் விடுத்து
அண்டினார்க்கருள திருச்செந்திலம்பதி நின்ற
செண்பகமே! 87
நெடிய வடகுவடு என்ற திருப்புகழ்
பெருகிடுந் துயரமிகு இப்பிறவி வேண்டே னினியுங்
கருவிலுதி யாதுன் கழலுக்கே ஆளாக்குவாய்
குருகு பெயரிய வரைதொளை படவிடு சுடர்வேலை
ஒருகையுடைய திருச்செந்திலம்பதி செண்பகமே! 88
போதிலிருந்து என்ற திருப்புகழ்
ஆகரமான யுனதரிய புகழை அகமுருகி
பூகரமதாய் புனைந்து பாடினேன் ஏற்றிடுக!
சாகரமன் றெரியாக் கொடுசூரர் உகும்படி
தீகரவேல் விடுத்த செந்திலம்பதி செண்பகமே! 89
கடலை பயறொடு என்ற திருப்புகழ்
கசிந்துருகி யுனதறுமுகக் காட்சியை அமுதென
புசித்தானந்த வெளியில் தவழும் பாக்கியந்
தந்திடுக
நிசிசரர் கொடுமுடி யுதிர நிகரிலயிலை விடுத்து
சசிமகளை மணந்த திருச்செந்திலம்பதி செண்பகமே! 90
தீயும் பவனமும் என்ற திருப்புகழ்
கணையென தீச்சொல் கூறாதென் நாவிலுன் புகழை
பிணையென தினம்பாடி சாற்றிட சூரன் மார்புந்
துணையுறு தோளுந் துணிபட வாள்கொண் டமர்செய்த
இணைகரம் நீடுக திருச்செந்திலம்பதி செண்பகமே! 91
விடமென என்ற திருப்புகழ்
அணியென வருந்துயர் யாவும் அகன்றுனை பாடும்
பணியொடு இகபர சௌபாக்கியமுந் தருக! சூரன்
மணிமுடி சிதறிட அலகைகள் குதிகொள முட்டித்
துணிய வேல்விடுத்த திருச்செந்திலம்பதி செண்பகமே! 92
வாராய் பேதாய் என்ற திருப்புகழ்
மாளாப் பிணியும் வறுமையும் மூளாதோட வெகு
நாளாய் முறையிட்டழுது நாணினேன்! மாசூர்
தூளாய் வீழ வாளால் சேதித்த நீயென் துயர்
கேளாயோ? திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 93
ஊனுந் தசையுடல் என்ற திருப்புகழ்
ஆயமொ டுறையிலறுமூன்று திங்களா யுழன்றயிக்
காயமறுத்துன் காலில் வைத்திடுக! நீங்காதென்றும்
மாயம் பலபுரி சூரன்பொடிபட மாறா வேல்விடும்
நேயந்தருந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 94
குகையில் நவநாதர் என்ற திருப்புகழ்
சூழவரும் யெமபடரை சொல்லிய பஞ்சயட்சரத்தால்
வீழச்செய்து எனையுனது பதஞ்சேர்ப்பாய்!
விபுதர்குல
வேழமங்கையை வாகையொடு மணந்த சுபுத்ரனே!
ஈழம்புகழுந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 95
குடரு நீர்க்கொழு என்ற திருப்புகழ்
இடுகிலெனை பொருளொடு யுனதில்லப் பணிமேற்கொள
கடுகி வந்தெனது கன்ம வினைத் துயரறுத்திடுக
முடுகிமேற் பொருமசுரர் ஆர்ப்பெழ முடியவென்ற
கொடுகில் மாறாத் திருச்செந்திலம்பதி செண்பகமே! 96
தொட அடாது என்ற திருப்புகழ்
உடற்கூறு முள்ளுணர்வு மொருங்கே சிவயநமவென
நடல்செய யென்நாவில் நவிலுக நல்லுபதேசமதை
அடல்கெடாத சூர்கோடி மடிய அயிலேவிய
கடல் அலைகள்சூழ் திருச்செந்திலம்பதி செண்பகமே! 97
முதலி யாக்கையும் என்ற திருப்புகழ்
துருது நீக்கிய தொண்டுகள் புரிய இக்கடையேன்
கருதுபணி கைக்கூட அருள்புரிக! அசுரரோடு
பொருது தாக்கிய வய பராக்கிரம புயனே!
சுருது கூறுந் திருச்செந்திலம்பதி செண்பகமே! 98
மறலிபோற் சில என்ற திருப்புகழ்
நிலையிலா யிவ்வாக்கையை நீடி நீயடியேனை
அலைய விடுதல் தகுமோ அவனியில்? அசுரேசர்
குலைய மாக்கடலதனி லோட்டிய கண்கவருங்
கலை யொளிர் திருச்செந்திலம்பதி செண்பகமே! 99
துயரமறு நின் என்ற திருப்புகழ்
பகரில் நினதுபுகழும் பெருமையும் என்வறுமை யகல
நிகரில் பெருவாழ்வொடு நிறை செல்வமுந் தருகவே!
சிகரி மிடறுமுடலு மவுணர் நெடுமார்புஞ் சிதற
தகர அயிலைவிடு திருச்செந்திலம்பதி செண்பகமே! 100
ஒழுகூனிரத்த என்ற திருப்புகழ்
உடற்கூறுக ளொடுறையும் பொறிகளை தன்வசங்கொள
மடமதியேனுக்கு மாறாதொரு சொல் பகராய்!
திடமோடரக்கர் கொடுபோ யடைத்த தேவர்கள்
இடர்நீக்கிய திருச்செந்திலம்பதி செண்பகமே! 101
குருதி சலந்தோலுந் என்ற திருப்புகழ்
ஒடுங்கியயுடல் மீளாவகை உயிர்நாடி பிடித்து
விடுங்கைக்கேற்ற உபாயமுணர்த்தி யுன்னடியில் வைக!
நெடுஞ்சூரன் நினைவழிந் தோடும்படி வேலேவிய
சுடுந்தீயுருவே! திருச்செந்திலம்பதி செண்பகமே! 102
உறவின் முறையோர்க்கு என்ற திருப்புகழ்
காய்த்த காயுங் கனிந்ததோர் நிலையை யெய்திடவே
வேய்த்ததோர் வேலியை விலக்கிடுக! அசுரர்கிளை
மாய்த்தமரர் சிறைமீட்டு அழகொளிர் ஆரணங்கை
தூய்த்ததீரா! திருச்செந்திலம்பதி செண்பகமே! 103
கலகமதன் காதுங் என்ற திருப்புகழ்
பரவியவுலகில் படரும் பிணியும் வறுமையுமொழிய
விரவிய ஞானமொடு வேண்டிய பொருளுந் தருக!
உரவிய வெஞ்சூரன் சிரமுடன் வன்தோளும் உருவி
நிரவிய சகம்புகழ் திருச்செந்திலம்பதி செண்பகமே! 104
முழுமதி யனைய என்ற திருப்புகழ்
உதிர்கொளு மிவ்வாக்கையின் ஊனங்களைய நீயும்
கதிர்மிஞ்சிய வேலொடு கடுகியென்முன் வருவாய்!
எதிர்பொரு அசுரர் பொடிபட முடுகி இமையவர்
பொதிர்தீர்க்க திருச்செந்திலம்பதி வந்த
செண்பகமே! 105
சுட்டது போலாசை என்ற திருப்புகழ்
கட்டியவீடுங் கைவிடும் வேளையில் கடையேனை
மட்டவிழ் மலர்பதஞ் சேர மாறாது நோக்குவாய்
பட்டொரு சூர்மாள விக்ரம வேலேவும் பத்திரு
திட்பத்தோள் வீர! திருச்செந்திலம்பதி செண்பகமே! 106
ஆலாலத்தை என்ற திருப்புகழ்
எற்றைக்கு மெனதிடர் தீராதென் வாழ்வுங் கடந்ததே!
இற்றைக் கெனக்கீயா திருப்பதுந் தகுமோ? சொல்வாய்
வெற்பொடரக்கரை வேர்மாளப் பொருதிட்ட அயிலுடை
அற்புதவடிவே! திருச்செந்திலம்பதி செண்பகமே! 107
திருச்செந்திலம்பதி செண்பக மாலையை
ஓதுவார் பெறும் பயன்
இப்பிறவியற ஆரணி யடியார்க் கடியவன்
ஒப்பிலா செந்திலாதிபன் மேலுரைத்த நூற்றெட்டு
திப்பியமிகு செண்பக மாலைகளை தினமுருகி
செப்பிடுவா ரெவருஞ் சகலசெல்வமும்
பெற்றிருப்பாரே! 108